மனித உடலைப் போல மேற்கு கிழக்கான சாலையின் குறுக்கே கைகளைப் போல வடக்கு தெற்காகச் செல்லும் சாலையில் வலப்பக்க தோள்பட்டையில் பாரம் சுமப்பதைப்போல வம்பளம் ஆத்தியடி சுவாமி கோவில் அமைந்திருந்தது. கோவில் வளாகத்தில் உள்ள ஒரு இடத்தில் மேற்பகுதி மட்டும் மண்ணில் புதையுண்ட ஒரு கூழாங்கல்லைப் போல வெளியே தெரிந்து கொண்டிருந்தது இளவட்டக்கல்.
சுமார் ஒரு ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டமான அப்போது இளைஞர்கள் பொங்கல் திருநாளையொட்டி நடக்க இருந்த இளவட்டக்கல் தூக்கும் பந்தயத்துக்காகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் கல்லைத் தூக்க முயன்று கொண்டிருந்தார்கள். சிலர் முழு அளவிற்கு வெகு சிரமப்பட்டுத் தூக்குவதும் சிலர் பாதியளவுத் தூக்குவதும் சிலர் அசைக்க முடியாமலும் இருந்தனர்.
பயிற்சி ஆரம்பித்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் இளைஞர்கள் தூக்குகின்ற முறையைக் குடி தண்ணீர் கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க வரும் போதெல்லாம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு வந்தாள் கல்யாணி. சில சமயம் வீட்டில் இருக்கக்கூடிய அண்டா, குண்டா, குடம், தவலைப் பானைகள், சோற்றுப் பானைகள் என அனைத்திலும் தண்ணீர் நிரம்பி இருந்தாலும்கூட இளவட்டக்கல்லைத் தூக்குவதைப் பார்ப்பதற்கென்றே ஏதாவது ஒரு பாத்திரத்து நீரைக் காலி செய்துவிட்டு தண்ணீர் எடுப்பதற்கு வருவாள்.
அன்று இளைஞர் ஒருவர் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டு வந்து அமர்ந்து, “ பொண்ணுங்கள கவரணுங்கறதுக்காக நாம கல்ல தூக்கறோம்ல. இதே போல பொண்ணுங்க, தூக்குனா என்னல நடக்கும்?” என்று கேட்டார்.
உடனே அங்கே கூடியிருந்த ஒவ்வொருத்தரும் அவர்களது எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்த துவங்கினர்.
“தூக்குற எவளுக்கும் கல்யாணம் நடக்காதுல.” என்றான் ஒருவன்.
“ஏம்ல அப்படி சொல்ற?“ என்றான் மற்றொருவன்.
“ஆம்பளங்கிறவன் ஒரு பாறையப் போல இருக்கணும்ல பொண்ணுங்கிறவ பூவா இருக்கணும்ல. பூவ, நாமதாம்ல கசக்கணும். அவ நம்மள கசக்குறதப்போல இருந்தா, எவனாது கட்டிப்பானால?” என்றான் முதலாமவன்.
“நடக்குறதப் பேச மாட்டியளால.” என்றான் முன்றாமவன்.
“ஏம்ல நடக்காது?”
“எதுவும் நடக்காதுன்னு சொல்ல வரலல. என்ன நடக்கும்னு சொல்றேன், நல்ல கேட்டுக்கங்கல. ஒரு வேள எவளுக்காவது வீரம் வந்து இந்த கல்ல பூமியில இருந்து ஒரு இம்மி தூக்கினாப் போதும் சாணிப் பிதுங்கிடும். அதுதாம்ல நடக்கும்.” என்றதுமே அங்கே ஒரு மிகப்பெரிய சிரிப்பலையே தோன்றி அடங்கியது.
