கட்டுரைகள்
Trending

“Bound” திரைப்படம் குறித்த கண்ணோட்டம்

சி.பிரசாத் சுந்தர்

“Neo Noir” எனப்படும் குற்றம் சார்ந்த படங்கள், தொண்ணூறுகளில் அதிகம் பிரபலமாக பேசப் பட்டிருந்தன. “Goodfellas”, “Reservoir Dogs”, “Fargo”, “The Usual Suspects”, “The Silence of the lambs” போன்ற பல படங்கள் குற்றத்தை பின்புலமாக வைத்தே அக்காலக்கட்டத்தில் வந்தன. ஆனால் அக்காலக்கட்டத்திலிருந்து இன்றுவரையும் அதிகம் பேசப்படாத படம், “Bound”. “The Matrix” திரைப்பட தொடர் புகழ் The Wackowski சகோதிரிகளால் இயக்கப்பட்ட இப்படம், அவர்கள் ரசிகர்களாலும் அதிகம் கொண்டாடப்படவில்லை. The Wackowski உடன்பிறப்புகள் முன்னரே “Assasins” படத்திற்கு திரைக்கதை எழுதியிருந்தாலும் அவர்கள் முதலில் இயக்கிய படம் “Bound” தான்.

கெங்ஸ்டர்(gangster) கும்பல், கொடூர கொலை காட்சிகள், ஆங்காங்கே காதல் காட்சிகள் என அக்காலக்கட்டத்தில் பிரபலமாக இருந்த திரைக்கதை பாணியையே The Wackowski சகோதிரிகளும் கையாண்டனர். ஆனால் இவர்கள் கையாண்ட விதம் இன்றுவரை பிரபல விமர்சகர்களிடமும் வியப்பை தருகிறது. இவர்கள் தேர்தெடுத்த ஓரினச்சேர்க்கை காதல் காட்சிளும் கதை சொல்லிய விதமும் அவர்களின் மேதைமையை வெளிப்படுத்தியது. படத்தின் முதல் இருபது நிமிடங்களுக்கு வருகின்ற லெஸ்பியன் முத்தக்காட்சிகளுக்கும் தொடரும் காமக் காட்சிகளுக்கும் திரையரங்கில் மக்கள் முகம் சுளித்ததாகவும் பிறகு அவர்களே படத்தோடு ஒன்றிவிட்டதாகவும் லுனா வாக்கோவ்ஸ்கி (Luna Wackowski) ஒரு நேர்காணலில் சொல்கிறார்.

படத்தின் தொடக்கத்திலே கோர்க்கியின் (Gina Gerson) கை, கால்கள் கட்டப்பட்டு வாயினில் துணி வைத்து அடைக்கப்பட்டு ஒரு அறையில் கிடக்கிறாள். பின்பு, தாம் ஏன் இங்கு வந்தோம் என்பது போல அவள் நினைத்துப் பார்க்கிறாள். ஒரு மின்தூக்கியில் கருவிப் பெட்டியொன்றை வைத்தபடி கோர்க்கி நிற்கிறாள். அங்கு வருகின்ற வயலட்டை ( Jennifer Tilly) அவள் ரசிக்கிறாள். வயலட் குற்ற கும்பலின் முக்கியப் புள்ளியான காதலன் சீசரோடு அந்தக் குடியிருப்பில் தங்கியிருக்கிறாள். அவர்களுக்குப் பக்கத்து அறையிலே கோர்க்கி தங்கியிருக்கிறாள்.

கோர்க்கியைக் காண வயலட் கோர்க்கியின் அறைக்கு வந்து காண்கிறாள். கோர்க்கியிடம் சிரித்துப் பேசுகிறாள். ஆனால் தானாகவே முன் வந்து பேசுவதும் தனது எண்ணத்தை தெரிந்து வைத்திருப்பதையும் பார்த்து வயலட்டின் மேல் கோர்க்கிக்கு சந்தேகம் எழுகிறது. அப்படி ஒரு நாளில், வயலட்டின் அறைக்கு கோர்க்கி வருகிறாள். ஆனால் அங்கு வந்தவுடன் இருவரின் எண்ணமும் வெடித்து இருவரும் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். சீசர் இல்லாத சமயத்தில் நடந்த முத்தம் செக்ஸாக தொடர்வதற்குள் சீசர் வந்துவிடுகிறான், அப்போது வயலட் சமாளித்து எழுகின்றாள். ஆனால் கோர்க்கிக்கு அது பிடிக்கவில்லை. ஏன் ஒரு ஆண் வந்தவுடன் இவள் இப்படி நடிக்கிறாள் என்று கோர்க்கி நினைக்கிறாள்.

அன்றே நடந்த நிகழ்விற்காக வயலட் மன்னிப்பு கேட்கிறாள். அதற்கு கோபம் கொண்டு இப்படி மூடி மறைக்க வேண்டாமென்று கோர்க்கி கூறுகிறாள். ஆனால் , வயலட் அதற்கு இப்படி பதிலளிக்கிறாள், “I am not apologizing for what I did, I am apologizing for what I didn’t”. பிறகு இருவரும் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். அப்பொழுதுதான் சீசருக்கு ஒரு பிரபல கேங்ஸ்டரான ஜினாவிடம் கொடுப்பதற்கு அவனிடம் பல லட்சம் டாலர்கள் வரப் போவதாக வயலட் கோர்க்கியிடம் கூறுகிறாள். அதை நாமிருவரும் கொள்ளை அடிக்கலாம் என்று கூறுகிறாள். சீசரிடம் வருகின்ற பணத்தை அவர்கள் கொள்ளை அடித்தார்களா? அப்படி அவர்கள் அடித்தால் சீசர் வயலட்டை விட்டுவிடுவானா? இது இல்லாமல் வருகின்ற பணத்தை சீசர் எப்படி பத்திரமாக கொடுப்பான் இல்லையால் எப்படி இழந்த பணத்திற்கு ஜினாவிடம் எப்படி பதிலளிப்பான் என்பதே கதையாகும்.

