இணைய இதழ்இணைய இதழ் 67கட்டுரைகள்

தெய்வமே சாட்சி! – மல்லி

கட்டுரை | வாசகசாலை

ரு சின்ன சைஸ் பிராந்தி பாட்டில் குடுங்கஎன்று பல வருடங்களுக்கு முன் திருவான்மியூர் ஒயின் ஷாப்பில் கேட்டதும், ஒருவிதக் கலக்கத்துடன் என்னைக் கடைக்காரர் பார்த்தார். ‘சாமி கும்முடஎன்று நானே சொன்னதும்தான் அவர் ஆசுவாசப்படுத்திக்கொண்டார். சிறுவயது முதற்கொண்டே, வீட்டில் எவரேனும் உடல்நலம் சரியில்லாமல் குணமடைந்தப்பின், பரீட்சை முடிவுகள் வந்தப்பின், பெண்கள் பூப்பெய்தி எழுந்தப்பின்கல்யாணம் நிச்சயமானப்பின் என்ற பல நிகழ்வுகளின்பின்குலதெய்வ வழிபாடு செய்வது அம்மா வழி தாத்தா பாட்டியின் தலையாயக் கடமையாய் இருந்தது. ‘முனீஸ்வருடு‘ –  அதுதான் எங்கள் குல தெய்வப்பெயர்முனீஸ்வரனின் தெலுங்கு வெர்ஷ்ன். ஒருவன் ஒக்கடு ஆவதில்லையா, அது போலவேஒரே மாவுப் பூரணத்தில் தட்டையாய் சுட்டு அதிரசம் போன்றஅட்டுலுவும் அதையே உருட்டி கொழுக்கட்டை போன்ற ‘ குடுமுலுவும் செய்வது பாட்டியின் இலாகா. குல தெய்வத்தின் ஃபேவரைட் சுருட்டு, பிராந்தி வாங்கி வைப்பது தாத்தாவின்   பொறுப்பு. தாத்தாவின் மறைவுக்குப் பின் அம்மாவே அப்பொறுப்பை எப்படியெல்லாமோ சமாளித்துச் செய்தார். தோளுக்கு மேல் வளர்ந்த அண்ணன்களை ஒயின் ஷாப்புக்கு அனுப்புவது அவ்வளவு நாகரீகமாக இருக்காது என்று என்னை அம்முறை கடைக்கு அனுப்பிவிட்டார் போலும். ஒவ்வொரு பாகத்தையும் உதிர்த்துக் கொண்டே விண்ணில் உலவும் satellite போல, குடும்பத்தின் போக்கும் வடிவும் மாறிக்கொண்டேப் போனதால் குலதெய்வ வழிபாடும் அறுகிவிட்டதுஇவற்றையெல்லாம் மீள்நினைவுப்படுத்தி பார்க்க வைத்தது இந்நூல்!

தெய்வமே சாட்சி‘ – . தமிழ்ச்செல்வன் எழுதியப் புத்தகத்தை சில வாரங்களுக்கு முன் வாசித்து முடித்தேன். சிறுதெய்வங்களைப் பற்றியும், அவை தோன்றக் காரணமாய் இருந்த பின்னணிகளையும் இப்புத்தகம் பட்டியலிட்டுச் சொல்கிறது. முக்கியமாக, பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த சமூக அநீதிகள் எப்படி அவர்களை வழிபடும் சிறுதெய்வங்களாய் மாற்றின என்பதுதான் புத்தகத்தின் அடிப்படைக்களம். நாற்பது அத்தியாங்கள் கொண்ட இந்நூல் டீ குடிக்கும் போது  டைம்பாஸ் பண்ண உதவும் நூலன்று. குறிப்பாக தூங்குவதற்கு முன் படித்தால், அவ்வளவுதான், இது உண்டுபண்ணும் தாக்கமே வேறு. சௌகரியமாக காற்றுவாங்கியபடி சோஃபாவில் உட்கார்ந்துப் படிக்கும் போதே, நாமும் கூடசோபாக்காரியம்மன்என்ற ரீதியில் சிலையாகிவிடுவோம் போலத் தோன்றிற்று. அந்த அளவுக்கு இந்நூலை  வாசிக்கையில் நம் மனத்தில் தொக்கி நிற்கும்  இறுக்கங்களும் மௌனப்புயல்களும் சொல்லிமாளாது.