இவ்வாறான, ஆணாதிக்கத் தனமான வார்த்தைகள் குடிதண்ணீர் கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த கல்யாணியைக் கொஞ்சம் அல்ல, ரொம்பவே சீண்டிப் பார்த்தது. இருந்தாலும், “பேசுனா பேசிட்டு போறானுங்க.” என்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு கிணற்றுக்குள் வாளியைத் தூக்கிப் போட்டுவிட்டு கப்பியில் நீரை இழுக்க முயன்றாள். ஏனோ, அந்த வாளியை இழுப்பதற்கான உடல் பலம் அவளிடம் இல்லாததைப் போல உணர்ந்தாள். வாளி மிகவும் கனமாகத் தெரிந்தது. கல்யாணியின் எண்ணம் முழுக்கவே, அந்த இளைஞர்கள் பேசிய வார்த்தைகளே நிறைந்திருந்தது. நின்று எதையோ யோசித்தவள், தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த வாளியை அப்படியே நடுக்கிணற்றில் விட்டுவிட்டு இளவட்டக்கல் தூக்கிக் கொண்டிருந்த ஊர் மந்தையை நோக்கி நடந்தாள். இளைஞர்கள் ஆக்கிரமித்திருந்த மந்தைக்குள் நுழைந்ததுமே. அவளுக்குள் எதோ ஒரு புத்துணர்வு வந்தது போல இருந்தது.
அதே புத்துணர்ச்சியோடு அப்பொழுது கல்லைத் தூக்கிக் கொண்டிருந்த இளைஞனைப் பார்த்து, “நவுருல” என்று ஆவேசமாகச் சொன்னாள். அந்த இளைஞனும் மறு பேச்சின்றி சட்டென விலகி நின்று கல்யாணியை ஏற இறங்கப் பார்த்தான். அவள் எதையும் கண்டு கொள்வதாக இல்லை. அதே நேரம் சிறிதும் தாமதிக்காது அவளது பாவாடையை சிறிதளவு தூக்கி இடுப்பில் செருகினாள். கூட்டத்தில் ஒருவன் இறுதியாகப் பேசியது ஒருவனுக்கு ஞாபகத்துக்கு வரவே, அவன் மூக்கைப் பிடித்துக்கொண்டு பார்த்தான். அதே வேகத்தில் குனிந்து கல்லைக் கட்டி அணைத்து வெகு சுலபமாக ஒரு பயில்வான் பஞ்சு மூட்டையைத் தூக்குவதைப் போல தூக்கித் தோளுக்கு தோள் மாற்றினாள். அப்படியே பின்புறமாக வீசி எறிந்துவிட்டு இளைஞர்களைச் சிறிதேனும் கண்டுகொள்ளாமல் இடுப்பில் செருகி இருந்த முந்தானையை வெடுக்கென்று இழுத்து விட்டுட்டு உடலில் எந்தவிதமான அயற்சியும் இல்லாது, அந்த இடத்தை மிகவும் சர்வசாதாரணமாக கடந்து சென்றாள். கல்யாணி, அங்கிருந்து அவள் எடுத்து வைத்து சென்ற ஒவ்வொரு எட்டின் ஓசையும் அங்கிருந்த காளையரின் காதுகளில் இடியோசையைப் போல கேட்டது. கல்யாணி இளவட்ட கல்லைத் தூக்கி வீசிய முறையைப் பார்த்த இளைஞர்கள் செய்வதறியாது திகைத்து போய் நின்றனர். கல்லைத் தூக்குவதற்கு பயிற்சியளித்துக் கொண்டிருந்த பயிற்சியாளர் உறைந்து போய் விட்டார் என்றுதான் சொல்லணும். அவர், தன் வாழ்நாளில் அதுவரை கண்டிராத அற்புதம் அது. கல்யாணியின் தந்தை துரைசாமி உட்பட ஊரார் அனைவரின் காதுகளுக்கும் விஷயம் சென்றது. செய்தியறிந்து அனைவரும் கலங்கிப் போய் விட்டார்கள். துரைசாமிக்கு உள்ளூர தனது இரத்தத்தின் வீரியம் குறித்த பெருமை இருந்தாலும், அதன் விளைவு இனிமேல ‘ஆம்பளைங்க மரியாதையைக் கெடுக்க கூடிய இந்த கல் ஊருக்கு வேண்டாம்.’ என்று அந்த இளவட்டக் கல்லை தூக்கிச்சென்று ஆத்தியடி சாமி கோவிலில் கொண்டு போய் புதைத்துவிட்டு வந்தார். அன்று முதல் அந்த கல் கோயிலுக்குள்ளேயேதான் மண்ணில் புதையுண்டு கிடக்கிறது. ஊரில் எத்தனையோ கோவில்கள் இருந்தபோதும் குறிப்பாக ஆத்தியடி சுவாமி கோவிலில் கொண்டு சென்று அவர் இளவட்டக்கல்லை மறைத்து வைப்பதற்கான காரணமாக, செவிவழிச் செய்தி ஒன்றும் ஊரில் உலா வந்து கொண்டிருக்கிறது.
