திருவல்லிக்கேணி பகுதியின்… அதை திருவல்லிக்கேணி என்று சொல்லி விட முடியாது. திருவல்லிக்கேணி பரந்து விரிந்தது. ஒட்டுமொத்த சென்னையிலும் உயிரோட்டமான பகுதி எதுவெனக் கேட்டால் நான் திருவல்லிக்கேணி தான் என்பேன். இப்பகுதியில் ஒரு மாதம் கூட வாழாமல் சென்னைவாசிகள் என்று கூறிக்கொள்பவர்களை பரிதாபமாகப் பார்ப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை. ஆனால், இப்போது விசயம் அதுவல்ல.
திருவல்லிக்கேணியின் தெற்கு எல்லையில் இருக்கிறது சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம். அந்த பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே செல்லும் தெருவில் வலது புறம் முதலில் வரும் சந்தில் திரும்பினால் அதில் கடைசியாக வரும் வீடு சந்திரிகாவின் வீடு. சந்திரிகாவைப் பற்றி பெரிதாக சொல்வதற்கு எதுவுமே இல்லை. தன்னைப் பற்றி யாரேனும் ஐந்து நிமிடத்திற்கு அறிமுகப்படுத்திக் கொள்ள சொன்னால் கூட என்ன சொல்வதென்று தெரியாமல் பேந்த பேந்த முழிக்கும் ஒரு வாழ்வைத்தான் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இதை நான் மட்டும் சொல்லவில்லை. அவளே ஒப்புக் கொள்வாள்.
உதாரணத்திற்கு, ஒரு ஆவணப்பட இயக்குனரோடு அவளுக்கு நடந்த உரையாடலை சுருக்கித் தருகிறேன் பாருங்கள்.
“வணக்கம் சந்திரிகா. எப்டி இருக்கீங்க?”
“நல்லாருக்கேன் கணேஷ்.”
“நான் ஒரு ஆவணப்படம் எடுக்கலாம்னு இருக்கேன். வீட்டை விட்டுப் பிரிந்து சென்னையில் தனித்து வாழும் பெண்கள் குறித்து…”
“அப்டியா ரொம்ப நல்ல விசயம். எதுவும் உதவி வேணும்னா கேளுங்க.”
“அதுக்குத்தான் கூப்ட்டேன். இப்போ நீங்க வீட்டுக்கு போய்ட்டீங்களா பேசலாமா?”
” வீட்டுக்கு போகல. ஆனா பேசலாம். சொல்லுங்க”
“இல்ல சந்திரிகா நீங்களும் தனியா சென்னைல இருக்கீங்க அதைப் பத்தி உங்க கிட்ட சில கேள்விகள் கேட்கனும். உங்க பெர்சனல் விசயம். அதனால நீங்க வீட்டுக்கு போனப்றம் சொல்லுங்க. நான் கூப்புட்றேன்”
” அய்ய அதெல்லாம் எதுமில்லங்க. என் வாழ்க்கைல சுவாரஸ்யமா சொல்றதுக்கு எதுவுமே இல்ல. நீங்க ஒரு கஷ்டத்தை சோகத்தை எதிர்பாக்குறீங்க இல்ல அது என் கிட்ட இருந்து உங்களுக்கு சத்யமா கெடைக்காது.”
” இல்ல பரவால்ல…நான் சில கேள்விகள் கேக்குறேன் அதுக்கு பதில் சொன்னா போதும். இதை நான் ரெக்காட் பண்ணிக்கலாமா With your permission.”
” sure sure பண்ணிக்கங்க. நான் தான் சொல்றேனே அவ்ளோ சீன் எல்லாம் இல்லைனு.”
” சரிங்க. நீங்க மொத சென்னைக்கு வரனும்னு எப்டி முடிவு பண்ணீங்க?”
