இணைய இதழ் 126தொடர்கள்

ஹொய்சாளக் கலைப்பயணம்; 2 – செந்தில் ஆர் அமுதன்

தொடர் | வாசகசாலை

ஹொய்சாளர்கள்

ஹொய்சாளர்கள் 10ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை தென்கர்நாடகத்தை மையமாகக் கொண்டு ஆட்சிசெய்த அரசகுடி. பல நூற்றாண்டுகள் கழித்து இன்றும் அவர்கள் நினைவு கூறப்படுவதற்குக் காரணம் இந்தியாவின் சிற்ப மற்றும் கட்டடக் கலைகளில் அதுவரையில் இல்லாத ஒரு உச்சத்தை தொட்டவர்கள்  என்பதனால்தான். அவர்கள் காலத்து சிற்பங்களின் நுணுக்கங்களும் பேரழகும் தனித்தன்மை வாய்ந்தவை. அவர்களுக்குப் பிறகு அது வேறு எவருக்கும் கைகூடாத ஒன்றும் கூட. உலகின் தலைச்சிறந்த கலைச்செல்வங்களின் பட்டியலில் ஹொய்சாளர்களின் கலைமரபை தவிர்த்துவிட இயலாது.

இந்தியாவின் பல மத்தியகால அரசகுடிகளுக்கும் உள்ளது போன்ற தமது குடியின் தொடக்ககாலத்தைக் கணக்கிடவே முடியாத அளவுக்கு நீட்டியோ அல்லது அக்குடிக்குள்ள தெய்வீகத் தொடர்பு போன்ற பெருங்கதையாடல்களோ ஏதுமின்றி ஒரு எளிய தொன்மத்திலிருந்து தொடங்குகிறது ஹொய்சாளர்களின் வரலாறு. கர்நாடகத்தில் சமணம் ஓங்கியிருந்த காலகட்டத்தில் மலைநாடு எனக் கூறப்படும் மேற்குத் தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள, ‘சொசேயூர்’ (‘சஷகபுரா’ என்றும் அழைக்கப்பட்டது, இன்று சிக்கமங்களூர் மாவட்டத்தில் ‘அங்காடி’ என்ற பெயரில் அறியப்படுகிறது) என்ற கிராமத்தில், ‘சுதத்தா’ என்னும் சமண முனிவரின் கல்விச்சாலையில் ஒருநாள் புலி ஒன்று  நுழைந்து தாக்கவே அங்கிருந்த, ‘சாள’ என்ற இளைஞனிடம் அதனைத், ‘தாக்கு சாள’ என்ற பொருளில், ‘ஹொய் சாள’ எனக் கன்னடத்தில் கூறுகிறார் ஆசிரியர். அந்த இளைஞனோ அப்புலியைத் தாக்கிக் கொல்கிறான்.  அவனுடைய வீரத்தைக் கண்டு, ”நீ ஒரு நல்ல அரசனாக வருவாய்” என்று அவர் வாழ்த்துகிறார். பின்னர் மெல்ல ஒரு அரசகுடியாக உருவெடுக்கிறார்கள். அவர்கள், ‘ஹொய்சாள’ என்ற பெயரையும் பெறுகின்றனர் (தொடக்க நாட்களில் ‘பொய்சாள’ என்றழைக்கப்பட்டனர், ‘ப’  ‘ஹ’ வாக மாறுவது கன்னடத்தின் இயல்பு. தமிழில் அவர்களை, ‘போசளர்’ என்றனர்). ‘புலியைத் தாக்கும் வீரன்’ அவர்களது குலச்சின்னமானது. பெரும்பாலும் சிற்பங்களில் அது சிங்கம் போன்று காட்டப்படுகிறது. தென்னகத்தில் சிங்கம் இல்லை என்பதாலும் அவர்களுடைய தொன்மத்திலும் அது புலியாகவே கூறப்படுவதாலும் அதனைப் புலியெனவே கொள்ளலாம். இருப்பினும் சிற்பக்கலையில் வெளிப்படும் சிங்கத்தின் கம்பீரத் தோற்றத்திற்காக வேண்டி சிற்பிகள் இம்மாறுதலுக்கான சுதந்திரத்தை எடுத்துக் கொண்டிருக்கலாம்.

