இணைய இதழ்இணைய இதழ் 52சிறார் இலக்கியம்

ஜானு; 2 – கிருத்திகா தாஸ்

சிறார் தொடர் | வாசகசாலை

ஜானுவும் ஸ்வேதா மிஸ்ஸும்

“ஆத்யா அக்கா .. எங்க ஜானுவைக் காணோம்?”

வாசலில் பூ பறித்துக் கொண்டிருந்த ஆத்யா ராகுலின் குரல் கேட்டுத் திரும்பினாள்.

“வா ராகுல். ஜானு வீட்லதானே இருப்பா. இல்லைன்னா டியூஷன் போயிருப்பா. மணி அஞ்சு ஆகுது இல்ல”

“அவளை வீட்ல காணோம். அவளோட ஸ்கூல் பேக் டியூஷன் பேக் எல்லாம் வீட்ல தான் இருக்கு”

“ஆன்ட்டிகிட்ட கேட்டியா”

“ஆன்ட்டி ஹால் சோஃபால தூங்கிட்டு இருக்காங்க. டிவி பார்த்துட்டே தூங்கிட்டாங்கன்னு நினைக்கிறேன். டிவி ஓடிட்டே இருந்துது. ஆஃப் பண்ணிட்டுக் கதவைச் சாத்திட்டுட்டு வந்துட்டேன்”

“சரி, ஒரு நிமிஷம் இரு வரேன்” 

வீட்டுக்குப்போன ஆத்யா பூக்கூடையை மேஜைமேல் வைத்துவிட்டுப் பாட்டியிடம் சொல்லிவிட்டு மீண்டும் கீழே ராகுலிடம் வந்தாள்.

“சரி, வா போலாம்”

“எங்க?” 

“ஜானுவை எங்கயுமே காணலைன்னா.. அவ அந்த ஒரு இடத்துல தானே இருப்பா எப்பவும் ..” 

“ஆமால்ல” 

“ம்ம். வா . போய்ப் பார்க்கலாம். என்ன ஆச்சுன்னு”

ஆத்யாவும் ராகுலும் செக்யூரிட்டி கோபால் தாத்தாவிடம் சொல்லிவிட்டு அவர்களின் வீட்டுச் சாலையைக் கடந்து அடுத்த தெருவில் இருக்கும் பூங்காவுக்கு அருகே சென்றார்கள்.

பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த அவர்களின் நண்பர்களுக்குக் கை அசைத்துவிட்டு அந்தத் தெருவின் கடைசிக்குப் போனார்கள்.

அங்கே.. அந்தச் சாலையின் கடைசியில் இருந்த மாமரத்தின் கீழே ஒரு பாறை மேல் உட்கார்ந்திருந்தாள் ஜானு.

ஆத்யாவும் ராகுலும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டு அவளை நோக்கி நடந்தார்கள்.

இருவரும் ஜானுவுக்கு அருகில் சென்றும் அவள் இவர்களைக் கவனிக்கவில்லை.

சிரித்தபடியே ராகுல்..”ஹே ஜானு”

ராகுலின் குரல் கேட்டு ஜானு திரும்பிப் பார்த்தாள்.

“ராகுல்.. ஆத்யாக்கா..” என்றாள் பலவீனமான குரலில் 

“உக்காருங்க ஆத்யாக்கா” என்று சொல்லி பக்கத்தில் இருந்த இன்னொரு குட்டி பாறை மீது கை வைத்தாள்.

ஆத்யா அந்தக் குட்டிப் பாறை மேல் உட்கார்ந்தாள்.

பின் எதுவும் பேசாமல் தரையைப் பார்த்துக் குனிந்து கொண்டாள் ஜானு.

அவளின் வருத்தத்தை இருவரும் கவனித்தனர்

“ஜானு..” – ஆத்யா, ஜானுவின் தோளில் கை வைத்தாள்.

