
“என்ன ராஜி வச்சது அப்படியே இருக்கு? உன் பொண்டாட்டி எங்க இதெல்லாம் செய்யப் போறா. இங்க வர்றப்ப சாப்ட்டாதானே உண்டு. நல்லா சாப்பிடு” அத்தை இன்னும் இரண்டு பஜ்ஜிகளை எடுத்துத் தட்டில் நிரப்ப, “அச்சோ வேணாம் அத்தை. இதுவே முடியல” என்ற ராஜீவ், அவஸ்தையாகச் சுபாவைப் பார்த்தான்.
அவள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. சுபாவமான புன்னகையுடன்தான் அமர்ந்திருந்தாள்.
“சாப்பிடு ரஜி. நான் இதெல்லாம் செய்றது இல்லதான் ஆன்ட்டி. எண்ணெய் இனிப்பு எல்லாம் குறைச்சு கொஞ்சம் கொஞ்சம்” மொழி, இனம் தாண்டிய காதலும், ஐந்து வருட திருமணக் காலமும் கற்றுக் கொடுத்த பிள்ளைத் தமிழில் சுபா சொல்ல, மாமா குரலெடுத்துச் சிரித்தார்.
“அதுதான் பட்டவர்த்தனமா தெரியுதே. கொழுகொழுனு இருந்தவன் இப்ப சீக்கு வந்த கோழி மாதிரி வத்தி தெரியுறான். வாய்க்கு ருசியா நல்ல சாப்பாடே இல்ல போல” – சவுக் சவுக்கென்ற சத்தத்துடன் போளியைக் கடித்தவரின் இங்கிதமற்ற கேலியில் ராஜீவுக்கு ஏன் இங்கு வந்தோம் என்றிருந்தது.
நெருங்கிய உறவு, இவ்வளவு பக்கத்தில் வந்துவிட்டு பார்க்காமல் போவது சரியில்லை, பெற்றவர்களிடம் கிடைக்காத பிரியமும் ஆசியும் ஒருவேளை இங்கு கிடைக்கலாமென்று ஆசையாக வந்தால்…
“முன்ன இஷ்டத்துக்கு சாப்பிடுவேன். இப்ப டயட்ல இருக்கேன் மாமா. பார்த்துதான் சாப்பிடுறது. அதுவும் உடம்புக்கு எது நல்லதுனு கவனிச்சு செய்றதுல சுபா எக்ஸ்பர்ட்”
“அது சரி, இந்த காலத்து பசங்க பொண்டாட்டிக்கு கொடி பிடிக்கலேனாதான் ஆச்சரியம்” கேலியாகச் சொன்ன அத்தை, “ஓ! குழந்தைக்காக டயட்ல இருக்கீங்களோ? நல்லது, அப்படியாவது சீக்கிரம் பொறக்கட்டும்” என்று சொல்ல, ராஜீவ் பல்லைக் கடித்துக் கொண்டான்.
சொற்களுக்கு இடையேயான நெருஞ்சி முற்களுடன் இவர்கள் எத்தனை உபசரித்து என்ன பயன், இலை நிறையப் பரிமாறி ஓரத்தில் எதையோ வைத்தது போல. வயதுக்கேற்ற பக்குவமோ, காலத்துக்கு உகந்த நாகரீகமோ இன்றி, வந்த கணம் முதல் இப்படியே பேசினால்…?
அசவுகரியமாக அமர்ந்திருந்தவர்கள் முன்னே பல தட்டுக்கள். பால்பேணி, ஜிலேபி, போளி, அதிரசம், பஜ்ஜி, கூடவே சொம்பளவு டபராவில் திக்கான காபி எனக் கடை பரப்பியிருந்தனர். பார்க்கும்போதே வயிறு நிறைந்து தொண்டை வரை வழியும் உணர்வு வந்தது இருவருக்கும்.
“பெங்காலிங்க நல்லா இனிப்பு சாப்பிடுவீங்களே. நீ என்னமோ கொறிக்குற?”
“நான் அதிகம் ஸ்வீட் எடுக்க மாட்டேன் அங்கிள்”
“இதெல்லாம் இவன் தோஸ்த்துக்கு ரொம்ப பிடிக்கும். வழிச்சு கட்டிட்டு சாப்பிடுவான். அவனுக்கு செஞ்சு போட முடியாத குறையை இப்படி தீர்த்துக்குறா உன் அத்தை. அப்புறம் எப்படி இருக்கான் உன் ஃப்ரெண்ட்?”
