அனாமதேய
சூட்டப்பட்ட ஒருவனின்
செயல்களுக்காக நித்தமும் வதைபடும்
பெயர் ஒன்றுண்டு
ஒரே அலைபேசியில் பல காலங்களில்
‘அன்பன்’
‘அழகன்’
‘புற அழகன்’
‘புறணி பேசுபவன்’
‘பித்தன்’
‘சனியன்’
இவ்விநாடியில் ‘அந்நியன்’
எனப் பெயரிடப்பட்டிருக்கும்
அவன் சிக்கினால்
வகையாக
வெளுத்தெடுப்பது
எவ்விதம் எனச்
சப்புக் கொட்டியபடி
யோசித்துக்
கொண்டிருக்கிறது
அவனுக்கிடப்பட்ட பெயர்
****
வேறு உபயோகமுள்ள குறுக்கு
அதுவொரு இணைக்கதவு
எப்போதும் இடுப்பால்
உந்தித் திறக்கப்படுவது…
இரு கைகளிலூம்
பற்றுள்ள
அழுக்குப் பாத்திரங்கள்
சில சமயம் மீன் கழுவித்
தண்ணீர் ததும்பும்
ஈய டபரா
பாதியில் நிறுத்திய
புத்தகங்கள்
தேவையற்று சுமக்கும்
கைப்பையும் அதன்
உள்ளீட்டுக் குப்பையும்
சில சமயங்களில்
நடுவழியில் அறுந்த
இரக்கமற்ற செருப்பு
பல சமயங்களில்
இவை யாவுமற்ற
நெஞ்சாடும் நெருப்பு
தாழிடாத, இருப்பினும்
குரல் கொடுப்பினும்
திறக்காத கதவு
ஒரு கதவை அழுத்தினால்
உள்ளங்கை பதித்து
இன்னொன்று திறக்கும்
என்ன செய்வது
ஒவ்வொரு முறையும்
இடுப்பை உந்தித்தான்
திறக்க வேண்டியதாய்
இருக்கிறது
எதிர்நோக்கும் இருளை.
****
நீயிருந்தும் நீயிருக்கிறாய்
நீ நடுவில் இருக்கையில்
உன் நண்பர்கள்
இருவர் ஜாடையில்
பேசுகிறார்கள்
உன்னைக் குறித்து
உன் குறித்தல்லாமல்
உன்னைத் தவிர்த்து
உன் முன்னால்
தவிர்க்க முடியாது
உன் ஆர்வத்தைத் தூண்ட
உனக்கே உன்மீது
ஐயமெழ….
எதற்காகவும் இருக்கட்டும்
உனக்கென்ன?
அர்த்தமற்ற
அர்த்தமுள்ள
அந்தத் கடுந்தேநீரையும்
நட்பையும்
பதிலாய் மிடறு மிடறாய்
அருந்திக் கட.