இந்தத் தொன்மம் நெடுங்காலமாகவே இருந்து வருவது. குப்தர்களின்  காலத்திலேயே பொ.யு 5ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த முதலாம் குமாரகுப்தனின் பொன்நாணயங்களில் சிங்கத்தைத் தாக்கி நிற்கும் வீரன் சித்தரிக்கப்பட்டுள்ளான். இத்தொன்மம் சங்ககாலத்திலும் இருந்ததாக ஆசிரியர் ஜெயக்குமார் கூறினார். ஆம், வள்ளல் பாரியின் மறைவுக்குப் பிறகு கபிலர் பாரிமகளிரை அழைத்துக்கொண்டு இருங்கோவேள் என்ற மன்னனிடம் அவர்களை ஏற்றுக்கொள்ளுமாறு கூறும் பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. அதில் துவரை எனும் ஊரிலிருந்து ஆண்டுவந்த அந்த அரசகுடியின் 49ஆவது வழித்தோன்றல் இருங்கோவேள் என்றும் அவனை, ‘புலி கடி மாஅல்’ (புலியை கடிந்த, அதாவது தாக்கிய/கொன்ற பெருமைமிக்கவன்) என்றும் கூறுகிறார் கபிலர்.  இக்குறுநில மன்னர்கள் சங்க இலக்கியங்களில் எருமையூர் என்று கூறப்படும் மைசூர் (மகிஷனூர், மகிஷ என்றால் வடமொழியில் எருமை) பகுதியை ஆட்சி செய்தவர்கள் என்று கருதப்படுகிறார்கள். ‘துவரை’ (துவாரகா என்பதன் தமிழ் வடிவம்)’ அந்நாட்டின் தலைநகராக இருந்திருக்கலாம். பின்னாளில் ஹொய்சாளர்களின் தலைநகரம், ‘துவார சமுத்திரம்’ என்றழைக்கப்பட்டதும் ஒப்பு நோக்கத்தக்கது. ஆகவே இத்தொன்மம் வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டே உள்ள ஒன்று, அதுவும் ஹொய்சாளர்களின் பூர்வீகமான தென்மேற்கு கர்நாடகத்திலிருந்து பிரிக்கவும் இயலாதது.

இனி அவர்களின் தொன்மத்திலிருந்து வரலாறுக்கு வருவோம். பொ.யு 10ஆம் நூற்றாண்டின் முற்பகுதி முதல், ‘பொய்சாள மருகா’ ‘முதலாம் நிருப காம’ என ஹொய்சாள ஆட்சியாளர்களின் பெயர்கள் காணக்கிடைக்கின்றன. அவர்கள் மேலைச் சாளுக்கியர்களின் ஆளுகைக்கு உட்பட்டு சொசேயூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த குறுநில மன்னர்களாக இருந்தனர். பிறகு, ‘இரண்டாம் நிருப காம’னின் காலத்தில் (1026-1047) மேலும் வலிமை பெற்றவர்களாக ஆனார்கள். அவரது மகன் ‘வினயாதித்தன்’ தலைநகரை பேலூருக்கு மாற்றினான். வினயாதித்தனின் மகன் ‘எரெயங்கா’ சாளுக்கியர்களின் படைத்தளபதியாக இருந்து பல வெற்றிகளை ஈட்டுகிறான். எரெயங்காவின்  மூத்த மகனான ‘முதலாம் வீர வல்லாளன்’ ஆறு ஆண்டுகளே ஆட்சி செய்தாலும் சாளுக்கியர்களின் துணையின்றி தனியாக சில போர்களில் வென்று ஹொய்சாளர்களின் தன்னாட்சிக்கு வித்திடுகிறான்.

பின்னர் அவனது தம்பியான ‘பிட்டிதேவா (என்னும் விஷ்ணுவர்த்தனன்)’ 1108 ல் அரியணை ஏறுகிறான். இவனே ஹொய்சாள மன்னர்களில் பெரும் புகழ்பெற்றவன். இவன் ஹொய்சாள நாட்டின் எல்லைகளை நான்குபுறமும் விஸ்தரித்து முழுமையான தன்னாட்சி கொண்ட நாடாக மாற்றுகிறான். 1116ல் அப்போதைய தென்னகத்தின் பெரும்பேரரசாக விளங்கிய சோழர்களின் கட்டுப்பாட்டிலிருந்த தலக்காடு என்ற பகுதியில் சோழர்களை வென்று அப்பகுதியை தனது ஆளுகைக்குக்கீழ் கொண்டுவந்து ‘தலக்காடு கொண்டான்’ என்ற பெயரைப் பெறுகிறான். பிறகு நொளம்பவாடியை வென்று ‘நொளம்பவாடி கொண்டான்’ என்ற பெயரையும் பெறுகிறான். கர்நாடகத்தின் பெரும்பான்மையான நிலப்பகுதிகளும் ஆந்திரத்தின் (இன்றைய தெலுங்கானாவின்) சில பகுதிகளும் அவனது ஆட்சிக்குக்கீழ் வந்தன. மேலும் சோழர்களுடனான இரண்டாவது போரில் தமிழகத்தின் வடமேற்குப் பகுதி வரை தனது ஆளுகையைச் செலுத்தினான்.

