கட்டுரைகள்
Trending

எதிர்க் குரல்- பொன்முகலி

பொன்முகலி

இலக்கியத்தில் தன்வரலாற்று நூல்களுக்கென்று ஒரு தனியிடம் உண்டு. புதினங்களில் நமக்குக் காணக் கிடைக்கிற வாழ்க்கை தரிசனங்களுக்கும், தன் வரலாற்று நூல்களை படிக்கும்போது நாம் பெறுகிற அனுபவங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மொழியின் அழகியல் கூறுகளை விட தன் வரலாற்று நூல்கள் அதன் நம்பகத்தன்மை மீதே அதிக கவனம் கொள்கின்றன.சமீபத்தில் மலையாள மொழியில் வெளிவந்த இரண்டு தன்வரலாற்று நூல்களைப் படித்தேன். திருடன் மணியம்பிள்ளை மற்றும் நளினி ஜமீலா. முன்பே ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் வெளியாகி, கமலா தாஸிற்கு ஒரே சமயத்தில் தீராப் புகழையும், பழியையும் தேடிக்கொடுத்த “என் கதை” யைப் படித்தது இந்தப் புத்தகங்களின் மீதான ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் இன்னும் கூட்டியது.

தமிழிலும் நிறைய தன்வரலாற்று நூல்கள் வெளி வந்திருக்கின்றன. உ.வே.சா வின் “என் சரித்திரம்” ம.பொ. சி யின் “எனது போராட்டம்” நாமக்கல் கவிஞரின் “என் கதை” முத்தம்மாள் பழனிச்சாமி எழுதிய “நாடு விட்டு நாடு” என பலவகை சுயவரலாறுகளும், அவர்கள் வாழ்வுமுறை சார்ந்த அறிமுகமும் நமக்கு இருக்கின்றன.ஆனால் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய தன்வரலாற்று நூல்கள் நம்மிடையே இல்லை. இவ்வாறான நூல்களை நம்மால் எழுத முடியாமற் போனதற்கு நம்முடைய அரசியல், பண்பாட்டுச் சூழலும் ஒரு முக்கியமான காரணம். “என் கதை”, “சிஸ்டர் ஜெஸ்மி” போன்ற மதிப்பீடுகளை புரட்டிப்போடும், சாமானிய மக்களின் மனநிலையில் அதிர்ச்சியையும், தாக்கத்தையும் உண்டு பண்ணும் புத்தகங்கள் நான் அறிந்த அளவில் இன்னும் இங்கு வரவில்லை. மக்கள் நன்கு அறிந்த தலைவர்களுடய வாழ்கையைப் படமாக்கும்போதே எத்தனையோ விஷயங்களை மறைத்தும், மிகைப்படுத்தியும் எடுக்கிறார்கள்.இன்னும் ஆண்டான் அடிமை உறவுநிலை போலத்தான் அதிகாரத்தில் இருப்போருக்கும், பொது மக்களுக்குமான உறவு நிலை இருக்கிறது. இந்தக் கதாநாயக வழிபாட்டு மனோபாவம் எல்லா வகைகளிலும் நம் கலை, இலக்கியம், பொதுவாழ்வு எல்லாவற்றிலும் ஊடுருவுகிறது. உண்மையான வெளிப்பாட்டுத்தன்மைக்கு எதிரான மிரட்டலை இவை அவரவர் துறைகளில் தீவிரமாக இயங்குபவர்களை நோக்கி விடுத்துக்கொண்டே இருக்கின்றது.

