சிறுகதைகள்

இளைஞன் – கா.சிவா

சிறுகதை | வாசகசாலை

வண்டியை வீட்டிற்கு முன் நிறுத்தி இறங்கினான் சங்கர். ஐந்து கிலோமீட்டர் வந்ததில் வண்டியில் இன்னும் அதிர்வு இருந்தது. அதைவிட அதிகமாக சங்கரின் மனதினுள் பெரும் அனல் கனன்று கொண்டிருந்தது. வெடிக்கத் தயாராகும் எரிமலையினுள்ளே  கொதிநிலையிலுள்ள குழம்பு போல மனதினுள், ‘ஏன், ஏன்’ என்று எழுந்த கேள்வி  அவனை உருகவைத்தது.

வீட்டினுள்ளே சென்று உடை மாற்றிக் கொண்டு கை, கால் கழுவி திருநீறு பூசிக் கொண்டவுடன் கையில் கொடுக்கப்பட்ட காப்பியை வலது கையில் வாங்கிக் கொண்டு வேறெதற்கும் மனதையும் பார்வையையும் திருப்பாமல்  இடது கையில் அலைபேசியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தான்.

வெளியே நின்றிருந்த வேப்ப மரத்தினடியில் தனித்திருந்த நாற்காலியில் அமர்ந்தான். காப்பியை அருந்தியபோது இலகுவானது போலத் தோன்றிய மனதில் மீண்டும் அந்த ஆவேசம் உருவானது.

’எதற்காக…? என்னவாயிருக்கும்?’

மறுபடி முயற்சிக்கலாம் என வெண்ணிலா எண்ணை அழைப்பிற்காக அழுத்தினான். முழுவதும் ஒலித்தபின் அழைப்பு ஏற்கப்படாமல் அடங்கியது. ஒன்றுமே நடக்காமல் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என வெறுப்பு எழுந்தது. காலையிலிருந்து நடந்ததை மீண்டும் ஒருமுறை மனதில் மெதுவாக ஓட்டிப்பார்க்க ஆரம்பித்தான்.

எப்போதும் போலவே காலை எட்டரை மணிக்கே சங்கர் பள்ளிக்கு சென்றுவிட்டான். உள்ளே வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இட்டவுடன் அலுவலர் அறையில் இருந்த தனது கணக்குப் புத்தகத்தையும்  குறிப்பேட்டையும் எடுத்துக் கொண்டு அலுவலக அறைக்கு வந்தான். அலுவலகத்தில் எழுத்தராக இருந்த ரமேஷ் இவனது அலைவரிசையில் இருந்ததால்  அவனோடு பேசிக்கொண்டு இருந்தான். மற்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்.

அரசு உதவி பெறும்,  அரங்கசாமி நாயுடு உயர்நிலைப் பள்ளியில் ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு கணித ஆசிரியராக இவன் பணி புரிந்தான். இங்கு பணிக்குச் சேர்ந்து ஐந்து ஆண்டுகளாகிறது. மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிச் சிரித்தபடி வந்து கொண்டிருந்தார்கள்.   ஆசிரியர்கள் வந்து கையொப்பமிட்ட பின் உள்ளே சென்றார்கள். இவன் முறுவலோடு அமர்ந்திருந்தான். எல்லோரும் வந்துவிட்டார்கள், அவளைத் தவிர. தினமும்தான் பார்க்கிறான். ஆனால் ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் ஏன்தான் இதயம் இப்படி படபடவென அடித்துக் கொள்கிறதென இவனுக்கு ஆச்சர்யமாக இருக்கும். வாசலையே பார்த்தான். மணியடிக்கப் போகிறார்களே… வகுப்பிற்கு செல்லவேண்டுமே… இவனுக்கு பதற்றம் ஏற்பட்டது. மெல்லிய அசைவு ஏற்படுவதாகத் தோன்றியதும் மனம் ஒரே கணத்தில் உச்சகட்ட உற்சாகத்திற்குச் சென்றது. விழிகளுக்கு தெரிவதற்கு முன் மனம் எப்படித்தான் அறிகிறதோ..! வெண்பூக்கள் மலர்ந்த இளநீல வண்ணப் புடவையில் தோளில் இளஞ்சிவப்பு நிற பையை மாட்டியபடி வெண்ணிலா வந்தாள். இவன் விழிகளை சந்தித்தவுடனேயே எழுந்த இளங்கீற்றுப் புன்னகையுடன் கடந்து சென்றாள். அப்போது ரமேஷ் மணியை அடித்தான். காத்திருந்த காரியம் முடிந்ததால் சங்கர் எட்டாம் வகுப்பை நோக்கி நடந்தான்.