இவனது ஆட்சி காலத்தில் ஹொய்சாள நாடு நிலப்பரப்பில் மட்டுமல்ல பல தளங்களிலும் உச்சத்தைத் தொடுகிறது. காவிரியாறு அந்தப் பகுதியில் பாய்ந்தாலும் டெல்டா பகுதி போலல்லாமல்  பெருமளவு ஆற்றுப் பாசனம்  பெறாமல்தான் இருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரமும் தக்காண பீடபூமியும் கலந்த நிலப்பரப்பு ஆதலால் அந்த மேட்டு நிலத்தில் இயற்கையான ஆற்று நீர்ப்பாசனம் பெரிதும் அமையவில்லை. ஆனால் ஹொய்சாளர்கள் பெரும் ஏரிகளை வெட்டுவித்து அவற்றையொட்டி பல வேளாண் ஊர்களை உருவாக்கி, ஊர்களின் மையத்தில் ஆலயங்களையும் எழுப்பி பல புதிய வேளாண்பொருளாதார மண்டலங்களை உருவாக்கினார்கள். அவ்வாறு உருவாக்கப்பட்ட ஏரிகளையொட்டிய கோயில்கள் பலவற்றை இன்றும் காணலாம். கர்நாடகத்தில் ‘ஏரி’ எனப்பொருள் தரும் ‘கேரி அல்லது கெரெ’ என  முடியும் ஊர்கள் பல, அவற்றில் பெரும்பாலானவை இவ்வாறு உருவாக்கப்பட்டனவே.   

இன்றும் நாம் அந்தப்பகுதியில் பயணிக்கும்போது அப்பெரும் கட்டுமானங்களின் பயனைக் காணலாம். அந்நிலமெங்கும் பசுமையும், செழிப்பான தோட்டங்களும்  நல்ல விலைப்பயிர்களுமே நிறைந்துள்ளன. சோழர்கள் தஞ்சைப் பகுதியையும் தாண்டி தாம் சென்ற இடங்களிலெல்லாம் உருவாக்கிய ஏரிகளைப் போன்ற பெரும்பணிதான் இது. இருப்பினும் ஒரு வேறுபாடு உண்டு, இன்றும் அங்கு எல்லா ஏரிகளும் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு அதே செழிப்புடன் விளங்குவதைக் காணமுடிகிறது. ஆனால் தமிழகம் முழுவதுமுள்ள சோழர்காலத்து நீர்நிலைகளின் நிலைமை என்னவென்று சொல்ல வேண்டியதில்லை (பெரும் பாடுபட்டு உருவாக்கிய நீர்நிலைகளை கைவிடுவதில்/ மலினமாக்குவதில்தான் நமக்கு எத்தனை ஆனந்தம்!).  கம்பன் கோசல நாட்டின் வளத்தைப் பாடும்போது சோழ நாட்டின் வளமையையே பாடியதாகச் சொல்வார்கள். ஆனால் இன்று அவன் தமிழகத்திலிருந்து  அப்படி பாடமுடியாது. ஒருவேளை இந்த ஹொய்சாளர்களின் மண்ணிற்கு போனால் இப்பொழுதும் அவன் பாடலாம், 

”செந்நெல் வயல்கள் அல்லன கரும்பின் சோலைகள்

தெங்கின் தோப்புகள் அல்லன கமுகின் தோட்டங்களே”  என்று.