அது வெள்ளைக்காரன் நம்மை ஆண்டு கொண்டிருந்த சமயம். களவு மேற்கொண்டதற்காக முத்தையாத் தேவர் என்பவரைக் கைது செய்ய வந்தது போலீஸ். அந்த நேரத்தில் முத்தையாவின் மனைவி கைக்குழந்தையை அவனது கையில் கொடுத்துவிட்டு கம்மாக்கரைக்கு காலைக் கடனுக்குச் சென்றிருந்தாள். போலீஸ் தன்னை கைது செய்ய வரும் தகவல் அறிந்த முத்தையா ஒளிந்து கொள்ள வேண்டி அவசரத்தில் கையில் வைத்திருந்த கைக்குழந்தையோடு ஆத்தியடி சுவாமி கோவிலுக்குள் சென்று மறைந்தார். காவல்துறை அதிகாரி, முத்தையா, ஆத்தியடி சுவாமி கோவிலுக்குள் நுழைவதைப் பார்த்துவிட்டு அவரும் கோயிலுக்குள் நுழைந்து தேடினார். எவ்வளவு தேடியும் முத்தையாவைக் காணவில்லை. அவர் கையில் வைத்திருந்த குழந்தையின் அழுகுரல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. ஆனால், அந்த அதிகாரியால் அந்த சிறிய கோவிலுக்குள் முத்தையாவையும் குழந்தையையும் கண்டு பிடிக்க இயலவில்லை. பயம் வந்த வெள்ளைக்கார அதிகாரி சுவாமியை வணங்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அதனால்தான் இளவட்டக்கல்லைப் பெண்களின் கண்ணில் காட்டாமல் மறைத்து வைக்கச் சரியான இடம் ஆத்தியடி சுவாமி கோவில்தான் என்று நினைத்து அங்கே கொண்டு போயி மறைத்து வைத்துவிட்டு வந்தார். துரைசாமிக்கு கல்யாணியோடு சேர்த்து நான்கு பெண்கள். எல்லோருக்கும் மூத்தவள் கல்யாணி. ‘துரைசாமி பொம்பள உருவத்துல ஒரு ஆம்பள புள்ளைய பெத்து வச்சிருக்காம்ல.’ என்று ஊரில் பேச ஆரம்பித்தார்கள். இந்தப் பேச்சு பட்டித்தொட்டியெங்கும் பரவியது. இதனால், கல்யாணிக்கு வரன் வருவது தள்ளிச் சென்றது. ஊரார் கல்யாணியை அரவாணி என்றும், அவளை திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் இருக்காதென்றும் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களைப் போல பேச ஆரம்பித்து விட்டார்கள்.
துரைசாமித் தேவரின் தோட்டத்தில் வேளாண் வேலைகளை கவனித்து வந்தவன் பக்கத்து ஊரைச் சேர்ந்த சிவனணைந்த பெருமாள் நாடாரின் மகன் ஐயாத்துரை. அவனுக்கு பனையேற்றம் கை வரவில்லை. சிவனைந்த பெருமாள் நாடார் பனையில் கால் வைப்பதும் தெரியாது கீழே இறங்குவதும் தெரியாது. இதனால, அவருக்கு ‘மின்னல் நாடார்’ என்ற பட்டப் பெயரும் உண்டு. இவர் பனைமரக் காட்டிற்குள் பனையேற்ற ஆயுதத்தோட நுழைந்தாரென்றால் ‘பனைமரங்கள் தானாக வளைந்து கொடுக்கும்’ என்றும் பேசிக்கொள்வார்கள். ஐயாத்துரை குல தொழிலான பனையேற்றத்தை விட்டுட்டு துரைசாமித்தேவர் தோட்டத்தில் வேளாண்மைத் தொழிலை மாதச் சம்பள முறைக்கு கவனித்து வந்தான். நாள் முழுவதும் துரைசாமியோடு அவரது தோட்டத்தில்தான் இருப்பான். சாப்பாடு