அடுத்த நொடி.. அத்தனை நேரமும் தேக்கி வைத்திருந்த அழுகையை மொத்தமாக அழ ஆரம்பித்தாள் ஜானு.

“ஹே ஜானு, ஜானு.. ஏன் அழகுற”

கேட்ட ராகுலை நிமிர்ந்து பார்த்தாள். பின் திரும்பவும் அழுதாள்.

“சொல்லு ஜானு” அவளின் தோளில் இன்னும் அழுத்தமாகக் கை வைத்தாள் ஆத்யா.

அழுகையின் ஊடே ஜானு,”எங்க ஸ்வேதா மிஸ் இருக்காங்க இல்ல அக்கா”

“ஆமா”

“அவங்க ஸ்கூல விட்டுப் போறாங்களாம்”

“ஏன் என்னாச்சு”

“அவங்களுக்கு மேரேஜ் ஆகப்போகுதாம். டெல்லி போய் செட்டில் ஆகப் போறாங்க.”

“சரி. குட் நியூஸ் தானே. அதுக்கு ஏன் அழகுற”

“குட் நியூஸ் தான். ஆனா, அவங்க அதுக்கு அப்புறம் ஸ்கூலுக்கு வர மாட்டாங்க” – சொல்லிவிட்டு மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

ஆத்யா ஜானுவைச் சமாதானப்படுத்த முயன்றாள் .

“சரி, அவங்க மேரேஜ் வரை ஸ்கூலுக்கு வருவாங்க தான”

“இல்ல.. இன்னிக்கு ஸ்கூலுக்கு வந்து எங்க எல்லாருக்கும் பை சொல்லிட்டுக் கிளம்பிப் போய்ட்டாங்க. அவங்க இனி வரப்போறது இல்ல.”

திரும்பவும் பயங்கர அழுகை.

ஆத்யா ராகுலைப் பார்த்து ‘ஏதாவது சொல்லு ‘ என்பது போல் சைகை செய்தாள்.

ராகுல் தொடர்ந்தான் .

“ஸ்வேதா மிஸ்ஸுக்கு எப்போ மேரேஜ்?”

“அடுத்த மாசம்”

“அதுக்கு அப்புறம் தானே டெல்லி போவாங்க”

“இல்ல ராகுல்”

செம்ம அழுகை…

“வர்ற சனிக்கிழமை கிளம்புறாங்களாம்”

“நாளன்னைக்கா”

“ஆமாம்..” – முகத்தை முழங்கால்களுக்கு நடுவே புதைத்துக் கொண்டு அழுதாள்.

“நாளைக்கு இங்க தான இருப்பாங்க.”

“ஆமா”

“ம்ம் அப்புறம் என்ன .நாளைக்கு ஸ்கூல் முடிஞ்ச அப்புறம் சாயங்காலம் அவங்க வீட்டுக்குப் போய் அவங்களைப் பாத்துட்டு வா”

ராகுல் சொன்னதைக் கேட்டு ஜானு முகத்தில் அவ்ளோ அழுகையினூடே செம்ம புன்னகை.

“நிஜமாவா”

“ஆமா” – என்றான் ராகுல்

“ஆனா, அவங்க வீடு எனக்குத் தெரியாதே”

“நாளைக்கு ஸ்கூல்ல யார்கிட்டயாவது கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு வா..”

“சரி ராகுல்”

கண்ணைத் துடைத்துக்கொண்டாள் .

இவள் சமாதானம் ஆனதைப் பார்த்து ராகுலும் ஆத்யாவும் புன்னகைத்தார்கள்.

ஆத்யா தொடர்ந்தாள்.

“ஹப்பா.. இதுக்கு எவ்ளோ அழுகை.. யூனிஃபார்ம் கூட மாத்தாம. இங்க தனியா வந்து உக்காந்து…”

மூன்று பேரும் சிரித்தார்கள்

ஆத்யா எழுந்து ஜானுவுக்குக் கை கொடுத்தாள்.