ஆனால் மலையாள உலகில் இவை போன்ற முயற்சிகள் சாத்தியமாகி இருக்கிறது. திருடன் மணியம்பிள்ளை ,நளினி ஜமீலா இரண்டையும் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் குளச்சல் யூசுஃப். 2019 ன் சாத்திய அகாடமி விருதை மொழிபெயர்ப்புக்காகப் பெற்றுள்ளார். திருடன் மணியம்பிள்ளை புத்தகத்தைப் பற்றி விகடனுக்கு இவர் அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டிருப்பது போலவே எந்த அலங்காரமும் அற்று, எளிய மொழியில் இந்தத் தன்வரலாறு விரிந்து கொண்டே போகிறது.எப்படி ஒரு பெயர்பெற்ற குடும்பத்தில் பிறந்து பிறகு திருடனாக மாறினார் என்பதை மணியம்பிள்ளை ஆரம்ப அத்தியாயங்களில் விவரிக்கிறார். நாயர் சாதியில், புகழ் பெற்ற குடும்பத்தில் , சொத்துகளோடு இருந்த தன் குடும்பம் எப்படி உறவினர்களால் வஞ்சிக்கப்பட்டு வாழ்வதற்கே சிரமப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறது என்பது பற்றி கூறுகிறார்.தன் அக்கா, அம்மா எல்லோரும் முந்திரி ஆலைக்கு வேலைக்குச் செல்லும் சூழலையும், உறவினர்களுடய சூழ்ச்சியால் நிகழும் அப்பாவின் மரணம் எத்தகைய அவல நிலைக்கு அவருடைய குடும்பத்தைத் தள்ளுகிறது என்றும் விவரிக்கிறார்.படிப்பில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்த போதும், ஒரு நோட்டு புத்தகம் கூட இல்லாமல் பள்ளிக்குச் சென்று வருவது அவருக்கு சக மாணவர்கள் முன்னிலையில் சங்கடத்தைக் கொடுக்கிறது. எனவே பள்ளியில் இருந்து நின்று விடுகிறார். அதன் பிறகு ஊரில் இவர் நண்பர்களோடு நடத்தும் ஒரு சிறு திருட்டு எப்படி இவரை முழுநேரத் திருடனாக மாற்றுகிறது, சிறை வாழ்க்கையில் இவர் எதிர்கொண்ட சிக்கல்கள் என்னென்ன என்று விளக்குகிறார்.

சிறை என்பது நம்முடைய நாட்டைப் பொருத்தவரை குற்றவாளிகள் திருந்தவும், அவர்களை மறுவாழ்விற்குத் தயார்படுத்தும் இடமாகவும் இருப்பதே இல்லை. மேலும் மேலும் அவர்களைக் கடினமானவர்களாகவும், குற்றம் புரிபவர்களாகவும் மாற்றும் பணியைத்தான் அவை செவ்வனே செய்கின்றன என்பதற்கு இவருடைய அனுபவங்கள் ஒரு சான்று. சிறைச்சாலைகளை விவரிக்கிற போது அங்கே நடக்கும் பாலியல் குற்றங்கள், ஊழல், கைதிகளுக்கிடையே ஏற்படும் நட்பு, போலீசாருக்கும், குற்றவாளிகளுக்கும் இடையே ஏற்படும் முரன்பாடான பரிவுணர்ச்சி என முற்றிலும் புதிதான ஓர் உலகத்தை வாசகனுக்கு அறிமுகப்படுத்துகிறது இந்நூல். வெறும் ஒரு திருடனுடைய தன் வரலாறுதானே என்று எந்த இடத்திலும் அலட்சியத்தோடு அனுக முடியாதபடி அத்தனை நுணுக்கமாக அந்த உலகத்தைப் பற்றிய ஒரு நெருக்கமான புரிதலை புத்தகம் பதிவு செய்திருக்கிறது. மணியம்பிள்ளையை நாம் எந்த இடத்திலும் ஒரு திருடன் என்கிற அளவில் மட்டும் சுருக்கி விட முடியாது. அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வதென்று தெரியாத மனிதர்களால்தான் அடுத்த மனிதனின் சுக துக்கங்களை நெஞ்சார உணர முடிகிறது.
சாப்பாட்டிற்கு சிரமப்படுகிற சில குடும்பங்களுக்கு, இரவு நேரங்களில் யாரும் அறியாமல், ஏன் சம்பந்தப்பட்டவர்கள் கூட அறியாமல், அவர்கள் வீட்டு வாசலில் பணமும், துணிகளும், உணவுப்பொருட்களும் வைத்து நகர்கிறார் மணியம்பிள்ளை.

