இணைய இதழ் 106சிறுகதைகள்

தேவ பாஷை – பிறைநுதல்

சிறுகதை | வாசகசாலை

தேரைக் குட்டையில் எஞ்சியிருந்த கலங்கிய சேற்று நீரை ஆடுகள் மண்டியிட்டுக் குடித்துக் கொண்டிருந்தன. சின்னாவும் சின்னாவின் தந்தையும் குட்டையின் கரையிலிருந்த வேம்பினடியில் அமர்ந்தனர். வைகாசி முதல் வாரத்தின் அக்னி நட்சத்திர வெய்யில் கண்ணை உறுத்திக் கொண்டிருக்க, வெகு அருகாமையில் கானல் தெரிந்தது. முகத்தில் அரும்பியிருந்த வியர்வையை தனது அழுக்குத் துண்டால் துடைத்துவிட்டு, அதே துண்டால் அக்குளின் வியர்வையையும் துடைத்த தந்தையைப் பார்த்தான் சின்னா. வெய்யிலில் நடந்து வந்த களைப்பும், குன்றைச் சுற்றி வேக நடை போட்டு வந்ததால் மெலிதான மூச்சிறைப்பும் தோன்ற, அயர்ந்து அமர்ந்திருந்தார். ஒரு மாதத்திற்கு முன்புவரை நல்ல ஆரோக்கியமாக இருந்த தந்தையை இப்பொழுது இப்படிப் பார்க்க என்னமோ போலிருந்தது சின்னாவிற்கு. எந்த முக்கலும் முனகலும் இன்றி அனைத்து வேலைகளையும் செய்து பழகிய தந்தை இப்பொழுது நடக்கவே சிரமப்படுவதை அவனால் நம்ப முடியவில்லை. ஆனால், அதுதான் உண்மை. கடந்த மாதம் வந்த காய்ச்சலும் அதைத் தொடர்ந்து வந்த சுகவீனமும் தந்தையின் முதுமையை துரிதப்படுத்தியிருந்ததை உணர முடிந்தது.

  “என்ன அய்யப்பா? ஆடு மேய்க்கிறியா? பக்கத்துல யாரு உம் பையனா?” என்ற கணீரென்ற குரல் கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தனர். வெண்கலம் நின்று கொண்டிருந்தார். அடிக்கிற வெய்யிலில் கண்ணைப் பறிக்கும் வெண்ணிறத்தில் வேட்டி அணிந்து, தோளில் அதே நிறத் துண்டு. மேலுடலின் குறுக்காக சற்றே நிறம் மாறிய பூணூல். சற்றுத் தள்ளி அவர் நிறுத்தியிருந்த மிதிவண்டியும் மிதிவண்டியின் மேல் வளையல்கள் அடங்கியப் பெட்டியும் இருந்தன. வெண்கலத்திற்கு வளையல் வியாபாரம். சுற்றிலும் உள்ள சில கிராமங்களுக்கு வாரம் ஒரு முறை என முறை வைத்துக் கொண்டு வியாபாரத்திற்குச் செல்வார். இவர் செல்லும் எல்லா கிராமங்களிலும் நடைபெறும், கல்யாணம், காது குத்து மற்றும் வளைகாப்பு வைபவங்களனைத்தும் இவரைச் சார்ந்தே இருப்பதால் வியாபாரம் தொய்வில்லாமல் நடந்து கொண்டிருந்தது. வளையல் வியாபாரம் இல்லாத நாட்களில் தனது இல்லத்தின் திண்ணையில் அமர்ந்து ஜோதிடம் பார்ப்பார். ஈயம்,பித்தளை மற்றும் செப்புப் பாத்திரங்களைப் பழுது பார்ப்பார்.

“ஆமாங்க. ஆட விட்டா நமக்கு வேற என்ன பொழப்புங்க? இவன்தான் என்னோட கடைசிப்பையன். பத்தாவது எழுதியிருக்கான். திரும்ப ஸ்கூல் போறவரைக்கும் எங்கூட வந்து ஆட்டுக்கால்ல நிக்கிறான். முன்ன மாறி நமக்கும் ஒண்ணும் முடியறதில்ல. அதான் ஆட்டையெல்லாம் வித்துரலாம்னு பாத்துக்கிட்டிருக்கேன். நீங்களே யாராவது நல்ல வியாபாரியா இருந்தா கொஞ்சம் பாத்துச் சொல்லுங்க” என்றார் சின்னாவின் தந்தை .

