நெல்லை மாநகரம் டூ நியூயார்க்; 20 ‘மாற்று மருந்து’ – சுமாசினி முத்துசாமி
தொடர்கள் | வாசகசாலை
ஒரு செய்தித்துளி – அமெரிக்காவில் சுய உதவி/ சுய முன்னேற்றப் புத்தகங்களின் விற்பனை எண்ணிக்கை 2013 முதல் வருடா வருடம் 11 சதவீத கூட்டு வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்து, 2019 ல் 18.6 மில்லியனை எட்டியது. இச்செய்தியை உலகளாவிய தகவல் நிறுவனமான என்.பி.டி குழுமம் தெரிவித்துள்ளது. பண மதிப்பில் பார்த்தால், 2016 ஆம் ஆண்டில் இந்த வகை புத்தக வணிகத்தின் தொழில் மதிப்பு சுமார் 10 பில்லியன் டாலர்கள். 2022 க்குள், இது 13 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருக்கும் என்று சந்தை ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
ஒரு மனிதன் தன்னை மேலும் மேம்படுத்த, இன்னும் அதிக சிறப்படைய இப்படிப்பட்ட சுய முன்னேற்றப் புத்தகங்கள் உதவி புரிகின்றன என்பது தான் பொதுவான கருத்து. இந்த கருத்தின் படி பார்த்தால், உலகம் முழுவதும் விற்று தீர்த்திருக்கும் இப்படிப்பட்ட புத்தகங்கள் அதன் எண்ணிக்கையின் அளவில் வருடா வருடம் கோடி கோடி வெற்றியாளர்களை உருவாக்கி இருக்க வேண்டும். அல்லது அவர்கள் வாழ்வில் ஒரு இரண்டு படிகளாவது முன்னேற்றி இருக்க வேண்டும். அப்படி தான் நடந்து கொண்டிருக்கிறது என்று நம்பவே என் மனம் விரும்புகிறது.
தன்னைத் தவிர சிறந்தது எங்கும் இல்லை என்று நம்பும் தனி மனிதனோ, சமூகமோ தன் கண், காது, சிந்திக்கும் திறன் என்று எல்லாவற்றையும் இறுக்கமாகப் பூட்டி வைக்கின்றனர். அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட அறிவுரையும், உதவியும் துளியும் உபயோகம் இல்லை. அப்படியுள்ளவர்களுக்கு இந்த புத்தகங்கள் மட்டும் எப்படி உதவ முடியும் என்று தெரியவில்லை. ‘சிறப்பின் உச்சம் நாங்களே !’ என்று கருதும் அமெரிக்கச் சமூகம் இப்படிப்பட்ட புத்தகங்களை வாங்கி குவிக்கிறது என்பது எனக்கு முரணாகப்படுகின்றது.
ஒரு தாத்தா இருந்தார்கள். உறவு முறையினால் அல்ல, குடும்ப நட்பினால் உருவான பிரியமான தாத்தா. அவர் ஆங்கிலேயரிடம் வேலை பார்த்து, பின்னர் நெல்லையில் ஒரு நூற்பு ஆலையை நிறுவியவர். நான் மேலாண்மை (MBA) கல்வி பயிலும்பொழுது இந்த ‘சுய முன்னேற்ற’ புத்தகங்களை நான் படிக்கவே கூடாது என்று ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் அறிவுறுத்திக்கொண்டே இருந்தார்கள். “வேறு யாரோ எழுதிய புஸ்தகத்தை நீ படிச்சு முன்னேறனும்னு நினைச்சேன்னா, அது சுய உதவியே இல்ல. உனக்கு உதவி வேணும்னா சுத்தி இருக்குற மனுஷங்களப் படி, அவங்க சொல்றத எல்லாம் கேட்டு, உனக்குக் கீழ குழி வெட்டுறானா இல்ல உன்ன குழியிலே இருந்து தூக்கிவிடுறானா கவனி… இந்த பாடத்த வாழ்க்க முழுக்க படிச்சிகிட்டே இரு. இதுக்கு புஸ்தகம் படிச்சி எல்லாம் திருந்த முடியாது” என்று கூறி ஒவ்வொரு முறை பார்க்கப் போகும்போதும் தன் வாழ்வில் இருந்து ஏதோ ஒரு அனுபவக் கதையும் கூறுவார்கள். வயதின் தொந்தரவுகளுக்கு நடுவேயும், வார்த்தைகளை மூச்சு இடைவெளியினால் கோர்த்து அந்த தாத்தா அறிவுறுத்திய பலவற்றை இன்றும் புத்தக வரிகளுக்கு நடுவே என்னால் கண்டெடுக்க முடியவில்லை.