மைசூருக்கு ஒன்றுமில்லாமல் சென்று வியாபாரத்தில் பெரிய வளர்ச்சி அடைவதைப் பற்றிக் குறிப்பிடும் போது ஒரு நல்ல தொழிலதிபரை நாடு இழந்து விட்டதே என்று தோன்றாமலில்லை. அதிலும் அங்கே வேலைக்கு வரும் பெண்களை அவர் நடத்தும் முறையும், தொழிலாளர்களுக்கு அவர் அளிக்கும் சலுகைகளும், அவர்களுடைய உரிமைகள் பற்றிய தெளிவும் வியக்க வைக்கின்றன.Roller coaster ride டில் பயணிப்பது போல, ஒரு நிமிடம் ராஜாவாகவும், மறு நிமிடம் ஒன்றுமற்றவனாகவும், மாறி மாறிப் புரட்டிப்போடும் வாழ்வை அவர் எந்த வருத்தங்களுமின்றி எதிர்கொள்கிற விதம் படிப்போரை திகைப்பில் ஆழ்த்தக் கூடியது.

விதவிதமான உடைகள் அணிந்து, கல்லூரிப் பெண்களையும், பிற பெண்களையும் ஏமாற்றிய அதே ஆள்தான், மலையாளச் சமூகத்தில் பெண்கள் படும் துயர்களை பற்றிக் கவலையோடு பேசவும் செய்கிறார். அனுபவங்கள் கற்றுத் தரும் பாடங்கள் ஒரு மனிதனை எவ்வளவு மாற்றுகின்றன என்பதற்கு இந்நூல் ஒரு சாட்சி. மனைவி மெஹருன்னிஸா மற்றும் முதற் காதலி மற்றும் மனைவியான மாலதி இருவரை பற்றிக் குறிப்பிடும் இடங்கள் அத்தனை நெகிழ்வானவை. இந்தப் புத்தகத்தின் ஓரிடத்தில் அவரே குறிப்பிடுகிற மாதிரி “ஒரு திருடனை எல்லாப் பெண்களாலும் காதலித்து விட முடியாது. அதற்கு வலிமையான அன்பு தேவைப்படுகிறது” என்பது இந்த இருவரைப் பற்றிப் படிக்கிற போது உண்மை என்றே தோன்றுகிறது.

கோர்ட், விதவிதமான குணமுடைய நல்லவர்களும், கெட்டவர்களுமான போலீஸ்காரர்கள், திருடர்கள், பொதுமக்கள் என ஒரு சினிமா பார்பத்தைப் போல வேகவேகமாக நகர்கிற சம்பவங்கள். ரயிலில் மயக்க மருந்து கொடுத்துத் திருடும் சுகு, மணவறைத் திருடன், கள்ளநோட்டு உற்பத்தி செய்யும் மணிராவ், பால் பவுடர் திருடன், மழைக்காலத் திருடன் எனத் தனித்துவமான, திருட்டை ஒரு கலையைப் போல செய்கிற திருடன்மார்கள்.

இதற்கிடையில் பஷீரை பார்க்க அவருடைய ஊருக்குப் போய் அது முடியாமல் திரும்புகிறார். சங்கம்புழா பற்றி குறிப்புடுகிறார். இவையெல்லாம் இந்தப் புத்தகத்தின் கவித்துவமான தருணங்கள்.

ஒரு திருடனும், கலைஞனும் வேறு வேறில்லை. இருவருமே அதிகார மீறல்களின் வெவ்வேறு வடிவங்கள்தாம் என்று புத்தகத்தில் ஓரிடத்தில் சொல்கிறார்.ஒரு குற்றச் சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடுகிற போது, இதுவே இந்தக் காலத்து திருடர்கள் என்றால் நான்கைந்து பேராகச் சேர்ந்து கொன்று பணத்தை எடுத்துவிட்டுப் போய் இருப்பார்கள் என்று குற்றத் தொழிலில் ஈடுபடுகிறவருடைய மனோநிலை காலத்திற்கேற்ப மாற்றம் கொள்வதை சுட்டிக்காட்டுகிறார்.

