இணைய இதழ்இணைய இதழ் 90சிறுகதைகள்

ஹலோ…. – அகிப்ரியா

சிறுகதை | வாசகசாலை

ந்தச் சத்தம் என்னை இன்னமும் கடுப்பேற்றியது. என்னால் முடிந்த அனைத்தையும் செய்து விட்டேன். ஆனால், அந்த அழுகை அடங்கியபாடில்லை. விடாமல் கேட்கும் அழுகைச் சத்தம் என் மண்டைக்குள் என்னவோ செய்தது. என்னால் தாங்கவே முடியவில்லை. தலைக்குள் ஏதோ நுழைந்து குடைந்தது. குழந்தையை எடுத்து பொம்மைகள் வரைந்த போர்வையிலோ அல்லது டெடி பியர் முக தணையணையையோ கொண்டு மூடி விடலாமா என ஒரு கணம் தோன்றியது. மூச்சு முட்டும்தான் ஆனால் இந்த இம்சிக்கும் அழுகை அடங்குமே. 

“ச்சே…. என்ன இதெல்லாம்…. நானா இது….!!!”. ஒரு நிமிடத்தில் நான் மிருகமாய் மாறி மீண்டும் என் சுய உணர்வுக்குத் திரும்பினேன். “அடக்கடவுளே, என்ன செய்ய பார்த்தேன் நான்…. 2 மாத குழந்தைக்கு என்ன தெரியும். அதுவும் தவமாய் தவமிருந்து பெற்றவன். கருத்தரிக்க வாய்ப்புகள் குறைவு என கூறிய பின்னும் என் வாழ்வில் அதிசயமாய் வந்தவன் யாழ்வேந்தன். என்ன ஆயிற்று எனக்கு..” 

அவனிடமிருந்து ஏன் இப்படியொரு அடக்க முடியாத அழுகை? இப்போது நானும் கதறிக் கதறி அழுதேன். வீட்டில் யாரும் இல்லை. நானும் அவனும் மட்டுமே. என் கணவர் நண்பர்களைப் பார்க்க வெளியில் சென்றிருந்தார். தாய்மையடைந்த நாள் தொடங்கி என் வாழ்க்கைமுறை மட்டும்தான் 360 பாகை மாறியுள்ளது. மற்ற யாருக்கும் எந்த மாற்றமும் இருக்கவில்லை. பழைய இயல்பிலேயே எல்லோரும் இருக்கிறார்கள். இதை நினைக்கும் போது என் வாழ்க்கை உயிரற்றதாகவும் பொருளற்றதாகவும் ஏன் அர்த்தமற்ற அடிமைச்சங்கிலியில் சிக்கி கொண்டதாகவும் கூடத் தோன்றுகிறது. என் அழுகையே என் பெருங்கோபமாக மாறியது. என் இயல்பிலிருந்து மாறிய நான் இப்போது வேறு யாரோ போல் இருக்கிறேன். இதற்கெல்லாம் ஒரே காரணம் அவன்தான். அவனேதான். யாழ்வேந்தன். என் வாழ்க்கை இப்படி தலைகீழாக மாறிப்போனது அவனால்தான். 

நிம்மதியான தூக்கம் தொலைந்தது. ஒருநாள் சாப்பிட முடிவதில்லை. இன்னொரு நாள் மூன்று பேருக்கான சாப்பாட்டினை ஒரே வேளையில் சாப்பிடுகிறேன். எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும் அவனது அழுகுரல். அதனைச் சமாளிக்க முடியாத பதற்றம் தடுமாற்றம். உடல் ரீதியான மாற்றங்கள். திடீர்திடீரென ஏற்படும் வலி. இன்னும் நிறைய நிறைய….. 

என் மூளை விறுவிறுவென யோசிக்க ஆரம்பித்தது. சற்றே தன் அழுகையை நிறுத்திருந்த யாழ்வேந்தனைத் தூக்கிக் கொண்டு பால்கனி கதவைத் திறந்தேன். இவனைத் தூக்கி இங்கிருந்து வீசி விட்டால் என்ன? இன்றோடு என் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடும். மீண்டும் நான் பழைய நானாக மாறிவிடலாம். இரு கைகளில் அவனை உயரே தூக்கி பிடிக்கிறேன். என் முழு பலத்தையும் கூட்டி அவனை இங்கிருந்து வீசிவிட வேண்டும். முடியவில்லை அவன் ‘வீல்… வீல்’ என கத்தி அழத்தொடங்கிவிட்டான். அந்த சத்தம் மீண்டும் என் தலைக்குள் புகுந்துவிட்டது. பெரிய இடிகளையும் இடர்பாடுகளையும் அது உள்ளே நடத்துகிறது. பரவாயில்லை.. தாங்கிக் கொள்கிறேன். இன்றோடு எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு கட்டலாம். இப்போது அவனது அழுகையை நான் சட்டை செய்யவில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் அனைத்தும் சரியாகி விடும். மந்திரம் போல் மனதில் சொல்லிக் கொண்டே இருந்தேன். 

