இணைய இதழ் 104சிறார் இலக்கியம்

ஏழ்மையின் கடவுள் (ஜப்பானிய நாட்டுப்புறக் கதை) – ஷாராஜ்

சிறார் கதை | ஷாராஜ்

அந்தக் குறுநில விவசாயத் தம்பதி மிக நேர்மையானவர்கள். கடும் உழைப்பாளிகள். காலை நட்சத்திரங்கள் மறைவதற்கு முன்பே தமது காய்கறித் தோட்டத்துக்கு சென்றுவிடுவார்கள். களை எடுப்பது, மண் அணைப்பது, நீர் பாய்ச்சுவது, உரமிடுவது என அவர்களின் முதுகுத்தண்டு நோவெடுக்கிற அளவுக்குப் பாடுபடுவார்கள். சாயுங்காலம் மலைக் காகங்கள் கூடடைந்த பிறகும் வேலை செய்வார்கள்.

            மழை நாட்களில் வீட்டுக்குள்ளும், காற்று நாட்களில் வீட்டுக்கு வெளியிலும் வேலை நடக்கும். வெயிலோ, பனியோ வாட்டினாலும் அதற்காக சுணங்கவோ, அரை நாள் கூட வேலையைக் கைவிடவோ மாட்டார்கள்.

            ஆயினும் அவர்கள் ஏழைகளாகவும், கஷ்டப்பட்டுக்கொண்டுமே இருந்தனர்.

            அவர்கள் விதைகளை ஊன்றினால் காகங்கள் தோண்டியெடுத்துவிடும். மீண்டும் விதைக்க வேண்டியதாகிவிடும். விதைகள் துளிர்க்கும்போது முயல்கள் மேயும். இலைகள் வளர்கையில் கம்பளிப் பூச்சிகள் நாசம் செய்யும். அல்லது வெட்டுக்கிளிகள் படையெடுத்து கபளீகரம் செய்துவிட்டுப் போகும். உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முள்ளங்கி, கேரட் ஆகியவை வேர் பிடித்துக்கொண்டிருக்கையில் காட்டுப் பன்றிகள் வந்து தோண்டி, சுற்றிலும் சிதறடித்துவிடும். இத்தனை தாக்குதல்கலுக்கும் தப்பித்து மிஞ்சுகிற சொற்ப விளைச்சலை வீட்டுக்குக் கொண்டு வருவார்கள். வீட்டு எலிகள் அதைத் தின்று தீர்க்கும். இதனால்தான் அவர்கள் கடுமையாகப் பாடுபட்டு உழைத்தும் ஏழைகளாகவே இருந்தனர்.

            ஒருமுறை, புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக தம்பதியர் தங்கள் இல்லத்தைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தனர்.

 “இந்த வருடமும் நமக்கு அறுவடை அவ்வளவாக இல்லை. ”தானிய மூட்டைகளை சுத்தப்படுத்திக்கொன்டிருந்த மனைவி சொன்னாள்.   

கடவுளர்களின் பதுமைகள் கொண்ட வழிபாட்டு மேடையை சுத்தப்படுத்திக்கொண்டிருந்த கணவர, “ஆயினும் நாம் ஆரோக்கியமாகவே இருக்கிறோம் அல்லவா! அது போதும்” என்றார்.

அப்போது பலிபீடத்தின் பின்னே இருளுக்குள் கரமுறவென்ற சத்தம் கேட்டது. உற்றுப் பார்க்கையில் வினோதமான ஏதோ ஒன்று தட்டுத் தடுமாறி அசைவது தெரிந்தது. அது என்ன என்பது தெரியவில்லை. கணவர் அதை இழுத்து வெளியே போட்டார்.

அது அழுக்கடைந்த, சுருங்கிய சுண்டெலி உடலுடனும், குட்டியான மனித முகத்துடனும் இருந்தது. அந்த விசித்திரமான பிராணியைக் கண்டு தம்பதியர் வியந்தனர்.