மேலும் இவனுடைய காலத்தில் வணிகமும் இலக்கியமும்  பெருமளவு அங்கு தழைத்தன. பல விதங்களிலும் நம் ராஜராஜசோழனோடு ஒப்பிடத்தக்கவன் விஷ்ணுவர்தன். இந்த மாபெரும் அடிக்கட்டுமானத்தின் மேலே நின்றுதான் இன்று உலகப்புகழ் பெற்று விளங்கும் பல கலைச்செல்வங்களும் எழுப்பப்பட்டன.

விஷ்ணுவர்த்தனின் ஆட்சிக்காலத்தில் மட்டும் ஏறக்குறைய 100 ஆலயங்கள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகின்றது. முதன்முதலாக சோழர்களுக்கு எதிரான தலக்காடு வெற்றியின் சின்னமாக ஐந்து விஷ்ணு ஆலயங்களை எழுப்புகிறான் அவன். அதிலொன்றுதான் புகழ்மிக்க பேலூர் சென்னகேசவ ஆலயம். ஹொய்சாளர்கள் மரபார்ந்து சமண சமயத்தைச் சார்ந்தவர்கள். ராமானுஜரின் ஹொய்சாள நாட்டு வருகையும்  அவரது தாக்கமும் பிட்டிதேவனை வைணவனாக மதம் மாற்றி விஷ்ணுவர்தனனாகவும் ஆக்குகிறது. இருப்பினும் அவனுடைய பட்டத்தரசியும் நடனத்திலும் இசையிலும் மிகத்தேர்ந்த பேரழகியுமான சாந்தலா தேவி உட்பட பலரும் சமண சமயத்திலேயே நீடித்தனர். பின்னாளில் சமணமத வழக்கப்படி வடக்கிருந்து (சல்லேகனை) உயிர் துறந்தவர் சாந்தலா தேவி. அவர் பல சமண பசதிகளைக் கட்டுவித்ததுடன் விஷ்ணு ஆலயங்களையும் எழுப்பியுள்ளார்.  விஷ்ணுவர்த்தனன் வைணவத்துக்கு மாறினாலும் அங்கு சைவமும் தங்குதடையின்றி வளர்ந்தது. பேலூர் பேராலயம் கேசவனுக்கு எனில் ஹளேபீடு பேராலயமோ சிவனுக்குரியது. அதுவும் இரட்டைக் கருவறைகளில் இரு சிவலிங்கங்கள் திகழ. அவற்றில் ஒன்று வைணவனான ‌ஹொய்சாளன் விஷ்ணுவர்த்தனின் பெயரால் ‘ஹொய்சலேஸ்வரா’ என்றும் மற்றொன்று சமணராகிய அவனது மனைவி சாந்தலா தேவியின் பெயரால் ‘சாந்தலேஸ்வரா’ என்றும் பெயர்கள் பெற்று இன்றும் அருள்பாலித்து வருகிறார் மகாதேவர்.   

விஷ்ணுவர்தனது சமகாலத்தில் தொட்டருகே இருந்த சோழ நாட்டிலோ  சைவமும் வைணவமும் கடுமையாக பூசலிட்டுக் கொண்டிருந்தன. அவை இரண்டும் சேர்ந்து சமணத்தின்மீதும் பௌத்ததின்மீதும் கடும் சொற்போர்களை நிகழ்த்திக் கொண்டிருந்த காலம் அது. அதற்கான காரணம் அன்று தமிழகத்தில் ‘பக்தி இயக்கம்’ உச்சத்தில் இருந்ததும், அப்பூசலுக்கான தோற்றுவாய் அவ்வியக்கத்தின் முளையிலேயே இருப்பதையும் காணலாம். பக்தி இயக்கம் தமிழகத்தில் தோன்றி இந்தியா முழுக்க பரவி அது உருவாக்கிய சாதக அம்சங்கள் பல இருப்பினும், உருகி கசிந்து நெகிழும் பக்தியும் அபாரமான மொழியழகும் கொண்ட தொடக்ககால பக்தி இலக்கியங்களிலேயேகூட எங்கோ ஒரு துளி கசப்பு (பிற மதங்களின் மீதான எதிர்ப்பு / காழ்ப்பு என்றும்கூட சொல்லலாம்) மெல்லிய இழையாக ஓடிக் கொண்டிருப்பதைக் காணலாம். சைவப் பாடல்களில் குறிப்பாக சம்பந்தரின் பாடல்களைப் பற்றி குறிப்பிடத் தேவையில்லை. தொண்டரடிப்பொடியாழ்வார் போன்றோரின் வைணவப் பாடல்களிலும் அதனைக் காணலாம்.  ஆம், மதத்தில் அதனைத் தவிர்க்க இயலாது என்றே தோன்றுகிறது. அந்த மெல்லிய இழைதான் ஆன்மீகத்தை மதமாக மாற்றும் முக்கியக் கூறு அல்லவா?. பற்று அற்றுப்போகச் சொல்லும் மதமே ஆயினும் ஆள்பவர்கள் தரப்பில் எவரேனும் அதனை சற்றே இறுகப் பற்றினாலும் இன்றைய உலகில் என்ன நிகழுமோ அதுவே 12 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலும் நடந்திருக்க கூடும்.    

