இணைய இதழ் 112சிறுகதைகள்

மயில்வாகினி – ஜே.மஞ்சுளாதேவி

சிறுகதை | வாசகசாலை

அவள் நடைபயிற்சிக்காகத்தான் அந்த நெடும் வீதியில் நடந்து கொண்டிருந்தாள். மனிதர்களை இழுத்துக் கொண்டு சில நாய்களும், நாய்களை இழுத்துக் கொண்டு சில மனிதர்களும், நாள் தவறாமல் நடை பயில்கின்றனர். சில நாய்கள் இவளைப் பார்த்து வாலாட்டுமளவு இவளும் தொடர்ந்து நடைபயிற்சி செய்கிறாள். ஒரு நடுத்தரவயது அம்மாள் இவளைக் கடக்கும்போது முகத்தை உற்று உற்றுப் பார்க்க ஆரம்பித்தபோதே இவளுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டது. அதே போல் இவள் கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்டார், ‘நீங்கள் மயில் வாகினிதானே? பாரதி பற்றி நீங்கள் எழுதிய நாவல் வேற லெவல்!’ என்று ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தாள். இவள் எதைக் கேட்கக்கூடாது என்று பயந்து கொண்டிருந்தாலோ அதைக் கேட்டே விட்டாள், ‘இப்ப எல்லாம் ஏன் மேடம் நீங்கள் எழுதுவது இல்லை?’. ஒரு நொடி நிலை குலைந்து போனாள். தனக்கு உண்மையிலேயே “ரைட்டர்ஸ் பிளாக்” வந்து விட்டதா? அந்த அம்மாவிடம், ‘எனக்குக் கொஞ்சம் சொந்த வேலைகள்.. அவ்வளவுதான். சீக்கிரமே எழுதுவேன்’ என்று சமாளித்து அனுப்பினாள்.

  கடந்த நான்கு மாதங்களாக வாகினிக்கு இது மாதிரித்தான் ஆகிறது. எப்போதும் உட்கார்ந்து எழுதும் மாடிப்படியில் உட்கார்ந்து எழுதிப் பார்த்தாள். பரீட்சை எழுதும் அட்டையின் கிளிப்பில் தாள்களை மாட்டி எழுத ஆரம்பித்தாள். இரண்டு மூன்று வரிகளுக்கு மேல் நகரவில்லை. கிழித்து சுருட்டி வீசினாள். அறை முழுவதும் வெள்ளையாய் நசுங்கிப் போன வெள்ளைப் பந்துகளாக தாள்கள் நிறைந்ததுதான் மிச்சம். யாரோ சொன்னார்களே கொக்கு பூத்த வயல் என்று நினைத்தாள். மூவாயிரம் பக்கங்களில் ஒரு நாவல் எழுதியது நான்தானா என்று நினைத்தாள். யாரோ சொன்னது போல அப்போது சந்நதம் வந்துதான் எழுதினேனா? மூத்த மகன் வயிற்றில் இருக்கும் போதுதான் எழுதினேன். மாமியார்க்கு அதில் பெருமை. பிறக்கப் போகும் குழந்தை பாரு அறிவாளியா வருவான் என்றார். அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. எல்லோரையும் போல் கல்லூரியில் படித்து எல்லோரையும் போல் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறான். தமிழ் எழுத்துக்கூட்டித்தான் படிக்கிறான். தான் சேர்த்து வைத்திருக்கும் ஏழு அலமாரிகளின் புத்தகங்கள் தனக்குப் பிறகு சீண்டுவாரில்லாமல் போய்விடுமோ என்ற பயம் வந்தது. பேராசிரியர் த.ப.விஷ்ணு நாடன் நினைவு வந்தது வாகினிக்கு. பழைய புத்தகக் கடையில் கடைக்காரர் புன்னகை முகத்தோடு, ‘வாங்கம்மா, உங்களுக்குத் தரணும்னே வச்சிருந்தேன்’ என்று ஒரு பெட்டி நிறைய புத்தகங்கள் காட்டினார். அத்தனையும் இனி கிடைக்கவே கிடைக்காத அரும் புத்தகங்கள். முகப்பில் பேராசிரியர் விஷ்ணு நாடன் என்ற முத்து முத்தான கையெழுத்து. அந்தப் புத்தகங்களுக்காக பேராசிரியரின் வீட்டு வாசலில் மணிக்கணக்காக தவம் இருந்த நாட்கள் நினைவுக்கு வந்தது வாகினிக்கு. அவரது மகனை உடனடியாக அலைபேசியில் அழைத்தாள் ராகினி. ‘அப்பா புத்தகங்களை என்ன செய்தீர்கள்?’ என்ற போது, ‘புத்தக தூசியால பாப்பாவுக்கு மூச்சுத் திணறி வீசிங் வந்துடுது. அதனால் கடைக்குப் போட்டுட்டோம்’. ‘எல்லா புத்தகங்களையுமா?’ என்றாள். ‘ஆமாம்’ என்று போனை வைத்து விட்டான். பெரும்பாலான எழுத்தாளர்களின் எழுத்துலக வாரிசுகள் சொந்தக் குடும்பத்தில் இருந்து வரவில்லை என்ற நினைப்பு வாகினிக்குள் ஓடியது. ஆ.மாதவனைப் போல கடைத்தெரு கதைகள் எழுத அவர் குடும்பத்திலிருந்து யாரும் வரவில்லையே…? எங்கிருந்தோ வந்த திருச்செந்தாழை என்ற எழுத்தாளர்தானே நுணுகி நுணுகி காவியம் போல கடைத்தெருக் கதைகளைத் தந்து கொண்டிருக்கிறார். இல்லாதப்பட்டவர்களின் உலகைக் காத்திரமாகத் தந்த ஜெயகாந்தனைப் போல் எழுத அவர் குடும்பத்திலிருந்து யாரும் வரவில்லையே? எழுத்துப் பின்னணியே இல்லாத சு.வேணுகோபாலிடம்தானே காத்திரத்தைக் காணமுடிகிறது? என்று ஒரு நினைவோட்டம் கிளம்பியது வாகினியிடம். ஜெயகாந்தனும் சில வருடங்கள் எழுதாமல் இருந்தாரே.. என்ற நினைவும் கூடவே வந்தது. ‘நீங்கள் ஏன் இப்போது எழுதுவதில்லை?’ என்று ஒரு வாசகர் கேட்டதற்கு, ‘நான் எழுதிய எல்லாவற்றையும் நீங்கள் படித்து விட்டீர்களா?’ என்று திருப்பி சிங்கம் போல கர்ஜித்தாராம். ரைட்டர்ஸ் பிளாக்கை அவர் கையாண்ட விதம் கூட கம்பீரம் தான்.