“அம்மாகிட்ட சொல்லிட்டு வந்தியா”

“சொல்லிட்டேன்க்கா”

ஜானு எழுந்து கொள்ள மூன்று பேரும் நடந்தார்கள்.

ராகுல் கேட்டான்”ஆமா, அதென்ன சோகமா இருந்தீன்னா இங்க வந்து உக்காந்துக்குற”

ஜானு சிரித்தாள் . ஆத்யா தொடர்ந்தாள்

“ஆமா . அம்மா திட்டினா இங்க வந்து உக்காந்துக்குற . உன் ஃப்ரெண்ட் ஸ்கூலுக்கு லீவு எடுத்தா அன்னைக்கு சாயங்காலம் இங்க வந்து உக்காந்துக்குற”

அப்போ ராகுல்,”இதெல்லாம் கூட பரவா இல்ல. அன்னைக்கு பென்சில் தொலைஞ்சு போச்சுன்னு இங்க வந்து உக்காந்து இருந்த இல்ல”

மூன்று பேரும் சத்தமாகவே சிரித்துக்கொண்டு வீடு நோக்கி நடந்தார்கள் .

அடுத்த நாள்

வெள்ளிக்கிழமை

காலை பள்ளிக்கு வந்ததும் அவளோட தோழிகள் எல்லார்கிட்டயும் ஸ்வேதா மிஸ்ஸோட வீட்டு விலாசம் தெரியுமான்னு கேட்டாள் ஜானு.

யாருக்கும் தெரியல.

யார்கிட்ட கேட்பது

யோசனையோடு காலை வகுப்புகள் சென்றன 

மதிய உணவு இடைவேளையில் கிளாஸ் லீடர் பிரசன்னா அவன் நண்பர்களோட சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அங்கே போன ஜானு

“பிரசன்னா..”

“ஹே.. சொல்லு ஜானு”

“உனக்கு ஸ்வேதா மிஸ்ஸோட வீடு எங்க இருக்குன்னு தெரியுமா”

“தெரியாதே..”

பின் பிரசன்னா, அவனோட நண்பர்களிடம் திரும்பி,”உங்க யாருக்காவது தெரியுமா..”

“தெரியாது. ஆனா, மேத்ஸ் மிஸ்ஸும் ஸ்வேதா மிஸ்ஸும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். அவங்களுக்கு நிச்சயமா தெரிஞ்சிருக்கும். அவங்ககிட்ட கேளு ஜானு” என்றான் ஸ்ரீராம்

“ஓகே ஸ்ரீராம் . தேங்க் யூ பிரசன்னா”

பதிலுக்குப் புன்னகையோடு பிரசன்னா அவனின் ஸ்னாக்ஸ் பாக்சை ஜானுவிடம் நீட்டினான்.

அதிலிருந்து ஒரு சிப்சை எடுத்துக்கொண்டு தேங்க்ஸ் சொன்ன ஜானு அங்கிருந்து ஆசிரியர் அறைக்குச் சென்றாள்.

மேத்ஸ் மிஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அதனால் அங்கிருந்து வகுப்புக்குச் சென்ற ஜானு வேக வேகமாக மதிய உணவை உண்டு முடித்தாள்.

பின் மீண்டும் ஆசிரியர் அறைக்குச் சென்றாள்.

சாப்பிட்டு முடித்திருந்த மேத்ஸ் மிஸ் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார்.

அவர் அருகே சென்ற ஜானு

“மிஸ்”

“ஹே ஜானகி.வா”

“மிஸ் உங்களுக்கு ஸ்வேதா மிஸ்ஸோட வீடு எங்க இருக்குன்னு தெரியுமா மிஸ்”

“தெரியுமே. ஏன் ஜானகி?”

“ஸ்வேதா மிஸ்ஸை இன்னிக்கு ஈவ்னிங் போய் மீட் பண்ணலாம்னு இருக்கேன் . அதுக்காகத்தான் அவங்க வீட்டு அட்ரஸ் வேணும் மிஸ்.”

