
இந்த உலகம் நம்மை என்றுமே ஆச்சரியப்படுத்தத் தவறியதில்லை. சிறு புல் முதல் பல கோடான கோடி உயிரினங்கள் வரையில் அவற்றின் தோற்றம் குறித்து இந்த பிரபஞ்சமெங்கும் பல ஆயிரம் கதைகள் இருக்கின்றன. அதில் மனிதனும் விதிவிலக்கல்ல. ஆனால், மனிதனின் பரிணாமம் பற்றிய தகவல்களைக் கேட்கும் போதும், அது குறித்து வாசிக்கும் போதும் தவறாமல் காதில் வந்து விழும் புத்தகத்தின் பெயர் இதுவாகத்தான் இருக்கும். அதோடு சேர்த்து தோழர் ஏங்கல்ஸ் எழுதிய “குடும்பம் தனிச்சொத்து அரசு ” வாசிப்பிற்கு கடினமாக இருப்பதாக உணர்பவர்கள் இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம் என்ற நண்பர்களின் ஆலோசனைகளும் இந்த புத்தகத்தின் மீதான ஆவலை அதிகரித்தது.
புத்தகத்தின் ஆசிரியர் ராகுல்ஜி என்றழைக்கப்படும் திரு.ராகுல சாங்கிருத்யாயன். தமிழில் முத்து மீனாட்சி அவர்கள் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். ஆசிரியரைக் குறித்து மேலும் தேடும்போது சில சுவாரசியமான விசயங்களும் கிடைத்தன. ராகுல்ஜி பௌத்த துறவியாக இருந்து மார்க்சியவாதியாக மாறியிருக்கிறார். பௌத்த நூல்கள் பலவற்றைப் பாதுகாத்ததில் இவரது பங்கு அதிகம். தொடர்ச்சியாக இவரது மற்றொரு நூலான சிந்துவிலிருந்து கங்கை வரை வாசிக்கத் தொடங்கி விட்டேன்.
கி.மு. 6000 இல் தொடங்கி நிகழ்காலம் வரையிலான வரலாற்று நிகழ்வுகளை பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் விளக்குகிறது இந்நூல். தாய்வழிச்சமூகம் தொடங்கி முதலாளித்துவ சமூகம் வரை கதைகளின் வழி அருமையாக பதிவு செய்திருக்கிறார். ஒரு வரலாற்றைப் பதிவு செய்யும் போது மக்களின் வாழ்வியல் முறைகளை புனைவுகளோடு சேர்த்து சுவாரசியமாக விவரிப்பது வாசிப்பில் தொய்வு ஏற்படாமல் தடுக்கிறது. இந்த புத்தகம் வாசிக்கும் போது ஏற்படுத்திய தாக்கத்தை விடவும் வாசித்து முடித்த பின் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். ஏனென்றால் ஒவ்வொரு காலகட்டத்திலும் சொல்லப்பட்ட நிகழ்வுகளை அசைபோட்டு அதிலிருந்து செய்திகளை மட்டும் தனியாக எடுத்து இணைத்துப் பார்க்கும் போது ஆச்சரியத்தையும் கேள்விகளையும் ஒரு சேர எழுப்புகிறது இந்த புத்தகம். மேலும், இந்த ஒரு புத்தகம் நிச்சயமாக பல புத்தகங்களை வாசிப்பதற்கான திறவுகோலாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
புத்தகத்தை வாசித்ததில் எனக்கிருக்கும் சில விமர்சனங்கள் மற்றும் முரண்கள் குறித்தும் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. இது புனைவையும் வரலாற்றையும் இணைத்து எழுதப்பட்ட நூல் என்பதால், சில இடங்களில் விவரிக்கப்பட்ட சில புனைவுகள் வரலாற்றோடு ஒத்துப்போவது போல இருப்பதால் அவை உண்மை என்று வாசகர்கள் நினைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். சில சமயங்களில் எது வரலாறு எது புனைவு என்ற குழப்பங்கள் வாசிப்பிற்கிடையே ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. மேலும், இந்த நூல் ஆசிரியரின் பார்வையில் இருந்து எழுதப்பட்டுள்ளதால் புனைவுகள் பல இடங்களில் ஒரு சார்புடையது போல தோன்றுகிறது. குறிப்பாக ஆரியர்கள் வருகைக்கு முன்பே இங்கிருந்த பூர்வகுடிகளை புத்தகத்தில் சித்தரித்த விதம், ஆரியர்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் குறித்த உயர்வான புனிதத்தன்மை போன்றவை ஆசிரியரை நோக்கிய நம்முடைய விமர்சனங்களை வைப்பதற்கு காரணமாகிறது. அதே சமயம் ஆரியர்களின் வர்ணபேதம் குறித்தும் கடுமையாக சாடியிருக்கிறது இந்நூல்.
சுதந்திரத்திற்குப் பின் நடந்த பல அகழ்வாராய்ச்சிகளுக்குப் பின் மொகஞ்சாதாரோ, ஹரப்பா நாகரிகங்கள் திராவிடர் நாகரிகங்களே! என்ற வரலாற்றை புரட்டிப்போடும் முடிவுகளும் நமக்குக் கிடைத்துள்ளன. எனவே, ஒரு நீண்ட விவாதத்திற்கான ஒரு தொடக்கமாகவும் இந்த புத்தகம் அமைகிறது. இது குறித்து நண்பர்களுடன் நடந்த கலந்துரையாடலில் சில தகவல்கள் கிடைத்தன. இந்த நூல் சுதந்திரத்திற்கு முன் எழுதப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. அதனால் சுதந்திரத்திற்கு முன் கிடைத்த ஆவணங்கள் வரலாற்றுத் தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதால் அவ்வாறு இருந்திருக்கலாம். மேலும், ஆசிரியரின் புவியியல் சார்ந்த வாழ்விடமும் அவருடைய எழுத்தில் அச்சார்பு நிலை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் தோன்றுகிறது. ஆனால், மனித குல வரலாற்றின் வடிவத்தைப் பதிவு செய்ததில் மிக முக்கியமான ஆவணம் என்றே இந்தப் புத்தகத்தைச் சொல்லலாம். இந்தப் புத்தகத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆனால் கண்டிப்பாக நீங்கள் இதை வாசிக்க வேண்டும்.
இந்த புத்தகத்தை படிக்க முயற்சித்தேன் ஆனால் படிக்க முடியவில்லை காரணம் இந்த புத்தகத்தின் மீது எனது நண்பர்களின் விமர்சனம் புத்தகத்தின் ஆவலை குறைத்து “என்ன பிரயோஜனம்” என்ற மனப்பான்மைக்கு தள்ளியது…
எனது அருமை நண்பர் அருண் கோமதி யின் இந்த அறிக்கை, புத்தகத்தை மேலும் என்னை வாசிக்க சீர்படுத்தி உள்ளது.
நன்றி நண்பா….?