கட்டுரைகள்
Trending

கேங் லீடர் [தெலுங்கு]  துப்பறியும் காகிதப் புலி

டோட்டோ

நகைச்சுவைப் புலனாய்வு என்பது ஒரு தனியான, ஆனால்,  சினிமா அதிகம் தொடாத ஒரு பிரிவு. ஃபிரெஞ்ச்  தொடரான பிங்க் பாந்தரில் ‘இன்ஸ்பெக்டர் கிலாஸ்லாவ்’, தேவனின்  ‘துப்பறியும் சாம்பு’, மிஸ்ஸியம்மாவில் துப்பறியும் ராஜுவான  ‘தங்கவேலு’ காலம் தொடங்கி, நகைச்சுவைப் புலனாய்வு கதாபாத்திரங்களை, பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் நாவல் , அபூர்வ சகோதரர்களில்  இன்ஸ்பெக்டர் திருவாசகம் [ இந்தப் பெயரின் பின்னால் ஒரு கதையுண்டு ], ஆங்கிலத்தில் ஜானி இங்கிலிஷ், ஏஸ் வென்ச்சுரா ஜிம் கேரி, தசாவதாரமில் பல்ராம்  நாயுடு, சமீபத்தில் தெலுங்கில் வந்து வெற்றி பெற்ற ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா என விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வரிசையில் நேச்சுரல் ஸ்டார் நானி, நடிகை லக்ஷ்மி, சரண்யா பொன்வண்ணன்,  அறிமுக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிப்பில், அனிருத்தின்  இசையமைப்பில்,  யாவரும் நலம், சூர்யா நடித்த 24  போன்ற  படங்களை இயக்கிய விக்ரம் கே குமார் எழுதி,  இயக்கியுள்ள திரைப்படம் தான்  “கேங் லீடர்”.

கதை

பரபரப்பானதொரு  பெரிய வங்கிக் கொள்ளையிலும், அதன் முடிவில் நடக்கும் சில கொலைகளிலும் கதை   தொடங்குகிறது. சில மாதங்கள் கழித்து, இதில் கொலை செய்யப்பட்ட 5 வெவ்வேறு நபர்களின்,  குடும்பத்துப் பெண்கள் அக்கொலைகள் செய்தவனைக் கண்டுபிடித்து பழிவாங்க நினைத்கிறார்கள். இதற்காக,  அதே நகரத்தில்,  பழைய ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அதையே நாவலாக எழுதி வரும் ஒரு போலி எழுத்தாளரான “பென்சில் பார்த்தசாரதி”யின் உதவியை நாடுகிறார்கள்.  இவர்கள் இணைந்து துப்பறிவதில் சந்திக்கும் சவால்களும், திருப்பங்களும், ஆச்சரியங்களும்தான் கதை.