“எப்டினா…எத்தன நாளுக்கு இப்டியே வீட்ல இருக்க முடியும். நம்ம எதாவது உருப்படியா பண்ணனும்னு தோணுச்சு. உடனே கெளம்பிட்டேன். பெருசா யோசிச்சு எல்லாம் பண்ணல கணேஷ்”
” வீட்ல எப்டி கன்வின்ஸ் பண்ணீங்க அவுங்க எதும் பிரச்சனை பண்ணலயா?”
” அதெல்லாம் இல்லங்க. நான் பெர்மிசன்லாம் கேக்கல. போறேன்னு சொன்னேன். தண்ணி தெளிச்சு விட்ட மாதிரி விட்டுட்டாங்கனு வைங்களேன்.”
“ஓ எப்டி வேலை கெடைச்சுது. எப்டி இந்த ஃபீல்டுக்கு வந்தீங்க?”
” தெரிலங்க. அதே கெடைச்சுருச்சு. சென்னை வந்து ரெண்டு நாள்ல. ”
“அப்டியா…? நல்லா எழுதுறீங்க. இந்த க்ராப்ட் எப்டி வந்தது? எதும் ப்ராக்டிஸ் பண்ணீங்களா?”
” அதெல்லாம் இல்லங்க…நெறைய படிப்பேன் சின்ன வயசுலருந்து சோ அப்டியே வந்துட்டு போல…”
” ஓ….”
” அதான் சொல்றேனே நீங்க எதிர்பாக்குற எந்த கன்டென்ட்டுமே என் கிட்ட இல்ல. வேலை தேடி இவ்ளோ கஷ்டப்பட்டேன் அவ்ளோ கஷ்டப்பட்டேன் அவன் கைய புடுச்சு இழுத்தான் இவன் அப்பப்ப கூப்ட்டான்னு எந்த இன்ட்ரெஸ்டிங் ஸ்டோரியும் என் கிட்ட இல்ல. நான் பாட்டுக்கு பெருசா எந்த பிரச்சனைகளும் இல்லாம இருக்கேன்னு வைங்களேன்”
அதன் பிறகு அந்த ஆவணப்படம் என்னவாயிற்று என்றே தெரியவில்லை. ஏனென்றால் கணேஷ் அதன் பிறகு சந்திரிகாவிடம் பேசவேயில்லை. நிஜமாகவே சந்திரிகாவிற்கு பிரச்சனையே இல்லையா என்றால் இருக்கிறதுதான். ஆனால், அதைப் பற்றி நமக்கு தேவையில்லை. அடுத்தவர்கள் சொல்ல விரும்பாத அல்லது அவர்களே பொருட்டாகக் கொள்ளாத அவர்களது அந்தரங்கங்கள் நமக்குத் தேவையில்லை. குறைந்தபட்சம் எனக்காவது தேவையில்லை.
ஆனால், இதே போல ஒரு நண்பருடனான உரையாடலின் போது ஏறத்தாழ இதே போலான கேள்விகளுக்கு சந்திரிகாவின் பதில் வேறாக இருந்தது. அதையும் பார்த்து விடுங்கள்.
“சென்னைக்கு வந்து எத்தனை வருசம் ஆகுதும்மா?”
“நாலஞ்சு வருசம் ஆகுதுன்னு நெனைக்கிறேன் ஸார்.”
” எப்டி இவ்ளோ தைரியமா இவ்ளோ பெரிய முடிவை எடுக்க முடிஞ்சது? நெனைச்சா எனக்கு ஆச்சரியமா இருக்கேமா”
” என்ன ஸார் பண்றது… டக்குனு யோசிச்சு பாக்குறப்போ, நம்ம யாருனு நமக்கே கேள்வி வரப்போ, சிம்பிளா எதுக்கு நம்ம வாழ்றோம்னு தோணுறப்போ எனக்கு அதுக்கெல்லாம் பதில் தேவைப்படுது ஸார். திக்குதிசை தெரியாம நான் அந்த பதிலைத் தேடுறேன். அவ்ளோதான். இதுக்கு தைரியம்னு அர்த்தமானு தெரியல எனக்கு இந்த தேடல் தேவைப்படுது. இந்த ரிஸ்க் தேவைப்படுது. கேள்வி வரப்போ தெரிலயேன்னு தலையை சொறியாம அட்லீஸ்ட் தேடிட்ருக்கேன் மூடுனு சொல்லலாமில்லையா?”