சமகாலத்தைய சோழ மன்னனுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ விஷ்ணுவர்த்தனன் எடுத்தியம்பத் தலைப்பட்டதுதான் என்ன?. தனது தேசத்திலிருந்து நாடு கடக்க வேண்டிவந்த ஒரு ஆச்சாரியனை அண்டை நாட்டு அரசனொருவன் வரவேற்று வந்தவர்களுக்கு வேண்டியன ஆவண செய்து, அந்த ஆச்சாரியனின் மொழியை ஏற்று அந்த மதத்திற்குத் தானும் மாறி பல பேராலயங்களை எழுப்புகிறான். ஆனால் அவை எதிர்த்தரப்பாக அல்ல, மறுக்காழ்ப்பின் மொழியிலுமல்ல, அனைத்தையும் உள்ளடக்கிய சமயபொறையின் உன்னத வடிவங்களாக ஆக்குகிறான் விஷ்ணுவர்தனன். ஒரே மன்னன் சைவ மற்றும் வைணவ ஆலயங்களை மட்டுமல்லாமல் பௌத்த விகாரைகளையும் கூட உருவாக்கிய வரலாறு தமிழகத்திலும் உண்டு. ஆனால் அவ்வாலயங்கள் சைவ ஆலயங்களாகவோ வைணவ ஆலயங்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ மட்டுமே இருந்தன. ஹொய்சாள நாட்டிலோ ஆலயங்கள் ஒவ்வொன்றிலும் சைவ வைணவ மற்றும் சாக்த மதங்களின் தெய்வங்கள் ஏறக்குறைய சரிவிகிதத்தில் கலந்தே காணப்படுகின்றன, பல இடங்களில் புத்தரை கூடக் காணலாம். கருவறை விக்கிரகத்தைக் காணும்வரை இது இம்மதத்தைச் சார்ந்த கோவில் என எளிதில் கூறி விட முடியாத அளவுக்கு சமயங்களின் சங்கமமாக இவ்வாலயங்கள் விளங்குகின்றன. மேலும் கணவன் வேறு மதத்திற்கு மாறினாலும் அவனது மனைவிகூட அவனுடன் சேர்ந்து மதம் மாறவேண்டிய அவசியமில்லை என்பது இந்த நவீன யுகத்திலும்கூட காண அரிதான ஒன்று!.  

அக்காலத்தில் தமிழகத்தில் நடந்தேறிய இச்சமயப் பூசலின் ஒரு நல்விளைவுதானோ ராமானுஜரின் ஹொய்சாள நாட்டு வருகையும் அதன் பயனாக எழுந்த இவ்வழகிய ஆலயங்களும்?. இல்லை என்றே தோன்றுகிறது. ஒருவேளை ராமானுஜர் அங்கு செல்லாமல் இருந்திருந்தால் இன்றைய உலகப் பாரம்பரியச் சின்னங்களின் இக்கருவறைகளில் விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பதிலாக பார்சுவநாதரும் ஆதிநாதரும் மகாவீரரும் வீற்றிருந்திருப்பர், அவ்வளவே வேறுபாடு!. மானுடத்தின் கலைத்தாகம் செல்லும் திசை என்றும் ஒன்றே, மதங்கள்தான் இடையிடையே அதில் வந்து செல்கின்றன. கலைத்தாகம் வளமான மண் போல என்றுமுள்ளது, அது மதங்கள் என்னும் செடிகள் வளர உறுதுணையாகிறது. செடிகள் மறைந்தாலும் மண் என்றுமிருக்கும், மானுடம் என்னும் பூமி உள்ளவரை!.