ஒவ்வொரு வழிபாட்டு அம்மனுக்குமென ஒர் அத்தியாயம் என்று  இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மலட்டம்மா, மணிமுத்தம்மாள், கூத்தனாச்சி அம்மன், சீனி முத்து அம்மன், ராஜ கன்னியம்மன், முத்தாலம்மன், சண்முகத்தம்மன், பாலும் பழத்தம்மன் வீருமாரு – வெள்ளயம்மாள் என எந்த ஊரில் இருந்து அந்த அம்மனைப் பற்றிய தரவுகள் திரட்டப்பட்டன என்று கதை சொன்னவர், சேகரித்தவர் குறிப்புகளும் அத்தியாயங்களில் அடங்கும். தரவுகளை வரிசைப்படுத்தி தொகுத்து நூலாக்கிய விதம் அத்தனை எளிதான காரியம் அல்லநிகழ்ந்ததெனக் கருதப்படும் இந்த தெய்வக்கதைகளின் உண்மைத் தன்மையை ஆராயும் விதமாக ஆசிரியர், வாசிப்பவரின் பார்வையிலிருந்து கூர்வேலாய் கேள்விகளை ஏவுகிறார். அதனூடே அங்கே, பெண்ணுக்கு எதிராக பிழன்றுப் போன சமூக நீதியையும் நமது சிந்தனைக்கு உட்படுத்துகிறார்

இதில் உள்ள அநேக கதைகளிலும் ஏதோ ஒரு வகையில் பெண் வஞ்சிக்கப்படுகிறாள் அல்லது ஆணாதிக்க வயப்படுகிறாள்அவளோடு ஒட்டி உறவாடும் குடும்பத்தினரே அவள் மீது அதீத உரிமை எடுத்து அரையணாக்குக்கூட பெறாத காரணத்திற்காக அவளைக் கொலை செய்வார்கள். குடும்ப வம்சமே இதனால் ஏதோ ஒரு தீராச் சாபத்திற்கு ஆளாகிவிடும். அநியாயமாகக் கொலையுண்ட அப்பெண், யார் கனவிலாவது வந்து தன்னை கோவில் கட்டி வழிபடும்படி சொல்வாள். அவ்வண்ணமே ஒரு செங்கல்லையோ பாறாங்கல்லையோ அப்பெண்தெய்வமாகப் பாவித்து புனிதமாக்குவார்கள். அவளது சாவுக்கு தொடர்புடைய ஏதோ ஒரு பொருளையோ தின்பண்டத்தையோ படையலாக்கி விடுவார்கள். சாபவிமோசனம் பெறுவார்கள். இன்றளவும் அவ்வழிபாட்டை குடும்ப சமேதமாக முன்னெடுத்துச் செய்கிறார்கள். இதே பாணியில் கதைகள் மீண்டும் மீண்டும் இடம்பெறுவதால், ‘பிறகு என்ன, அவள் வழிபாட்டு தெய்வமானாள்என்று பகடித்தனத்தோடு ஆசிரியர் சொல்வது, இறுக்கமான வாசிப்பிலிருந்து நம்மை சற்றே  இளைப்பாற்றுகிறதுநடுகல் வழிபாடு, ஆநிரை கவர்தல், பாடெழுப்புதல் போன்ற பல பண்பாட்டு மரபுகளைப் பற்றியும் இந்நூலில் குறிப்புகள் உள்ளன. நாட்டார் தெய்வ வழிபாடுகள் பற்றிய பிற நூல் குறிப்புகளும் உள்ளன.

இதில் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னவென்றால், இவையெல்லாம் ஏதோ பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவை அல்ல. 20 முதல்  50 வருடங்கள் பின்நோக்கிய காலகட்டமே. உலகின் ஒரு புறம் வர்த்தகமயமாதலிலும் கணினிமயமாதலிலும் தீவிரம் காட்டிக்கொண்டிருந்த அதே காலகட்டம்தான்இது சகித்துக் கொள்ள முடியாத முரண்பாடுதான். இவற்றையெல்லாம் இணைத்துப் பேசுகையில் ஆசிரியர்தொன்மம் வேறு; வரலாறு வேறுஎன்று ஒரு சுவாரஸ்யமான கூற்றை முன் வைக்கிறார்.

மேலும் சில கதைகளில், சம்பந்தப்பட்ட பெண்ணின் கற்பு கேள்விக்கு உட்படுத்தப்படுவதால் அப்பெண் தன் தூய்மையை நிரூபிக்க தன்னையே மாய்த்துக் கொள்கிறாள். இந்த விவரங்கள் எல்லாம் படிக்கும் பொழுது, சுகிசிவம் அவர்கள் எழுதிய இராமாயணத்தின் சுந்தரகாண்டத்தொகுப்பே நினைவுக்கு வந்தது. சீதையின் கற்பு நிலையையும் அபல நிலையையும் விவரிக்கும் சுந்தரகாண்டத்தின் தொடர்ச்சியாகவேதெய்வமே சாட்சி’ எனக்குப்படுகிறது. ‘கண்டு வா என்றால் கொண்டு வருவான் அனுமன்!’ இக்கதைகளில் வரும் ஆண்களோ விஷயத்தைக் கண்டு வரச் சொன்னால் கொன்று வந்து விடுகிறார்கள். தங்களின் கற்பை நிருபிக்க வன்முறைக்கு ஆளாகும் பெண்களின் கதைகளை வாசிக்கையில் சுந்தர காண்டத்தின்கற்புக்கனலியும் காமுகப் பாறையும்’ தான் கண்முன் நிழலாடியது