முதல்கொண்டு எல்லாமே துரைசாமித்தேவர் வீட்டில்தான். மதிய உணவு வேளையில் துரைசாமி தோட்டத்தில் இருந்து கொண்டு ஐயாத்துரையை அவரது வீட்டுக்கு அனுப்பி “நீ சாப்பிட்டுட்டுத் திரும்பி வரும்போது, எனக்கும் சாப்பாடு வாங்கிட்டு வால.” என்று சொல்லி அனுப்பி வைப்பார். ஐயாத்துரை சாப்பிட வரும்போது அவனுக்கு சாப்பாடு பரிமாறுபவள் கல்யாணி. இதனால், கல்யாணியின் தோழிகள் ஐயாத்துரை சாப்பிட வரும்போதெல்லாம் “உன் வீட்டுக்காரன் வந்துட்டான், போடி, போயி சாப்பாடு போடு. இல்லேன்னா கோவிச்சுக்கப் போறாரு…” என்று கேலி செய்வார்கள். இதுவே நாளடைவில் கல்யாணிக்கு ஐயாத்துரை மீது ஒரு ஈர்ப்பு வர காரணமாக அமைந்தது. சில நாட்களில் ஐயாத்துரையிடம் தனிமையில் பேச ஆசைப்பட்டு அவளே சாப்பாடு எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு வருவாள். ஒருநாள் கல்யாணி, ஐயாத்துரையிடம் யாரும் இல்லாத போது அவளது காதலைச் சொன்னாள். ஐயாத்துரை சாதியை காரணம் காட்டி அவளை ஏற்றுக்கொள்ள மறுத்தான். கல்யாணியும் விடாது “ நாம ஒன்னு சேர சாதிதான் பிரச்சனைன்னா.. வா, ரெண்டு பேரும் யாரும் கண்டு பிடிக்க முடியாத ஊருக்குப்போயி கல்யாணம் பண்ணிட்டு வாழலாம்.” என்றாள்.
இவ்வாறு கல்யாணிப் பலமுறை சொல்லிப் பார்த்தும் அவன், அவளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். இறுதியாக அவள் “ ஒரு வேள இந்த ஊரு சொல்றது போல, நான் புள்ள பெத்து தந்துட மாட்டேன்னு நீயும் நினைக்கிறாயா? அப்படி ஒரு நினைப்பு உனக்குள்ள இருந்தா என்னை உனக்கு தர்றேன், எடுத்துக்க. உன்னோட வாரிசு என் வயித்துல ஜனித்ததுன்னா, எங்கேயாவது கூட்டிட்டு போயி குடும்பம் நடத்து. இல்லேன்னா, கடைசி வரை துரைசாமித்தேவனுக்கு மகளாவே இருந்துட்டு போறேன். இந்தா எடுத்துக்க…” என்று அவளது தோள் சேலையை உருவி அவன் மீது வீசி எறிந்துவிட்டு கண்ணீர் மல்க நின்றாள்.
அதைப்பார்த்து பதறிப்போன ஐயாத்துரை சட்டென அவளது தோள் சேலையை எடுத்து அணிவித்துவிட்டு யோசித்தவன் “நாளைக்கு, இந்த ஊரவிட்டு, நான் போகலாம்னு முடிவு பண்ணிருக்கேன். காலையில அஞ்சு மணிக்கு ஊருக்கு வெளியே ரெட்டப் பனை பக்கத்துல, உனக்காக காத்திருப்பேன். வந்தேன்னா, உன்னையும் அழைச்சிட்டு போறேன். இல்லேன்னாலும், போயிடுவேன். திரும்ப இந்த ஊருக்குள்ள வரமாட்டேன்.” என்று சொல்லிவிட்டு சென்றான்.
ஊரே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. கல்யாணி எழுந்து கட்டிய துணியோடு ஐயாத்துரைக்கு முன்னதாக வந்து காத்திருந்தாள். சொன்ன நேரத்துக்கு ஐயாத்துரையும் வந்தான். இருவரும் போகும் இடம் தெரியாது, ஊரை விட்டு சென்றனர்.
