...
இணைய இதழ்இணைய இதழ் 78சிறார் இலக்கியம்

ராஜா வந்திருக்கிறார் – ஜெயபால் பழனியாண்டி

சிறார் இலக்கியம் | வாசகசாலை

ப்பா ஒரு கத சொல்லுப்பா!

ம்ம்.. சொல்றேன். ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாரு. தன்னுடைய குதிரைல ஏறி காட்டுக்கு வேகமா பயணிச்சாரு..

ராஜா எப்படி இருப்பாரு

தலையில கிரீடத்தோட இருப்பாரு.

அவரு கையில என்ன இருக்கும்

ராஜா கையில குச்சி இருக்கும்

இல்ல. அவரு கையில கூர்மையான வாள் இருந்துச்சு. அதை தன்னுடைய இடுப்புல சொருகிக்கிட்டாரு. ரொம்ப வேகமாக காட்டை நோக்கி குதிரையில போனாரு. காட்டுல ஒரு இடத்துல ஒரு முனிவர் தவம் செய்திட்டு இருந்தாரு.

அப்பா.. அப்பா.. 

ம்ம் என்ன

முனிவர்னா யாருப்பா?

முனிவர்னா உனக்குப் புரியுறமாறி சொல்லணும்னா ஒரு சாமியார். காட்டுல உட்கார்ந்து தவம் செய்வாங்கள்ல.. யோகா செய்ற மாதிரி

.. ஓகே.. ஓகே..

அவரு பக்கத்துல ராஜா போயி நின்னாரு.. முனிவர் மெல்ல கண்ணத் தொறந்து பார்த்தாரு.. யாருப்பா நீ? இந்தக் காட்டுல இந்த நேரத்துல என்ன பண்ற.. ?

நான் இந்த நாட்டினுடைய ராஜா. சரி நீங்கள் யார்? இந்தக் காட்டில் தனியாக இருக்க உங்களுக்கு பயம் இல்லையா?

.. .. .. எனக்கு பயமா? இந்த காட்டில் மரத்தோடு மரமாக.. பறவையோடு பறவையாக.. விலங்கோடு விலங்காக.. இயற்கையோடு இயற்கையாக இருக்கும் எனக்கென்ன பயம்? சரி, நீ இங்கு வந்த காரணத்தைச் சொல்லு

என்னுடைய நாட்டு மக்களுக்கு ஒரு தீராத பிரச்சனை. நாட்டிலே கொரோனா என்னும் கொடிய நோய் ஒன்று பரவி மக்களின் உயிரைப் பறிக்கின்றது. அதற்கான மருந்து எங்கும் கிடைக்கவில்லை. அதனால் என்னுடைய அரண்மனை வைத்தியர் சொன்ன மூலிகையைத் தேடி இந்தக் காட்டிற்கு வந்துள்ளேன்

அப்பா! கொரோனா வந்தா ஆஸ்பிட்டலுக்குப் போயி டாக்டரதானு பார்க்கணும். எதுக்கு காட்டுக்குப் போகணும்.

நீதான கதை சொல்லச் சொன்ன.. அப்புறம் இப்படிலாம் கேள்வி கேட்டா எப்படி கதை சொல்றது.? 

சரி சொல்லு.. 

சரிதான் அந்த நோயைக் குணப்படுத்தும் மூலிகைச் செடி இந்தக் காட்டில் உள்ள மலைக்குகையில் உள்ளது. ஆனால். அதை அவ்வளவு எளிதாக எடுக்க முடியாது. நிறைய ஆபத்து இருக்கு

எந்த ஆபத்து வந்தாலும் பரவாயில்லை முனிவரே. என்னுடைய நாட்டு மக்களைக் காப்பாற்ற என் உயிரையும் தியாகம் செய்ய தயாராக உள்ளேன்

உன் உயிரைத் தியாகம் செய்துவிட்டு உன் நாட்டு மக்களை எப்படி காப்பாற்றப் போகிறாய்? கவலைப்படாதே உனக்கு நான் உதவுகிறேன். நான் உனக்கு மூன்று மந்திரங்களைச் சொல்லித்தருகிறேன். அதை நீ ஆபத்து ஏற்படும் போது பயன்படுத்திக்கொள். ஆனால், இந்த மந்திரங்களை வாய்விட்டு சொல்லக்கூடாது. மனதில் மட்டும் நினைக்க வேண்டும். ஒரு மந்திரத்தை ஒருமுறைதான் பயன்படுத்த முடியும். தவறி பயன்படுத்தினாலும் பலன் அளிக்காது

நல்லது முனிவரே அப்படியே ஆகட்டும் என்று கூறி மந்திரத்தை அறிந்துகொண்டு மன்னன் குகையை நோக்கிப் புறப்பட்டான்.