“அது சரி…ஆனா எப்பவாச்சும் நம்ம தப்பு பண்ணிட்டோமோனு உனக்கு தோணிருக்கா? ஏன்னா ரொம்ப சொகுசான ஒரு வாழ்க்கையை நீ தூக்கி போட்டு வந்திருக்க…”
” சத்யமா எனக்கு அப்டி மட்டும் தோணுனதேயில்ல ஸார். வந்தவுடனே வேலை கெடைச்சது உண்மைதான். ஆனா இந்த நாலஞ்சு வருசத்துல பாதி வேலையில்லாமத் தான் இருந்திருக்கேன். நிறைய நாள் வெளியுலக வெளிச்சமே இல்லாம, மனிதர்கள் வாசமே இல்லாம ரூம்ல இருந்திருக்கேன். ஆனா அப்போலாம் கூட நான் தப்பு பண்ணிட்டோமோனு யோசிச்சதேயில்ல. எனக்கு ஒரு நிம்மதி ஒரு சாடிஸ்ஃபேக்சன் இருக்கு இந்த வாழ்க்கைல. அது போதும்.”
சந்திரிகாவின் இயல்பு எனக்கு எப்போதும் ஒரு விதக் குழப்பத்தை உண்டாக்கும். எல்லாவற்றையும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லைதான். நாம் நம்மிடமிருந்தே கூட விசயங்களை ஒளித்து வைத்துக் கொள்ள முடியும். நாம் நம்மிடம் இருந்தே கூட ஒளிந்து கொள்ள முடியும். நிறைய நேரங்களில் நிறைய பிரச்சனைகளைத் தவிர்க்க தன்னிடமே தான் கண்ணாமூச்சி விளையாடிக் கொள்ளும் வித்தை தெரிந்தவளாகவே நான் சந்திரிகாவை அறிந்திருக்கிறேன்.
பெண்ணின் சிந்தனை நிலைகள் பற்றி யாரும் எப்போதும் ஒரு முடிவுக்கு வந்து விடவே முடியாது. அதற்கு இல்லாத திக்குகளில் எல்லாம் தறிகெட்டுப் பாயும் புரவியின் வேகம். ஒரே நேரத்தில் அலையின் ஆர்பரிப்பெனவும், ஆழ்கடலின் அமைதியெனவும் இரு நிலைகளில் இருப்பது பெண் மனதிற்கு மட்டுமே சாத்தியம் ஆகிறது. அதில் எதை யாரிடம் எப்படி எந்த அளவிற்கு வெளிப்படுத்த வேண்டுமென்பதை அவள் அவ்வப்போது முடிவு செய்து கொள்கிறாள். அந்த சூட்சுமம் அவள் மட்டுமே அறிந்தது. சந்திரிகாவின் விஷயத்தில் அவள் அவ்வப்போது தன்னிலையைத் தானே தனக்கு தெளிவு படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பவள் போல அடிக்கடி தோன்றுவாள்.
இப்படித்தான் அவளின் நெருங்கிய நண்பன் ஒருவன் தவறுதலாக ஏதோவொரு சரியான கேள்வியை அவளிடம் கேட்டு விட்டான். அது என்ன கேள்வி என்பதே இப்போது மறந்து விட்டது. அல்லது பதில் சொல்ல வேண்டிய அவசியத்திலும் அவசரத்திலும் இருந்த சந்திரிகா கேள்வியை குறித்த எந்த கவலையும் அற்றவளாக இருந்தாள். எல்லோருமே மறந்து போன, ஞாபகம் வைத்துக் கொள்வதற்கான அவசியமே இல்லாத ஒரு கேள்விக்கான சந்திரிகாவின் பதிலைப் பாருங்கள்.