கல்யாணியும் ஐயாத்துரையும் சென்றது ஊருக்கு தெரிந்தது. கல்யாணியைப் பழி தீர்க்கச் சமயம் பார்த்துக் காத்திருந்த ஆண் சமூகத்துக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அது அமைந்தது. இருவரையும் ஊர் ஊராக, மாவட்டம் மாவட்டமாகத் தேடி அழைந்தனர். அவர்கள் இருக்கும் இடம் பற்றிய எந்த தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் வேளாண் தொழில் செய்பவர்கள் தாங்கள் விளைவிக்கிற மிளகாய் வத்தலைச் சந்தை இடுவதற்கு உகந்த இடம் என்றால் அது நாகர்கோவில் உள்ள கோட்டார் சந்தையைச் சொல்லலாம்.
துரைசாமி கோட்டார் சந்தைக்கு மிளகாய் வத்தலைக் கொண்டு செல்லும் போதெல்லாம் ஐயாத்துரையையும் உடன் அழைத்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவ்வாறு வரும்போது ஐயாத்துரை சந்தை நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்து வந்தான். அதோடு கோட்டார் சந்தையைச் சேர்ந்த வியாபாரிகளோடும் நல்ல பழக்கம் வைத்திருந்தான். கல்யாணியை அழைத்துக் கொண்டு சென்ற ஐயாத்துரைக்கு கோட்டார் சந்தை பிழைப்புக்கு ஏற்ற இடமாக தெரிந்ததால் கல்யாணியோடு கோட்டார் பகுதிக்கு வந்து வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார்கள். ஐயாத்துரை சந்தையில் சுமைத் தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தான்.
கல்யாணி, ஐயாத்துரை இருவரும் வம்பளத்தை விட்டு வந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிருந்தது. இந்த மூன்று ஆண்டுகளில் வம்பளத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனையோ முறை வியாபாரத்திற்காக கோட்டார் வந்து சென்றார்கள். துரைசாமியும் கல்யாணியும் யார் கண்ணிலும் படாமல் மறைந்து வாழ்ந்து வந்தார்கள். மூன்று ஆண்டுகள் கடந்திருந்த நிலையில் ஒரு நாள் வம்பளத்தைச் சேர்ந்த நீலகண்டன் என்பவர் கோட்டார் சந்தைக்கு மிளகாய் வத்தல் கொண்டு வந்தார். எதார்த்தமாக மளிகைச் சாமான் வாங்கிச் செல்ல சந்தைக்கு வந்த கல்யாணி, நீலகண்டனைக் கண்டு கொண்டாள். கண்டதுமே தாயைக் கண்ட ஒரு கன்றுவைப் போல ஓடிச் சென்று நீலகண்டனை கட்டியணைத்து நலம் விசாரித்தாள். தனது தந்தை துரைசாமி, தாய், மற்றும் தங்கைகளின் நலம் குறித்தும் அவர்களது திருமண வாழ்க்கை பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டாள். நீலகண்டன் முதலில் கல்யாணியோடு தயக்கம் காட்டிப் பேசினாலும் கல்யாணியின் அன்பைப் பார்த்து மனமிறங்கி ஊர் நிலவரங்கள் முழுவதையும் பகிர்ந்து கொண்டார். இறுதியில் இருவரும் விடைபெறும்போது தான் இங்கே இருப்பதை ஊரில் யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள். எல்லாவற்றுக்கும் சரியென்று சொல்லிவிட்டு வியாபாரத்தை முடித்துக்கொண்டு ஊருக்கு திரும்பிச் சென்றார் நீலகண்டன். தான் கல்யாணியை கண்டதுப்பற்றி ஊரில் யாரிடமும் எந்த விபரமும் பகிர்ந்து அவர் கொள்ளவில்லை.
ஒரு நாள் நீலகண்டன் மது போதையில் இருந்தபோது எதோ ஒரு விஷயத்துக்காக கல்யாணிப் பற்றிய பேச்சு வர கல்யாணியைக் கோட்டார் சந்தையில் பார்த்த செய்தியை தனது மனைவியிடம் தெரிவித்தார். அவள் யாரிடமும் சொல்ல வேண்டாம், சொல்ல வேண்டாம் என்று சொல்லியே ஊர் முழுக்க தம்பட்டம் அடித்தாள். கல்யாணி கோட்டார் பகுதியில் வசித்து வரும் செய்தி ஊர் முழுக்க காற்றாகப் பரவியது.
