பயணங்கள் முடிவிலா சுழற்பாதையென மேலும் மேலும் உள்ளிழுத்துக் கொண்டே செல்கின்றது. மலைகளும் அடர்வனங்களும் தீராத இனியக் கனவென பெருகிக் கொண்டே செல்கின்றன. மலை மேல் இருக்கும்போது துயரங்களை உதிர்த்துவிட்டு மனம் மென்மையான இறகென லேசாகிறது. மலையின் விளிம்பில் வளைந்து அப்பால் செல்கின்றன கவலைகள்.
வாழ்வின் இறுதி வரை நீளும் பயணத்தில், சில இடங்கள் நம்மை பறவையென காற்றில் பறக்கச் செய்கின்றன. சில நேரங்களில் மேகங்கள் தம்மோடு கைப்பிடித்து அழைத்து, வானில் ஏற்றி நம்மையும் மிதக்கச் செய்யும். எஞ்சிய நாட்களை அவ்விடத்திலேயே இருந்து வாழ்ந்து முடித்து விடமாட்டோமா என ஏங்கச் செய்வன சில இடங்கள். காற்றில் எழும்பி வானையும் நிலத்தையும் அளக்கும் பறவையென உணரச் செய்த அனுபவம் கிடைத்த முகடுப்பகுதி கொல்லி மலையிலுள்ள வயர்லெஸ் காட்சி முனை. கொல்லிமலையின் மிக அழகிய, முதன்முறை அங்கே சென்றதை உன்னத தருணமாய் உணர வைத்த, ஒரு போதும் தவறவிடக் கூடாத இடம்.
செம்மேடிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் பயணத்தில் சேலூர் கஸ்பா என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது அந்த இடம். படகுக் குழாம் செல்லும் சாலையில், அரசு தோட்டக்கலைப் பண்ணை, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்றவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டும். சிறிது நேரத்தில் தனிமைக்கு நம்மை இட்டுச் செல்லும் சாலையில், சரிவிலும் மேட்டிலும் சில்வர் ஒக் மரங்களில் படர்ந்து கிடக்கும் அடர்த்தியான மிளகு கொடித் தோட்டங்களிடையே பயணிக்கும் போது, கொல்லி மலையின் வேறொரு பரிமாணத்திற்கு இப்பாதை நம்மை இட்டுச் செல்லும். குளிர் நிறைந்த இவ்வழியில் நிறைய பைன் மரங்களை ஓரங்களில் பார்க்கலாம். அவற்றின் இனப்பெருக்க அமைப்பான அழகான கூம்புகள் சிதறிக் கிடப்பதை சேகரித்துக் கொள்ளலாம். திருஷ்டி போக்கும் பூ என ஒன்று பத்து ரூபாய்க்கு விற்பார்கள். பச்சை ஊசிகளென இலைகளைக் கொண்ட உயரமான பைன் மரங்களைத் தாண்டி தொடர்ந்து பயணித்தால், சாலை முழுக்க நிழலை நிரப்பியபடி பெரிய அத்தி மரம் நம்மை வரவேற்கும் ஊர் அடுக்கம்பட்டி. ஊரினைத் தாண்டியவுடன் வலப்பக்கம் திரும்பும் பிரிவுச் சாலையில் முன்னேறிச் சென்றால் சேலூர் கஸ்பா என்ற சிற்றூரை அடையலாம்.
நுழையும் போதே வட்டக் கிணறும், கோவிலும் வரவேற்கின்றன. சிவப்பு நிற ஒடு வேய்ந்த சிறிய வீடுகள் பசுமைச் சரிவில் தொங்கியபடி நிற்க, அப்பால் வானம் மட்டுமே தெரிகின்றது. வீடுகளை விலக்கி இடப்பக்கம் சாலை சிறிது தொலைவிற்கு மேலேறுகிறது. பாதையின் முடிவில் மலையின் முகடுப்பகுதியில் காவல் துறையின் வயர்லெஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அலுவலகம் அமைந்துள்ளது. கட்டடத்தின் ஒரமாய் செல்லும் மண் பாதையை எலுமிச்சைப் புற்கள் பெரிதாய் வளர்ந்து மறைத்து நிற்கும். அவைகளை தலையில் இரண்டு தட்டு தட்டிவிட்டு விலக்கினால் பாதையை காண்பித்துக் கொடுக்கும். இலைகளைப் பறித்து உள்ளங்கையில் கசக்கி நுகர்ந்து கொண்டே பாதையில் நடக்கும்போது எலுமிச்சை வாசனையின் புத்துணர்வோடு, சில்லென்ற காற்று உடலை வந்து அறைகிறது.
ஏகாந்தமாய் விரிந்து கிடக்கும் மலைச் சரிவு, அதன் இறுதியில் சமவெளியின் நிலக்காட்சி, மேலே நீல வான்வெளியும் கிளம்பி வந்து நிரப்புவதற்கு விழிகள் போதாமல் திகைப்பூட்டுகின்றன. நடந்து இறங்கிச் செல்லும் அளவில் பரந்து விரிந்த சரிவு. முழுக்க மூடியபடி அடர் பச்சை நிற தாவர விரிப்பில் இடையிடையே உருண்டையான பழுப்பு நிறப் பாறைகள். அழகிய ஊதா நிறப் பூக்கள் சுமந்த சிறு செடிகள், வாசனையை தெளித்தபடி ஆடிக் கொண்டிருக்கும் எலுமிச்சைப் புற்கள், சீமார் புல், சிறிய ஈச்ச மரங்கள் என எல்லாமும் காற்றில் அசைந்து கொண்டேயிருக்கின்றன. ஆங்காங்கே சில பசுக்கள், ஆடுகள் கவலையின்றி மேய்ந்து கொண்டிருந்தன. சரிவின் இறுதியில் சில உயரம் குறைந்த மரங்கள் நின்று கொண்டிருக்க அவைகளுக்குச் சற்றுக் கீழே மிகப்பெரிய பள்ளம் ஒன்று, அங்கிருந்து கிளம்பி வரும் குளிர் காற்றில் அந்த மலைச்சரிவு முழுக்க அசைந்து கொண்டிருந்தது.
