சிறுகதைகள்
Trending

நுண்கதைகள் – க.சி.அம்பிகாவர்ஷினி

வாசகசாலை

இருப்பு

கழிவறையிலமர்ந்திருந்தபோது உன்னைப் பற்றிய யோசனை. நீ பேச ஆரம்பித்து சில தினங்களிருக்குமா? இருக்கும். என்னிடம் ஒரு பச்சைநிற க்ளிப்  இருக்கிறது. இப்போதும் அதைத்தான் தலையில் வைத்திருக்கிறேன். க்ளிப்பிலிருந்து கவ்விப் பிடிக்கப்பட்ட கற்றை மயிர்கள் தளர்வது போல் தோன்ற க்ளிப்பை எடுத்து வாயில் வைத்துக் கடித்தபடி கொண்டையைச் சரிசெய்தேன். க்ளிப்பையெடுத்துக் கொண்டைக்கு நேராக வைத்து விரித்தபோது ” படக்”.

நம்பவேயில்லை. பலமுறை உபயோகித்த க்ளிப்தான். இரண்டு பக்கமும் சிறகுகளைப் போல விரிந்திருக்கும் அதன் மத்திய இணைப்பில் ஸ்ப்பிரிங் நுழைத்திருக்கும் வளையங்களில் ஒன்று ஒடிந்து போயிருக்கிறது. கையில் வைத்தபடியே விரித்து விரித்துப் பார்த்தேன். இனி இதை வைத்துப் பிரயோசனமில்லை. உன்னைப் பற்றின யோசனையில் க்ளிப் ஒடிந்திருந்திருப்பது வருத்தம்தான். உன்னைப் பிடித்திருக்கிறது. உன் நட்பும் நீண்ட நாட்களாகத் தொடர வேண்டுமென்றிருக்கிறது. இப்போது போய் இப்படி… பொதுவாக உடைந்து போனதை வைத்துக்கொள்ளும்  பழக்கம் எனக்குமில்லை.

கழிவறையை விட்டு வந்ததும் உடைந்த க்ளிப்பை பத்திரமாக புத்தகங்கள் அடுக்கி வைத்திருக்கும் அலமாரியில் இருக்கட்டுமென்று வைத்துவிட்டேன். நீண்ட நாட்களாகப் பயன்படுத்திய ஒன்று உன்னால் உடைந்து போனது நல்லதிற்காக இருக்கட்டுமென்று தோன்றியது. என்னிடமிருக்கிற நீண்ட நாட்களாகத் தேங்கியிருந்த ஏதோ ஒரு பழைய துயரத்தை அது எடுத்துக்கொண்டு போய்விட்டதாக நினைத்துக்கொள்கிறேன். அது உன் வரவால் நிகழ்ந்ததாகயிருக்கட்டுமென நம்பிக்கொள்கிறேன்.

உன்னைப் பார்த்ததிலிருந்தே பிடித்துப் போய்விட்டது.உன்னோடு பேச வேண்டும், பழக வேண்டும். எனக்கும் ஆசைதான். எதிலும் அவசரமில்லையெனக்கு. உன் மீது தனி மரியாதை கூட.

ஆஸ்பெட்டாஸ் கூரை போட்டிருக்கும் மாடிப்படிகளில் உட்கார்ந்து படிக்கும் பழக்கம் புதிதாகத் தொற்றிக்கொண்டதுதான். அதிலும் மதிய நேரமென்றால் ஒரு பரிபூரண நிசப்தம் எல்லாத் திக்குகளிலும் நிரம்பியிருப்பதைப் போல உணர்கிறதுண்டு. நான் உட்கார்ந்து படிக்கும் படிகளுக்கு எதிர்ப்பக்கமாக துளைகள் போடப்பட்ட சுவர். ஒவ்வொரு துளையும் கண் வடிவிலிருக்கும். ஒவ்வொன்றாக எண்ணப் போய் கடைசியில் எண்ணிக்கை சொதப்பி பாதியில் விட்டுவிட்டேன். படிப்பதை விட்டுவிட்டு துளைகளை நெருங்கி ஒன்றின் வழியாகப் பார்த்தபோது உன் நினைவு. துளை வழியாக முதலில் பார்த்தது முழுக்க சருகாகி நிற்கும் வேம்பு மரம். வெறுப்பாகயிருந்தது. உன்னை மட்டும் அதிலிருந்து பிரித்துப் பார்க்கத் தோன்றியது.