விஷ்ணுவர்த்தனனுக்குப் பிறகு அவனது மகன் ‘முதலாம் நரசிம்மன்’ இரு பதிற்றாண்டுகள் ஆட்சி செய்கிறான். அவனுக்குப்பின் ஹொய்சாளர்களின் அடுத்த நாயகனான ‘இரண்டாம் வீர வல்லாளன்’ (முதலாம் நரசிம்மனின் மகன்) அரியணை ஏறுகிறான். ஏறக்குறைய அரை நூற்றாண்டுக் காலம் (1173 -1220) ஆண்ட இவனது காலகட்டத்தில் ஹொய்சாள நாடு தன் எல்லைகளை எல்லாத் திசைகளிலும் மேலும் விரிவாக்கிக் கொண்டது. ஹொய்சாளர்களின் நீண்ட காலத் தலைமைப்பீடமாக விளங்கிய மேலைச் சாளுக்கியர்கள் உட்பட பல அரசுகளையும் வென்று கர்நாடகத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் தனது ஆளுகைக்குக்கீழ் கொண்டு வந்தான். சோழர்களுடனான அவனது உறவு தொடக்க காலத்தில் பூசல்கள் கொண்டிருப்பினும் பின்னர் அது வேறு வடிவம் கொள்கிறது. சோழமகாதேவி என்ற சோழ இளவரசியை மணக்கிறான், பின்னர் தனது மகளை மூன்றாம் குலோத்துங்கனுக்கு மணம்முடிக்கவும் செய்கிறான். 13ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் எழுச்சிக்குப் பிறகு சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சோழப் பேரரசு பாண்டியனை எதிர்கொள்வதற்காக  வீர வல்லாளனின் உதவியை நாடுகிறது. வீரவல்லாளன் தனது மகன் இரண்டாம் வீர நரசிம்மனை அனுப்பி பாண்டியர்களிடமிருந்து சோழமுடியை மீட்டு மீண்டும் சோழர்கள் ஆட்சியை தக்க வைக்க உதவுகிறான். இவனது காலகட்டத்தில் ஹொய்சாளர்களின் கட்டுப்பாடு திருச்சி ஸ்ரீரங்கம் வரை நீள்கிறது. இவனது காலத்தில் கலைகளும் இலக்கியங்களும் வணிகமும்  மென்மேலும் வளர்ந்ததன. தனது பாட்டனார் விஷ்ணுவர்தனின் காலகட்டத்தில் தொடங்கப்பட்ட பேலூர் மற்றும் துவாரசமுத்திர (ஹளேபீடு) ஆலயங்கள் கூட இவனது காலகட்டத்தில்தான் கட்டி முடிக்கப்பட்டன.

விஷ்ணுவர்தனனை நம் ராஜராஜனோடு ஒப்பிட்டால் இரண்டாம் வீரவல்லாளனை ஒரு விதத்தில் ராஜேந்திர சோழனோடு ஒப்பிடலாம். ராஜேந்திர சோழனைப் போலவே இவனும் மேலும் பெரிய நிலப்பரப்பை ஆட்சி செய்து தன் பாட்டனாரை விட மேலும் பல சாதனைகளைச் செய்திருப்பினும் மக்களால் அதிகம் கொண்டாடப்படுவது அவனல்ல, ராஜராஜனைப் போல விஷ்ணுவர்த்தனனே. வரலாற்றில் இதுவும் மீண்டும் மீண்டும் நிகழும் ஒன்றுதான். மக்களுக்கு உச்சமல்ல முக்கியமானது என்று தோன்றுகிறது (அதற்குப் பிறகு வீழ்ச்சிதான் என்பதாலோ?). ஆனால் ஒரு பேரரசை உச்சத்தை நோக்கி எழச்செய்யும் பெரும்கனவும் தொலைநோக்குப் பார்வையும் செயல்திறனும் கொண்ட முன்னோடி அரசனையே மக்கள் வானளவு கொண்டாடுகிறார்கள். அவர்களின் தோளின் மீது நின்று எய்தப்படும் அடுத்தகட்ட வெற்றி என்பது மேலும் பெரிதெனினும் சாமானியனுக்கு அது இரண்டாம் பட்சம்தான் போலும்.