” இல்ல தெரியாம தான் கேக்குறேன் என்னை பாத்தா எப்படி தெரியுது உனக்கு… இவ கிட்ட என்ன வேணா எப்போ வேணா பேசிடலாம், கேட்ரலாம்னு நெனச்சுட்டு இருக்கியா? என்னை பத்தி என்ன தெரியும் உனக்கு? ”
வாழ்க்கைல இது வரைக்கும் நான் நெனச்சது எதுமே நடந்தது இல்ல தெரியுமா உனக்கு… இனிமேலும் நடக்காது. நான் கடைசியா எப்போ எதுக்கு ஆசைப்பட்டேனு எனக்கே மறந்து போச்சு. திடீர்னு என்ன சாப்புட்ற என்ன புடிக்கும் உனக்குன்னு கேட்டா கூட எனக்கு சொல்ல தெரியாது. ஆசைப்பட்டு, இல்லைனா சொல்லி என்ன ஆக போகுதுனு தோணிருச்சு. ஆனா இதெல்லாம் மெச்சூரிட்டி பக்குவம்னு நெனைக்கறயா ? சத்யமா கெடையாது. பசிக்கும் எதாது சாப்பிடணும் போல இருக்கும். ஆனா என்ன சாப்புட்றதுனு 2 மணி நேரமா யோசிச்சு பசிக்குதுங்குற விஷயத்தையே மறந்து போயிருப்பேன். இப்பவும் நீ என்னடா சோறு சோறுனு பேசுறானு என்னய பத்தி கேவலமா தான் நினைப்ப. ஒழிஞ்சு போ. எனக்கு நீ என்ன நெனைக்குற அப்டிங்குறத பத்தி எல்லாம் கவலை இல்ல.
ஆமா யார் நீ? என்னைய உனக்கு எத்தனை நாளா தெரியும். நான் பேசுற 4 பேர்ல நீயும் ஒருத்தன் அவ்ளோ தான். மனுஷங்களோட பேசாமயே இருந்தா பைத்தியம் புடிச்சுருமோனு பயந்து போய் உன்ன மாதிரி 4 பேரை செலக்ட் பண்ணி பேசிட்டு இருக்கேன். அவ்ளோ தான். உன்னோட பேசுறேன் அப்டிங்குறதுக்காகவே நீ என் கிட்ட என்ன வேணாலும் பேசலாம் கேட்கலாம்னு அர்த்தம் கிடையாது. புரிஞ்சுதா?”
” டேட்’டா சந்துமா? மூட் ஸ்விங்கா ? ஏன் நான் என்னமோ கேட்டா நீ என்னென்னமோ பேசுற? கண்டதையும் யோசிக்காம போய் தூங்கு சரியா போயிரும் ” என்று சொல்லி விட்டு அவன் போயே போய் விட்டான்.
நாம் அடிக்கடி பார்க்கும் ஒரு நபர், நாம் நெருக்கமாக அறிந்த ஒரு நபர் எல்லா நேரமும் நாம் அறிந்த நபராகத் தான் இருக்கிறாரா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. இதைப் பற்றி நிறைய நேரங்களில் நான் யோசித்ததுண்டு. நம் வாழ்வென்பதே பல சமயங்களில் நம்மால் கூட படிக்க முடியாத, யூகித்துக் கூட அறிய முடியாத பழங்கால கல்வெட்டுகள் போலத் தோன்றும் போது, அடுத்தவர் வாழ்வைப் பற்றிய ஒரு முடிவிற்கு எங்கனம் நம்மால் வர முடிகிறது என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வென்பதும் சிந்தை வெளியென்பதும் பெரும்புதைகுழி. நல்லதும் கேட்டதும் தகுந்ததும் தகாததுமாக நிறைந்து தளும்பும் அப்புதைகுழியின் ஏதோ ஓர் விளிம்பில் பாதுகாப்பாக நின்று கொண்டு தான் நாம் அவர்களை எடை போட முயல்கிறோம்.
