இணைய இதழ் 109சிறுகதைகள்

வசிட்டர் – ஜே.மஞ்சுளா தேவி

சிறுகதை | வாசகசாலை

”சிங்கம் எப்படி இருக்கும்?” என்று கேட்டால் இப்பத்த பொடுசுகள் சூர்யாவையும் ஒன்றரை டன் வெய்ட்டையும் சொல்வார்கள். ஆனால் இலக்கியம் தெரிந்தவர்கள் எழுத்தாளர் வசிட்டரைப் போல் இருக்கும் என்றுதான் சொல்வார்கள்.

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது பாம்புக்குப் பொருந்துகிறதோ இல்லையோ எழுத்தாளர் வசிட்டருக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும். தங்களுடைய படைப்பு நூலாக வெளிவருவதற்கு முன்பே வசிட்டர் படித்துவிடுவார் என்றுதான் ஒரு காலத்தில் இலக்கியவாதிகளும் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

முகஸ்துதி என்ற வார்த்தைக்கு இடமே இல்லாத வாழ்க்கை வசிட்டருடையது. எல்லா இலக்கியக் கூட்டங்களுக்கும் கைக்காசை செலவழித்துத்தான் செல்வார். அரசுப் பேருந்தில் மட்டுமே பயணிப்பார். யாரேனும் கார் அனுப்புகிறேன் என்றால், ’கார் பயணம் ஒத்துக்கொள்ளாது, தலை சுற்றும்’ என்று மறுத்துவிடுவார். மொத்தத்தில் சிறு பிசிறும் இல்லாத வைராக்கிய வாழ்வு வசிட்டருடையது.

தூக்கி எறிவதையும் ஒரு நொடியில் செய்வார். தலை மீது தூக்கிக் கொண்டாடுவதற்கும் வசிட்டருக்கு ஒரு நொடி போதும். எல்லோரும் கொண்டாடுகிறார்களே என்பதிலிருந்து தான் தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காக அதை எதிர்க்க மாட்டார். தன் மனதிற்கு சரி என்று படாத படைப்பை எந்தக் காரணத்திற்காகவும் பாராட்ட மாட்டார். இந்தத் தராசு குணமே வசிட்டரை மிகச் சிறந்த திறனாய்வாளராக்கியது. எனவே தமிழ் இலக்கிய உலகம், வசிட்டர் என்ன சொல்வாரோ என்று அவரின் வாய்ச்சொல் பார்த்து நிற்கும்.

இப்படித்தான் ஒருமுறை ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு தமிழகத்தின் தென்கோடியிலிருந்து மிக ஆவலுடன் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் வந்தார். வசிட்டர் மிகவும் மதிப்பவர் அவர். எனவே வசிட்டர் அந்நிகழ்வில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் பேசத் துவங்கும்போதே மெய்யியல் பற்றி ஏறுக்கு மாறாகச் சொன்னார் (உரையின் பிற்பகுதியில் அப்படியே தோசையைத் திருப்பிப் போட்டது போல் மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பாராக இருக்கும்). கேட்டுக் கொண்டிருந்த வசிட்டர் சட்டென எழுந்து நின்று, நம் சித்தாந்தத்தின் அடிப்படையையே புரிந்து கொள்ளாத இந்தக் கூட்டத்தில் நமக்கு என்ன வேலை என்று வெளியேறிவிட்டார். அவரைப் பின்பற்றியே அவருடன் வரும் குழுவினரும் வெளியேறிவிட்டர்கள். ஒவ்வொருவராக வெளியேறிய பின் விழா நடக்கும் அரங்கில் நாலே நாலு பேர் இருந்தார்கள். வெளியே மரத்தடியில் வசிட்டர் பேச ஆரம்பித்ததும் மொத்தக் கூட்டமும் அவருக்குக் கட்டுப்பட்டு பேச்சைக் கேட்கும். விழா அமைப்பாளர்கள் வசிட்டர் வெளியேறிவிடக் கூடாது என்று தேங்காய் உடைப்பதாக நேர்ந்து கொள்வதுண்டு என்றெல்லாம் செவிவழிக் கதைகள் உண்டு.