தொடக்கத்திலே கோர்க்கியைக் கட்டிவைத்தப்படி காட்சி வைத்துவிட்டதால் பரபரப்பாக அவளிற்கு என்ன ஆகப்போகிறதென்று தோன்றும்படி அருமையாக கதையை நகர்த்துகிறார்கள். முதலில் சாதுவாக இருந்த சீசர் பணத்திற்கு யாரோ திட்டம் தீட்டுகிறார்கள் என்று தெரிந்தவுடன் ஆக்ரோஷமாக மாறுகிறான். தனது காதலியை அவன் நம்பினாலும் அவன் பணம் என்று வந்தவுடன் அவளைச் சந்தேகத்துடன் நோட்டமிடுகிறான். சாமர்த்தியமாக அவள் தப்பிக்க நினைக்கும் போதெல்லாம் எளிதாக அவளைத் தடுக்கிறான். வேகத்துடன் அதே சமயத்தில் விவேகத்துடன் செயல்படுகிறான். பணத்திற்காக சீசரின் வலைக்குள் மாட்டிக் கொண்டு வயலட் தவிக்கிறாள். அவளின் கவலையே காதலி கோர்க்கி சீசரிடம் மாட்டிவிட க் கூடாது என்பதுதான்.

துப்பாக்கிச்சூடு ஏற்படும் சமயம் காவலர்கள் ஒரு இடத்தில் வருகிறார்கள். ஆனால், இறுதியில் வராமல் இருக்கிறார்கள், ஏன் என்று தெரியவில்லை. பெரிய தாதாவென்று பில்ட் அப் கொடுக்கப்பட்ட ஒருவர் காணாமல் போயிருந்தாலும் அவரைப் படத்தில் யாருமே தேடவில்லை. இப்படி ஆங்காங்கே இருக்கும் லாஜிக் தவறுகள் பெரிய அளவிற்கு கதையைப் பாதிக்கவில்லை.

கோர்க்கியாக நடித்த Gina Gershon படத்திற்குப் பிறகு கண்டிப்பாக அதிக படங்களில் நடித்திருப்பார் என்று கூகுள் செய்தால், அவர் அதிகம் நடிக்கவில்லை. அதற்கான காரணம் அவர் மேலும் ஒரு சில ஓரினச் சேர்க்கைக்கான கதாபாத்திரங்கள் நடித்ததுதான் என்று அறிகையில் வருத்தமாக உள்ளது. ஒரு நல்ல நடிகையை ஹாலிவுட் சரியாகப் பயன்படுத்தவில்லை என்று தோன்றுகிறது.

படத்தின் சிறப்பிற்கு பல இடத்தில் படத் தொகுப்பாளர் உதவியிருக்கிறார். பரபரப்பை ஒளிப்பதிவாளரும் ஆங்காங்கே ஏற்படுத்துகிறார். இசை படத்திற்கு பெரிய பங்கு வகிக்கவில்லை. பல இடங்களில் இசையே இல்லாமல் இருக்கிறது. அதுவும் The Wackowski உடன்பிறப்புகளின் உத்தியாக இருக்கலாம். வசனங்கள் இயல்பாக திரைக்கதையை நகர்த்துகின்றன. கொடூரமாகச் செயல்படும் ரத்தக் காட்சிகள் அதிகமில்லாமல் அழகாக படம் நகர்கிறது.

ஓரினச்சேர்க்கையிற்கு “Sense8” தொடர் வரை The Wackowski உடன்பிறப்புகள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட காட்சிகள் கண்டிப்பாக உலகத் திரைப்படங்களுக்கு முக்கியமாகத் தேவை. அதை ஆனால் இவர்களைப் போல சில இயக்குநர்களே செய்கிறார்கள். Sci-fi ஆக இருந்தாலும், திரில்லராக இருந்தாலும் அதை இவர்கள் அருமையாகக் கையாளுகிறார்கள். Bound படத்தைப் போல underrated திரைப்படங்கள் அதிகமாக கொட்டிக் கிடக்கின்றன. அதை வெளி உலகத்திற்கு காட்டவேண்டிய கட்டாயத்தை ரசிகர்களும் ஊடகவியர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

எளிமையாக Bound படத்தை இப்படி விளக்கலாம். ஒரு கட்டத்தில் சீசரிடம் வயலட்டும் கோர்க்கியும் மாட்டிக் கொள்கிறார்கள். அதற்கு சீசர் வயலட்டிடம் இப்படிக் கேட்கிறான் .

“What did she do to you?” அதற்கு வயலட் பதிலளிக்கிறாள்,

“Everything you couldn’t”

அந்த பதிலிலேயே படத்தின் குருவையும் இத்திரைப்படத்தை நாம் பார்க்க வேண்டிய அவசியத்தையும் வாக்கோவ்ஸ்கி உடன்பிறப்புகள் நம்மிடம் உணர்த்துகிறார்கள்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button