           “ஏம்பா, ஆட வித்துட்டு பொழப்புக்கு என்ன பண்ணுவ அய்யப்பா? உன்ன பாத்தாலே தெரியுது எவ்வளவு கஷ்டத்துல இருக்கன்னு. புள்ளைங்கல்லாம் இன்னமும் சின்னஞ்சிறிசுகளா இருக்கு. அதனால பொழப்ப விட வேணாம். ஏதோ பெசவு இருக்கும்னு எனக்குத் தோணுது. வர்ற வெள்ளிக்கிழம நம்ம வீட்டுக்கு வா. நான் நாலு சக்கரம் எழுதி சட்டம் போட்டுத் தாரேன். அதக்கொண்டுபோய்  வீட்டுல மாட்டு எல்லாஞ் சரியாயிடும்” என்றார் வெண்கலம்.

           “சக்கரம் கிக்கரம் எல்லாம் வேணாமுங்க. நம்ம பொழப்பே நாய்ப்பொழப்பா இருக்கையில சக்கர எழுத்தா நம்மள காப்பாத்தப் போவுது. வயசானா இதெல்லாம் சகஜந்தானுங்களே?”

           வெண்கலத்தின் முகம் மெலிதாகக் கோணியது. வியாபாரம் நினைத்தபடி வேகமாகப் படியாது என்பதையுணர்ந்து வேகமாகப் பேச ஆரம்பித்தார்.

           “என்ன அய்யப்பா இப்புடி சொல்லிப்புட்ட? நான் எழுதிதர்றது என்ன சாதாரண எழுத்தா?. மஹாலச்சுமி எழுத்துய்யா! தேவ பாஷை அது. நான் ஒன்னும் மத்தவனுங்க மாதிரி நீச பாஷையிலே எழுதறது இல்ல. சாஃஷாத் அந்த சிவனோட எழுத்துல எழுதுறேன். அந்தத் தேவ பாஷை முன்னால எந்த பில்லி சூனியமும் எடுபடாது. காத்து கருப்பு அண்டாது. அந்த கடவுளே வந்து உன் வீட்டுல இருக்கிற மாதிரி. நான் உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். அப்புறம் உன் இஷ்டம். நான் வரட்டுமா?” என்றவாறே தனது மிதிவண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினார் வெண்கலம்.

           அப்பாவின் முகத்தில் கிளர்ந்த சிந்தனைகளின் முடிச்சைக் கண்டான் சின்னா. அப்பாவிடம் கேட்டான்

“அப்பா, தேவ பாஷைன்னா என்னா? நீச பாஷைன்னா என்னா?”

“அப்படிலாம் ஒன்னும் இல்லடா சின்னா. அவிங்கவிங்களுக்கு புடிச்ச பாஷை எல்லாம் அவய்ங்களுக்கு தேவபாஷை.பு டிக்காத பாஷைலாம் நீச பாஷை. அவ்ளோதான். பாஷைங்கிறதே மனுஷன் கண்டுபிடிச்சதுதான். இதுல கடவுளோட பேரு பின்னாடி வந்து ஒட்டிக்கிச்சு. உண்மை என்னன்னா எல்லாமே மனுஷ பாஷைதான். ஆனா, பாஷையே இல்லாத உசுருங்க கூட நம்மளவிட நல்லா தன்னோட சுற்றத்த நல்லா புரிஞ்சிக்கும். “

“ஆனா, வெண்கலம் நம்மூர்க்காரர்தானே. தமிழ்லதானே பேசுறாரு. அப்புறம் ஏன் வேற ஏதோ ஒரு மொழிய தேவ பாஷைங்கிறாரு? “

“அவங்கள்லாம் பொழைக்க வந்து இங்கேயே தங்கிட்டாங்க. வீட்டுல வேற ஏதோ ஒரு மொழில பேசிக்குவாங்க “என்றார் சின்னாவின் தந்தை .

சின்னா இதே போன்று வேறு சிலரும் இவ்வாறு பேசுவதைக் கேட்டிருக்கிறான். அப்பொழுதெல்லாம் ‘பாடப்புத்தகத்தில் படிப்பது எல்லாம் பொய்யா?’ என்கிற வினா எழும்.

உயர்தனிச் செம்மொழி,

உலகின் மூத்த மொழி,

கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தே தோன்றிய மொழி

என பாடப்புத்தகத்தில் படித்துக்கொண்டே பக்கத்தில் வசிப்பவர்களிடமிருந்து இது போன்ற வார்த்தைகளைக் கேட்கையில் குழப்பமே மிஞ்சும் சின்னாவுக்கு.