சந்திரிகா இதற்கெல்லாம் அப்பாற்பட்டவள். அவள் எப்போதும் ஒரே நேரத்தில், தன் புதைகுழியைத் தூர்வாரும் வேலையைத் தீவிரமாக செய்து கொண்டே வெளியுலகில் தன்னைத் தெளிந்த நீரோடையாகக் காட்டிக் கொள்பவள். இந்த நிலை எப்படி சாத்தியமாகும் என என்னால் ஒரு முடிவுக்கு வரவே இயலவில்லை. முதலும் கடைசியுமாக சந்திரிகாவிடம் நான் பேசிய தருணம் வாழ்வில் மறக்க முடியாதது. அதற்குப் பிறகு நான் யாரிடமும் பேசவில்லை. சந்திரிகாவும் தான். முதலில் நான் தான் அந்தப் பேச்சைத் தொடங்கி வைத்தேன்.
” உனக்கு என்ன தான் பிரச்சனை சந்திரிகா? ”
” எனக்கு எந்த பிரச்சனையும் இல்லையா? உனக்கு தெரியாதா?”
” எனக்கு தெரியுது ஆனா புரியல.”
” என்ன புரியல? உனக்கே புரியலைனா வேற யாருக்குத் தான் புரியும். ”
” நீ நெனைச்ச மாதிரியான ஒரு வாழ்க்கையை தான் நீ வாழுற… புடிச்ச வேலை பாக்குற சம்பாதிக்கிற உன் இஷ்டத்துக்கு செலவு பண்ற… நெனச்ச நேரத்துக்கு நெனச்ச இடத்துக்கு போற வர…. உனக்குன்னு உண்மையா சில நண்பர்கள் இருக்காங்க. வேற என்ன தான் நீ உனக்கு வேணும்னு நெனைக்குற எதிர்பாக்குற?”
” எனக்கு சொல்லத் தெரியல. மொத்த வாழ்க்கைலயும் விவரிக்க முடியாத ஒரு வெறுமை சூழ்ந்திருக்க மாதிரி இருக்கு. அந்த வெறுமை அந்த அமைதி என்னை போட்டு அழுத்துது. புடிச்ச வேலைக்கு போறேன் சம்பாரிக்குறேன் சுத்துறேன். எல்லாம் சரி. ஆனா எதுக்கு? எதை நோக்கி போறேன் எதைத் தேடுறேன்னே தெரியாம அலையுறது எனக்கு அலுப்பா இருக்கு. ரொம்ப அலுப்பா இருக்கு. நீங்கலாம் யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு சோர்வு என்னை எப்பயும் தொரத்துது. இதுக்கெல்லாம் நான் என்ன செய்றதுனு தெரியல.”
” இது எனக்கு சிரிப்பா இருக்கு. அவனவன் ஆசைப்பட்டது எதையுமே செய்ய முடியாம போராடிட்டு இருக்கான் உனக்கு எல்லாம் கெடைச்சும் நீ விரக்தியா பேசிட்ருக்க ”
” எனக்கு ஆசைனு எதுவுமே இல்ல…இல்லைனா நான் எதுக்கு ஆசைப்படுறேன்னு எனக்கே தெரியல. கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒண்ண தொரத்திட்டு ஓடிட்டு இருக்குறது எனக்கு பைத்தியக்காரத் தனமா தெரியுது. எதுக்கு இத்தனை வெறுமை, எதுக்கு இத்தனை வலி எதுக்கு இத்தனை போராட்டம்னு கோவம் வருது. என் மேல கோவம், உன் மேல கோவம், எல்லார் மேலயும் கோவம். சில சமயம் செத்துரலாம்னு கூட தோணுது”
அதற்குப் பிறகு அவளிடம் மட்டுமல்ல யாரிடமும் நான் பேசவில்லை. சந்திரிகாவும் தான்.