உலகின் எந்த நாட்டை விடவும் மிகப்பெரிய ‘தற்பெருமை’ முகம் அமெரிக்காவிற்கு உண்டு . இங்குக் குழந்தைப் பருவத்திலேயே உலகில் சிறந்த நாடான அமெரிக்காவில் நாம் அனைவரும் வாழ்கிறோம், அதனால் நாமும் சிறந்தவர்கள் என்ற எண்ணத்தைப் பதிய வைத்து விடுகின்றனர் . சிறப்புகள் பல இருப்பினும், இவர்கள் மட்டுமே அனைத்திலும் சிறந்தவர்கள் என்ற பீற்றல் தான் பலருக்கும் நெருடுகிறது. பீற்றலோடு மட்டுமல்லாது, தன்னை மற்றவர்கள் அப்படித்தான் மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், அதற்காக உலக அரசியல் தளத்தில் காய்நகர்த்தல்களும் இவர்களுக்கு கை வந்த கலை என்பதை நான் சொல்லி தான் உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.
ஐ டி துறையில் வேலை பார்க்க ஆரம்பித்து, சில அமெரிக்க கிளைண்ட்களிடம் பேச ஆரம்பிக்கும்போது சில நேரங்களில் ஒரு விஷயம் உறுத்தியது. நாங்கள் மட்டும் தான்/ நான் மட்டும் தான் சிறப்பு என்று நம்பி அவர்கள் உரையாடிய விதம். பொதுவாக அமெரிக்கர்கள் அளவிற்குப் பிடித்த பிடியில் அழுத்தமாகப் பிரிட்டன் மக்களோ மற்ற நாட்டவரோ பேசி நான் கேட்டதில்லை. நம் ஊர் சொலவடையில், ‘பாதிப் பேர் நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால் தான்’ என்று திட்டவட்டமாக நம்புபவர்கள். டிரம்ப் அவர்களின் சில உரைகளை முதலில் கேட்டபோது மாற்றுக் கருத்தே இல்லாமல் இவர் இந்த நாட்டின் மனநிலையை அறிந்து பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்று தோன்றியது. (நம் ஊர் ஜாதி, மதப் பெருமை பேசும் சிலர் அவர்கள் நம்பும் அந்த மேலாதிக்கத்தைப் பற்றிப் பேசுவது எல்லாம் தனி லெவல். அவற்றோடு எதையும் ஒப்பிட முடியாது என்பது தனிக்கதை.)
எவ்வளவு தரவுகளுடன் தன்மையாக எடுத்துக் கூறினாலும் சிலர் கேட்கவேமாட்டார்கள். கொஞ்சமாவது கேட்டால் தானே, எங்கே தவறிருக்கிறது என்று தெரியும். அதற்கு துளியும் இடம் கொடுக்க மாட்டார்கள். சில நேரங்களில், விளக்கிச் சொல்லும் offshore மக்களைத் துளி கூட இவர்கள் சட்டை செய்வதேயில்லை என்று தெளிவாகத் தெரியும். சரி, பேசும் பொழுது உச்சரிப்பு போன்ற விஷயங்கள் அவர்களுக்கு இடறலாம் என்று பாயிண்ட் பாயிண்டாக மின்னஞ்சல் அனுப்பினாலும், அதற்கும் மேல் ppt போட்டு அனுப்பினாலும் ஒன்றும் நடக்காது. நாங்கள் பல முறை குட்டிக்கரணம் அடித்தும் சிலர் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை, வாசிக்கவில்லை என்பது மனச்சோர்வைத் தான் தந்தது.
பின்னர் நாங்கள் திக்கித் திணறிய அதே கிளைண்ட்களிடம் அன்றைய நிர்வாக தலைவர்கள் சிலர் உரையாடும் பொழுது, தங்கள் வார்த்தைகளில், உடல் மொழியில் அவர்கள் வெளிப்படுத்திய அதீத தன்னம்பிக்கை offshore நண்டு சிண்டுகளான எங்களுக்கு எல்லாம் ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. என்னைப் போல் ஆக வேண்டும் என்றால் இப்படி இருங்கள், இதைச் செய்யுங்கள், இதை எல்லாம் படியுங்கள் என்று ஒரு லிஸ்டும் அவர்கள் தருவார்கள். தாத்தா கூறிய கருத்தை எல்லாம் பறக்க விட்டுவிட்டு அந்த புத்தகங்களையும் முழு கவனத்தோடு நானும் வாசித்தேன். மிக முக்கிய கருத்தாகப் பல பல சுய முன்னேற்றப் புத்தகங்களில் குறிப்பிடப்படும் ஒரு விஷயம், open mindedness- திறந்த மனதுடன் எதையும் புரிந்து கொள்ளத் தயாராக இருக்கும் மனப்பக்குவம்.