  தனக்குப் பிறகு தன் நூல்கள் என்னவாகுமோ என்று, தன்னிடம் உள்ள புத்தகங்களின் எதிர்காலம் குறித்து ஒருவர் கவலைப்படுகிறார் என்றால் அவருக்கு வயதாகி விட்டது என்று அர்த்தம் என்று எழுத்தாளர் கவி ஒரு கூட்டத்தில் சொன்னது தன்னளவில் உண்மைதானோ என்ற பயம் தோன்றியது மயில் வாகினிக்கு. தான் படித்த குறிப்பிட்ட எழுத்தாளரின் பெரிய பெரிய நாவல்களை எல்லாம் சிறைச்சாலை நூலகத்துக்குக் கொடுத்ததாகப் பெருமை பேசிய கவிதாயினி விலாசினியிடம், ‘சிறைக் கைதிகளுக்குத் தரப்படும் தண்டனை போதாதா? இந்த நாவல்களைப் படிக்கச் சொல்வது இரட்டைத் தண்டனை ஆகிவிடாதா? வேறு நல்ல புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள்’ என்று சொன்னதற்குப் பிறகு கோவித்துக்கொண்ட விலாசினி இன்றுவரை வாகினியுடன் பேசவில்லை.

   உண்மையிலேயே இனி தன்னால் ஒரு சிறுகதை எழுதமுடியாதா என்ற பயம் வாகினிக்குத் தோன்றியது. இதே போல் கொரோனாக் காலத்தில் நடைபயிற்சி முடிந்து வீட்டுக்கு வந்ததுமே எழுதிய கதைகள் நினைவுக்கு வந்தது. இப்போது தானும் பரண் எழுத்தாளர் பரமசிவம் போலாகி விடுவோமோ என்று கவலைப்பட்டாள். ஒரே ஒரு நாவல் எழுதிவிட்டு எல்லாக் கூட்டத்திலேயும் அதைப் பற்றியே பேசுவார். தன்னுடைய அந்த நாவலைப் பத்து இயக்குநர்கள் திருடி படம் எடுத்ததாகச் சொல்லும்போது எதிரில் இருப்பவர்கள் சிரிப்பை அடக்க சிரமப்படுவார்கள். தன்னைப் போல் எழுத இனிமேல்தான் ஒருவன் பிறந்து வரவேண்டும் என்பார். பரணில் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் புகைப்படத்தைத்தான் எப்போதும் தன் அலைபேசியில் ஸ்டேட்டசாக வைத்திருப்பார். எப்போதோ வெளியிட்டு பேசி ஓய்ந்து போன ஏதாவது ஒரு நூலைப் பற்றி சிலாகித்து இவர் எப்போதாவது எழுதும் நாலு வரி விமரிசனத்தைப் படித்தால் ‘சிவாஜி செத்துட்டாரா?’ என்ற வசனம் போலவே இருக்கும். தன்னாலும் இனி இப்படி பழையதைக் கிளரத்தான் முடியுமோ என்ற அச்சம் ஒரு குளிர் ரேகை போல் வாகினிக்குள் ஓடியது.