“இது என்ன அதிசயம்! சுண்டெலி மனித முகத்தோடு இருக்கிறதே…!” மனைவி சொன்னாள்.

அது இரண்டு காலில் நின்று, முன்னங் காலால் முதுகைச் சொறிந்தபடி, “நான் பிராணி அல்ல” என்றது, சுண்டெலிக் குரலில்.

அது மனிதர்கள் போலப் பேசுவதைக் கேட்டு தம்பதியருக்குப் பேராச்சரியம்.

“பிராணி அல்ல என்றால் நீ யார்?” கணவர் கேட்டார்.

“கடவுள்!”

“கடவுளா…?? நீயா…???!! ஹெஹ்–ஹெஹ்-ஹே….!” கணவர் கேலியாக சத்தமிட்டுச் சிரித்தார்.

“அதுதானே…! கடவுள்கள் சுண்டெலி அளவுக்கா இருப்பார்கள்?” மனைவியும் வழிமொழிந்தாள்.

மனித முகச் சுண்டெலி முதுகு சொரிவதை நிறுத்திவிட்டு, முன்னங்கால்கள் இரண்டையும் கைகள் போல தனது பருத்த இடுப்பில் ஊன்றிக்கொண்டு கம்பீர போஸ் காட்டிவிட்டு சொன்னது. “நான் ஏழ்மையின் கடவுள்!”

“ஹ்ம்ம்…! ஏழ்மையின் கடவுள்! அதனால்தான் இப்படி குட்டியூண்டாக, சுண்டெலியாக இருக்கிறாயா?” கணவர் மீண்டும் கேலி செய்தார்.

“ஓரு சுண்டெலி எப்படி கடவுளாக இருக்க முடியும்?” மனைவியும் கேட்டாள்.

“ஈ, எறும்பு கூட கடவுளாக இருக்க முடியும். இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று இந்தியாவில் பழமொழி இருக்கிறது. ப்ரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களிலும், ஜடப் பொருள்களிலும் தெய்வீக ஆற்றல் உள்ளது என்று தாவோ தத்துவம் சொல்கிறது.”

“அட, இந்த சுண்டெலி தத்துவ ஞானமெல்லாம் பேசுகிறதே…!” கணவர் வியந்தார்.

“எலிகள் மனிதர்களைப் போலப் பேசுவதே அதிசயம்தானே! அப்படி அவை பேசும் என்றால் தத்துவம், சித்தாந்தம், வேதாந்தம் எல்லாமே பேசலாமே…!” மனைவி சுட்டிக் காட்டினாள்.

“அதுவும் சரிதான்” என்ற கணவர், “இருந்தாலும் இது கடவுள் என்பதை எப்படி நம்புவது?” என்றார் சந்தேகத்தோடு.

“ஏதாவது அற்புதங்களை நிகழ்த்திக் காட்டச் சொல்லிப் பார்க்கலாம்.”

“ஹிஹ்–ஹிஹ்-ஹீஈஈ….!” இப்போது மனித முகச் சுண்டெலி இளக்காரமாக இளித்தது. “நான் நிகழ்த்துகிற அற்புதங்களால்தான் நீங்கள் இன்னும் ஓட்டாண்டியாகவே இருக்கிறீர்கள்! ஆது மட்டுமல்ல. உங்களின் பரம்பரை நலிவுக்கே நாந்தான் காரணம். இத்தனை அற்புதங்கள் போதாதா? இன்னும் வேண்டுமா?”

“என்னது…??? நீ என்ன சொல்கிறாய்….???” விவசாயி புரியாமல் பார்த்தார்.

“புரியும்படி விளக்கமாகவே சொல்கிறேன்” என்ற ஏழ்மைக் கடவுள் சுண்டெலி, “என்னால் அதிக நேரம் இப்படி இரண்டு கால்களில் நிற்க முடியாது. வயாதாகிவிட்டதல்லவா! மூட்டு வலி” என்றுவிட்டு குத்தவைத்து உட்கார்ந்துகொண்டது.