  ஆனால், மீண்டும் வந்த சுகவீனம், சளி, இருமல் மற்றும் காய்ச்சல் சின்னாவின் தந்தையை வெண்கலத்தின் வீடு நோக்கிச் செல்ல வைத்தது. சின்னாவும் உடன் சென்றிருந்தான். மெலிதான செப்புத் தகட்டில் இரண்டு முக்கோணங்கள் ஒன்றுக்கொன்று குறுக்காக ஒரு நட்சத்திரம் போல் ஒரு வட்டத்திற்குள்ளாக வரையப்பட்டு இருக்க, கோணல் மணலாக சில எழுத்துருக்கள் தெரிந்தன. கண் முன்பாகவே அதனை மரச் சட்டம் இட்டு பூஜை செய்து அப்பாவின் கைகளில் கொடுத்தார் வெண்கலம். அப்பாவும் மிகுந்த பய பக்தியோடு அவர் காலில் விழுந்து கும்பிட்டு அதனைப் பெற்றுக்கொண்டார் . சின்னாவையும் வெண்கலத்தின் காலில் விழுந்து வணங்கச் சொன்னார் சின்னாவின் தந்தை. சின்னா மறுக்கவே, வெண்கலம் முகத்தை ஒரு மாதிரிக் கோணிக் கொண்டு, “அய்யப்பா, பையனுக்கு சனி திசை நடக்குது. அப்படிதான் இருக்கும். புத்தி சரியாயிருக்காது. எழுத்த கொண்டுபோய் மாட்டு. எல்லாஞ் சரியாயிடும்!” என்றவரை முறைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான் சின்னா தனது தந்தையுடன் .

   அன்றைக்கு இரவு ஒரு சிறிய அளவிலான பூஜை செய்து வீட்டின் சனி மூலையில் அந்தச் சட்டத்தை மாட்டினார் சின்னாவின் தந்தை. எல்லா செலவுகளும் இரண்டு ஆடுகளைத் தின்றிருந்தன. சரியாக ஒரு வாரத்தில் சின்னாவின் தந்தை இறந்து போக ,ஆடுகளும் அடுத்த ஒரு மாதத்தில் விற்கப்பட்டு விட்டன. விற்றுக்கொடுத்தவர் வெண்கலம்தான். அதற்குண்டான தரகுக்கூலியும் பெற்றுக்கொண்டார். தந்தையின் நினைவாகச் சேகரித்து வைத்த சில பொருள்களில் ஒன்றாக அந்தச் சட்டத்தையும் வைத்து ஒரு மூட்டையாகக் கட்டி பரணில் போட்டான் சின்னா.

          அதன்பிறகு குடும்பம் தந்தையின் மரணத்தை ஜீரணித்து முன்னேறுவதற்கான படிகளில் ஏறத் துவங்கியது. சின்னாப் படிப்படியாக படித்து முன்னேறினான். வருடந்தோறும் அப்பாவின் திவச நாளில் மட்டும் பரணிலிருந்த அப்பாவின் பொருள்களோடு அந்தச் சட்டமும் வெளிவரும் . திவசம் கொடுத்தவுடன் மீண்டும் பரணில் மூட்டைக்கட்டி வைக்கப்பட்டுவிடும்.

        பட்டம் பெற்று வேலைத் தேடி பல அன்டை மாநிலங்களுக்கும் சென்ற சின்னா அந்த மாநிலங்களின் மொழிகளையும் எழுதப் படிக்கப் பேசக் கற்றுக்கொண்டான். வடமாநிலங்கள் சில வற்றில் பணிபுரிந்தபொழுது ஹிந்தியும், தானாக முயன்று ஸமஸ்க்ருதமும் கற்றுக்கொண்டான்.ஆனால், பல வருடங்கள் முன்பு எழுந்த வினாவிற்கு இன்னும் அவனால் விடைகாண முடியாமலேயே இருந்தது. சமூகத்தை உற்றுப் பார்க்கையில் அது சாதி வாரியாகவும்,மொழி வாரியாகவும் அடுக்கப்பட்டிருந்தது தெரிந்தது. சாதி என்று வருகையில் மொழி இரண்டாம் பட்சமாக ஆவதும் புரிந்தது. வார்த்தைகளின் பிரயோகங்களில், தொனிகளில் சாதி மிளிர்வதை உணர முடிந்தது. ஆனால், தேவ பாஷைக்கும் நீச பாஷைக்குமான அளவீடுகள் என்ன என்பது மிகச் சாதாரணமாக இருந்தது. மேல் தட்டு மக்கள் பேசுவது தேவ பாஷை என்றும், கீழ்த்தட்டு மக்கள் பேசுவது நீச பாஷை என்றும் கொள்ளலாம். ஆனால், அதிலும் ஒரு குழப்பம் வந்தது. மேல் தட்டு மக்கள் அனைவரும் அந்தந்த மாநில மொழியையே பேசினாலும் அந்த மொழியை அவர்கள் தேவ பாஷையாக அங்கீகரிக்கவில்லை என்பது புரிந்தது. இது என்ன மாதிரியான மன நிலை என்பது சின்னாவிற்கு விளங்கவே இல்லை .