நேற்று நடத்தியதின் தொடர்ச்சியை பிள்ளைகளிடம் சங்கர் விளக்கிக் கொண்டிருந்தபோது  அவ்வகுப்பறையைக் கடந்து வெண்ணிலா சென்றாள். ஒரு சிறு ஒளியசைவு இவன் மனதில் ஒரு உற்சாக மலர்வை ஏற்படுத்தும். அது ஏனென்று இவன் யோசிக்கத் தொடங்கும் கணத்தில் அவள் தெரிவாள். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இவனுக்கு இதன் சாத்தியம் புரியாத ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

வகுப்பு முடிந்து ஓய்வறையில் இருந்தபோதுதான் வாட்ஸப் செயலியைத் திறந்தான். வெண்ணிலாவிடமிருந்து ஒரு தகவல் இவனுக்குப் பகிரப்பட்டு அழிக்கப்பட்டிருந்தது. சாதாரணமாக அவள் எதையும் பகிர்வதில்லை. இவன் மட்டும் தினமும் “காலை வணக்கம்” அனுப்புவான். பிறரைப் போல பிறரிடமிருந்து வருவதை அனுப்புவதில்லை. அவளுக்கு அனுப்புவதற்கென்று இவனே உருவாக்கியதை அனுப்புவான். பறவைகள், பூக்கள் மற்றும் குறும்புகள் செய்யும் விலங்குகளின் படங்களை ஏராளமாக தரவிறக்கம் செய்திருத்தான். அதில்  எழுதுவதற்கான ஒரு செயலியின் உதவியுடன் தினம் ஒரு படத்தின் மீது காலை வணக்கத்தை வெவ்வேறு சொற்களில் எழுதி அனுப்புவான். வாசிப்பதற்காக காலை ஐந்து மணிக்கு விழிப்பவன், முதல் வேலையாக இதைத்தான் செய்வான். பூ, பறவை மற்றும் விலங்கு மாறி மாறி வருமாறு பார்த்துக் கொள்வான். ஒருமுறை அனுப்பியதை மறுமுறை அனுப்புவதில்லை என்பதோடு வேறு யாருக்கும் அனுப்பியதுமில்லை. இவளுக்கு மட்டுமே பிரத்யேகமானது.

வெண்ணிலா என்ன அனுப்பி அழித்திருப்பாள் என இவனுக்குள் கேள்வி எழ ஆரம்பித்தது. அந்தக் கேள்வியோடு   பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் கவனித்தான் வாட்ஸப் செயலியின் மேற்புறம் தெரியும் கடைசியாக பார்த்த நேரம் தெரியவில்லை. லேசான பதற்றம் ஏற்பட்டது. அவள் பக்கத்திலிருந்து வெளியே வந்து ரமேஷின் பக்கத்திற்குச் சென்றான். ரமேஷ் கடைசியாகப் பார்த்த நேரம் தெரிந்தது. ஏனென்று தெரியாத ஒரு நடுக்கம் இவனிடம் தோன்றியது. இவ்வாறு நேரம் காட்டாதவாறு உள்ளதென்றால்  அவள், இவனை தகவல் அனுப்பாதவாறு தடை செய்திருக்கவேண்டும். அப்படி தேவையில்லாத எதை அனுப்பி அவளை சங்கடத்திற்கு உள்ளாக்கினோம் எனக் குமைய ஆரம்பித்தது மனம். காலை வணக்கம் அனுப்புவது அவ்வளவு பெரிய தொந்தரவா? சொல்லியிருந்தால் அனுப்பாமல் இருக்கப் போகிறான். இதற்கு ஏன் தடை செய்ய வேண்டும். வாழ்வில் மிகப் பெரிய அவமதிப்பு நிகழ்ந்ததைப் போல மனம் துடித்தது. நண்பகலில் வானம் இருண்டதைப்போல இவன் மனம் திகைத்து செயலற்றிருந்தது.