இரவு ஒருநாள் ஜன்னலின் முன்பு நின்று பேசத் தொடங்கிவிட்டேன். உன்னைப் பற்றி பேசிப் பார்க்கத் தோன்றியது. நிலத்தில் தெரிகின்றது நிழலைப்போல இருக்கிறது. நீர் வடிவமாகவும் தெரிகிறது. நீரிலிருக்கும் முதலை வெளியேறி நிலத்தில் படுத்திருப்பதுபோலத் தோன்றியது.

நீ சதிகாரனா?

நீயும் நானும் பழகி ஒரு மாதம் கூட இருக்கப் போவதில்லை. ஆரம்பத்திலிருந்தே உன்னோடு ஒட்டவேயில்லை. பிடிக்கத்தான் செய்கிறது.

என்னவோ உன்னோடு பேசத் தோன்றவில்லை.இரண்டு நாட்களாக… நீயும் பேசவில்லை. இந்த இரண்டு நாட்களில் ஒருமுறையாவது உன்னை நீ தக்கவைத்துக் கொள்ளாமலாயிருப்பாய்?

முதல் நாள் மதியம் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தபடியே உன் நினைவுகள் வர கஷ்டமாகயிருக்கிறதென்று எதிரில் பார்க்க,

ஷெல்ஃபிலிருந்து சட்டென்று சத்தத்துடன் பறந்து விழுகிறது பச்சை நிற கேரி பேக்.

அந்த க்ளிப்பை நாளை தூக்கியெறிந்து விடவா? அதன்பிறகாவது இந்த மௌனம் கலையுமா?

*** *** ***

 

அறை

“நாளைக்கு என் ரூமுக்கு பாத்ரூம் போக வருவேல்ல…அப்ப பாத்துக்குறேன்…”

ஓங்கி ஒரு அறை. அடித்ததற்குப் பிறகுதான் இப்படிப் பேசினாள் மங்கை. இப்போதெல்லாம் மாடிக்குப் போகிற கேட்டை அடிக்கடி பூட்டி வைத்து விடுகிறார்கள். புதுப் பழக்கமாகயிருக்கிறது. மாடிக்குப் போகிறதென்றால் எதார்த்தமாகப் போக முடியவில்லை. திறந்திருக்கிறதாயென்று யாரிடமாவது கேட்டுவிட்டுத்தான் போகவேண்டும். நேரே சாவி மாட்டி வைத்திருக்கும் பீரோ வளையத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் தோன்றுவதில்லை.

கடைக்குப் போக தயாராக நின்று கொண்டிருந்தாள் மருமகள். கையில் பத்துரூபாய். மாடி பூட்டியிருப்பது தெரியாமல் கேட் வரைக்கும் வந்துவிட்ட மங்கை, மருமகளைப் பார்த்ததும் சாவியெடுத்து வரச் சொன்னாள். அவள் போகாததற்கு இப்படியப்படிச் சமாளித்துப் பார்த்தாள். அவளை வழிக்குக் கொண்டு வரும் வரை பேசி முடிக்க, ”ப்ப்பே” என்றாளே பார்க்கலாம். சாவியெடுக்கத்தான் கிளம்பினாள். நிறுத்தி ஒரு அறை கன்னத்தில். “பட்…”.

“என்ன வர வர மரியாதயில்லாம பேசிட்ருக்க…? இனிமே ரூம் பக்கம் வந்த அவ்ளோதான்…”

ஒரு மாதிரி சமாளித்துக்கொண்டே நின்றிருந்தவள் “ரூம்” என்றதும் அழத்தொடங்கிவிட்டாள். சின்னப் பிள்ளை. பேத்தி வேறு. மங்கையின் அம்மாள் அவளைச் சமாதானம் செய்யப் போக, அவளுக்கு மேலும் அழுகை. கன்னத்தைக் காட்டி வலிப்பது போல சொல்லிக் காட்டினாள்.