ஒருமுறை ஒரு கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் ஜிலேபிக் கடைகள் நடத்தும் பெரும் பணக்காரரை ஒரு மார்ச்சிய எழுத்தாளருடன் ஒப்பிட்டுப் பேசினார் ஒருவர். கேட்டுக் கொண்டிருந்த வசிட்டர், ”யோவ், வாழ்நாள் பூராவும் பணக்காரர்களுக்கு எதிராகப் பேசியும் எழுதியும் வந்தவர்ப்பா அந்த எழுத்தாளர். அவர் மட்டும் இப்ப உயிரோட இருந்திருந்தார்னா இந்த ஜிலேபிக் கடைக்காரரையா என் வடிவில் பார்த்தேன் என்று சொன்னாய்னு இன்னொரு தடவை செத்திருப்பார்” என்றார். இப்படி நகைச்சுவையில் வசிட்டரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை.

இப்படி விழாக்களில் வசிட்டர் அன் அபீசியலாகப் பேசுவதைக் குறிப்பெடுக்க அவருடன் காதைத் தீட்டிக்கொண்டு ஒரு கூட்டம் வரும். ஒரு விருது விழாவில் விருதாளர் ஒருவர் வர இயலாததால் தன் நண்பரை விருதைப் பெற்றுக் கொள்ள அனுப்பி வைத்தார். கடிதமும் அனுப்பியிருந்தார். விருதுக் குழுவினர் நேர மேலாண்மையை அனுசரித்து கடிதத்தை சுருக்கமாகப் படித்தவுடண் நண்பருக்கு, ‘சுருக்’கென்று கோபம் வந்தது. முழுக் கடிதத்தையும் படிக்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தினார். “சரி நீங்களே படியுங்கள்” என்றதும், ”நான் படிக்கமாட்டேன் விழா நடத்துநர்தான் படிக்க வேண்டும்” என்று குழந்தை போல் அடம்பிடிக்கத் தொடங்கினார். வேறு வழியில்லாமல் அக்கடிதத்தைப் படித்தார்கள். அதில், ”என் நண்பர் விருதைப் பெற்றுக் கொள்ள வருகிராரே, அவர் நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர்” என்று ஏகத்துக்குப் புகழ்ந்து, இரண்டு பக்கத்தில் நாற்பது முறை அவரது பெயரையும் சொல்லியிருந்தார் விருதாளர். வசிட்டர் சட்டென எழுந்து, ”அவரைப் போய் படிக்கச் சொன்னீங்களே விவஸ்தையிருக்கா? அவர் பெயரை இத்தனை முன்ன அவரால் படிகக முடியாது எனக் கூச்சப்பட்ட இவர்தான் மனுசன்யா” என்றதும் அங்கமே சிரிப்பொலியால் நிறைந்தது.

வசிட்டர் என்றால் ஈவு இரக்கம் காட்டாதவர், காத்திரமான திறனாய்வாளர் என்ற பெயர் வருடா வருடம் இறுகிக் கொண்டே போனது. அந்த கம்பீரம் அது வரை தமிழுலகில் காணக் கிடைக்காத அற்புதம். பெரிய பெரிய பட இயக்குநர்கள், நடிகர்கள் வசிட்டரின் அருகில் பவ்யமாக நிற்பார்கள். வசிட்டரின் அருகில் நின்றிருந்தபோது அலைபேசியில் செல்பி எடுக்க முயன்ற ஒருவரை ஒரு நடிகர் கடிந்து கொண்டது பெரும் வைரலானது. கைகட்டி பவ்யமாக நிற்கும் பெரும் மனிதர்களிடையே, அப்போதுதான் எழுதத் துவங்கியிருக்கும் இளம் எழுத்தாளர் யாருடையதாவது ஒரு வரியை எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருப்பார் வசிட்டர்.

