கட்டுரைகள்
Trending

ஷோபாசக்தி யின் ‘இச்சா’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம்

-ம.நர்மி

உயிருள்ள ஆலாப்பறவையொன்று உங்களுடன் பேசத்தொடங்கும், ஷோபா சக்தியின் இச்சா நாவலை வாசித்து முடித்தவுடன். அதற்கு என்ன பதிலை சொல்லப்போகிறீர்கள் என்ற அச்சத்துடன்தான் இந்த நாவலைக் கையாளவேண்டும்.

கெப்டன் ஆலா என்கிற வெள்ளிப்பாவை கண்டிச்சிறையில் இருந்தபோது அவள் அறுநூறுக்கு மேற்பட்ட பக்கங்களை எழுதியிருந்தாள். “உனக்கு என்ன வேண்டும்?” என்று சிறையதிகாரி கேட்டபோது, “இங்கு இருக்கும் ஒவ்வொரு நாளும் எனக்கு ஒவ்வொரு பக்கங்கள் எழுதுவதற்காக வேண்டும்…” என்று மட்டுமே அவள் கேட்டிருக்கின்றாள். அந்தப் பக்கங்களில் எல்லாம் அவள் என்ன நினைத்து புரியமுடியாத சங்கேதங்களை முன்னுக்குப் பின் முரணாக எழுதினாள், இந்த உலகத்திற்கு அல்லது யாரோ ஒரு சிலருக்கு அவள் என்ன சொல்ல முன்வந்தாள் என்பதுதான் இந்த நாவல். எல்லாமே ஊகங்கள், என்றாலும் அந்த உயிருள்ள ஆலாப்பறவையையும், இந்தச் சிறிய வயதில் அந்தப் பறவை அனுபவித்த துயரமான மரணமும் உண்மைதானே.

நாகங்களை வழிபடுகின்ற நாகப் பரம்பரையில் வந்த பதுமக்குடியில் இலுப்பங்கேனியில் பிறந்த வெள்ளிப்பாவையினதும், அவர்களுடைய பதுமக்குடியினதும் வாழ்வியல் எப்படியெல்லாம் இருந்தது, அவர்கள் வாழ்வதையும் மரணிப்பதையும் அங்கிருந்த எது தீர்மானித்தது, அழிந்து வருகிற பதுமக்குடிகளின் வாழ்வியல் என்ன, கலாச்சாரம் என்ன, நம்பிக்கை என்ன, ஜே.வி.பி. கலவரம், சேகுவரா கலவரம், புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையிலான கலவரங்களும் யுத்தங்களும் பதுமக்குடியைச் சேர்ந்த கேப்டன் ஆலாவின் குடும்பத்தை எப்படியெல்லாம் சிதறடிக்கச்செய்தன. முதன்முதலில் லெப்டினன்ட் கேனல் மஞ்சரி அக்கா அவளைப் பார்த்தபோது அவளுக்கு என்ன நடந்து கொண்டிருந்தது, இயக்கம், போராட்டம், உரிமை, சுயநாடு கோரிக்கை ஆகியவற்றை நோக்கி அவளை எது வழிநடத்தியது, எப்போதும் தன்னைத்தானே வெடித்து சாகடிக்ககூடிய கரும்புலிகள் பகுதிக்கு அவள் ஏன் போய்ச்சேர்ந்தாள், எங்கு ஒபரேசன் இரட்டைச்சிறகுகள் நடவடிக்கை தோல்வியடைந்தது, முந்நூறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஆலாவின் ஆன்மா, கண்டிச்சிறையில் உடல் வலுவிழந்து, சுகயீனப்பட்டு சாகும்வரை என்ன சொல்ல முயற்சித்தது, அவளுக்கு பப்பாவின் மீதிருந்த காதல் எத்தகையது, இப்படி ஏகப்பட்ட கேள்விகளுடன் தொடங்கி முடிகிற நாவல் இது.

இதில் வருகிற வரிகள், கேட்கப்படும் சில கேள்விகள் நிட்சயமாக வாசிக்கிற ஒவ்வொருவரையும் அசைத்துப்போடும். அப்படி ஆலா பேசுவதாக வருகிற வரிகள் என்னை ரொம்பவே பாதித்திருந்தன.

“அன்று காக்கிலாலும், உறாப்பிட்டிய காவலாளிகளும் என்னைப் பிடித்துச் சென்றபோது என்னைக் காப்பாற்ற பதுமர்குடியில் எவராலும் முடியாமல் போனது. ஒட்டுமொத்த ஊருமே என்னைக் கைவிட்டிருந்தது. பதுமரின் தெய்வங்களும் , காவற்தேவதைகளும் கையாலாகாத பிணங்கள். பைசாசங்களுக்கோ இரும்பு நாணம். நான் காணப்பிணமாக போகாமல் ஒரு சின்னஞ்சிறிய துப்பாக்கி மட்டுமே என்னைக் காப்பாற்றியது. என்னை ஒரு கொழிக்குஞ்சாக நினைத்து சிறுகச் சிறுக தின்று கொண்டிருந்த நன்னித்தம்பி அப்பாச்சியிடமிருந்து எனக்கு விடுதலை பெற்றுக்கொடுத்ததும், ஒரு சிறிய துப்பாக்கியே. என்னை அவமானத்திலிருந்தும், ஆபத்திலிருந்தும் காப்பாற்ற ஒரு துப்பாக்கியால் மட்டுமே முடிந்திருந்தது.”