இப்போ மன்னன் குகையைத்தேடி குதிரையில போய்கிட்டு இருக்கான். அவன் போற வழியில ஒரு ஆளை விழுங்ககூடிய மிகப்பெரிய முதலை குறுக்க நிக்குது. மன்னன் பயந்து குதிரையை நிறுத்திட்டான். முதலை ராஜாவைப் பார்த்து, ஆஹா என்ன அற்புதமான உணவு. இன்னைக்கு எனக்கு நல்ல வேட்டைதான் என்றது. என்னடா இது நமக்கு வந்த சோதனை இந்த முதலைகிட்ட இருந்து எப்படி தப்பிப்பது என்று ராஜா யோசித்தான். முனிவர் சொன்ன மந்திரம் அவனுக்கு ஞாபகம் வந்தது. .. .. இதுதான் முதல் ஆபத்து போல.. அந்த முதல் மந்திரத்தை முதலைக்குப் பயன்படுத்திப் பார்ப்போம். மன்னன் அந்த முதல் மந்திரத்தை மனசுக்குள் நினைத்தான். குதிரையின் காலை கவ்வ வந்த முதலை அப்படியே கல்லாக மாறியது

எப்படிப்பா

கோயில்ல சிலைய நம்ம பார்ப்போம்ல கல்லுல அதுபோல

சரி சரி. அப்பா அந்த முதல் மந்திரம் என்ன

அதைதான் முனிவர் யார்கிட்டயும் சொல்லக்கூடாதுனு சொல்லியிருக்கார்ல. உன்கிட்டயும் சொல்ல கூடாது. சொன்னா முதலை மறுபடியும் எழுந்து வந்துரும். மறுபடி ராஜா குதிரையில புறப்பட்டாரு. கொஞ்சதூரம் போன உடனே திடீர்னு ஒரு பள்ளம் தோன்றி அதுல நிறைய தண்ணி ஓடுது. ராஜாவுக்கு என்ன பண்றதுணு தெரில. கொஞ்சம் தடுமாறுனாரு. அப்போதான் இரண்டாவது மந்திரம் ஞாபகம் வர அதை மனசுகுள்ள நினைச்சாரு. உடனே ஆறு ரெண்டு பக்கமும் வழிவிட்டுச்சு. அந்த வழியா அந்த பள்ளத்தைத் தாண்டி மறுகரைக்குப் போனாரூ. திரும்பிப் பார்த்தா அந்த ஆறு காணாம போயிருச்சு. எப்படியோ ரெண்டு ஆபத்தைக் கடந்தாச்சு. மூன்றாவது ஆபத்து எதுவென்று தெரியவில்லையே! எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று ராஜா நினைத்துகொண்டான். ராஜா நினைச்சமாறி மூணாவது ஆபத்து ஏதும் வரல

ராஜாவும் குதிரையும் குகைய நெருங்கிவிட்டார்கள். குகை மிகப்பெரிய பாறாங்கல்லால மூடப்பட்டு இருந்தது. ராஜா அதைத் தள்ளிப் பார்த்தார். அந்தப் பாறையை நகர்த்த முடியவில்லை. ராஜாவுக்குப் புரிந்துவிட்டது. மூன்றாவது மந்திரத்தை நினைத்தார். பாறை திறந்து வழிவிட்டது. உள்ளே நுழைந்தால் குகைக்குள்ள நிறைய மின்மினிப் பூச்சிங்க இருந்தது. ராஜா மூலிகைச் செடியைத் தேடினார். ஒரு இடத்தில் மின்மினிப் பூச்சிங்க எல்லாம் அப்படியே ஹார்ட் வடிவில இருந்துச்சு. மன்னர் அந்த இடத்துல போய் கைவைத்தார். மின்மினிகள் எல்லாம் மறஞ்சு குகைகுள்ள மஞ்சளா ஒரு வெளிச்சம் வந்துச்சு. வெளிச்சம் வந்த இடத்துலதான் மூலிகைச்செடி இருந்தது. ராஜா அதைப் பறித்து தான் கொண்டுவந்த பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தார். குகை தானாக மூடிக்கொண்டது

குதிரையில் ஏறி ராஜா அரண்மனைக்கு வேகமாகப் பயணித்தார். காட்டில் வரும் வழியில் முதலையையும் காணவில்லை. முனிவரையும் காணவில்லை. மூலிகையைக் கொண்டு வந்து அரண்மனை வைத்தியனிடம் கொடுத்தார். வைத்தியன் அந்த மூலிகையோடு பிற மூலிகையெல்லாம் சேர்த்து கொரோனா நோய்க்கான மருந்தைக் கண்டுபிடித்தான். நாட்டு மக்கள் அனைவரையும் அரண்மனைக்கு அழைத்து வந்து அனைவருக்கும் இரண்டு மருந்து உருண்டைக் கொடுத்தார்கள். கொரோனா நோய் ஓடிப்போச்சு

அப்ப, அவங்களாம் மாஸ்க் போட்டுருந்தாங்களா

ஏய்…!

*******

jaayapal@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.