இவள் தடை செய்தால் என்ன… அதனால் என்ன இழப்பு… என்று ஒரு புறம் தோன்றினாலும் மனம் பதைபதைத்ததை இவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. அடுத்தடுத்த வகுப்புகளில் இவனால் பாடம் எடுக்க முடியவில்லை. வகுப்பிற்குள் சென்று அமர்ந்து கொண்டு, மாணவர்களிடம்,  சூத்திரங்களை சத்தமெழாமல் மனதிற்குள்ளாக மனப்பாடம் செய்யச் சொன்னான். இவன் சில சமயங்களில் கோபமாக இருக்கும்போது இவ்வாறு செய்வான். அப்போது பிள்ளைகள் சிறிது நேரத்திலேயே சத்தமாக பேச ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், இன்று இவன் முகம் குழப்பமாகவும் சற்று வேதனையுடனும் இருந்ததை கவனித்து சத்தமெழாமலேயே படித்தார்கள் அல்லது சும்மா இருந்தார்கள்.

இடைவேளைகளின் போதும் மதியவுணவருந்தும் போதும்  வெண்ணிலாவுடன் ஜென்ஸி டீச்சர் இருந்தார். இவன் எதிர்ப்படும்போது அவளின் முகம்  ஒருவித இறுக்கத்திற்கு மாறுவதாக இவனுக்குத் தோன்றியது. அவளை நெருங்கிச் சென்று கேட்பதற்கு இவனுக்கு வாய்ப்பு கிடைக்கவேயில்லை. அவள் வாய்ப்புக் கொடுக்கவில்லை என இவனுக்குத் தோன்றியது.  தேனீக் கூட்டத்தின் ரீங்காரம் போல உடலை விதிர்க்கச் செய்யும் ஒலி இவன் செவிக்குள் இடைவிடாது ஒலிப்பது போலிருந்தது. தினமும் நான்கரை மணிக்கு கடைசி மணி அடித்தவுடன் இவன் விழிகளை நோக்கிப் புன்னகைத்தபடி செல்பவள்,

இன்று ஜென்ஸி டீச்சருடன் இவனிடம் சொல்லிக் கொள்ளாமலேயே கிளம்பிச் சென்றாள்.

இதில் தன்னுடைய தவறென்று எதுவுமே சங்கருக்கு தட்டுப்படவில்லை. காலையில் இயல்பாக இருந்தவளுக்கு இடையில் என்னவாயிற்று? என்ன நிகழ்ந்திருக்கக் கூடும்? அவளைப் பற்றி யாருடனும் இவன் விவாதிப்பதில்லை. எனவே, யாரும் இவனைப் பற்றி தவறாக எதையும் கூறியிருக்க மாட்டார்கள். தன் மனம் ஏன் இப்படித் துடிக்கிறது? ஒரு செயலியிலிருந்து அவளுக்கு தகவல் எதையும் அனுப்பமுடியாது அவ்வளவுதானே… இதற்கு இத்தனை வேதனை தோன்றவேண்டிய அவசியமில்லை என உள்ளுக்குள் ஒரு குரல் எழுந்தது. அதை சங்கர் கவனிக்காமல் தவிர்த்து வேறு பக்கம் மனதைத் திருப்பியபோது  அவளை முதல்முறை பார்த்தது நினைவுக்கு வந்தது.