ஏறக்குறைய மேலும் ஒரு நூற்றாண்டுக்காலம் ஹொய்சாளர்கள் நிலையான ஆட்சியை வழங்கி கலைகளை வளர்த்தெடுத்து வந்தனர். அடுத்தாக ஆட்சிக்கு வந்த இரண்டாம் வீர நரசிம்மனின் காலத்தில் வடமேற்கு தமிழகத்தில் அவர்களின் இருப்பு மேலும் வலுவடைந்தது. திருச்சி ஸ்ரீரங்கம் அருகில் உள்ள ‘கண்ணனூர் குப்பம்’ என்ற ஊரை ஹொய்சாளர்களின் இரண்டாம் தலைநகராக மாற்றுகிறான் வீர நரசிம்மன். அவனது மகன் ‘வீர சோமேஸ்வரன்’ ஹொய்சாள நாட்டை இரண்டு பகுதிகளாகப் பிரித்து தனது ஒரு மகன் ராமநாதனுடன் கண்ணனூரிலேயே இருந்து விடுகிறான். அவனது மற்றொரு மகன் ‘மூன்றாம் நரசிம்மன்’ துவார சமுத்திரத்தில் இருந்தவாறு ஆட்சி புரிகிறான். இவனது காலத்தில்தான் மற்றொரு புகழ்பெற்ற கோவிலான ‘சோமநாதபுர கேசவ ஆலயம்’ கட்டப்படுகிறது. இன்றும் பெரும் சேதாரங்கள் ஏதுமின்றி ஹொய்சாளக் கலையின் முழுமையழகை சிதைவின்றிக் காண எஞ்சியிருக்கும் ஒரே பேராலயம் இது. 

மூன்றாம் நரசிம்மனின் மகன் ‘மூன்றாம் வீர வல்லாளன்’தான் ஹொய்சாள அரசகுடியின் கடைசிப் பேரரசன் (1252-1343). ஹொய்சாள நாட்டின் இரு பிரிவுகளையும் ஒன்றாக்கி துவார சமுத்திரத்திலிருந்து மீண்டும் ஒற்றைக் குடையின்கீழ் ஆட்சி புரிந்தான். 14 ஆம் நூற்றாண்டில் தொடக்கம் வரை வழக்கம்போல பல போர்களை சந்திக்க நேரிட்டாலும் ஒரு நிலையான அரசாகவே அது விளங்கி வந்தது. 1311-இல் தென்னகத்தின் ஒட்டுமொத்தத் தலையெழுத்தையும் மாற்றியமைத்த டெல்லி சுல்தானியப் படைத்தளபதி மாலிக் கஃபூரின் படையெடுப்பு நடக்கும் வரை. முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ‘தமிழகக் கோபுரக்கலை மரபு’ என்ற நூலில் ‘இடம் பெயர்ந்து எழுந்த கோபுரங்கள்’ என்ற பகுதியில் ‘மாலிக் கஃபூர் மற்றும் குஸ்ரூகானின்’ படையெடுப்புகளைப் பற்றியும் சூறையாடல்கள் பற்றியும் டெல்லி  சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் அரசவைக் கவிஞர்களான ‘அமீர்குஸ்ரு மற்றும் பர்னி’ ஆகியோரின் பாடல் பதிவுகளை தரவாக குறிப்பிட்டுச் செல்கிறார். 1311 பிப்ரவரியில் மாலிக் கபூர் தேவகிரியில் உள்ள அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த சௌன யாதவர்களின் உதவியைப் பெற்று ஹொய்சாள நாட்டு துவார சமுத்திரத்திற்கு வந்து அதனை சூறையாடுகிறான். அதன்பின்னர் தமிழகம் நோக்கி வந்து ஸ்ரீரங்கம் மற்றும் மதுரை உட்பட பல இடங்களையும் ஆலயங்களையும் சூறையாடுகிறான்.