என அவள் அந்தத் துப்பாக்கியை, நேசத்தோடு அணைத்துக்கொண்டது, தனது உடலையே ஒரு துப்பாக்கியாக்கி வெடித்துக்கொள்ள ஒப்புக்கொடுத்து கரும்புலியில் சேர்ந்தது எல்லாம், அது யாராலும் தரமுடியாத சுயகௌரவத்தை, தன்னம்பிக்கையை, பாதுகாப்பு உணர்வை, தந்திருந்தது என்பது மட்டுமே காரணமாக இருந்தது. ஆனால் பிடிப்பட்ட அரசியல் கைதிகளுக்கு இலங்கை முழுவதும் மறைமுகமாக இருந்த சித்திரவதை முகாம்களில் நடந்த சித்திரவதைகள் அவர்களை உயிருடன் இருக்கும்போதே பிரேதமாக்கியிருந்தது. எதற்காக அவர்களுக்கு இந்த சபிக்கப்பட்ட வாழ்வு , என எத்தனையோ வடுக்களை இந்த நாவல் பேசுகிறது.

இதில் வருகின்ற இந்த வரிகள் உங்கள் துயிலை கலைத்துப் போடக் கூடியவை.

“இலங்கையை கடவுள் படைத்தார். இந்தச் சிறையை பிரிட்டிஷ்காரர்கள் படைத்தார்கள். இதுவரையான இலங்கை வரலாற்றிலேயே அதிக வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றிருக்கும் பெண் நான்தான். விடுதலையாகி வெளியே வரும்போது எனக்கு முந்நூற்றி இருபத்தியிரண்டு வயதாகியிருக்கும். சுக்கிராச்சாரியாரின் சாபத்தால் முதுமையடைந்த யயாதிக்கு அவளின் மகன் புரு தனது இளமையை தானமாக கொடுத்ததுபோல நான் விடுதலையாகி வரும்போது உங்களின் இளமையை எனக்கு தானமாக தரப்போவது உங்களில் எவர்? ஒரேயொரு நாள் இளமை மட்டுமே எனக்கு தேவை. இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் என்ற அச்சம் எனக்கு இருக்கிறது.”

எங்கு நடந்தது எப்போது மனதை தாக்குகிறது எனப் பாருங்கள், 2013.6.16 இல் கண்டி ரஜவீதிய சிறைக்குள் கடும்நோய்வாய்ப்பட்டு கப்டன் ஆலா இறந்தபோதும், அவள் துயர்மிகு, சித்திரவதைக்கால அணுகுமுறை நோய்மையின் வாதை நாட்களாக அனுபவித்தபோதும், நான் கண்டியில் பேராதனையில் படித்துக்கொண்டிருந்தேன். கேப்டன் ஆலா என்பவர் யார் என்றோ, அவர் இங்குதான் இருக்கிறார் என்றோ பெரும்பாலும் எங்களில் யாருக்குமே தெரியாது . கேப்டன் ஆலா மரணித்து சரியாக ஒருமாதத்தின் பின் கண்டி சிறைச்சாலை மூடப்பட்டு, அங்குள்ள கைதிகள் பல்லேகலைக்கு இடம்மாற்றப்பட்டார்கள். இந்தக் கால இடைப்பகுதியில் அந்தச் சிறை மக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டிருந்தது. அந்த சிறைக்கூடத்திற்குள் போனபோது ஒவ்வொரு சிறைக்கூடாரமும் பல சங்கேத குறியீடுகளைக் கொண்டிருந்ததை நான் உணர்ந்தேன். சிறிதுநேரம் கூட நிற்கமுடியாத சுவாசத்தை திணறவைக்கக் கூடிய அந்தக் கட்டிடம் எனக்கு எதிர்மறையான அதிர்வுகளை, உணர்வைத் தருவதாக அந்த நாள் முழுவதும் தோன்றிக்கொண்டே இருந்தது. விடுதியில் சென்று எவ்வளவு குளித்தாலும் அந்தச் சிறை கொடுத்த ஏதோ ஒரு உணர்வை என் மனதில் இருந்தும் உடலில் இருந்தும் அகற்றமுடியாது இருந்தது. பிறகு இந்த நாவலில் வருகிற கண்டி ராஜாவின் கதை, அவர் மந்திரியின் குழந்தைகளைக் கொலை செய்ததாக கூறப்படும் இடம் முழுக்க இங்குதான் இருக்கிறது. அடிக்கடி நான் போகிற தலதாமாளிகை வளாகம் அது. இப்படி இந்த நாவல் முழுவதும் வருகின்ற கதைகள், சம்பவங்கள் வலிமிகுந்தவை.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button