சரிவின் பாதி வரை இறங்கிச் சென்று ஒரு பெரிய பாறையில் அமர்ந்து கொண்டேன். எவ்வளவு அழகிய இடம். சுற்றிலும் அழகிய இயற்கை, பனியைச் சுமந்து உடலைக் குளிர வைக்கும் காற்று, மிகப்பெரிய பச்சை நிற புதைகுழிக்குள் மிதந்து கொண்டிருப்பது போல உணர வைத்தது.
வலப்பக்கம் சேலூர் கஸ்பா கிராமத்தின் வீடுகள் தெரிய, அதைத் தொடர்ந்து சரிவில் வரிசையாய் சில்வர் ஒக் மரங்கள் பின் ஒரேடியாய் மலை கீழே இறங்கிக் கொள்கிறது. எதிரில் மூன்று மணி நேரங்கள் சிரமப்பட்டு, செங்குத்தாய் ஏறி உச்சியினை அடைந்த தலைமலை, இப்போது காலுக்குக் கீழ் சிறிதாகிக் கிடப்பதை பார்க்கும்போது இவ்வளவுதானா நீ? என அம்மலையைப் பார்த்து எழுப்பிய கேள்வியினை காற்று எனக்கே திருப்பியளித்தது. தலைமலைக்கு அப்பால் வெள்ளி நிறத்தில் மினுங்கும் வாசுகி பாம்பென நெளிந்தபடி காவிரி உறைந்து நிற்கின்றது. நீல வானத்தில் அதற்கு குடையென கொத்து கொத்தாய் வெண்ணிற மேகங்கள். விழிகளால் ஒரு அரைவட்டம் வரையும் போது, வலப்பக்கம் கரூரில் அமராவதி ஆறு காவிரியுடன் சேரும் பகுதியின் வெண்மணல் திட்டுகள் தெளிவாகத் தெரிகின்றது. காவிரியைத் தொடர்ந்து இடப்பக்கம் நகர்த்தும்போது, தொட்டியம், முசிறி, முக்கொம்பு அணை தாண்டி திருச்சி நகர்ப்பகுதியை காவிரி சென்றடைவது வரை வெறும் கண்களாலேயே பார்க்க முடிவது பேரனுபவமாக இருக்கின்றது. இறுதியில் துறையூரின் கட்டடங்களும், பச்சைமலைத் தொடரும் கண்களை நிறைத்து காட்சி சட்டகத்திற்கு முழுமையைக் கொடுக்கின்றன. உத்தேசமாக நூறு கிலோ மீட்டர் தொலைவைக் காண முடிகிறது.
மேற்கில் காவேரிக்கு அப்பால் பச்சை குறைந்து கொண்டே போய், நீல வண்ணம் அலை அலையாய் குவிந்து பெருகிச் செல்ல, பார்வைப் பரப்பின் எல்லையில் கசங்கலாய் மலைத் தொடர் போன்ற ஒன்று, வானத்தின் விளையாட்டா இல்லை உண்மையில் மலைத் தொடர்தானா என்ற ஐயத்தைக் கிளப்பும் விதமாக காட்சி ஒன்று தெரிகின்றது. பலமுறை உற்றுப் பார்த்தும் உறுதிப் படாமல் போகவே மேப் செயலியைத் திறந்து திசையை உத்தேசித்து, தள்ளிப் பெரிதாக்கி பார்த்தபோது தொலைவில் ஒளிந்து விளையாடுவது பழனி மலைத் தொடர் எனத் தெரிந்து வியப்பு மேலிட்டது.
சட்டென்று வானிலை மாறியது. வெண் மேகங்கள் வேழங்களென கிளம்பி மெல்ல நகர்ந்து வந்து முழுக்க சூழ்ந்து கொண்டது. அத்தனை பெரிய பள்ளதாக்கும் சமவெளியும் மாயமாய் மறைந்து போனது. எதுவுமே புலனாகவில்லை. பாறையில் எழுந்து நின்றபோது கால்கள் தெரியாதபடி சூழ்ந்த வெண் புகைக்கு நடுவே, தேவதைக் கதைக்குள் நுழைந்து கொண்டது போல மனம் மயக்கம் கொண்டது. அவ்வப்போது பனிப்புகை மத்தியில், காற்று ஏற்படுத்திய சிறு இடைவெளிகளில் தெரியும் நிலக்காட்சி, சற்று முன்னர் கண்டதிலிருந்து வேறொரு அழகைக் காட்டியது. வானில் சிறகுகளை அசைத்தபடி மெல்லப் பறந்து, மிதந்து கொண்டே பூமியின் அழகை ரசிக்கும் தேவனாய் ஆனேன். அந்நாளின் நினைவுகளை உள்ளம் மீட்டுக் கொள்ளும் தருணங்களின் போதெல்லாம் எனக்கு சிறகுகள் முளைக்கின்றன.