ஒரு பெரும் வணிக நிறுவனத்தை நடத்தி வந்த ஒருவர் வருடந்தோறும் தான் ஒரு விருது அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் அதைத் தேர்ந்தெடுத்துத் தர வேண்டும் என்றும் வசிட்டரைக் கேட்டுக் கொண்டார். அவர் கூறிய விருதுத் தொகையைக் கேட்டதும் எல்லா எழுத்தாளர்களும் ஓர் அடி துள்ளி எழுந்தார்கள். பாரதி கனவு கண்ட காணி நிலம் வாங்கி விடக் கூடிய அளவு பெருந்தொகை. வசிட்டருடன் கூட இருந்தவர்கள் வசிட்டர் இப்பொறுப்பினை நிச்சயமாக ஏற்க மாட்டார் என்று திடமாக நம்பினார்கள். ஆனால், வசிட்டரோ, ”ஓ! தாராளமாகச் செய்யலாமே” என்றார். அவர் சென்றவுடன் நண்பர்கள், ”ஏன் ஒப்புக்கொண்டீர்கள்?” எனக் கேட்டார்கள். ”ஒருவருக்குப் பணம், பரிசு என்ற பெயரில் கிடைக்கட்டுமே” என்று அனைவருக்கும் திகில் ஊட்டினார் வசிட்டர். மேலும் அவ்விருதுக்கு எந்தக் குழுவிலும் இல்லாத இளங்கவியைத் தேர்வு செய்தார். விருது கொடுப்பது மொய் வைப்பது போல் இலக்கியக் குழுக்களால் தொடரப்படுவதன் மேல் கடும் அதிருப்தி கொண்டிருக்கும் வசிட்டர் இப்படி ஏதாவது செய்வார் என ஓரளவு யூகித்தவர்கள் கூட இளங்கவியை யூகிக்கவே இல்லை. ஏனென்றால் போன மாதம்தான், ”இளக்கவியின் கவிதைகளில் காத்திரம் இருக்கும் அளவு கலைத்துவம் இல்லை, ராவான கருத்துக் கூறும் கவிதை வடிவம்” என்று கடும் விமர்சனத்தை முன்வைத்திருந்தார் வசிட்டர்.

விருதுவிழா நாள் அன்று தொழிலதிபர், அவருடைய நண்பர்கள் என்று ஏராளமான செலவில் வெஜ், நான்வெஜ் என ஐந்து நட்சத்திரத் தரத்தில் தடபுடலான விருந்து. இளங்கவியைத் தவிர அனைவரும் மேடையில் இருந்தனர். விருது பெறுபவர்கள் பத்து இருபது பேர் இருந்தால் ஒருவர் வராவிட்டாலும் தெரியாது. ஆனால் விருது ஒரே ஒருவருக்கு என்ற சூடில் இருந்ததால் இளங்கவி வராதது பெரும் பரபரப்பாகிவிட்டது. வசிட்டர் நிலையோ பெரும் சங்கடமாகிவிட்டது- தன் வாழ்நாளில் செய்யாத ஒன்றை செய்யத் துணிந்தார். தொழிலதிபரின் கைகளைப் பிடித்தபடி, ”என்னை மன்…”என்று துவங்கியதும், ”பெரிய பெரிய வார்த்தைகள் வேண்டாம். பிறகு பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு, ”வந்திருக்கும் அனைவரும் உணவருந்தி விட்டுத்தான் செல்ல வேண்டும்” என்று சொல்லிச் சென்றார் தொழிலதிபர்.

வசிட்டரும் இளங்கவியும் சந்திக்கப் போகும் நாளை நினைத்து நண்பர்கள் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். அடுத்த நாள் காலையே இளங்கவி வசிட்டரின் வீட்டிற்கு வந்தான். மனப்பாடச் செய்யுளை ஒப்பிக்கும். எட்டாம் வகுப்பு மாணவன் போல கடகடவென நடந்தை சொல்லத் தொடங்கினான் இளங்கவி. ’வீட்டை விட்டுக் கிளம்பியதும் தெருமுனையில் ஒரு சிறுவன் டிவிஎஸ் எக்செல் வண்டியை அங்கு வந்த முதியவர் மீது ஏற்றி முதியவருக்கு முதுகுத் தண்டுவடத்தில் எலும்பு முறிவு, மருத்துவ மனைக்கு தான் அழைத்துச் சென்று பேசி சமாதானம் செய்து போலிஸ் கேசாகாமல் விட்டுவரும் போது இரவு மூன்று மணி ஆகிவிட்டது. காலில் செருப்பு கூடப் போட மறந்து சென்றதால் கழிவறைக்குக் கூடச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது’ என்றான். தான் விருது விழாவிற்கு வராதது பெரும் தவறு என்றும் தன்னை மன்னிக்குமாறும் காலில் விழுந்தான் இளங்கவி.

வசிட்டர் எதுவும் பேசாமல், ”அந்தப் பையன் உனக்கு சொந்தமா?” என்றார். ”இல்லைங்கய்யா, அவனும் என்னைப் போலவே ஆஸ்ரமத்தில் இருக்கிறவன்” என்றான். வசிட்டர் சட்டென எழுந்து இளங்கவியைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button