சங்கர் பணிக்குச் சேர்ந்த அன்று தலைமையாசிரியர் கூறியதால் ரமேஷ் இவனை அழைத்துச் சென்று அப்பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆசிரியர்களிடம் அறிமுகப்படுத்தினான். ஒவ்வொருவருடைய பெயரையும் அவர்கள் கற்பிக்கும் பாடத்தினையும் கூறியபோது இவன் வணக்கம் சொல்லியபடி சென்றான். கடைசியாக, அடர் பிங்க் வண்ண சுடிதார் அணிந்து வெண்ணிற சால் அணிந்திருந்தவளிடம் சென்றவன், “இவங்க வெண்ணிலா, ஒன்பது பத்தாம் வகுப்புகளுக்கு கணிதம் எடுக்குறாங்க. தஞ்சாவூர்காரங்க” என்றபின் இவனை அவளுக்கு அறிமுகப்படுத்தினான். எல்லோரிடமும் கூறியது போலவே அவளிடமும் வணக்கம் கூறிவிட்டு திரும்பி நடந்தான். அப்போது சங்கர் தன் மனம் உற்சாக மிகுதியில் துள்ளிக்கொண்டிருந்ததை உணர்ந்தான். எதைக் கண்டு இப்படி மனம் குதூகலிக்கிறது என்று யோசித்தபோது வெண்ணிலாவின் நிறை புன்னகை மனதில் தோன்றியது. பலாச் சுளை போன்ற நாசியும், ஆலந்தளிர் போன்ற செவியும் அதில் தொங்கிய வெண்கற்கள் பதித்த ஜிமிக்கியும் துல்லியமாகத் தெரிந்தது. சற்று மேலேறிய நெற்றியின் இருபுறம் லேசாக காற்றிலாடிக் கொண்டிருந்த குறுங் குழல்களும் மனதில் பதிந்திருந்தன. இத்தனை பேரைப் பார்த்தும் இவள் முகம் மட்டும் மனதில் பதிந்ததெப்படி என ஆச்சர்யமாக இருந்தது. மீண்டும் அம்முகத்தை மனதில் பார்த்தபோதுதான் இம்முகம் புதிய முகமல்ல, காலாதிகாலமாய் தன் மனதிலேயே உள்ள முகம்தான் என இவனுக்குப் புரிந்தது. இதேபோல, இதற்குமுன் ஏற்கனவே மூன்று பேரின் முகம் மனதிலிருந்த முகத்தையே ஒத்திருந்தது.

ஊரில் சங்கரின் அத்தை மகள் தங்கமணியை தனக்கெனப் பிறந்தவள் என்றே எண்ணியிருந்தான். சுருட்டை முடியுடன் மிளிரும் கருப்பு நிறத்தில் இருந்த தங்கமணி கண்கள் ஒளிரப் புன்னகைப்பாள். ஆனால், சில வருடங்களில் ஏதோ ஒரு தருணத்தில்  அவள் இவன் மனதிலிருப்பவள் இல்லையென இவனுக்குத் தோன்றிவிட்டது. அதேபோல கல்லூரியில் பயிலும்போது உடன் பயின்ற தேனம்மையை தன்னவள் என்று எண்ணியபடி சில மாதங்கள் திரிந்தான். ஏதோவொரு கோணத்தில் அவளைக் கண்டபோது அவளில்லை என மனம் அரற்ற அந்த எண்ணம் விலகியது. அடுத்து, தூரத்து  உறவினர் ஒருவரின் இல்லத்  திருமணத்திற்கு  சென்றபோது பட்டாம்பூச்சியென மெல்லசைவுகளுடன்  கண்ணில் பட்ட சுந்தரியை அப்படி எண்ணினான். இரண்டாம்முறையாக  தொலைபேசியில் அவளிடம் உரையாடியபோது, அவள் கூறிய ஒரு சொல்லில் அவளும் இல்லையெனத் தோன்றிவிட்டது. இப்போது இவள்… எத்தனை நாட்களுக்கென்று பார்க்கலாம் என எண்ணிக் கொண்டான்.