புன்னகைத்த மேத்ஸ் மிஸ்,”சரி சொல்றேன். நோட் பண்ணிக்கோ”

“ஓகே மிஸ்”

மேத்ஸ் மிஸ் ஸ்வேதா மிஸ் வீட்டின் அட்ரஸைச் சொல்ல ஜானு ரஃப் நோட்டில் எழுதிக் கொண்டாள்.

“மிஸ், இன்னொரு ஹெல்ப் வேணும். இன்னிக்கு ஈவ்னிங் அவங்களை மீட் பண்ண வரலாமான்னு ஸ்வேதா மிஸ் கிட்ட பர்மிஷன் கேட்கணும். ஸ்வேதா மிஸ்ஸுக்கு கால் பண்ணி குடுக்கறீங்களா மிஸ் ப்ளீஸ் .”

“ம்ம்.. பண்ணலாமே”

மேத்ஸ் மிஸ் ஸ்வேதா மிஸ்ஸுக்குக் கால் பண்ணிப் பேசிவிட்டுப் பின் ஜானுவிடம் அலைபேசியைக் கொடுத்தார்.

“ஹலோ மிஸ். நான் ஜானகி பேசறேன்”

……..

“மிஸ் இன்னிக்கு ஈவ்னிங் உங்களை மீட் பண்ண உங்க வீட்டுக்கு வரட்டுமா மிஸ்” குரல் உடைந்து மெலிதாய் அழ ஆரம்பித்திருந்தாள் .

……..

“ஆறு மணிக்கு வரட்டுமா மிஸ்” – என்றாள் மெல்லிய அழுகையினூடே

……..

“மிஸ், நானும் என் ஃப்ரெண்ட்ஸ் ஆத்யா அக்காவும் ஆதினி அக்காவும் வரலாம்னு பிளான் பண்ணி இருக்கோம் மிஸ்”

இதைக் கேட்டு மேத்ஸ் மிஸ் சத்தமாகவே சிரித்தார்.

“ஓகே மிஸ். தேங்க் யூ மிஸ். மேத்ஸ் மிஸ் கிட்ட கொடுக்கறேன் மிஸ். பை மிஸ்”

மேத்ஸ் மிஸ் ஸ்வேதா மிஸ்ஸிடம் பேசி முடித்து கட் பண்ணும் வரை காத்திருந்த ஜானு,”தேங்க் யூ ஸோ மச் மிஸ்”

“ஓகே” ஆத்மப் புன்னகையோடு சொன்னார் மேத்ஸ் மிஸ்

கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே வகுப்புக்குப் போனாள் ஜானு.

அன்றைய மதிய வகுப்புகள் வேகமாகவே ஓடியது.

பள்ளி முடிந்ததும் வேகமாக வீட்டுக்குச் சென்று பேக்கை வைத்துவிட்டு ஆத்யா வீட்டுக்கு ஓடினாள்.

ஆத்யா ஆதினி இருவரிடமும் ஸ்வேதா மிஸ்ஸிடம் இவள் பேசிவிட்டதையும் மிஸ்ஸின் வீட்டு அட்ரசை வாங்கி விட்டதையும் சொல்லி இருவரையும் ஐந்தரை மணிக்குத் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டாள்.

ஐந்தரை மணி

மூன்று பேரும் அவரவர்களுக்கு ரொம்பப் பிடித்த உடையை அணிந்து கொண்டு ஸ்வேதா மிஸ்ஸுக்கு அன்பளிப்புகள் எடுத்துக்கொண்டு தயாராகி வாசலுக்கு வந்தார்கள் 

அங்கே ஜானுவின் அப்பா வந்து மூன்று பேருக்காகவும் காத்திருந்தார்.

அப்பாவை நோக்கி ஓடி வந்த மூன்று பேரும்,”ஹாய் அப்பா”

“குட் ஈவ்னிங் அங்கிள்”

புன்னகைத்த அப்பா காரின் பின் கதவைத் திறக்க மூன்று பேரும் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள் .