மற்றும் ஒரு பெரும் பகுதியான கதைகள், கணவனோடு சேர்ந்திருக்க முடியாத வாழ்க்கைச் சூழலுக்காக பெண்கள் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ளும் உணர்ச்சி வேகத்தால் நிகழ்ந்த கதைகள்உடன்கட்டை ஏறுதல் முற்றிலும் ஒழிந்துவிட்ட நிலையிலும், இறந்துப்போனக் கணவருக்காக தாங்களும் தீயில் மாய்ந்துப்போகும் பெண்களின் அகநிலை கவனத்திற்குரியது. மன அழுத்த மேலாண்மைக்கல்வியின் அவசியத்தைப் பற்றி இவ்வத்தியாயங்கள் அடிக்கோலிடுகின்றன.

ஒருசில கதைகள் மற்றொன்றைவிட அதிகத்தாக்கத்தை ஏற்படுத்தின. என் அன்பு அம்மாவின் பெயர் கொண்டம்மா என்பதால், ‘வீர கொண்டம்மாள்’ கதையையே முதன் முதலில் படித்தேன். திருமணம் ஆகிப் புகுந்த வீட்டிற்கு சீராகக்  கொண்டுவரும் பணியாரப் பானையின் சூடு அடங்குவதற்கு முன்னரே, அப்பெண்ணின் கணவன் உயிர் பிரிய நேர்வதால், அவனோடு உடன்கட்டை ஏறி தன்னை மாய்த்துக் கொள்கிறாள் வீர கொண்டம்மாள். இக்கதையில் ஆசிரியர் முன்வைக்கும் கருத்துக்கள் உரக்கச் சொல்லவேண்டியவை. கணவன் மனைவி உறவுதான் எல்லா உறவுகளுக்கும் உச்சமான உறவு என்று கருதும் சமூக உளவியலில் மாற்றம் தேவை. எல்லா உறவுகளுக்கும் மனதில் இடம் வேண்டும். ஒன்று இல்லாமல் போனால் இன்னொரு உறவு இருக்கிறதே என்று பார்க்கும் பார்வையை வளர்த்தெடுக்க வேண்டும் என்றும், இந்த தலைமுறையிலேனும் அத்தகைய உரையாடல்களை துவக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

பெண்ணொருத்தி தன் வீட்டில் குளிக்கும் பொழுது, அவள் குளிக்கும் சோப்பின் நறுமணம் கலந்த நீர் தெருவில் வழிந்தோடுகிறது. அந்த வீட்டைக் கடந்துச் செல்லும் இருவர் இத்தகைய நறுமணம் என்றால் இது ஒரு தாசி வீடாகத்தான் இருக்க வேண்டும் என்று போகிற போக்கில் சொல்லி விடுகிறார்கள். இதை அவக்கூற்றாக கருதிய அப்பெண்ணின் தகப்பனே, அவளை பாலும் பழமும் எடுத்து வரச்சொல்லி அவர்கள் வீட்டு நிலவறையிலேயேப் பூட்டித் தன்னந்தனியே இருட்டில் உயிர்விடும் சம்பவமேபாலும் பழத்தம்மன் கதை’ உருவாகக் காரணம்

 

பூப்பெய்தியப் பெண்ணை ‘தீட்டு’ என்று வீட்டில் இருந்து தனிமைப்படுத்துகிறார்கள். ஊரே தீப்பற்றி எரிய அனைவரும் உயிர்த்தப்ப இப்பெண் இருப்பதையே மறந்து விட்டு ஓடுகிறார்கள்திரும்பி வந்து பார்த்தால் சாம்பலாகி பலியாகி இருக்கும் பெண்ணே சீலைக்காரி அரசாயியாக மாறினாள். இதைப் பற்றி பேசுகையில் தமிழ்ச்செல்வன் அவர்கள்மாதவிடாய்’,  ‘Period, End of Sentence’ போன்ற ஆவண படங்களைப் பரிந்துரைக்கிறார்.