துரைசாமியின் காதுக்கும் விஷயம் எட்டியது. அவர் எதையும் கண்டும் காணாததைப் போல நடந்து கொண்டார். அன்றைய இரவு பொழுது அவரது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே வந்த ஒருவன் வீட்டுக்கு வெளியே நின்றுவாறு… “ சின்னையா … சின்னையா … ” என்று துரைசாமியை உறவு முறையைச் சொல்லி அழைத்தான்.
“யாரு?” என்றார் துரைசாமி.
“நான்தான் தனக்கோடி.”
அங்கிருந்து வாரே… “என்ன தனக்கோடி?”
“பஞ்சாயத்து கூட்டிருக்காங்க. உன்ன கூட்டுட்டு வர சொன்னானுவோ. அதான் வந்தேன் சின்னையா.”
“அப்படியா. சரி, போ, வரேன்.” என்ற துரைசாமி அதற்குமேல் சாப்பிட விருப்பம் இல்லாது போலிருக்க மீதம் இருந்த சோற்றோடு சேர்த்து தட்டில் கை கழுவிவிட்டு எழுந்து சென்றார் .
வெளியே கன்னுக்குட்டி ஒன்று கத்திக்கொண்டே கிடந்தது. அதைப் பார்த்துவிட்டு ”எம்மா இந்த கன்னுக்குட்டி பசியில கத்துறது பாரு… அந்த செவல பசுல பால் குடிக்க விடுன்னு சொன்னேனே விடலயா?”
“விட்டேங்க. அது குடிக்க மாட்டேங்குது.”
“பெத்தவ ஒருத்தி இல்லேன்னா, பிள்ளைங்க கதி கேப்பாரத்துதான் போகும். இதுல மாடு என்ன.. மனுஷனென்ன? எல்லாம் ஒண்ணுதான்.” என்றவாறு கூளத்தை அள்ளி வண்டியில் போட்டுவிட்டு மாட்டைப் பூட்டி வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றார் துரைசாமி.
பஞ்சாயத்து பேச கூடியிருந்த இடத்திற்கு மாட்டு வண்டியில் வந்து இறங்கிய துரைசாமி, மாட்டை அவிழ்த்து நுகத்தடியில் கட்டிவிட்டு அதற்கு கூளம் போட்டு கொண்டிருந்தார்.
அப்பொழுது பஞ்சாயத்தில் கலந்து கொள்வதற்காக, வந்த பெண்களில் ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் இரகசியம் சொல்வதுப்போல, “ஏட்டி, அந்த ஓடுகாலி சிறுக்கி, மின்னல் நாடான் மவனுக்கு ரெண்டு பிள்ளையள பெத்து வச்சிருக்கிறாளாம.” என்றாள்.
“ஊரே அவள பெத்துக்க மாட்டான்னு சொல்லுச்சு. அதுக்கு பயந்துட்டு சாதிக்கார பெய ஒருத்தனும் பொண்ணு கேட்டு துரைசாமி தேவன் வூட்டு படியேறல.” என்று இருவரும் இரகசியம் போல பேசினாலும் அது துரைசாமியின் காதுகளில் விழத்தான் செய்தது. கூளம் போட்டுவிட்டு பஞ்சாயத்திற்குள் நுழைந்த துரைசாமியைப் பார்த்ததும், “ஒக்காரு சின்னையா. விவகாரத்தப் பேசிப்புடலாம்.” என்றான் வேலாண்டி.
“நிக்கிறதால ஒண்ணும் கொறஞ்சிடப் போறதில்லப்பா. நீங்க பேசுங்க…”
“சின்னையா உனக்கு விஷயம் தெரியும். இருந்தாலும், சொல்லுறோம். உன் மவ கல்யாணிய, நீலகண்டன் மாமா கோட்டாரு சந்தையில வச்சிப் பார்த்ததா சொல்றாரு. அது விஷயமா பேசத்தான் உன்ன கூட்டிட்டு வரச் சொன்னோம்.”
“…..”
“உனக்கே தெரியும், அவளத் தேடி நாம அலையாத இடம் இல்லேன்னு. அது ஒரு பக்கம் இருந்தாலும், இப்ப, நீ என்ன முடிவு பண்ணிருக்க?”