போகும் வழி நெடுகிலும் ஜானு, ஸ்வேதா மிஸ்ஸைப் பற்றியே பேசிக்கொண்டு வந்தாள் . மிஸ்ஸைப் பார்க்கப் போய்க்கொண்டிருக்கிறோம் என்ற மகிழ்ச்சி அளவு கடந்திருந்தது அவளிடம்.

இருபது நிமிடப் பயணத்துக்குப் பிறகு ‘மிஸ் வீடு வரப்போகுது .பக்கத்துல வந்துட்டோம் ‘ என்று அப்பா சொன்னதும் மூன்று பேருக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டு விட்டது .

அந்தத் தெருவில் ஸ்வேதா மிஸ் வீட்டைத் தேடி மிஸ் வீட்டு வாசலில் காரை நிறுத்தியதும்.. மகிழ்ச்சியில் கண்கள் விரிந்தது ஜானுவுக்கு.

மூன்று பேரும் வீட்டைப்பார்த்துக்கொண்டே காரில் இருந்து இறங்கி வீட்டு கேட்டுக்கு அருகில் போனார்கள்.

பின் அங்கே இருந்த காலிங் பெல்லை அழுத்திய ஜானு,”ஸ்வேதா மிஸ்..”

….

“ஸ்வேதா மிஸ்..”

சத்தமாக அழைத்தாள்.

எந்தச் சலனமும் இல்லாத ஐந்து நொடி அமைதிக்குப் பின்.. ஸ்வேதா மிஸ் வீட்டுக் கதவைத் திறந்தார்.

உடனே ஜானு தன் அப்பாவிடம் திரும்பி,”அப்பா.. மிஸ் வீட்ல தான் இருக்காங்க. பை அப்பா”

“பை அங்கிள்”

“ஓகே பை. எட்டு மணிக்கு வரேன், சரியா” – புன்னகைத்துக் கொண்டே அப்பா கிளம்பிப் போனார்.

ஸ்வேதா மிஸ் கதவைத் திறந்து படிகளிறங்கி கேட் அருகில் வந்தார். 

ஆத்யாவுக்கும் ஆதினிக்கும் மிகுந்த உற்சாகம் உருவானது ஸ்வேதா மிஸ்ஸைப் பார்த்து.

அடர்சிகப்பு நிறக் காட்டன் புடவை அணிந்திருந்த ஸ்வேதா மிஸ் மூவரையும் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே கேட்டைத் திறந்தார்.

“மிஸ்……. குட்ஈவினிங் மிஸ்..”

“ஹே ஜானகி வா வா . வாங்கடா உள்ள வாங்க .”

தலைகால் புரியாத மகிழ்ச்சி ஜானுவுக்கு . அவளின் உற்சாகம் ஆத்யா ஆதினிக்கும் தொற்றிக்கொண்டது

எல்லாரும் வீட்டுக்குள்ள போனதுக்கு அப்புறம் ஸ்வேதா மிஸ் இரட்டையர்களான ஆத்யா, ஆதினியை ஆச்சரியமாய்ப் பார்த்துப் புன்னகைத்தார் .

“நீங்க ட்வின்ஸாடா”

அதைக் கேட்ட ஜானு”ஆமா மிஸ். நான் சொன்னேன்ல என்னோட பிரெண்ட்ஸ் . இவங்க ஆத்யா அக்கா . இவங்க ஆதினி அக்கா”

“ஒ நைஸ் . வாங்க உக்காருங்க . ரொம்ப அழகா இருக்கு உங்க மூணு பேரோட ட்ரெஸ்ஸும்”

“தேங்க் யூ மிஸ் . எங்க எல்லாரோட பேவரெட் டிரஸ்”

சோபால உட்கார்ந்து கொண்டே ஹால் முழுதும் சுற்றிப் பார்த்த ஜானுவும் ஆத்யாவும் ஒரு பூரிப்பான முகபாவத்தைப் பரிமாறிக்கொண்டனர் .