‘பீப்ப்ப்ப்ப்ப் பீப்ப்ப்ப்ப்ப்ப்…..’ எங்கோ காரின் ஹோன் சத்தம். யாழ்வேந்தனை என் கைகள் சுயமாகவே இறுக பற்றிக் கொண்டன. நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. இப்போது அழுகை வரவில்லை. யாழ்வேந்தனைப் படுக்கையில் கிடத்தி விட்டு நேரே சமையறைக்குச் சென்றேன். விறு விறுவென்று பானையைத் திறந்து, 3 ஆள் சாப்பிடக்கூடிய அளவிற்கு சாப்பிட்டேன். இன்னும் வயிறு நிறையவில்லை. நொறுக்குத் தீனியும் சாப்பிட்டேன். ஒரு வித குரூரமான அமைதி என்னுள். குழந்தை அழுது அழுது தூங்கிவிட்டிருந்தான். 

  யாரோ கதவைத் திறக்கும் சத்தம். எனக்கு சத்தமே இப்போதெல்லாம் பிடிக்கவில்லை. கடுப்புடன் சத்தம் வந்த திசை பார்த்தேன். கணவர் புன்னகையுடன் விசிலடித்துக் கொண்டே உள்ளே வந்தார். “பையன் தூங்கிட்டானா? பால் குடுத்தியா? Pampers மாத்திட்டீயா?” அடுக்கடுக்காய் கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டன. என்னிடம் இருந்த ஒரே வார்த்தை “ஊம்ம்ம்ம்…” மட்டும்தான். அவரும் அதைத்தான் எதிர்ப்பார்த்தவராய், “சரி, எனக்குத் தூக்கம் வருது.. ரொம்ப அசதியா இருக்கு.. நாளைக்கு நிறைய வேலை இருக்கு. ராத்திரில பையனை நல்லா பார்த்துக்கோ… அழுவ விடாத.. அப்பறம் என் தூக்கம் கெட்டுச்சினா நாளைக்கு வேலைக்கு போய் நான் தூங்கி விழனும்…”.

குழந்தையை நான் மட்டுமே தனித்து பெற்றெடுக்கவில்லை. அதற்கு சாத்தியமும் இல்லை. கையில் காசும் இல்லை. குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலையையாவது இருவரும் பகிர்ந்து செய்தால் என்னவாம்? தூக்கம் கெட்டு விடுமாம். நான் தூங்க வேண்டாமா; தூங்கக்கூடாதா. குழந்தையைத் தாய்தான் பார்க்க வேண்டும் என்பது நமது இனத்தில் எழுதப்படாத சட்டம். அதில் என் கணவர் மட்டும் என்ன விதிவிலக்கா?

  எப்பவும் “பையன் பையன்……” மட்டும்தான். அப்போ நான் யார்? குழந்தை பிறந்த பிறகு யாருக்கும் என்னைக் கண் தெரிவதில்லை. யாருக்கும் என்னைப் பற்றி யோசிக்க நேரமுமில்லை விருப்பமுமில்லை. என் கணவர், அப்பா, அம்மா, என்னைச் சுற்றியுள்ளவர்கள் என அனைவருக்குமே இந்தக் குழந்தைதான் ரொம்பவும் முக்கியம். பிறகு நான் எதற்கு? தேவையில்லாமல் வீட்டின் இடத்தை அடைத்துக் கொண்டு.