“நீயொன்னும் சாவியெடுத்து வரவேணாம்…பாத்துக்றேன். ரூம் பக்கம் எப்டி வர்றன்னு…” வாசல்படி ஏறிக்கொண்டே சாவியெடுக்கப் போய்விட்டாள் மங்கை.

வந்த வேகத்தில், ”துணியெல்லாம் நெறஞ்சு போச்சு. முக்காவாசி எடுத்துட்டு வந்துரு. தொவைக்கற பவுடர்   ச்சேர் மேலயிருக்கு” கட்டளையிடுவது போலிருந்தது அவள் அக்காவிற்கு.

சொல்லிவிட்டு விருவிருவென்று வாசலுக்கு வந்துவிட்டாள்.

மாடிக்குப் போகவேண்டும். வீட்டு வாசல்படிகளை விட்டு இறங்கிவிட்டாள். சாவியெடுக்கவில்லை. அம்மா வாசலில் உட்கார்ந்திருந்தாள்.

“துணி தொவைக்கப் போடனும்….”

”இப்ப வேண்டாம்ப்பா…சாய்ங்காலந்தான் தொவைச்சுப் போட்ருக்கு…”

மருமகள் வீட்டில் துவைத்துப் போட்டிருக்கிறார்கள். அவர்கள் துணிகளையெடுத்தால்தான் கொடிகள் கிடைக்கும்.

“சரி அப்போ தன்யாட்ட சொல்லிரு..துணியெடுத்து வரவேண்டாம்னு…அப்டியே சாவியெடுத்துட்டு வா…” அம்மா  வீட்டிற்குள் போகிறபோதே,

“இந்த நேரத்துல வேணாம்ப்பா…” காதில் அதுக்கு மேல் வேறெதுவும் விழவில்லை.

வாசலில் இன்னும் நின்றுகொண்டிருக்கிறாள் மங்கை. அம்மா வந்தாள்.

“சொல்லிட்டேன்.அதுவும்தான் சொல்லுது..இந்நேரத்துக்கு எதுக்குங்குது…”

“சரி ..சாவியெங்க..”

எடுத்துவரவில்லை. திரும்பி வீட்டுக்குள் போகிறாள். அவள் போகிற போதே, “அதுக்குதான் உன்ன போகச்சொன்னதே…”என்றாள்.

மாடியில் நின்றுகொண்டிருந்தாள். “ஹே நூறுவ்வா விழுந்துருச்சே…ஹே…” ஒரே சத்தம். மாடியிலிருந்து எட்டிப் பார்த்தாள். மருமகள்தான். அதிர்ஷ்டம் விழுகிற சீட்டுக் கிழித்தல் போட்டியில் இவளும் காலையில் கிழித்திருக்கிறாள்.

ராத்திரி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கிறபோது இவளையே ஒரு சீட்டு எடுக்கச் சொல்லிருக்கிறார்கள் கடை நடத்துபவர்கள். எடுத்தவள்  பெயரே வந்திருக்கிறது. லேஸ், க்ரீம் பிஸ்கட், ஷாம்பு, குளிக்கற சோப்பு, ஹேண்ட் வாஷ்னு ஒரே பர்சேஸ்தான்.

கூட்டத்திலிருந்தவர்கள் எல்லாம் பெரியவர்கள். எல்லோரும் இவளின் அதிர்ஷ்டத்தை அவரவர்களின் துரதிர்ஷ்ட சாயல்களில் வெளிப்படுத்த, மருமகளுக்கு ஒரே முகப்பெருமை அப்பிக் கொண்டிருந்திருக்கிறது.

அப்படியே கத்திக்கொண்டு வந்தாள். வந்தவள் நேரே அவள் அம்மாவிடம் அதிர்ஷ்டம் சம்பாதித்துக் கொடுத்த பொருட்களைக் கொடுக்க மாடியிலிருந்து இன்னும் எட்டிப் பார்த்துக்கொண்டுதான் நிற்கிறாள் மங்கை.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button