அறிமுகப்படுத்தல் மட்டும்தான் அன்று. அது முடிந்தவுடனேயே வீட்டிற்குத் திரும்பிவிட்டான். மறுநாளிலிருந்து பணிக்குச் செல்ல வேண்டுமென்பதால் வீட்டில் இவனால் மட்டுமே பார்க்கப்பட வேண்டிய வேலைகளை முடிக்க முனைந்தான். அதெல்லாம் முடிய இரவு பத்தாகிவிட்டது. காலை ஐந்து மணிக்கு அலாரம் அடித்து  விழி திறக்கும் முன்பே மனதில் ஒரு முகம் தோன்றியது. யார் முகம் அது என சிறிது நேரம் புரியவில்லை. மனதை உற்சாகமாக மலரச் செய்யும் புன்னகையுடனிருக்கும் இம் முகத்தை எங்கே கண்டோம் என திகைத்தபடியே கண்விழித்தான். அம்முகம் முன்தினம் பள்ளியில் பார்த்த வெண்ணிலாவின் முகம்தான் எனத் தெளிய சில நிமிடங்கள் ஆனது.  இதற்கு முன் இவனுக்கானவள் என எண்ணிய மூன்று பேரின் முகங்கள் இப்படி விழித்தெழும்போதே மனதை மலர்த்தியதில்லை. அன்று முதல் இத்தனை வருடங்களாக விழிக்கும்போது அவள் முகத்தைத்தான் காண்கிறான்.  வெண்ணிலாவிடம் ஏதோ சிறப்பு இருக்கிறது என தோன்றியபோதும் அவளுக்கு அடிமைப்பட்டதுபோல இருக்கக் கூடாதென வேறு எதையாவது காண எத்தனையோ முறை முயன்றிருக்கிறான். ஆனால் அவளின் புன்னகையை தடுக்கவோ தவிர்க்கவோ முடியவில்லை. உவப்பாக, உற்சாகமாக நன்றாகத்தானே உள்ளது, ஏன் தடுக்கவேண்டும் வந்துவிட்டு போகட்டுமே என்று விட்டுவிட்டான்.

நினைவிலிருந்து மீண்ட சங்கரின் மனக் கொந்தளிப்பு அடங்கவேயில்லை. அவளிடம் நான் எதிர்பார்த்ததென்ன… சிறு அன்பையும் மென்புன்னகையையும் மட்டுமே… இதை அளிப்பதில்  என்ன இடர்  அல்லது என்ன தீங்கு விளைந்துவிடும்? இன்று காலைவரை சுமுகமாகச் சென்றதே… இடையில் நிகழ்ந்ததென்ன… இவன் மனதின் கொதிப்பு உயர்ந்துகொண்டேயிருந்தது. “மற்றவரிடம் பேசுவதுபோல இவளை ஒருபோதும் கேலி செய்ததில்லை. கோபத்தையோ வெறுப்பையோ காட்டியதில்லை. அவளுக்கு அன்பையும் புன்னகையையும் மட்டுமே அளித்துவந்தேன். அதையே எதிர்பார்த்தேன். அதில் பேராசை எதுவும் இல்லையே. பிடிக்கவில்லை, எல்லை மீறுகிறது என எண்ணியிருந்தால் ஒரு விழியசைவில் சுட்டியிருந்தால் போதுமே.. ஒதுங்கிக் கொண்டிருப்பேனே.. முச்சந்தியில் நிற்கவைத்து,  காலில் அணிந்ததைக் கொண்டு முகத்தில் அடித்ததுபோல நடந்து கொண்டாளே” என மனம் குமுறியது. கொதிப்பைக் கட்டுப்படுத்த முடியாதபோது நேரில் சென்று அவளைக் காண்பதென முடிவு செய்தான்.

வெண்ணிலா, இன்று தன்  ஊருக்குச் செல்வதாக ஜென்ஸியிடம் கூறியது நினைவுக்கு வந்தது. இன்னுமொரு முறை தொலைபேசியில் அழைத்தான். அழைப்பு ஏற்கப்படாமல் அசட்டையாக கைவிடப்பட்டதும், செல்வதென்ற முடிவை உறுதி செய்து வேகமாக எழுந்தான்.