  கணவரின் குறட்டைச் சத்தம் இருட்டின் அமைதியில் பெரிதாகக் கேட்க, அந்த சத்தம் எரிச்சலை உண்டாகியது. வந்த ஆத்திரத்திற்கு என் கணவர் பரிசாகக் கொடுத்த பெரிய பூச்சாடியைத் தூக்கி அவர் தலையிலேயே போட்டு விட எண்ணினேன். “அடச்சீ.. என்ன இது.. எனக்கு என்னவாயிற்று.. கொலை செய்யும் எண்ணம் வந்து வந்து போகிறது. அவ்வளவு கொடூரமானவளா நான்? நானா இது? இப்போது நான் யார்? அன்பும் பாசமும் கொண்ட மாதுளை எங்கே போனாள்? ஒரு ஈ எறும்புக்குக் கூட தீங்கு நினைக்காத நான், சொந்த மகனையும், தாலி கட்டிய கணவனையும் கொல்ல நினைப்பது ஏன்? சுற்றி நிறைய பேர் இருப்பினும் தனிமையை உணர்வது ஏன்? எப்போதும் சுறுசுறுப்பாய் இருக்கும் நான் எதிலும் நாட்டம் இல்லாமல் போனது ஏன்? அதிகமான கவலை உணர்வு இருந்து கொண்டே இருப்பது ஏன்? ஏன்…ஏன்… ஏன்… இப்படி பல ஏன்?” பதிலில்லை. யோசித்து பார்த்தால் எப்போது என்னைச் சுற்றியுள்ளவர்கள் என்னைப் புறக்கணிக்க ஆரம்பித்தார்களோ, அப்போதே நானும் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கத் தொடங்கினேன். பிரசவத்திற்குப் பிறகு எனக்கு பால் சரியாக சுரக்கவில்லை.. “மார்பக இரத்தநாள வீக்கம்” (Breast Engorgement) என்றார்கள். பிரசவத்திற்கு பிறகு ஆரம்ப நாட்களில், பெண்களிடம் நிலவும் வலி தருகிற மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிற ஒரு நிலைமையே மார்பக இரத்தநாள வீக்கம் என்கிறார்கள். தாய்ப்பால் கொடுக்க இயலவில்லை. வீட்டிலிருப்பவர் முதல் வீட்டிற்கு வருபவர் வரை ஒரே அறிவுரை மழை. குற்றம் வேறு சுமத்துவது. பெற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது வரமாக இருந்தாலும் சிலருக்கு அது கொடுத்து வைப்பதில்லை. அதுவே ஒரு தாயின் மனதில் தீராத குற்ற உணர்ச்சியாக்கி விடுகிறது. இதில் இவர்கள் வேறு. எனக்கும் அதே குற்றவுணர்வுதான் வாட்டி வதைத்தது. இந்த இரண்டு மாதத்தில் என் தாய்மை பயணத்தை யாரும் பாராட்டியதில்லை. நான் என்ன அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் எனத் தெரியாமல் குறை கண்டவர்கள் அதிகம். குழந்தையைக் கொல்லத் தோன்றும் முன் நானே இரண்டு முறை என்னை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்துள்ளேன். தற்கொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பெண் நான். எனக்கே தற்கொலை எண்ணம் வந்துள்ளது என்றால் அதனை என்னவென்று சொல்லத் தெரியவில்லை. 

அன்று நான் ஓட்டி சென்ற காரில் இருந்து குதிக்க முயன்றேன். தோற்றுப் போனேன். இன்று யாழ்வேந்தனை வீசச் சென்ற அதே பால்கனியில் குதிக்கப் போனேன். ஒரு வித பயம். திரும்பி விட்டேன். தற்கொலையைக்கூட என்னால் சரிவரச் செய்ய முடியவில்லை. என் இயலாமையை நினைத்துக் கோபம் அதிகமானது. ச்சீ நான் ஒரு கோழை.

இரவில் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. பயமாக இருந்தது. தொடர்ந்து 2 நாட்களுக்கு இடைவிடாமல் அழுதேன். ஏன் என்று தெரியவில்லை. நான் “பின் மகப்பேற்று இறுக்கம்” (Postpartum Depression – PPD) என்ற மன அழுத்ததில் இருக்கிறேன் என்பதைச் சற்று நிதானமான நேரத்தில் இணையத்தின் வழி தெரிந்து கொண்டேன். குழந்தை பிரசவித்த தாய்மார்கள் 5 தில் 4 பேருக்கு அவர்கள் அறியாமலே இந்த மன இறுக்கம் ஏற்படுகிறது. இது ஒருவகையான சைலண்ட் கில்லரும் கூட என்கிறார்கள். சரியான நேரத்தில் கவனிக்கப்படவில்லையெனில் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். உலக சுகாதார அமைச்சு ஆய்வின் படி தினம் 5 தில் 1 பெண் இந்த மன அழுத்ததால் தற்கொலை செய்து கொள்கிறாள். என் நிலைமையை யாரிடமாவது பகிர வேண்டும். இல்லையென்றால் நிலைமை விபரீதமாகி விடும். அப்படி ஒரு அழுத்ததில் இருந்தேன். 