பார்வை

சினிமாவில் ஆகப் பெரிய சிக்கலே, நேரடியான , எளிமையான கதையை வெகு சுவாரசியமாக சொல்லுதல் என்பதே. மேலும், வெற்றி பெற்ற இயக்குனர்கள் மேலும் மேலும் பிரம்மாண்டத்தை நோக்கி மட்டுமே நகர்ந்து   எளிமையான கதை  சொல்லுதல் வழியிலிருந்து விலகிவிடுவதும் எப்போதும் தொடர்கதையாகி வருகிறது.  ஆனால்,  தமிழிலும் தெலுங்கிலும்  பெரு வெற்றிப்  படங்ககளைக்  கொடுத்த பின்னர், இயக்குனர் விக்ரம் கே குமார் இந்த எளிய பழிவாங்கும் கதையை தன்னுடைய பிரமாதமான திரைக்கதையால் வலுவேற்றியதற்கு முதல் பாராட்டுக்கள். அடுத்து, பென்சில் பார்த்தசாரதியாக  நடிகர் நானி. ஐந்து பெண்களுடன் பிரயாணம் செய்யும் ஒரு கதாநாயகன் பாத்திரத்தை ஏற்று நடிப்பது முதல் , இயல்பான உடல் மொழி, அட்டகாசமான நகைச்சுவை, மெல்லிய காதல், பாசம் என உணர்ந்து நடித்திருக்கிறார். மேலும், சரஸ்வதி பாட்டியாக லட்சமியும், வரலக்ஷ்மியாக நடிகை சரண்யா பொன்வண்ணனும், பிரியாவாக புதிய அறிமுகமான பிரியங்கா அருள் மோகனும், எதிர் நாயகன்  தேவ் ஆக மிரட்டிய கார்த்திகேய கும்மகொண்டாவும்   சரியான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு வெளிவந்த ஜெர்சி படத்திற்குப்  பிறகு, நானி படத்தில் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிற  இசையமைப்பாளர் அனிருத்தும், குபா என்றழைக்கப்படும் மிரோஸ்லா குபா ப்ரோசக்  என்னும் போலந்து நாட்டு ஒளிப்பதிவாளரும், குழப்பாமல் தெளிவான படத்தொகுப்பை அளித்த நவீன் நூலியையும்  மிகக்  குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் .   படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை – வில்லன் கதாபாத்திரத்தின் நம்பகத் தன்மை, தட்டையாக சொல்லப்பட்ட திருப்பங்கள், இது போக மசாலா சண்டைக்  காட்சிகளும் உண்டு. ஆனால், அதையும் மீறி, இந்தப் படம்  ரசிகர்கள் குடும்பத்துடன் ஒன்றி ரசிக்கும், வன்முறை , ஆபாசமில்லாத படமாக இருக்கிறது.   தி டார்க் நைட்டின் ஆரம்பம் போன்ற ஒரு வங்கிக்கொள்ளை, நுட்பமாகவும்  மறைக்கப்பட்ட துப்புகள், புத்திசாலித்தனமான கதை சொல்லல்,  வெண்ணெல கிஷோர் நகைச்சுவை காட்சிகள் சற்று எல்லை மீறியதாக இருந்தாலும் தொய்வில்லாத நகைச்சுவை, தூவப்பட்ட சென்டிமென்டுகள், எல்லா துப்புகளும் நுட்பமாக இணைக்கப்பட்ட திரைக்கதை என எங்கும் போரடிக்காத ஒரு படமாக கேங் லீடர் நிறைவளிக்கிறது.

பின்கதை : அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் வெறுமனே சராசரியாக எடுக்கப்பட்ட இரட்டைப் பிறவிகள் பழிவாங்கும் படமல்ல. எப்படி என்பதை பார்க்கலாம்.  வெளிவந்து 30 வருடங்கள் ஆகியிருந்தாலும், நமக்கு கான்ஸ்டபிள் சம்மந்தத்தின்  பெயர் நினைவிருக்கும் அளவிற்கு இன்ஸ்பெக்டராக வரும் ஜனகராஜின் பெயர் நினைவில்லாமல் இருப்பதில், ஒரு விஷயம் இருக்கிறது. படத்தில் எங்கும் அவர் பெயர் சொல்லப்பட்டிருக்காது. தமிழ் திருமுறையின் பெயரில் அப்போது காவல்துறையில் இருந்த ஒரு உயரதிகாரியின் திறமைக்கும் குணநலனிற்கும்  நேரெதிராக சீருடையின் மேல் பாட்டனைத் திறந்தபடி படைக்கப்பட்ட “சிரிப்பு போலீஸ்” கதாபாத்திரத்திற்கு “திருவாசகம்” என பெயர் வைத்ததாக திரு.கமல்ஹாசன் ஒரு பழைய பேட்டியில் கூறியிருக்கிறார். ஆனாலும், படத்தில் அந்தப் பெயர்  எங்கும் குறிப்பிடப்பட்டிருக்காது – ஒரு இடத்தைத் தவிர. [ ஒரு வாசகம்  சொன்னாலும் திருவாசகம் சார் ]. பத்து நிமிடங்களே வரும் கதாபாத்திரத்தை  எப்படி எழுதலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம். இன்னொரு சிறு விஷயமும் உண்டு.. படத்தில் வரும்  எந்தக் கொலையையும் அப்பு கதாபாத்திரம் தானே நேரடியாக அல்லது வெறுமனே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லாமல்,  ஒரு சர்க்கஸ் கலைஞனுக்கே உண்டான பொழுதுபோக்கும் குணத்துடன் , தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்ள,  மிகச் சாதுர்யமாக ஒவ்வொரு கொலையையும் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கும்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button