“மனோவா? நல்லா இருக்கானே. உங்களுக்குத் தெரியாததா மாமா, என்னை கேட்குறீங்க?”
“அப்படி கேட்குற மாதிரிதானே இருக்கு நிலைமை. இதுக்கும் உன்னாட்டம் தானா தேடிக்கிட்டது கூட இல்ல. நாங்க பார்த்து வச்சதுதான். அதுக்கே அவன் பொண்டாட்டி புருஷனை அப்படியே லவட்டிட்டு போயிட்டா. வருஷம் ஒருதடவை கடமைக்கு வந்து தலை காட்டிட்டு போறான்”
“அர்ச்சனா எப்படி இருக்கா?” ராஜீவ் பேச்சை மாற்றினான்.
“அவளுக்கென்ன? நல்லா இருக்கா. பிள்ளைங்க புருஷன்னு அவ வீட்டை பார்க்கவே அவளுக்கு நேரம் சரியா இருக்கு. நாமதான் பிள்ளைங்க பிள்ளைங்கனு ஆசையை கொட்டி வளர்க்கிறோம். சிறகு முளைச்சதும் பறந்து போறதுலதான் அதுங்க குறியா இருக்குதுங்க”
“அவ அடிக்கடி வந்துட்டு போற தூரத்துலதானே இருக்கா. அவ ஹஸ்பெண்ட்டும் நல்ல டைப்”
“என்ன பெரிய நல்ல டைப்? சொத்து வீடுனு சேர்த்து வச்சிருக்கவும் நம்மகிட்ட வாலாட்டாம ஒழுங்கா இருக்கான். இதுவே ஒண்ணுமில்லாம ஒருவேளை சாப்பாட்டுக்கு போய் உட்கார்ந்தா தெரியும் அவன் லட்சணம். என்னமோ போ, இன்னிக்கு பிள்ளை இல்லாதவன்தான் பாக்கியவான். அதனால ஜாலியா இப்படியே இருங்க. நாங்க இரண்டு பெத்து என்ன பெருசா சுகப்பட்டுட்டோம்?”
ராஜீவால் அதற்கு மேல் முடியவில்லை. சட்டென்று எழுந்து கொண்டான். “நேரமாச்சு மாமா. நாங்க கிளம்புறோம்”
“என்ன இவ்ளோ சீக்கிரம்? எத்தனையோ வருஷம் கழிச்சு வந்துட்டு… சரி, அங்கங்க ஊர் சுத்த உங்களுக்கு ஆயிரம் இருக்கும். இந்த கிழடுங்க கூட பொழுது போகுமா?” பிலாக்கணங்கள் அறிவுரைகளுடன் அத்தை தாம்பூலம் கொடுக்க, அவர்கள் இருவரையும் நிற்க வைத்து கால் தொட்டு வணங்கிய சுபாவை அவனால் முறைக்க மட்டுமே முடிந்தது. ‘லீவ் இட்’ என்கிற மாதிரி விரல் உதறிக் காட்டிய சுபா, அவர்களிடம் நல்லபடியாகவே சொல்லி விடைபெற்றுக் கொண்டாள்.
“நல்ல சாயங்கால நேரம் வீணாப் போச்சு” காரில் ஏறியமர்ந்ததும் ராஜீவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“உன்னையும் கூட்டிட்டு வந்து… ஸாரி சுபா. என்ன ஆளுங்களோ?”
“விடு ரஜி. அவங்க குணம் எனக்குதான் புதுசு. உனக்கு தெரிஞ்சதுதானே. ஆமா, அர்ச்சனாவை பத்தி ஏன் இப்படி சொல்றாங்க?”