*******

“அது ஒரு பெருங்கதை! அதை விளக்கமாகச் சொன்னால் ஷாராஜ் சிறுகதை மாதிரி பதினெட்டு, இருபது பக்கங்களுக்கு நீளும். நாட்டுப்புறக் கதைகளுக்கு அவ்வளவு நீளம் ஆகாது என்பதால் கதைச் சுருக்கம் மட்டும் சொல்கிறேன்” என்ற பீடிகையோடு தொடங்கியது. 

பிறகு விவசாயியைப் பார்த்து சொல்லலாயிற்று.

“நான் இங்கே வந்தது இன்று – நேற்றல்ல. உன் தந்தை உயிரோடு இருந்தபோதே வந்துவிட்டேன். ஓ,… அந்தக் காலம் எவ்வளவு அருமையானது! உன் தந்தை உன்னை மாதிரியல்ல. உனக்கு நேர்மாறாக, சரியான சோம்பேறிப் பயல். ஒரு வேலை வெட்டியும் செய்ய மாட்டான். புகை, குடி, சூதாட்டம் ஆகிய கெட்ட பழக்கங்களும் இருந்தன. சூரியன் உச்சிக்கு செல்கிற வரை படுக்கையிலிருந்து எழ மாட்டான். மாலையில், சூரியன் அஸ்தமிக்கும் முன்பிருந்தே நண்பர்களோடு சேர்ந்து குடித்து கும்மாளமடிக்கவும், சூதாடவும் செய்வான். உன் தாத்தா சம்பாதித்து வைத்த சொத்தையெல்லாம் இப்படி ஊதாரித்தனமாக அழித்துக்கொண்டிருந்தான்.

“உன் தாய் இதைப் பற்றி கண்டித்தால் அவளை சக்கையாக அடித்து உதைப்பான். உன் தாத்தா – பாட்டியும், மற்ற பெரியோர்களும் கூறுகிற அறிவுரைகள் எதையும் செவிமடுப்பதில்லை. சொத்துகள் அழிந்த நிலையில், சம்பளம் தர முடியாததால், வேலைக்காரர்கள் ஒவ்வொருவராக வெளியேறிவிட்டனர். இந்த வருத்தங்களாலேயே முதலில் உன் தாத்தா – பாட்டியும், பிறகு உன் தாயும் மேல் லோகம் போய்ச் சேர்ந்துவிட்டனர்.

“இந்த வீடு பராமரிக்க ஆள் இன்றி சிலந்தி வலைகளாலும், ஒட்டடைகளாலும் மூடப்பட்டது.  விளைநிலங்கள் களைகளால் நிறைந்தன. சூரிய ஒளி படர்ந்த விளைநிலங்கள் யாவும் உன் தந்தையால் விற்கப்பட்டு, அந்தப் பணத்தையும் குடித்து, சூதாடி அழித்துவிட்டான். குடல் வெந்தும், நுரையீரல் கருகியும், கணையம் வீங்கி வெடித்தும் அவன் மண்டையைப் போட்டபோது, அவன் விட்டுச் சென்ற பரம்பரைச் சொத்தாக உனக்கு மிஞ்சியது காய்கறித் தோட்டமும், சூரிய ஒளி படராத நெல் வயலும்தான்.

“விடலைச் சிறுவனான உன்னால் இங்கே சமாளிக்க முடியாது என்ரு நினைத்தேன். வீட்டை விட்டுச் சென்று பிச்சைக்காரனாகத் திரிவாய், அல்லது தூக்குப் போட்டு சாவாய் என ஆவலோடு எதிர்பார்த்தேன். ஆனால் நீ அந்த இரண்டையுமே செய்யவில்லை. எனக்கு அது பெருத்த ஏமாற்றமாயிற்று. அது மட்டுமல்ல. நீ உறுதியாக இருந்து கடுமையாக உழைத்தாய். உனது வேர்வைகளைக் காய்கறித் தோட்டத்திலும், சூரிய ஒளி படராத நெல் வயலிலும் விதைத்தாய். அது என்னைக் கடுப்படைய வைத்தது.