இதைப் போன்ற சில உரையாடல்களைத் தள்ளி நின்று வியந்து பார்க்கும்போது பெரிய உந்துதலாகத் தோன்றியது. அதுவே அப்படிப் பட்ட (சில) தலைவர்களோடு வேலை செய்ய ஆரம்பித்தபோது இந்த எண்ணமும் கருத்தும் மாறிவிட்டது. அருகிலிருந்து பார்க்கும்போது அதே தன்னம்பிக்கை மிகுந்த வார்த்தைகள் அசட்டைத்தனமாகவும், வெற்றுப் பெருமையாகவும் தோன்றியது. பல நேரங்களில், சிலரின் வீம்பு குணத்தினாலேயே தொழில் முறையிலும், நிர்வாக முறையிலும் நிகழும் சறுக்கல்களை உணர முடிந்தது. அவர்கள் பரிந்துரைத்த புத்தகங்களிலிருந்து பலர் கற்றுக்கொண்ட ‘open mindedness’ பற்றி நாங்களே அவர்களிடம் பரிந்துரைக்கும் நிலை சில நேரங்களில் இருந்தது.
அப்படிப்பட்ட நேரங்களில் பல கேள்விகள் மனதில் தோன்றும். சிறப்பு என்றால் என்ன? நான் ‘மட்டுமே’ சிறந்தவன் அல்லது சிறந்தவள் என்றால்? என் சமூகம் ‘மட்டுமே’ உயர்ந்தது என்றால்? இதற்கும் மேல், என்னை விட அல்லது எங்களை விட, மற்றவர்கள் எல்லாம் மட்டம் என்றால்??. ஆக மொத்தத்தில் தான் மட்டுமே அப்பாடக்கர் என்று உரையாடும் எவரைவிடவும் மற்ற அனைத்துமே சிறப்பு என்ற எண்ணம் பதிந்து விட்டது.
தனி மனிதனோ, ஒரு சமூகமோ, ஒரு நாடோ சிறந்தவற்றில் நாங்களும் ஒன்று என்று சொல்வதைக் கூட ஏற்றுக்கொள்ளலாம். நாங்கள் ‘மட்டுமே’ சிறந்தவர்கள் என்று சொல்வதைத் தான் ஏற்றுக்கொள்ளவே முடியாது. பலப்பல மதம், நிறம், இனம் என எல்லாவற்றையும் உள்ளடக்கிய அமெரிக்காவோ, இந்தியாவோ எந்த நாட்டிற்கும் நிறையச் சிறப்புகள் உள்ளன. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
கடந்த ஒரு வருடத்தில் இந்த கூற்றுக்குத் தன் நாடு தகுதியானது தானா என்ற எண்ணமும், அதைப் பற்றிய உரையாடல்களும் அமெரிக்காவின் சராசரி குடிமக்களிடையேயும் தொடங்கிவிட்டது. அமெரிக்கா பொருளாதார சுணக்கத்தில் புரண்டு கொண்டிருக்கும்போது, கொரோனா வந்தது. நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், அமெரிக்காவில் கொரோனாவினால் 21 வினாடிகளுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் உயிர் இழந்து வருகின்றனர். கொரோனோவால் வந்த பாதிப்பின் தாக்கம் வாட்டிக் கொண்டிருக்கும்போதே, Black lives matter போராட்டங்கள். இவற்றிற்கு நடுவே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பரபரப்பான தேர்தல். அந்த தேர்தல் முடிவுகளின் போர்வையில் தினமும் அரங்கேறிய ட்ராமாக்கள். எல்லாவற்றையும் விட உச்சமாக உலகின் முதிர்ந்த பழமையான ஜனநாயகமான அமெரிக்காவின் வாசல்படிகளில் நடந்தேறியுள்ள கலவரம். பெருமைகளின் வெற்று பிம்பத்தை மட்டுமே நம்பியதால், உண்மையின் சாரம் உணர்வுக்கு எட்டாமலேயே நடத்தி முடிக்கப்பட்டுள்ள பெரு அவலம் இது.
