சமூக அக்கறை மிக்க பொறியியல் கட்டுரைகள் – மு ராமநாதனின் ‘வீடும் வாசலும் ரயிலும் மழையும்’ கட்டுரைத் தொகுப்பு குறித்த நூல் அறிமுகம் – எஸ். நரசிம்மன்
கட்டுரை | வாசகசாலை
சில நூல்கள் நல்ல வாசிப்பு அனுபவம் தருபவை. சில உள்ளடக்கத்தால் சிறப்பானவை. வேறு சில, படிப்போர்க்குப் பயன் தருபவை. இந்த மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு புத்தகம் தான் ‘வீடும் வாசலும் ரயிலும் மழையும்‘. இது பொறியியல் கட்டுரைகளின் தொகுப்பு. எனவே, இது பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கானது என்று கடந்து செல்ல முடியாது. நான் ஒரு பொறியாளன் அல்ல. இக்கட்டுரைகளில் மிளிரும் பல்வேறு கருத்துக்களும், மொழியாளுமையும், எளிமையும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. எனவேதான் இந்த அறிமுகம்.
நூலாசிரியர் – மு ராமநாதன் ஒரு பொறியியல் வல்லுநர் மட்டுமல்ல. மனித நேயமும் சமூக அக்கறையும் கொண்டவர். தமிழ் இலக்கியவாதியும் கூட. அவரது நடையில் ஒரு எழுத்தாளரின் கைவண்ணம் மிளிர்கிறது. அந்த நடை எளிமையானது; ஆனால், விவரமானது.
இந்தக் கட்டுரைகளின் வாயிலாக ஒரு சராசரி மனிதன், அன்றாட வாழ்க்கையில் சந்திக்க நேரும் பொறியியல் ரீதியான சிக்கல்களைத் தரம் பிரித்து, அவற்றுக்கான காரணங்களையும் அலசி ஆராய்ந்து, தீர்வையும் கோடிட்டுக் காட்டுகிறார் ஆசிரியர்.
இதற்குப் “பாதசாரிகள் படும் பாடு” எனும் கட்டுரையை உதாரணமாகச் சொல்லலாம். சென்னை போன்ற ஒரு மாநகரின் சாலைகளில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஓடுகின்றன. தெருக்களெல்லாம் வணிகமயமாகி உள்ளன. வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் மனிதர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால், பாவம் என் போன்ற உள்ளூர் ‘பாதசாரிக்கு‘ மட்டும் நடப்பதற்கு ஒரு சரியான நடைபாதை இல்லை. ஆசிரியர் இது பற்றிய பல்வேறு கோணங்களை விளக்குகிறார்.
சராசரியாக ஒவ்வொரு நாளும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாதசாரிகள் நம் நாட்டில் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள். இதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. நமது நடைபாதை வடிவமைப்பு ஏன் சரியாக இல்லை என்பதை சர்வதேச வழிகாட்டுதல்களின் வழியாக விளக்குகிறார். அவற்றோடு ஒப்பிட்டால் நமது நடைபாதைகளின் அகலம் அதில் சரி பாதி கூட இருப்பதில்லை.
மேலும் நமது நடைபாதைகள் பல இடங்களில் அதிகம் ஆக்கிரமிக்கப்படுகின்றன. மின் இணைப்புப் பெட்டிகள் நடைபாதைகளிலேயே அமைக்கப்படுகின்றன. எல்லாம் சேர்ந்து ‘நடை‘ பாதையை நடக்கத் தகுதியில்லாமல் செய்து விடுகின்றன. ஆசிரியர் குறை சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், தனது வெளிநாட்டு அனுபவங்களில் இருந்து இது போன்ற சிக்கல்களை எப்படிச் சரி செய்யலாம் என்றும் சொல்கிறார்.
இன்னொரு கட்டுரையில் , ‘கட்டட விதி முறைகளை மேம்படுத்துவது‘ குறித்து விரிவாகப் பேசுகிறார். பழைய கட்டடங்களை இடிக்கும் வழி முறைகள், புதிய கட்டடங்களை வடிவமைக்கும் முறைகள், அவற்றைப் பராமரிக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை விளக்குகிறார். கார் தரிப்பிடங்களை முறைப்படுத்தல், சாலைகள் மேம்படுத்தல், கான்கிரீட் உபயோகிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்– இப்படியாக நம் அனைவருக்குமே பயனுள்ள பல விஷயங்களை மிக எளிதாக, சுருக்கமாக எழுதியுள்ளார்.
முன்பெல்லாம் காணப்பட்ட பாரம் தாங்கும் செங்கல் சுவர்களுக்கும் இப்போது வழக்கமாகிவிட்ட கான்க்ரீட் சுவர்களுக்குமான வேறுபாட்டை விளக்கும் கட்டுரையோடு, ஹாங்காங்கில் இப்போதும் மூங்கில் சாரங்களைப் பயன்படுத்தும் அழகைச்சொல்லும் கட்டுரையும் இத்தொகுப்பில் உள்ளது.
வீடும் வாசலும் மட்டுமல்ல, நாம் அனுபவித்த வெள்ளம், மழை, புயல் சேதங்களிலிருந்து பொறியியல் ரீதியாகப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளைப் பற்றியும் விவரமாகக் கூறியுள்ளார். தற்கால இளைஞர்களுக்குத் தேவையான பொறியியல் கல்வியைப் பற்றியும், பொறியாளர்களின் பணியைப் பற்றியும் எடுத்துச் சொல்கிறார். தனது சொந்த அனுபவத்திலிருந்து முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தின் சிக்கல்களையும், சென்னை மெட்ரோ ரயிலின் பல்வேறு சிறப்பு அம்சங்களையும் விரிவாக விவரித்துள்ளார்.
இந்நூல் மாணவர்களுக்கும், பொறியாளர்களுக்கும், ஏன், நம் எல்லோருக்குமே மிகவும் பயனுள்ளது. முக்கியமாக எல்லா அரசுத் துறைகளுக்கும், நூலகங்களுக்கும் இந்நூல் கிடைக்கும்படிச் செய்ய வேண்டும். நல்ல தமிழ்ச் சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதால் தாய் மொழிக்கல்வி மேம்பாட்டுக்கும் இந்தநூல் உதவக்கூடும்.
இன்று சமூக ஊடகங்களிலும், அரசியல் களத்திலும் விவாதிக்கப்படும் பல பிரச்சனைகளுக்கான தீர்வு, பொறியியல் அம்சங்களில் இருக்கிறது என்றும், இந்த அம்சங்களைப் புரிந்து கொள்வதன் மூலம் தீர்வை நோக்கிச் செல்ல முடியும் என்றும், தரவுகளோடும் நியாயமான தருக்கங்களோடும் முன்மொழிகிறது இந்நூல். ‘வீடும் வாசலும் ரயிலும் மழையும்‘ நம் அனைவருக்கும் ‘சொல்லும் பொருளும் செயலும் நிறைவும்‘ தரும் ஒரு நூல் எனலாம்.
*******