“அதன் பிறகு இவள் உன் மனைவியாக வந்தாள். இவளும் எனக்குத் தொல்லையாகிவிட்டாள். இப்படியுமா இருப்பாள் ஒரு பெண்! அதிகாலை முதல் தாமத இரவு வரை அவள் இளைப்பாறுவதே இல்லை. காய்கறித் தோட்டத்திலும், நெல் வயலிலும் மாறி மாறி வேலை செய்கிறாள். இடையிடையே வீட்டை சுத்தப்படுத்துவது, துணி துவைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவுவது ஆகியவற்றையும் செய்துகொள்கிறாள். நான் பகல் பொழுதில் குட்டித் தூக்கம் போடலாமென்றால் முடிவதில்லை.

“ஆகவே, நான் தோட்டத்துக்கு வந்து பார்த்தேன். என்ன ஆச்சரியம்! முன்பு களைகளால் நிறைந்திருந்த அது, இப்போது நேர்த்தியாக உழுது விதைக்கப்பட்டிருந்தது. எனக்கு அதைக் காணப் பொறுக்கவில்லை. மலைக் காகங்களை வரவழைத்து விதைகளைத் தோண்டச் செய்தேன். ஆயினும் நீங்கள் மறுபடியும் விதைத்தீர்கள். அவை தளிர்விட்டபோது நான் முயல்களைத் தருவித்து மேயச் செய்தேன். அதையும் மீறி இலைகள் வளர்ந்தன. வெட்டுக்கிளிகளையும், கம்பளிப்பூச்சிகளையும் அழைத்து அவற்றுக்கு விருந்தாக்கினேன். அப்படியும் பயிர்கள் தாக்குப் பிடித்து, கிழங்குகளை விளைவித்தன. காட்டுப் பன்றிகளை ஏவிவிட்டு நாசமாக்கினேன். இங்கே, இந்த வீட்டில் எலிகள், சுண்டெலிகள், பெருச்சாளிகளை வரவழைத்து சேதங்களை ஏற்படுத்தினேன்.”

தம்பதியர் இதைக் கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளாயினர்.

“அடக் கடவுளே! நாங்கள் அவ்வளவு பாடுபட்டும் பலன் இல்லாமல் போகக் காரணம் நீதானா?” கணவர் கையறுநிலையாகக் கேட்டார்.

“நீயும் ஒரு கடவுள்தானே! நீ இப்படிச் செய்யலாமா?” மனைவி முறையீடாகக் கேட்டாள்.

“நான் ஏழ்மையின் கடவுள். மனிதர்களுக்கு ஏழ்மையையும், வறுமையையும் கொடுப்பதே எனது வேலை.”

“ஹ்ம்ம்…! அதற்குத் தக்க எலி உருவத்தைத்தான் எடுத்திருக்கிறாய்!” கணவர் முணுமுணுப்பாக சொல்லிக்கொண்டார்.

எனினும் அது சுண்டெலி ரூபக் கடவுளுக்குக் கேட்கவே செய்தது.

“உங்களை ஓட்டாணடியாக ஆக்குவதற்கு நான் ஓயாமல் பாடுபட வேண்டியிருக்கிறது. நானும் எவ்வளவோ முயற்சித்துப் பார்த்துவிட்டேன். நீங்கள் அசருவதாகத் தெரியவில்லை. இனியும் உங்களோடு மல்லுக்கட்டியபடி வாழ என்னால் இயலாது.  அதனால்தான் இங்கிருந்து செல்ல முடிவெடுத்துவிட்டேன். அதற்காகக் கிளம்பும்போதுதான் உங்களிடம் பிடிபட்டுவிட்டேன்.”