“உனக்கே தெரியுமே அவ எப்படினு. இவங்க பொண்ணுதானான்னு இருக்கும். அவ்ளோ அமைதி. இவங்க வாய்க்கு பயந்தே வாராவாரம் வந்து பார்த்துட்டு போறா. அவரும் நல்லவிதம்தான். இவங்க சொல்ற மாதிரி இல்ல. இவங்களுக்கு பெத்த பிள்ளைகளை குறை சொல்லணும். அது மட்டும்தான் குறி. மனோவும் எவ்வளவோ அட்ஜஸ்ட் பண்ணி போனான். அவனுக்காக அவன் ஓய்பும் பொறுத்து போனாங்க. நீதான் பார்த்தியே நம்மால கொஞ்ச நேரம் இருக்க முடியல. அவ்ளோ புலம்பல். குறை, வாழைப்பழத்துல ஊசி ஏத்துறது மாதிரி சுறுக்குனு பேசுறது. டார்ச்சர் பொறுக்காம ட்ரான்ஸ்பர் வாங்கி தூரமா போயிட்டான். ஹப்பா, கூடவே இருந்தா சத்தியமா பைத்தியம் பிடிச்சிடும், சுபா. நீ ஒன்னு கவனிச்சியா?”
“????”
“வீடு எப்படி இருந்ததுனு”
“ம்ம் பார்த்தேன்..” அவரவர் உணர்ந்ததை விளக்கம் தரத் தேவையில்லாத அளவுக்கு இருந்தது வீடு.
இவர்கள் அமர்ந்திருந்த நான்கு இருக்கைகள் தவிர வேறெங்கும் உட்காரவோ, ஏன் கால் வைக்கவோ கூட முடியாதளவு அத்தனை அடைசல். தூசு. குப்பை. எதிரேயிருந்த டீ-டேபிள் மேலே குவியல் குவியலாய்ச் செய்தித்தாள்கள், கீழ்த்தட்டில் பழைய பிளாஸ்டிக் கவர்கள், இனிப்பு வரும் காலி பெட்டிகள் என அம்பாரமாய்க் கிடக்க, அவற்றை ஒதுக்கிதான் இவர்களுக்கான பலகாரத் தட்டுகளையே வாங்கி வைத்துக்கொள்ள முடிந்தது.
கூடம் நிறைய உடைந்தவை, கால் போனவை என ஏகப்பட்ட நாற்காலிகள், நடக்கும் வழிநெடுக விதவித உயரங்களில் முக்காலிகள், ஸ்டூல்கள், தண்ணீர் டிரம் வைக்க, பாட்டில்கள் வைக்க என டேபிள்கள், விரிசலிட்ட கண்ணாடி மேசை, ஆளுயர ஷோகேஷ், உள்ளே உருவமே தெரியாதளவு அழுக்கு பொம்மைகள் என எங்கும் எதிலும் குப்பை மயம். சமையலறை சுவரெங்கும் திறந்த அலமாரிகள், அவற்றுள் தாறுமாறாகப் பாத்திரங்கள், மேடை முழுக்க சாமான்கள், சாமான்கள், அது போக வெங்காயத்தோல், காய்கறி கழிவுகள், பழத்தோல்கள் என…
உண்மையில் அது மனிதர்கள் வசிக்கும் வீடா இல்லை, பழைய பொருட்கள் போட்டு வைக்கும் குடோனா என்று தெரியவில்லை. எப்படி இத்தனை சாமான்களுடன் வசிக்கிறார்கள், எப்படி இடித்துக் கொள்ளாமல் நடந்து நாளாந்த தேவைகளைக் கவனிக்கிறார்கள் என்று வியக்கும் வகையில் அடப்பாச்சாரமாக இருந்தது வீடு. கை கழுவ எழுந்து போனவன் ஒரு கூர் முனையில் இடித்துக் கொண்டுதான் வந்தமர்ந்தான்.
“இந்த செட்டப்ல எப்படி சுவாசிச்சு ஜீவிக்கிறாங்கனு தெரியல. அத்தனை டஸ்ட். அழுக்கு, வீட்டோட ஒவ்வொரு இன்சும் அன்ஹைஜீனிக்கா இருக்கு”
“ம்ம்.. டன்ஜனாதான் இருக்கு”
“குப்பை குப்பையா சேர்த்து வச்சு அந்த அடைசலுக்குள்ள பெருமையா வாழ்றாங்க. எலி மாதிரி. அதுதான் புத்தியும் குறுகலா இருக்கு. வயசானவங்க. ஆனா, அதுக்கான பக்குவம் இல்ல பாரு. எல்லோரையும் இழிச்சுப்பேசி, மட்டம் தட்டி, குத்திக்காட்டி…”
“நீ சொல்றது சரிதான். மனசு காத்தோட்டமா இருக்கணும்னா இருக்குற இடமும் காத்தோட்டமா சுத்தமா இருக்கணும். ஆனா, ஒரு விதத்துல எனக்கு இவங்களைப் பார்த்தா பாவமாக இருக்கு ரஜி” என்றாள் சுபா.