“அந்த தேவடியா மவ என்னைக்கு என் வாசல தாண்டி அந்த சாதிக் கெட்ட பெயலோட ஓடிப் போனாளோ அன்னைக்கே நான், அவள தல மொழுகிட்டேன். என்ன ஒண்ணு அப்பவே, என் கண்ணுல சிக்கிருந்தான்னா, நம்ம சுடுகாட்டு சுடலையாண்டவனுக்கு நரபலி கொடுத்திருப்பேன். இன்னைக்கு இந்த பஞ்சாயத்த கூட்ட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அவ நல்ல நேரமோ, என் ஆகாத நேரமோ அன்னைக்கு எவன் கையிலயும் சிக்காம போயிட்டா.” என்றதும் ஒருவன்,
“இப்பதான், அவ இருக்க இடம் தெரிஞ்சு போச்சுதுல்ல. ஆக வேண்டியதப் பார்ப்போம். மூணு வருஷமா நாம, அவள விட்டு வச்சிருக்கிறதால நம்ம சாதிக்காரன, அந்த பெயலொட சாதிக்காரன் தெம்மாடிப் பயலுவன்னு நினைச்சிட கூடாது. இந்த மூணு வருசமும் பொறுமையா இருந்தது ரோஷம் குறைஞ்சிப் போனதால இல்லடா, அவ எங்க கண்ணுல அகப்படாதனாலன்னு சொல்லாம சொல்ல தரமான சம்பவமா இத பண்ணிடலாம்னு சாதிசனம் நினைக்கிறோம் சின்னையா. நீ என்ன நினைக்கிறேன்னு சொன்னா, மேற்கொண்டு பேசலாம்.”
“இதுல, நான் சொல்ல என்ன இருக்குது. பஞ்சாயத்துல என்ன முடிவு
பண்ணாலும் எனக்கு சம்மதம்தான்.”
கூட்டத்தைப் பார்த்து… “அப்புறம் என்னப்பா, பெத்தவனே சம்மதம்னு சொல்லிப்புட்டான். நாளக்கி நம்ம எல்லாத்துக்கும் பொழுது விடியுறதே கோட்டாரு சந்தையிலதான்.”
“அந்த சாதிகெட்ட பெயல அங்கனேயே வெட்டிப் போட்டுட்டு வந்துடலாம். அந்த ஓடுகாலி சிறுக்கிய எங்க வச்சிச் சம்பவம் செய்யுறது?”
“செய்யலாம்… செய்யலாம்… முதல்ல சின்ன ஆத்தாளயும் கூப்புடு. ஒரு வார்த்த கேட்டுப்புடலாம்.” என்று சொன்னதும் ஒரு பெண் சென்று வீட்டுக்குள்ளிருந்த சங்கரம்மாவை அழைத்துக்கொண்டு வந்தார்ள்.
“சின்னாத்தா, சின்னையா எல்லாத்துக்கும் சம்மதம்னு சொல்லிட்டாரு, பெத்தவ ஒம் முடிவு என்ன?”
“எனக்கொரு முடிவு அவருக்கொரு முடிவுன்னு எதுவும் இல்ல. அவரு, சொன்னா சரிதான். மறுத்துப் பேசவா போறேன்?”
“பேச்சு மாற மாட்டீயே?”
“நான் ஊருக்கு முந்தாணி போடல.. துரைசாமி தேவன் ஒருத்தனுக்குதான் போட்டேன். அவரு எண்ணத்துக்கு பொறம்பான எந்த யோசனையும் இந்த சிறுக்கியோட தேகத்துல ஓடாது.”
“சரி போ.“ என்றவன் தொடர்ந்து… “இதெல்லாம், நமக்காவா செய்யுறம்? தலைமுறை தலைமுறையாக மத்தியஸ்தம் பண்ற சாதியில பொறந்துட்டு நாளைக்கு கைய கட்டிக்கிட்டு நிற்கிறதுப்போல ஆயிடக்கூடாது பாரு அதான். ” என்றதும் சங்கரம்மா அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.
“எப்பா, நாளைக்கு ஆரெல்லாம் வண்டி கட்டுறா?”
“ஆரெல்லாமெங்கிற பேச்சே இருக்கக் கூடாது. ஊருல இருக்குற அத்தனை வண்டியையும் கட்டிப் புட வேண்டியதுதான்.”
“சின்னையா எத்தனை மணிக்கு கிளம்பலாம்னு நீயே சொல்லு.”