****

தஞ்சை பெரிய கோவிலுக்கு எதிரே நீண்டிருந்த சாலை வழியாகச் சென்று, கிழக்கு ராஜ வீதியினுள் சங்கர் நுழைந்தான். அப்போது, கதிரவனின் முதல் கதிர் எழுந்து, அவ்வீதியின் வலது பக்கம் நிறுத்தப்பட்டிருந்த தேரின் உச்சியை ஒளிர வைத்தது. வெண்ணிலா, முன்பு பேச்சுவாக்கில்  கூறியிருந்த அடையாளங்களை நினைவில் கொண்டு நடந்தான். முகப்பின் இருபுறமும் யானை வைக்கப்பட்டிருந்த வீட்டின் முன் நின்றான். “இளம்பரிதி இல்லம்” என்ற பெயர் பலகையைக் கண்டு உறுதி செய்தபின், தாழ்ப்பாள் இடாத கதவைத் தள்ளியபடி  உள்நுழைந்தான். சுற்றுச் சுவருக்கும் வீட்டிற்கும் இடைப்பட்ட இடத்தில் இருபுறமும் தொட்டியில்  செம்பருத்தியையும் ரோஜாவையும் வைத்திருந்தார்கள். அவற்றில் சில பூக்கள் மலர்ந்திருந்தன. வீட்டின் முன்புறம் அமைத்திருந்த திண்ணையில் மெலிந்த வலிய தேகத்துடன் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவர் வெண்ணிலாவின் தந்தையாக இருக்கலாம் என்று எண்ணிய சங்கர் கைகளைக் கூப்பி வணக்கம் சொன்னான்.

எழ முயன்றவரை வேண்டாம் அமர்ந்திருங்கள் என கையால் சைகை செய்தபடி, அவரின் முகத்தில் தோன்றிய வினாவிற்கு விடையளிக்கும் விதமாக, “நான் சென்னையிலேர்ந்து வர்றேன். வெண்ணிலா கூட வேல பாக்குறேன். வெண்ணிலா இங்க வந்திருக்காங்களா?” என தன் பதற்றத்தையும் குழப்பத்தையும் வெளிப்படுத்தாமல் கேட்டான்.

கதவு திறந்து இரண்டு ஆண்கள் வெளியே வந்தனர். அவர்களின் முகங்களில் குழப்பம் அப்பட்டமாய் தெரிந்தது. குறைவான உயரத்தில், பெரிய மீசையுடன் இருத்தவர் அண்ணன் இளமாறனாகவும், உயரமாக சற்று மெலிந்த தேகத்துடன் இருந்தவன் தம்பி இளஞ்சேரலாகவும்  இருக்கக்கூடும் என நினைத்தான் சங்கர். குடும்பத்தில் மூன்று பேருக்கும் இள என தொடங்கும் வகையில் இளமாறன், இளையநிலா மற்றும் இளஞ்சேரல் எனப் பெயர் வைக்கப்பட்டிருப்பதாக வெண்ணிலா சொல்லியிருந்தாள். இளையநிலாவைத்தான் வெண்ணிலா என சங்கர் மட்டும் அழைத்துக் கொண்டிருந்தான். அதை பெரிய விசயமாக அவள் குடும்பத்தினர் அப்போது  கருதவில்லை.

அவர்கள் அப்பாவிடம் கேட்ட வினாவிற்கு, “இப்பத்தான் அரைமணி நேரத்துக்கு முன்னாடி வந்தா. வந்தவுடனே அறைக்குள்ள போயி கதவ மூடிக்கிட்டா. எதுவுமே சொல்லல. அவ குடும்பத்துல ஏதும் பிரச்சனையான்னு ஒன்னும் புரியாம ஒக்காந்திருக்கோம்” என அண்ணன் கூறினார்.

“நேத்து ஸ்கூல்ல ரொம்ப வருத்தமா இருந்த மாதிரி தோனுச்சு. அப்ப எதுவும் கேக்கமுடியல. ஊருக்குப் போறேன்னாங்க. நானும் எங்க ஊருக்குப் போறேன். போற வழியில பாத்துட்டுப் போயிடலாம்னு வந்தேன்” என்றான்.

“நாங்க கதவத் தட்டிப் பாத்தோம். தொறக்கவேயில்ல.  ஏதாவது சொன்னாத்தானே என்ன பண்ணலாம்னு பாக்கலாம்” அவர் குரலில் லேசாக விம்மல் தோன்றியது.

