
சரசக் குடுவையிலிருந்து வழியும் ஒரு துளி
இளைக்கிற உயிர்
காமம் தின்று கொழுத்திருக்கிற காலம்
ஊன் திரியில் உயிர் நெருப்பின் நடனமிடும் நிழல்
தள்ளாட்டத்துடனே தளும்பிக் கிடக்க
நினைவுகள் அத்தனையும் வெளியேற்றப்பட்ட
திடலில் தனியொரு ஆட்டக்காரனாக
எத்திசையில் எது வருமெனத் தெரியாதபோதிலும்
சிறகு வளர்க்கும் திசையறியாப் பறவையொன்று
எங்கிருந்தேனும் வரக்கூடுமெனும்
மெலிந்த நம்பிக்கையில் நின்று கொண்டிருக்கிறேன்
ஈரம் பார்க்காமல் காய்ந்து கிடக்கிற வறண்ட பார்வை
தேடியலைகிறது பருத்துக் கிடக்கிற
சிறு நிழலொன்றை
மாமிசக் கூட்டில் ஒட்டியிருக்கும் மிச்சம் கேவியழைக்கிறது
மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு பெயரையோ, சொல்லையோ
யாரையெனக் கேட்கும் முன்னரே விழுங்கிவிடுகிறது
பாழ் காற்று ஒவ்வொரு சொல்லையும்.
****
பயணி
எதிரில் விரிந்து கிடக்கும் பாதைகளை
இருள் பூசி அழித்துக்கொண்டே இருக்கிறது
சொட்டிக் கொண்டிக்கும் காலம்
துளிகள் பெருகப் பெருக
அதனுள் கரைகிறது ஓளி
தளரும் காலடிகள்
யோசித்து யோசித்து
நிதானித்து நிதானித்து
ஓரோர் அடியாக அழியும் பாதைகளுக்குள் அமிழ
காலப்பெருங்கடலுக்குள் மறுபிரவேசிக்கிற
முதல் நீருடலி மனிதனான பெருமிதத்தில்
புகைக்கக் கொளுத்துகிற ஒற்றைத் தீக்குச்சியின்
ஒளித்துணுக்கு விழுங்கிவிட்டது
அதுவரை நிகழ்ந்துகொண்டிருந்த அற்புதங்கள் அனைத்தையும்.
****
அமுதசுரபி
தொட்டியில்
நீரென நிரம்பித் தளும்பிக் கொண்டிருந்தது
அன்பு
தாகத்தில் வந்த குதிரைகள்
நீர் கண்டதும் பருகத் துவங்க
மறுக்காத பரிபாலனம்
குதிரைகளின்
வகை குறித்த,
நிறம் குறித்த,
பலம் குறித்த
வேறு எது குறித்த கேள்வியும்
எழுப்பப்படவே இல்லை அங்கே.
தாகம் தணித்தல் ஒன்றே பிரதானமாய்
அத்தொட்டி வற்றவே இல்லை
இறுதிவரை.
********