“பொழுது விடியுறதே கோட்டார் சந்தையிலேன்னு பஞ்சாயத்து முடிவு பண்ணினதுக்கு பொறவு, நான் சொல்ல என்ன இருக்கு?”
“சரி, சின்னையா ஊர்க்கூடி இருக்கும்போது, நீ ஏதாவது சொல்ல நினைச்சேனா சொல்லு…”
“எதுக்கப்பா ஊர திரட்டிகிட்டு, அவள என் மாரு மேலயும் தோள் மேலயும் தூக்கிப் போட்டு வளத்துட்டேன். அதனால, அவளுக்கு விஷத்த ஊத்தியோ, கழுத்துல கயித்தப் போட்டு தூக்கியோ, இல்ல ஊரானோட சேர்ந்து அடிச்சி கொல பண்ணவோ என் மனசு ஒப்பல.”
“பொறவு எப்படி செய்யணும்னு சொல்லும் சின்னையா. அப்படியே பண்ணிடலாம்.”
“நம்ம சாதிக்கினு ஒரு கவுரத இருக்கு. பொம்பளைய கேவலப்படுத்தி கொன்னான்னு, அடுத்த சாதிக்காரன் பேசிடக் கூடாதில்லயா. அதுக்காக, சொல்றேன். நான், என் வண்டிய கொண்டு வந்து பஞ்சாயத்து நடக்குற இடத்தில விட்டுட்டேன். இன்னைக்கு ராத்திரிக்கு அதுலதான் படுத்து ஒறங்கப் போறேன். அவளோட சரிக்கு சரியா மல்லுக்கு நிற்க திராணி இருக்கிற ஒத்த ஆம்பள வந்து ‘வண்டிய கட்டு நான் நிக்கறேன்’னு சொல்லட்டும். அவள கூட்டிட்டு வந்து அவன்கிட்ட ஒப்படச்சிடுறேன். இதோ, இந்த பஞ்சாயத்து அரச மரத்துல என் சுருள் கத்திய குத்தி வச்சிட்டுப் போறேன். அந்த சிறுக்கி மவள ஜெயிச்சிட்டு கத்திய எடுத்து கழுத்த அறுத்துப் போடட்டும்.”
“ஒரு வேள அவன் தோத்துட்டான்னா?” என்றான் ஒருவன்.
“அதுக்கப்புறம், ஊருல தனக்கு என்ன மரியாத இருக்கும்னு யோசன பண்ணாதா ஒருத்தன் காரியத்துல இறங்குவான்?” என்ற துரைசாமி தொடந்து, “மேற்கொண்டு ஊருக்குள்ள வாழுறதும் வாழாததும் அவன் விருப்பம். ஊர் எதுவும் சொல்ல வேணாம்.” என்று சொல்லிவிட்டு மாட்டு வண்டிக்கு அருகில் சென்று தனது தலைப்பாகையை அவிழ்த்து கொலுப் பலகையில் விரித்துவிட்டு, அதன் மேல் கால்களை நீட்டி கைகள் இரண்டையும் தலைக்கு வைத்தபடி மல்லாந்து பௌர்ணமி நிலவைப் பார்த்தவாறு படுத்தார். நிலவு அவருக்கு பல்வேறு கதைகளைச் சொன்னது. சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கிப் போயிருந்தார்.
சேவல் கூவியது, காக்கை கரைந்தது, பொழுதும் புலர்ந்தது. சூரியன் வானில் ஏறி கதிர்க்கரங்களை துரைசாமியின் முகத்துக்கு நேராக செலுத்த துவங்கியிருந்தான். வெயில்பட்டு கண்கள் கூச விழித்து பார்த்தார் துரைசாமி. எந்த ஆண் மகனும் அவனை உசுப்பி ‘வண்டியைக் கட்டு’ என்று அதுவரை சொல்லவில்லை. சூரியனிடமே நேரத்தைக் கேட்டான். நேரத்தைச் சொன்னவன், அதன்பிறகு பகைமை பாராட்ட ஆரம்பித்து விட்டான். அவனோடு மல்லுக்கு நிற்க முடியாமல் வண்டியில் மாட்டைப் பூட்டிக்கொண்டு வயலுக்கு கிளம்பி சென்றார் துரைசாமி.