சின்னாவிற்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களிடமும் இத்தகைய குழப்பமான நிலையைக் கண்டான் சின்னா. இது நடந்தது பதினோராம் வகுப்பில். அவனுக்குப் பிடித்த தமிழாசிரியர் ஒருவர், முதன் முறையாக அவனது விடைதாளைத் திருத்திவிட்டு அவனை அழைத்துப் பாராட்டினார். பாராட்டியதோடு அல்லாமல், வாஞ்சையோடு அவனின் முதுகைத் தட்டித் தடவிப்பார்த்துக் கேட்டார்.

“மனவாடா? ———-(சாதிப்பெயர்)காரு காதா?”

சின்னாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை. இவனுக்குப் புரியவில்லை என்றதும் வெளிப்படையாக எதுவும் கேட்காமல், இறந்துபோனஅப்பாவின் தொழில், வீட்டின் முகவரியைக் கேட்டு விட்டு அனுப்பிவிட்டார். ஆனால், சில வருடங்களுக்குப் பிறகுதான் அவர் பேசியது தெலுங்கு மொழி என்று அவனுக்குத் தெரிந்தது.க ற்பிக்கும் ஆசிரியரிடத்திலும் அதிலும் தமிழாசிரியரிடம் இது போன்ற ஒன்றை அவன் எதிர் பார்த்திருக்கவில்லை. புத்திசாலிகள் அனைவரும் அவர்களின் சாதியை, மொழியைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருப்பார்கள் என்பது எவ்வளவு பெரிய மூட நம்பிக்கை? இத்தனைக்கும் அவனது மானசீக ஆசான்களில் அவரும் ஒருவர். ஆயினும் என்ன ஒரு சிறு கறை நிலவைக் களங்கப்படுத்திவிட்டதா என்ன?

       இந்து மதத்தில் இருப்பவர்கள் ஸமஸ்க்ருதத்தை தேவபாஷை என்கிறார்கள். இஸ்லாம் மதத்தில் அரபியை தேவபாஷை என்று கொண்டாடுகிறார்கள். வாழ்த்துவதிலும் வணங்குவதிலும் வழிபாட்டு முறைகளையும் இந்த தேவ பாஷைகள் ஆக்கிரமித்துக் கொள்ள அவரவர்களின் சான்றிதழ்களில் தாய்மொழி என்ற இடத்தில் அந்தந்த பிராந்திய மொழிகள் இடம் பெறுவதுதான் எத்தனை முரண்பாடானது?.

    கல்லூரிக்குப் பிறகு தந்தையின் திவச நாட்களில் ஊருக்கு வந்து கலந்துகொள்ள இயாலாமல் இருந்தவன், பலவருடங்களுக்குப் பிறகு கடந்த வருடம் தனது தந்தையின் திவசத்தில் கலந்து கொண்டான். வழக்கம் போலவே பரணிலிருந்த அப்பாவின் பொருட்களை எடுத்து வெளியில் வைக்கையில் ஒரு ஆவல் எழுந்தது. அந்தச் சட்டத்தில் இருப்பது எந்த தேவபாஷையாக இருக்கும் என்பதுதான் அது. சின்னாவின் கணிப்புப்படி அது சமஸ்க்ருதமாகத்தான் இருக்க வேண்டும். அதீத ஆர்வத்துடன் அவன் அந்த கரையான் சிறிது தின்றுவிட்டிருந்த சட்டத்தை எடுத்துப் பார்த்தான். அவனின் கணிப்புப் பொய்யாகிப் போனது .அத்துடன் அந்தச் சட்டத்தை பூஜையில் வைப்பதையும் தவிர்த்துவிட்டான்.

   அந்தச் சட்டத்தில் ஏராளமான எழுத்துப் பிழைகளுடன்

ஓம் நமச்சிவாய

மாரியம்மன் துணை

முருகன் துணை

மகாலட்சுமியே காப்பாயாக

 என்று அண்டைமாநிலத்து மொழியில் எழுதப்பட்டிருந்தது.

-chanbu_sp@yahoo.co.in

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button