சட்டென்று ஒரு யோசனை. முகநூலில் பெண்களின் பிரச்சனையைப் பேச ஒரு குழு இருப்பதை எப்போதோ பார்த்ததாய் நினைவு. பைத்தியக்காரி போல் அந்தக் குழுவை முகநூலில் தேடிக் கண்டுபிடித்தேன். குழுவின் ஆலோசகர் ஒருவரைத் தொடர்புக் கொள்ள முயன்றேன். தன்மானம் தடுத்தது. ஒருவித பயம் வேறு. அனைத்து உணர்ச்சிகளையும் தாண்டி கைகள் தானாக தொலைபேசியில் எண்களை அழுத்த தொடங்கியது. “ஹலோ, யாரது?” எதிர்முனையில் என்னைக் காப்பாற்ற போகும் குரல். ஆனால், ஒருவரிடம் போனில் பிரச்சனையைச் சொல்லி புரிய வைப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதிசயம். என் மன அழுத்தத்தின் ஆழத்தைப் புரிந்து கொண்டது அந்தக் குரல். 2 மணி நேர உரையாடலுக்குப் பின் மனம் மிக லேசானது போல் ஓர் உணர்வு. என்னை மீண்டும் பழைய மாதுளையாக உணர்ந்தேன். அதன் பின், என் செயல், எண்ணம், திட்டங்கள் என அனைத்தையும் மாற்றிக் கொண்டேன். எனக்காக வாழக் கற்றுக் கொண்டேன். எது என் வாழ்க்கை, யார் என் உலகம் எனப் புரிந்து கொண்டேன்.

என்னை மாற்ற செயல்களில் ஓரளவிற்கு பரபரப்பாக வைத்துக் கொண்டேன். யாழ்வேந்தன், தோட்டம், ஓவியம், வித வித சமையல் என இருந்தேன். மற்றவற்றை யோசிக்க நேரமின்றி என்னைப் பார்த்துக் கொண்டேன். இதனால் அடிக்கடி நோய்வாய்படவும் செய்தேன். கொலை முயற்சியை விட இது எவ்வளவோ பரவாயில்லை. என் கணவர் இவை அனைத்தையும் வித்தியாசமாகப் பார்த்தார். நான் சிறிதும் சட்டை செய்யவில்லை. 

நான் இன்னும் முழுமையாக குணமாகவில்லைதான். எப்போதேல்லாம் மனம் துவண்டு, கவலைப்படுகிறதோ அப்போதேல்லாம் சில விபரீத எண்ணங்கள் தலை விரிக்கும். உடனே கைகள் தொலைபேசியை தேடும். மீண்டும் “ஹலோ, மாதுளை? என்று ஆரம்பமாகும். 

சமீபமாக குழந்தைகளைக் கொன்று நானும் தற்கொலை செய்துகொண்ட பெண்கள் பற்றிய செய்திகள் அதிகம் பேசப்படுகின்றன. நானும் அதில் ஒருத்தியாய் இருந்திருக்க வேண்டியவள். யோசிக்கவே பயமாக இருக்கிறது.

இங்கு எவருடைய வாழ்க்கையையும் நாம் தீர்மானிக்க வேண்டாமே.. முடிந்தால் தோள் கொடுப்போம். முடியாவிட்டால் வழி விடுவோம். ஏனென்றால் எனக்கு அன்று கேட்ட அந்த “ஹலோ” மற்றவர்களுக்கும் கேட்கும் என்று இங்கு யாரால் உறுதியளிக்க முடியும்?.

******

agipriya2203@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. கதைகள் புனைய என்பதை விட கதைகள் வாயிலாக சமக்கால சவால்களைப் பற்றிய புரிந்துணர்வை மேம்படுத்தவும், அதை எதிர்த்து வெற்றிகொள்ளும் நம்பிக்கைகளை ஊன்றி விதைக்கவும், அத்தியாவசிய அறிவியலை அறிந்துக்கொள்ளவும், வாழ்வின் மீதான பற்றுதலையும் ஏற்படுத்தவும் எத்தனையோ சங்கதிகள் இங்கே வெளிக்கொணரும்படி நம்மைச் சுற்றி உள்ளன என்பதை சாட்சியம் கூறும் ஒரு கூறாக இந்த கதையைப் பார்க்கிறேன்.
    நியூக்ளியர் குடும்பங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் இது போன்றதொரு கதைக்களம் அத்தியாவசியமானது, தவிர்க்க முடியாதது, வரவேற்கத்தக்கது என்றேக் கூறுவேன். நல்ல முயற்சி, வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button