
வீடு
அந்த வீடு அங்கேயே இருந்தது
இன்னுமா எனக் கேட்டவர்கள்
நான் சொன்னதும் ஒப்புக்கொண்டார்கள்
அந்த வீட்டில் அவள் இன்னும் இருந்தாள்
உண்மைதான் என்று சொன்னவர்கள்
வாயடைத்துப் போனார்கள்
அந்த வீடு
நான் வசிக்கும்
வீட்டின் கூடத்திலே
ஒரு கூண்டுபோல்
தொங்கிக்கொண்டிருந்தது
கூண்டுதான் அங்கிருந்தது
அவள் என்னிடம் இருந்தாள்
மறதியும் நினைவும்
கோலோச்சுகிற பொழுதுகள்
கரைந்து கொண்டிருக்க
நின்றுவிட்ட காலம்
என்னை வழி நடத்தியது
பறவை ஆற்றின் நீரை
தன் அலகால் கொத்துவது போல்
இனிமை நிறைந்த
நாட்களின் ஈரம்
நெஞ்சை நனைத்தது
இடைவெளிகளை அறிந்தவன்
இன்னும் இருக்கிறான்
***
அவர்
அந்த மனிதரை
நினைவு கூர்ந்தபடி இருக்கிறேன்
என் சுவாசத்தை ஒத்த
அல்லது ஏற்ற இறக்கங்களோடு
ஒரு குதிரையின் கால்கள்
கட்டாந்தரையில் ஏற்படுத்தும்
ஓசைக்கு ஏற்ப
அவர் என் நினைவில்
வந்தபடி இருந்தார்
முள்ளில் சிக்கிய
மீனைப் போல்
சரியான இடைவெளியில் துடிக்கிறேன்
அளவான அளவில்
அடுக்கிவைக்கப்பட்டிருந்த
விலையுயர்ந்த வார்த்தைகளின்
பொருளை அவர் சொல்லத் துணிந்தார்
அவற்றின் வழியே
காலமெல்லாம் தீராத
ஒளியைப் பாய்ச்சியபடி இருந்தார்
அணுகாதவர்களுக்குக் கிடைக்காத
புதையலைப் போல்
இன்னும் காத்துக்கொண்டிருக்கிறார்
அவரிடம் தரப்பட்டதை
அவர் உருவாக்குகிறார்
அவர் யாரென்று சொல்லும்படி
******