“சரி, நான் பேசிப் பாக்குறேன்” என்று உள்ளே நுழைந்தவனை அவர்கள் தடுக்க முயற்சிக்காமல் அவனுக்கு முன்னே சென்று மூடப்பட்டிருந்த அறையைக் காட்டினர். வேறு அறைகளில்   எழுந்த மெல்லிய பேச்சரவத்தினால் அங்கிருந்த  பெண்களின் இருப்பை சங்கர் உணர்ந்தான்.

கதவின் அருகில் சென்று கதவை பலமாகத் தட்டி, “வெண்ணிலா… நான் சங்கர் வந்திருக்கேன். கதவைத் திற” என உரக்கக் கூறினான். திறக்காததால் மீண்டும் தட்டி அதேபோலக் கூறினான். உள்ளே காலடிச் சத்தம் கேட்டது. எல்லோரும் ஆவலுடன் கதவை நோக்கினார்கள். பித்தளைத்  தாழ்பாள் விலகியது உறுத்தாத ஒலியாக சன்னமாகக் கேட்டது. இரட்டைக் கதவு மெல்ல முணகியபடி பிரிந்து திறந்தது. வெண்ணிலாவின் முகத்தைப் பார்க்கும் பேராவலுடன் சங்கர் நிமிர்ந்தான்.

******

“அப்பா… அப்பா…” என்ற குரல் செவிக்குள் ஒலித்தது. அதே கணம் கை  மெல்ல உலுக்கப்படுவதை உணர்ந்து நிமிர்ந்தார் சங்கர். எதிரே கேலிப்புன்னகையுடன் பாரதி நின்றாள்.

“என்னப்பா பண்றீங்க… ஒக்காந்துகிட்டே தூங்குறீங்களா?” என்றவளை சில கணங்கள் கழித்தே  தன் மகள் எனத் தெளிந்தார். சட்டென சுற்றிலும் பார்வையை சுழற்றிப் பார்த்தார். இங்கேதான் இருக்கிறேனா என்று அவர்  மனதில் சற்று ஆசுவாசம் ஏற்பட்டது. வேம்பிலிருந்து வந்த இளங்காற்று மனதின் வெம்மையை சற்று தணித்தது.

“ஒன்னுமில்லம்மா.. சும்மா   கண்ண மூடி யோசிச்சுட்டு இருந்தேன்” என்றபடி வீட்டை நோக்கிப் பார்த்தார். கதவைத் திறந்து,  சங்கரின் மனைவி வந்துகொண்டிருந்தார்.

“என்னப்பா ஆச்சு… ஸ்கூல்ல ஏதாவது பிரச்சனையா.. வர்றப்பவே மொகம் ஒரே கடுகடுன்னு இருந்துச்சு”  தும்பைப் பூவைப் போன்ற சிறு பற்கள் வெளியே தெரிய புன்னகைத்தபடி கேட்டார் மனைவி.

“அடுத்தவங்க பாக்காத வேலைக்கு ஹெச்எம் என்னைய திட்னாருத்தா… அதான் ஒரே கடுப்பா இருந்துச்சு. இப்ப எல்லாம் சரியாயிடுச்சு” என்று மனைவியிடம் கூறியபடி மகளின் தோளில் கைவைத்து மெல்ல அழுத்தியபடி, வீட்டிற்குள் செல்வதற்கு எழுந்தார் சங்கர். உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்ட சிறு மகவென தந்தை சில கணங்கள் விழித்ததை மனதில் ஓட்டிப் பார்த்தவளின் முகத்தில் குறும்புப் புன்னகை இன்னும் நீடித்திருந்தது.

தன்னுள் எழுந்து தவித்துக் கொந்தளித்துக் கொண்டிருந்த இளைஞன் தன் மார்பளவிற்கு வளர்ந்த மகளைப் பார்த்தவுடன் உள்சென்று ஒடுங்கிக் கொண்டதை எண்ணி தனக்குள் அவர்  புன்னகைத்துக் கொண்டதில், இது அவ்வப்போது நடக்கும் நிகழ்வுதான் என்பதைப் போலவும், நாளை அதிகாலை தான் விழிக்கும்போது தெளிந்து, புத்துணர்ச்சியுடன் அவன் எழுவான் என்று உணர்ந்ததைப் போலவும்  தோன்றியது.

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button