ஸ்வேதா மிஸ் ஒரு சேரை எடுத்து இவர்கள் எதிரில் போட்டு உக்கார்ந்தார் . அப்போது,”ஹே நீ முதல்ல .”

“இல்ல, நீதான் முதல்ல”

“இல்ல ஜானு. நீ தான் முதல்ல”

ஒரு திடீர் குழப்பம் மூன்று பேருக்கும் இடையில் உருவானது

இந்தக் குழப்பத்தைப் பார்த்துச் சிரித்த ஸ்வேதா மிஸ்”ஜானகி .. என்னாச்சுடா”

“மிஸ் எங்க மூணு பேர்ல உங்களுக்கு முதல்ல யாரு கிப்ட் குடுக்குறதுன்னு பிளான் பண்றோம் மிஸ்”

“ஹஹ..அப்புறம் என்ன முடிவு பண்ணீங்க”

“மூணு பேரும் சேர்ந்து ஒண்ணா கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம் மிஸ்”

மூன்று பேரும் ஒன்றாக மிஸ்ஸுக்கு அன்பளிப்புகளைக் கொடுத்தார்கள்.

ஸ்வேதா மிஸ் எல்லாவற்றையும் ஒன்றாக வாங்கிக்கொண்டார்.

ஆத்யாவின் அன்பளிப்பு . ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் மலர்கள் .

ஜானுவின் அன்பளிப்பு . அவளுக்கு ரொம்பப் பிடித்த பார்பி பொம்மை .

பார்பி பொம்மையைப் பார்த்த மிஸ் கொஞ்சம் சத்தமாகவே சிரித்தார்.

அதைப் பார்த்து ‘மிஸ்ஸுக்குப் பிடிச்சிடுச்சு’ என்ற பூரிப்பு ஜானு முகத்தில் .

அடுத்து ஆதினியின் அன்பளிப்பு . அது ஒரு ஓவியம் .

ஒரு பெண் மலையுச்சியில் நின்று நிலவற்ற இரவு வானத்தில் சின்னஞ்சிறியதாய் நிலவை வரையத் தொடங்கியிருப்பதாய் ஒரு ஓவியம் . 

ஓவியத்தை ரசித்த ஸ்வேதா மிஸ்,”பியூட்டிஃபுல்”

“மிஸ், அது ஆதினி அக்கா வரைஞ்ச ட்ராயிங்” என்றாள் ஜானு

“ஓ ஃபென்டாஸ்டிக் ஆதினி” – மிஸ்ஸின் பாராட்டுக்கு ஆதினி சைகை மொழியில் ‘ நன்றி ‘ சொன்னாள் .

அவள் சைகை மொழியில் பேசியதைப் பார்த்துக் கவனித்த ஸ்வேதா மிஸ் பின் மீண்டும் ஓவியத்துக்குள் மூழ்கினார் .

பின் ஆதினியைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே எழுந்து நடந்தவர் ஹாலின் சுவரில் மாட்டப்பட்டு இருந்த வேறு ஒரு ஓவியத்தை நீக்கிவிட்டு அங்கே ஆதினியின் ஓவியத்தை மாட்டினார் .

பார்பி பொம்மையை எடுத்து ஷோகேசில் வைத்தார் .

ஃபிளவர் வேசில் இருந்த மலர்களை எடுத்துவிட்டு ஆத்யாவின் மலர்களை வைத்தார் .

பின் மீண்டும் வந்து புன்னகையோடு சேரில் அமர்ந்தார் .

அதற்காக மூன்று பேரும் ஒன்றாக நன்றி சொன்னார்கள் .