  தான் எழுதிய நூல்களை அடுக்கி வைத்து தன்னுடைய உயரம் என்று புகைப்படம் எடுத்துக் கொண்டால் ஏதாவது எழுத வருமா என்று பார்த்தாள். ம்ஹும்…ஒரு வரி கூடத் தேற்ற முடியவில்லை. நான்கு பத்திரிகைகளில் இருந்து கதை கேட்டு வந்த கடிதங்கள் அவளுடைய மெயிலில் இருக்கின்றன. சென்ற நான்கு மாதங்களுக்கு முன்பு கூட மளமளவென்று நான்கு கதைகள் எழுதியதை நினைத்துக் கொண்டாள். வாக்கிங் போவது ஒரு தியானம் என்று கூட ஒரு பதிவு போட்டிருந்தாள் வாகினி. எழுத முடியாமலே தன் ஆயுள் முடிந்து விடுமோ என்ற கவலை கவ்வியது. எல்லாப் போட்டிகளிலும் பரிசு பெற்றுக் கொண்டேயிருக்கும் ஒரு எழுத்தாளரின் நினைவு வந்தது. அவர் எழுத்தை ஒரு கணித சூத்திரம் போல் கையாள்கிறார். அதில் ஏதோ ஒரு நிறைவும் கூடவே ஒரு நிறைவின்மையும் பின்னிக் கிடப்பதாகத் தோன்றியது. எது எப்படியோ எழுதும் மனநிலையை அவர் தக்கவைக்கிறாரே என்று நினைத்துக் கொண்டாள்.

  ‘அம்மா நல்லாருக்கீங்களா?’ என்ற குரல் வாகினியின் நினைவோட்டத்தைக் கலைத்தது. ‘ஓ வாக்கிங்கா மேஸ்திரி?’ என்றாள் வாகினி. ‘அதுக்கெல்லாம் நமக்கு ஏதும்மா நேரம், வேலைக்குதாம்மா போறேன். பெதப்பம்பட்டீலதான் கிணத்து வெட்டு. எங்க ஆளுக எல்லாம் போய்ட்டாங்கம்மா. நான் டோஷர் வண்டிக்கு சொல்லிட்டு போய்ட்டே இருக்கேம்மா’ என்றார். தான் வீடு கட்டும் போது போர் போட்டால் தண்ணீரை விலைக்கு வாங்கும் செலவு மிச்சம் என்று எஞ்சினீயர் சொல்லி அழைத்து வந்தவர்தான் இந்த கிணத்து மேஸ்திரி. தேங்காயை நேராய் கையில் வைத்தபடி மனை முழுதும் நடந்து நீரோட்டம் பார்த்து போர் போட்டார். ‘இந்தக் காலத்துல கூட கிணறு வெட்டறாங்களா மேஸ்திரி..?’ என்று வியந்து கேட்டாள் வாகினி. ‘என்னம்மா இப்படிக் கேட்டுட்டீங்க. ஏற்கனவே இருக்கற கிணறு தூர்ந்து போயிரும்மா. மறுபடியும் தூர் எடுத்தா ஊற்று கனிச்சல் வரும்மா’ என்றார். ‘ஏன் ஊற்று வற்றுது?’ என்ற வாகினியைப் பார்த்து சிரித்தார். ‘அது படச்சவனுக்குத்தாம்மா தெரியும். எப்ப அடைத்த ஊற்று திறக்கனும்னு அமைப்பு இருக்கோ அப்ப திறந்துதானம்மா ஆகனும்?’ என்றார். அசையாமல் சாலையில் நின்ற வாகினியிடம், ‘சரிம்மா, எனக்கு நேரமாச்சு நான் கிளம்பறேம்மா. நீங்க பின்னாடி மெதுவா வாங்க’ என்று நகர்ந்தார் கிணத்து மேஸ்திரி.

mdevi1817@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button