
அப்போதைய எனக்கு
பீட்ரூட்டின் அடர் நிறத்திலோர்
காதலிருந்தது
பட்ட இடமெல்லாம் படரும்
அனைத்தையும் நிறம் மாற்றும்
அதை கவனித்திருக்கிறீர்களா?
தோல் சீவும் போதோ
நறுக்கும் போதோ
பீட்ரூட்டிலிருந்து கசியும்
அந்நிறம் அச்சுறுத்தும்
கழுவி கழிவறையில் ஊற்றும்
நீரின் நிறத்தை
நான் கொன்று தீர்த்த
ஓருடலினதென ரசிப்பதுண்டு
சூடான குருதியைப் போல
கால் தழுவி யோடும்
அந்நிறத்தின் மீதொரு
பித்தெனக்கு
ஆனால் அது பீட்ரூட்டில் மட்டுமே
மீண்டும் மீண்டும்
மறுபடி யொரு மீண்டுமென
கழுவிக் கழுவிப்
பைத்தியமெனச் சிரித்திருப்பேன்
தடயங்களெனச்
சிவந்திருக்கும் கைகளைக் கழுவாமல்
முகர்ந்து கொண்டே
இருப்பதுண்டு
அதிலொரு போதையேற்றும்
பச்சை வாசம்
ஆனால்,
அதை உண்ண மட்டும் பிடிப்பதேயில்லை
இரத்தம் சுரக்குமாமே.
Vera leval,?????