முக்கியமாக சாதி மதங்களைப் பற்றிய இவரது புரிதல் வியப்பளிக்கக் கூடியது. இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் என மூன்று மதங்களில் இருந்து பார்த்தும் தன் நடுநிலை உணர்வை தவற விடாதவராக இருக்கிறார். மைசூரில் இவர் நடத்துகிற பாயாசக் கடையில் தலித் இன மக்களுக்கு தனி தம்ளர் வைக்கும்படி பிற சமூகத்தினர் கூறும்போது, அவர்களிடம்
“குடிக்கவே வேண்டாம். என்னுடைய பாயச தம்ளருக்கு சாதிகள் கிடையாது” என்று ஒரேடியாக மறுத்து விடுகிறார். தன் சார்பாக வாதாட எந்த வக்கீலையும் அமர்த்தாமல் தானே வாதிடுவது, சிறைச்சாலைகளுக்குள் பல மாற்றங்களைக் கொண்டு வருவது என இவர் செய்த விஷயங்கள் ஏராளம்.

நளினி ஜமீலாவும் தன் புத்தகத்தில் எப்படி ஒரு பாலியல் தொழிலாளியாக மாறிய ஒரு பெண், இந்தச் சமூகத்தாலும், அதிகாரமட்டத்தாலும் பார்க்கப்படுகிறாள், நடத்தப்படுகிறாள் என்பதைப் பற்றி பேசுகிறார். பாலியல் தொழில் செய்பவர்களுடைய உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாது பற்றி, கூட்டு வன்புணர்வுக்கு ஆளாகி இறந்த ஒரு பெண்ணின் கதையைக் கூறும்போது துயரமாக இருக்கிறது. பல்வேறு சந்தர்ப்பங்களில் இவர் எதிர்கொண்ட ஆபத்துக்கள், நோய்வாய்ப்பட்ட சமயங்களில் இவர் அடைந்த உள மற்றும் உடல் வேதனை போன்றவை இந்த மனிதர்களைப் பற்றிய நெருக்கமான அறிமுகத்தைப் படிப்போருக்குக் கொடுக்கிறது. ஒரு அங்கீகரிக்கப்படாத தொழிலாக இன்னும் பாலியல் தொழில் இருப்பதும், அதனால் சுரண்டப்படுவோரும், அவர்களை பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்களுமாக விரிகிறது கதை. ஜுவாலமுகி அமைப்பிற்கு பிறகு ஓரளவு அவர்களுக்குக் கிடைத்து வருகிற பாதுகாப்பு கொஞ்சம் ஆறுதல் கொள்ள வைக்கிறது.

மணியம்பிள்ளை தன்னுடைய புத்தகத்தில் 92ஆம் பக்கத்தில் “திருடனென்பவன் அதிகாரத்தின் மீதான ஒரு சவால். அதன் உன்னத அமைப்பான சட்ட வடிவத்தை அவன் அசைத்துப் பார்க்கிறான்.” என்று கூறுவார். இந்த புத்தகங்களைப் படித்த போது நியாயமாக நினைத்ததை செய்யவும் பேசவும் கூடிய எல்லா மனிதர்களுமே இந்த அதிகாரக் கட்டமைப்பின் மீது விடப்படுகிற ஒரு சவால்தான் என்று தோன்றியது. இதைப் போன்ற புத்தகங்கள் நிறைய நம் மொழியிலும், பிற மொழிகளிலும் வர வேண்டும்… இவை ஒரு வகையில் அதிகாரத்திற்கும், அதை எளிதில் அணுக முடியாத சாதாரண மக்களுக்குமான நீண்ட உரையாடல்கள். இந்த உரையாடல்களும், அதன் பிறகான நம்பிக்கை தரக் கூடிய மாற்றங்களுமே ஒரு பண்பட்ட சமூகத்தின் அடையாளமாகும்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button