உரையாடல்களை தவிர்த்து கை நீட்டி குற்றம் மட்டுமே சாட்டி ஒரு பேரரசையே நிர்வகிக்க இன்றைய தேதியில் முடிகிறது. அது தவறு என்று எதிர்ப்பவர்களும், பெருவாரியாகக் குற்றம் மட்டுமே சாட்டுகின்றனர். ஒருவரை ஒருவர் காது கொடுத்து கேட்க, தவறென்றால் திருத்திக் கொள்ள விழைய, கருத்துகளோடு உரையாட இங்கு, இப்பொழுது இடமில்லையோ என்ற எண்ணம் தான் பரவலாக இருக்கிறது. அப்படி கருத்துக்களை முன் வைப்பவர்களின் குரல்கள் சீக்கிரத்தில் ஏதோ வகையில் காணாமல் போய்விடுகின்றது. சில வருடங்கள் முன்பு வரை கூட இந்த விளையாட்டு அரசியல் மேடைகளில் மட்டுமே நிகழ்ந்தது. சில சமயம் தரம் தாழ்ந்த வார்த்தை விளையாட்டுகளோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி நேரம் கடத்திக் கொண்டிருந்தனர். ஆனால் இது இப்பொழுது பெருவாரியாக எங்கும் நடக்கின்றது. இந்த மிக அபாயகரமான விளையாட்டின் உச்சம் தான் கேபிடல் ஹில் கலவரம். உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த அமெரிக்கா கேபிடல் ஹில் கலவரம் நம் மண்ணின் சமூகத்திற்கும் உணர்த்தப் பல செய்திகளை உள்ளடக்கி வைத்துள்ளது.
இரண்டு வருடத்திற்கு முன்பு பெருமை பேசிய அமெரிக்க நண்பர்கள் சிலர் இன்று சுய பகுப்பாய்வு தரவுகளை மனதைத் திறந்து பேசுவதைக் கேட்கும் பொழுது நல் திகைப்பாக உள்ளது. சுகாதார கட்டமைப்பு, தனி மனிதனின் மருத்துவ தேவைகளுக்கான கட்டண ஒப்பீடு, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சீனாவின் அசுர வளர்ச்சி, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பல்கிப் பெருகும் இடைவெளி, சரிந்து வரும் சராசரி நபரின் ஆண்டு வருமானம், மகிழ்ச்சிக்கான குறியீட்டு அட்டவணையில் வருடா வருடம் படிப்படியாகக் கீழே இறங்கிக் கொண்டிருக்கும் நிலைமை என்று பலவற்றை அங்கும் இங்குமாக உரையாடுவதை எளிதாகக் காண முடிகின்றது. இந்த உரையாடல்கள் அமெரிக்காவின் free speech ஆத்துமாவை மீண்டும் மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கை கீற்றும் இங்கு உள்ளது.
போன வருடம் வரை வெளிப்படையாகத் தன்னை குடியரசு கட்சியைச் சார்ந்தவர் ஒரு கிளைண்ட் மேனேஜர் கூறிவந்தார். யாராவது மதிய உணவு நேரத்தில் அரசின் கோட்பாடுகளைப் பற்றி எடக்காக கேள்வி கேட்டால் அதட்டி, உருட்டி, உடனே கேள்விக்கு கண்டனம் தெரிவித்துத் தான் பதில் தருவார். அவரே, கடந்த நான்கு மாதத்தில், முரட்டுத் தனமாக முட்டுக் கொடுக்கும் அனைவரையும் புத்தியில்லாதவர்கள் என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார். இதன் உச்சமாக கேபிடல் ஹில்லில் நடந்த கலவரத்தினால் பொங்கி விட்டார். 2016 தேர்தலின் போது ‘நாங்கெல்லாம் யாரு தெரியுமா’ என்று பெரும்பான்மையாக நீட்டி முழங்கப்பட்ட மதிப்புரைகள், 2020ன் இறுதியில் மொத்தமாகக் கேட்க முடியவில்லை.
மிகப்பெரிய சுய பிம்பமும், அதிகப்படியான சுய பிரதிநிதிப்படுத்துதலும் உள்ள அமெரிக்காவிலேயே இந்த மாற்றங்கள் வர ஆரம்பித்துவிட்டது. அர்ப்பணிப்பையும் பணிவையும் முன்னிறுத்தும் நம் நாட்டிலா இது நடக்காமல் போகப் போகிறது. நன்மைகள் சிறக்கட்டும். நாடும் மக்களும் வளம் பெறட்டும் !