சொல்லிவிட்டு மீண்டும் இரு கால்களில் எழுந்து நின்ற மனித முகச் சுண்டெலி, சீன மற்றும் ஜப்பானிய முறைப்படி பணிவோடு உடலை வளைத்துக் குனிந்து வணங்கி, “விடைபெறுகிறேன்! வணக்கம்!” என்றது.

தம்பதி இருவரும் என்ன சொல்வது, என்ன செய்வது எனப் புரிபடாமல் திகைத்து நின்றனர். சுண்டெலிக் கடவுள் உடலைத் தாழ்த்திக்கொண்டு, நான்கு கால்களிலும் தளர்வாக அடி மேல் அடியெடுத்து வைத்து, வருத்த முகத்தோடு கதவை நோக்கிச் செல்லலாயிற்று.

விவசாயி, “தயவுசெய்து ஒரு நிமிடம் இரு!” எனக் கத்தினார்.

ஏழ்மைக் கடவுள் நின்றது.

விவசாயி மனைவியிடம் குரலைத் தணித்து சொன்னார். “இந்த ஏழ்மைக் கடவுளால் நமக்கும், நம் பரம்பரைக்கும் உண்டான இழப்புகளும், கஷ்டங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. என்றாலும், அது இந்தக் கடவுளின் குற்றமல்ல. செல்வத்தின் கடவுள் செல்வம் தரும். வீரத்தின் கடவுள் வீரம் தரும். அவ்வாறே ஏழ்மையின் கடவுள் நமக்கு ஏழ்மையைக் கொடுத்திருக்கிறது. ஏழ்மை நமக்கு விதிக்கப்பட்டதாக இருக்கும். அதனால்தான் நாம் அதை அனுபவிக்க வேண்டியுள்ளது. எனக்கு என்னவோ அதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. நீ என்ன சொல்கிறாய்?”

“எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. உலகில் பல விதமான கடவுள்களும், கடவுளிகளும் உள்ளனர். நோயின் கடவுள், கோபத்தின் கடவுள் போல சில கடவுள்கள் தீமைகளைச் செய்வார்கள். இருப்பினும் மக்கள் அக் கடவுள்களுக்கு வருடத்தில் ஒன்றோ இரண்டோ முறை அரிசியும், சிவப்பு மொச்சையும் படையல் இருவது வழக்கமல்லவா! ஆனால், ஏழ்மையின் கடவுளை வழிபடுவது பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. அவர் எங்கு சென்றாலும் மக்கள் அவரை வெறுக்கவே செய்வார்கள். ஆகவே, நாம் ஏன் அவரை இங்கேயே இருக்கக் சொல்லக் கூடாது? நோய்வாய்ப்பட்ட தந்தையைப் பராமரிப்பது போல நாம் அவரை கவனித்துக்கொள்ளலாம்.”

விவசாயி ஆமோதித்தார்.

பிறகு சுண்டெலியிடம் சென்று அதன் அருகே குத்த வைத்து அமர்ந்தார்.

“ஏழ்மையின் கடவுளே,.. நீங்கள் எங்கள் வழிபாட்டு மேடையிலேயே இருக்க விரும்புகிறோம். நீங்கள் முயல்களையும், காட்டுப் பன்றிகளையும் அழைக்க விரும்பினால் தாராளமாக அழைத்து, உங்கள் வழக்கப்படியே செயல்படலாம். நாங்கள் எப்போதும் கடினமாக உழைப்போம்.”

சொல்லிவிட்டு அந்த மீச்சிறு கடவுளைத் தனது இரு கரங்களாலும் மரியாதையோடு எடுத்துச் சென்று வழிபாட்டு மேடையில் இறக்கிவிட்டார்.