மீண்டும் 1327ல் டெல்லி சுல்தானியப் படை துவார சமுத்திரத்தை தாக்குகிறது. மதுரையிலும் பாண்டியர்களை வென்று சுல்தானியர்கள் ஆட்சி அமைக்கிறார்கள். அதன் பிறகு ஒட்டுமொத்த தென்னகத்திலும் சுல்தானியர்களின் இந்த சூறையாடலுக்கு எதிராகப் போராட எஞ்சியிருந்த ஒரே தென்னக அரசன் மூன்றாம் வீர வல்லாளன் மட்டுமே. தமிழக மண்ணில் நின்றே அவன் அந்தப் போர்களை புரிகிறான். குடவாயில் அவர்கள் தனது நூலில் ‘தமிழகக் கோயில்களை எல்லாம் காக்க முனைந்த போசள மன்னன் வீர வல்லாளன் சுல்தானியர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டான்’ என்று குறிப்பிடுகிறார். ஆம், 1343 ல் அவர்களின் இரண்டாம் தலைநகரான திருச்சியை அடுத்த கண்ணனூரில் மதுரை சுல்தானியர்களுக்கு எதிரான போரில் ஏறக்குறைய வெல்லும் அளவிற்கு சென்று விதிவசத்தால் இறுதியில் வீரவல்லாளன் கொல்லப்படுகிறான். பின்னர் 1346ல் அவனது மகனான நான்காம் வீரவல்லாளன்/விருபாக்ஷ வல்லாளனும் சுல்தானியர்களால் கொல்லப்படுவதோடு ஹொய்சாளர்களின் அரசாட்சி முடிவுக்கு வருகிறது.   

வரலாற்றில் எந்த ஒரு பேரரசும் ஒருநாள் வீழ்ந்ததுதான் தீரும். ஆனால் ஒரு பெரும் நிலப்பரப்பில் ஒரு பேரரசு வீழும்போது மற்றொன்று உச்சத்தில் இருக்கும் வேறொன்று வளர்ந்து வந்துகொண்டிருக்கும். அரசகுடிகளும் ஆட்சியும் மாறினாலும் அவை அந்த மண்ணின் கலைமரபை பெரும்பாலும் பேணவே செய்திருக்கின்றன. மண்ணில் பிறந்த எல்லா மனிதனும் ஒருநாள் இறப்பது உறுதிதான் எனினும், ஒட்டுமொத்தமாக ஒரு சமநிலையை இயற்கை பேணுவதைப் போல, வளர்சிதைமாற்றம் போல அரசகுடிகளின் மாற்றமும் மெல்ல நிகழும் ஒன்று. ஆனால் அந்நியப் படையெடுப்புகளில் ஒரு நிலப்பரப்பின் எல்லாப் பேரரசுகளும் குறுகிய காலத்தில் காணாமலாவதென்பது ஆழிப்பேரலையால் உருவாகும் பேரழிவு போல. இத்தகைய புறத்தாக்குதல்களால் ஏற்படும் பேரிழப்புகள் ஆளும்வர்க்கத்திற்கு மட்டுமல்ல, அந்த நிலப்பரப்பின் விழுமியங்களாக நின்றிருந்த கலைச்செல்வங்களுக்கும் தான். 

ஹொய்சாளர்களின் இழப்போ கலையுலகிற்கு மேலும் ஒரு படி கனமானது. பாண்டியர்கள் உட்பட மற்ற தென்னகத்தின் அரசுகள் வீழ்ந்தபோது அவர்களின் கட்டிடக்கலையை அதே நூற்றாண்டில் தோன்றிய விஜயநகரப் பேரரசு ஒருவாறு மீட்டெடுத்ததோடு மட்டுமல்லாமல் அதை அடுத்த நிலைக்கு இட்டும் சென்றது. இத்தனைப் பேரழிவிற்குப் பின்னும் அவ்வாறு நிகழ்ந்தது தென்னகத்தின் நல்லூழ்தான். இன்றும்கூட பொருளாதார பலம் இருப்பின் அத்தகைய கற்றளிகளை ஓரளவுக்கு கட்டியெழுப்பிவிட முடியும். ஆனால் ஹொய்சாளர்களின் கட்டிடக்கலையோ பின்னர் எவருக்குமே கைகூடவில்லை, அதே கர்நாடக மண்ணில் ஹொய்சாளர்களின் தொடர்ச்சி எனவே கூறத்தக்க வகையில் ஒரு சில பதிற்றாண்டுகளுக்குள் தோன்றிய விஜயநகர அரசுக்கும் கூட. விஜயநகர அரசின் கட்டுமானங்கள் சில ஹொய்சாள ஆலயங்களில் பிற்காலச் சேர்க்கைகளாக காணக்கிடைக்கின்றன. ஆனால் அவை எண்ணையும் தண்ணீரும் போல ஒன்றாமல் தனித்து நிற்பவைதான். ஆம், ஹொய்சாளர்களின் மறைவோடு கலைத்தாய் தனது அருமைப் புதல்வருள் ஒருவனை அவனது வாரிசுகள் ஏதுமின்றி என்றைக்குமாக இழந்துவிட்டாள்!

தொடரும்

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button