இக்கதைகளை அணுகும்போது ‘மனிதர்களின் பிற்போக்கான சிந்தனை இங்கு மரத்தின் மேல் ஏறி நிற்கிறது’ என்று தமிழ்ச்செல்வன் கூறுகிறார்.

“உட்டிராதீங்க யெப்போவ் 
உட்டிராதீங்க யெம்மோவ்

…..

என்று பெண் தெய்வங்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து தங்களின் கதியற்ற நிலையைப்பற்றிப் பாடுவதாக தொடங்குகிறது காட்டுப் பேச்சியின் கதை. இக்கதையில் சில வருடங்களுக்கு முன் வெளியான இயக்குநர் மாரி செல்வராஜின்கர்ணன்’ திரைப்படத்தில் வரும் பாடல்களை ஒப்பிட்டுப்பேசுகிறார் தமிழ்ச்செல்வன். அது மட்டுமின்றி தன் படைப்புகளில், மாரி செல்வராஜ் அநீதிக்கு குரல் கொடுக்கும் நுட்பங்களை பற்றியும் கவனப்படுத்துகிறார். சொல்லப் போனால் இந்நூலில் எடுத்துக்காட்டாக இடம்பெற்றுள்ள ஒரே ஒரு திரைப்படம்கர்ணன்’ மட்டுமே. பெரியம்மை நோய் தாக்கத்திலிருந்து ஊரையே காத்துக் கொள்ள எழுந்த காவல் தெய்வமாக சந்தன மாரியம்மன் கதை வருகிறது. பேரிடர் நோயாக கருதப்பட்ட பெரிய அம்மையைப் பற்றி இதில் இடம்பெறும் குறிப்புகள், உலகையே உலுக்கிய கொரோனாவுடன் ஒப்பிட வல்லவை. அதே கர்ணன் திரைப்படத்தில் கவிஞர் யுகபாரதியின் வரிகளில் வெளிவந்தஎன் ஆளு மஞ்சனத்தி’ பாடல், நோய் தாக்கத்தால் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களின் சோகத்தை நம் உணர்வுகளில் அறைந்துச் சொல்லும். இப்பாடலையும் தனியே தமிழ்ச்செல்வன் கூறாது போயினும், அந்த விடுபடலை இக்கட்டுரையின் மூலம் பூர்த்தி செய்து நிறைவடைகிறேன்.

காதலுக்கு சாதித்தகையதொரு சமூகத் தடையாக இருக்கிறது என்பதை வரித்துக் காட்டும் பல தெய்வக்கதைகளும்தெய்வமே சாட்சி’யில் உண்டு. இந்தப் பிரச்சனைப் பழம்பெரும் கவியரசராகப் போற்றப்பட்ட சண்டிதாசர் காதலையேப் பிரித்து வைத்தது என்றால், சமூகம் எத்தகையதொரு குறுகியப் பார்வையில் பல நூற்றாண்டுகளாகச் சிக்குண்டு இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம். தன்வீட்டில் கேசத்தை உலர்த்தும் பொழுது, ஒரு பெண்ணின் தலைமுடி காற்றில் தன்மேல் பட்டு காமவயம் கொண்ட ஒரு இராஜாவைப் பற்றியும் அதனால் அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட வன்முறைப் பற்றியும் தமிழ்ச்செல்வன் கூறுகிறார்

“கூந்தலிலிருந்த குவிமலர் அகற்றித்தன் 
கலைந்த கூந்தலைக் களித்து நோக்குவாள்
மயிலின் கழுத்தை 
மயங்கியே பார்க்குமிம் 
மடந்தைக் குற்ற மனநோய் எதுவோ?”

என்று இறைக்காதலில் கவிழ்ந்த மங்கையின் நிலையை பற்றி அவள் தாய் கூறுவதாக நம்மாழ்வார் பாசுரத்தில் அமைந்த பாடல் இது. இப்படிக் கேசத்தை வைத்து தன் காதல் உணர்வுகளை உலைமூட்டிக்கொண்டப் பெண்கள் இருந்த புண்ணிய பூமிதான் இத்தனை ஒர் அவலக்காடாக மாறிவிட்டதா?

நூல் நெடுக எத்தனை எத்தனை அம்மன்கள்!  அத்தனையும் பேசும் தெய்வங்கள்!

‘மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!‘ என்ற மகாகவி பாரதியாரின் விடுதலைக் கும்மி முழங்கியபடி மார்ச் 8 2023-ல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்நாளில் கவனம் பெறவேண்டிய நூல் 

‘தெய்வமே சாட்சி’! 

நூல்: தெய்வமே சாட்சி
ஆசிரியர்: ச. தமிழ்ச்செல்வன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் / thamizhbooks.com
விலை: ரூ 150/-

*******

talktomallee@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button