*******

            அன்று முதல் அவர்கள் தங்களின் அற்ப உணவிலிருந்து சிறிதளவு ஒரு கிண்ணத்தில் போட்டு, ஏழ்மையின் கடவுளுக்குப் படையலாக வழிபாட்டு மேடையில் வைப்பது வழக்கமாயிற்று.

            “இன்று வெறும் கூழ்தான். தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள்!”

            “இன்று தினைக் கொழுக்கட்டைதான்.”

            “சர்க்கரை வள்ளிக் கிழங்குதான் இன்றைய உணவு.”

            எதுவாக இருந்தாலும் ஏழைக் கடவுளுக்குப் படைக்காமல் அவர்கள் சாப்பிடுவதில்லை.

            மிக நேரத்திலேயே, காலை நட்சத்திரங்கள் வானில் இன்னும் ஒளிர்ந்துகொண்டிருக்கிறபோதே, வேலை தொடங்கி கடுமையாக உழைப்பதும் தொடர்ந்துகொண்டிருந்தது. 

            ஓரிரு வருடங்கள் கழிந்தன. சூழ்நிலை மாறத் தொடங்கியது. அவர்களின் பயிர்கள் செழித்து வளர்ந்தன. வெட்டுக்கிளி, கம்பளிப்பூச்சி, முயல், காட்டுப்பன்றி அழிமானங்கள் எதுவும் இல்லை. நிறைந்த மகசூல். இவை யாவும் ஏழைக் கடவுளின் அருளால்தான் உண்டாயின என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.

            “இவ்வளவு மகசூலையும் வீட்டுக்குக் கொண்டு சென்றால், நாம் படுத்துறங்க இடம் இருக்காதே…!” என்றார் விவசாயி.

            “தானியக் கிடங்கு கட்டிக்கொள்ளலாம்.” மனைவியின் ஆலோசனை.

            “இல்லை. நமது வீடு சிதைந்துகொண்டிருக்கிறது. அதனால் பெரிதாக புதிய வீடு கட்டிக்கொள்வதே நல்லது.”

            மகசூலை விற்ற பணத்தில் இரண்டு அடுக்கு வீடு கட்டப்பட்டது.

            புது வீட்டுக்குக் குடிபுகும் நாளன்று காலையில் தம்பதியர் பழைய வீட்டின் வழிபாட்டு மேடை முன் மண்டியிட்டு ஏழைக் கடவுளை வணங்கினர்.

            “எங்களின் பாதுகாவலரான ஏழைக் கடவுளே! எங்களின் வளமும், நலமும் உங்களின் கொடை. உங்களின் அருளால் நாங்கள் புது வீடு கட்டியிருக்கிறோம். இப்போது அங்கே குடிபுகப் போகிறோம். நாங்கள் அங்கு செல்லும் முன்பு, நீங்கள் அங்கு செல்வதை விரும்புகிறோம். அருள்கூர்ந்து இறங்கி வாருங்கள்!” என் வேண்டிக்கொண்டனர்.

            காலியாக இருந்த மேடையில் மனித முகச் சுண்டெலி ப்ரசன்னமாகியது. அங்கிருந்து மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்து புது வீட்டை நோக்கி ஓடியது. தம்பதியர் பின்தொடர்ந்தனர். புது வீட்டின் நுழைவாயில் அருகே நின்ற மீச்சிறு கடவுள், அவர்களைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தது. பிறகு வீட்டுக்குள் நுழைந்து மறைந்தது.

            அதன் பிறகு அது எவர் கண்ணிலும் தென்படவே இல்லை. ஆனால், இன்று வரை அத்தம்பதியர் அந்த வீட்டில் மகிழ்ச்சியோடும், செல்வ வளத்தோடும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

இப்போது அவர்களுக்கு ஆணும், பெண்ணுமாக இரு குழந்தைகளும் உள்ளனர். பெற்றோர் பையனைப் பெருச்சாளி என்றும், குட்டி மகளை சுண்டெலி என்றும் செல்லமாக அழைப்பார்கள்.

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button