“மனுசங்க மேல வைக்க வேண்டிய அக்கறையை, பாசத்தை இவங்க தேவையில்லாத சாமான் மேல வச்சு சுகம் காண்றாங்களோனு தோணுது. இன் எ வே ஐ பிட்டி தெம். அவங்களுக்கு அவங்க பிரியத்தை எங்க சேனலைஸ் பண்ணணும்னு தெரியல. மனசுக்குத் தேவையான மனுசங்க மேல வெறுப்பும், கழிச்சு கட்ட வேண்டிய உருப்படி மேல பிடிப்புமா… எப்படி வாழணும்னு தெரியாம வாழ்ற எலிகள்”
“You nailed it. சைக்காலஜி ஸ்டூடன்ட்னா சும்மாவா?” பேச்சினூடே ஹோட்டல் வந்திருக்க, இறங்கி ஏதோ யோசனையுடன் வந்த சுபா லிப்ட்டில் ஏறியவுடன் மெதுவாகக் கேட்டாள். “ரஜி, நான் ஒன்னு கேட்டா கோபப்பட மாட்டியே?”
அவள் இந்தக் குரலில் பேசினாலே ஆபத்துதான். தன்னால் மறுக்க முடியாத ஒன்றைக் கேட்கப் போகிறாள் என்று அர்த்தம்.
“கோபப்பட்டா விட்டுடுவியா? சொல்லு”
“இல்ல இவ்ளோ தூரம் வந்துட்டோம். மதுரைக்கும் போயிட்டு வந்துடலாமா?”
அவன் முறைத்தான். “அங்க யாரு இருக்காங்க?”
“வேற யாரு? உன் வீடுதான்”
“எதுக்கு? திரும்ப திரும்ப போய் அசிங்கப்படணுமா உனக்கு? பெத்தவங்கன்ற ட்ரம்ப் கார்ட் வச்சு பிள்ளைகளை டார்ச்சர் பண்றதுதான் இன்னிக்கு நிறைய பெரியவங்களோட பொழுதுபோக்கு. எனக்கு அலுத்துப் போச்சு சுபா. இந்தப் பேச்சை விடு“
“இந்த ஒருமுறை ட்ரை செய்யலாமே. வேண்டாம்னு சொல்லாத”
“சொன்னா கேளு. நிச்சயம் அவமானப்படுவோம், ஒவ்வொரு தடவையும் அதுதானே நடக்குது”
“என்ன பெரிய அவமானம் ரஜி? நம்ம கல்யாணத்துக்காக போராடினதை விடவா? அவமானப்படுத்தினா படுத்தட்டும். முகம் தூக்கினா தூக்கட்டும். பரவால்ல. அவங்க மனசுல குப்பை சேர விட்டு நம்ம மனசுலயும் பாரம் ஏத்திக்க வேண்டாம் ரஜி. உன் அத்தை மாமாவைப் பார்த்தப்புறம் அதுதான் தோணுது, சேர்ற குப்பையை அப்பப்ப சுத்தம் பண்ணி இலகுவா இருந்துட்டு போயிடலாமேனு.. என்ன சொல்ற, போலாமா?”
“ஒன்னை பிடிச்சா விடமாட்டியே. உன்கிட்ட பிடிக்காதது இந்த பிடிவாதம்தான்”
“அதுதானே உன்னை விட்டுடாம பிடிச்சுக்க வச்சது”
சுபா கண்சிமிட்ட, “நல்லா பேச கத்துக்கிட்ட” செல்லமாய் அலுத்தவாறு அவளைத் தொடர்ந்த ராஜீவ் முடிவாக ஒன்றும் சொல்லாவிட்டாலும் அவன் யோசிப்பது அவளுக்குப் புரியாமல் இல்லை.
சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்ட லேசான மனதுடன் சுபா குளியலறைக்குள் புகுந்து கொள்ள, “நாளைக்கு காலைல கேப் வேணும். கிடைக்குமா?” ராஜீவ் ரிசப்ஷனுக்குப் பேசுவது நீர் விழும் சத்தத்துக்கு இடையிலும் அவளுக்குக் கேட்கவே செய்தது.