ஸ்வேதா மிஸ் கேட்டார் ,” நீங்க மூணு பேரும் எப்படிடா ஃப்ரெண்ட்ஸ்”

“நாங்க எல்லாரும் ஒரே பில்டிங்ல இருக்கோம் மிஸ் .” – ஆத்யா

“எங்களுக்கு இன்னும் ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க மிஸ் . ராகுல் அப்புறம் அஞ்சலி . அவங்களும் வருவதா இருந்தாங்க . ஆனா, அவங்க சித்தப்பா வீட்ல ஒரு பங்க்ஷன் இருக்கு மிஸ் இன்னிக்கு. அங்க போய்ட்டாங்க. அதனால வரல” இது ஜானு 

“ம்ம்..” ஸ்வேதா மிஸ் புன்னகை 

“மிஸ் நீங்க டெல்லி போனதுக்கு அப்புறம் திரும்ப இங்க வருவீங்களா மிஸ்”

“நிச்சயமா வருவேன் . நிச்சயமா ஸ்கூலுக்கு வந்து உங்க எல்லாரையும் மீட் பண்ணுவேன்”

ஜானுவுக்கு மகிழ்ச்சி. பின்,”மிஸ் இன்னிக்குக் காலைல இங்கிலிஷ் பீரியட்ல மேரி மிஸ் க்ளாஸ் எடுத்தாங்க . இனிமே மேரி மிஸ் தான் க்ளாஸ் எடுப்பாங்கன்னு சொன்னாங்க .”

“ம்ம் சரி டா”

ஜானு சொன்னதைக் கேட்டுக் கொஞ்சம் வருத்தம் ஆன ஸ்வேதா மிஸ் எழுந்து சமையல் அறைக்குள் சென்றார் .

திரும்பி வரும்போது இவர்களுக்காக அவர் தயார் செய்திருந்த ஸ்வீட்டை எடுத்து வந்தார் .

“கிட்ஸ் எடுத்துக்கோங்க. உங்களுக்காக நான் பண்ண ஸ்வீட்”

“தேங்க் யூ மிஸ்”

நால்வரும் ஒன்றாக ஸ்வீட் சாப்பிட்டு முடித்தனர்.

பின் மூன்று பேரும் ரகசியமாய் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.

அதைக் கவனித்த ஸ்வேதா மிஸ் விளையாட்டாக,”ஜானகி. இப்போ என்ன பிளான்”

“மிஸ், உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு”

“அப்படியா.என்ன சர்ப்ரைஸ்?”

“மிஸ், ஒரு நிமிஷம் எழுந்துக்கோங்க மிஸ்”

மிஸ் எழுந்துகொள்ள ஜானு மிஸ் உட்கார்ந்திருந்த சேரை ஹாலின் நடுப்பக்கமாகத் திருப்பிப்போட்டாள் .

ஆத்யா எடுத்து வந்திருந்த அவங்க பாட்டியின் போனில் ஒரு பாடல் பிளே செய்தாள் .

அதற்குள் ஜானுவும் ஆதினியும் ஹாலின் நடுவே தயாராக நின்றிருந்தனர் .

ஆத்யாவும் ஃபோனை மேஜை மேல் வைத்துவிட்டு வேகமாக வந்து இவர்களோடு இணைந்து கொண்டாள் .

பாடல் ஆரம்பமாக.. நடனம் தொடங்கியது.. 

*

வெண் மேகம் முட்ட முட்ட
பொன் மின்னல் வெட்ட வெட்ட
பூவானம் பொத்துக் கொண்டதோ
பன்னீரை மூட்டை கட்டி
பெண் மேலே கொட்டச் சொல்லி
விண் இன்று ஆணை இட்டதோ
மேகத்தின் தாரைகளில் பாய்ந்தாடப் போகின்றேன்
ஆகாயச் சில்லுகளை அடிமடியில் சேமிப்பேன்
ஜில் ஜில்
ஜில் 
மனசெல்லாம் ஜில்
நன்னாரே
நா னா ரே

*

பாடல் முடிந்து

அட்டகாசமான நடனம் நிறைவு பெற்றது 

மூன்று பேரும் மூச்சு வாங்க ஹாலின் நடுவே நின்றிருந்தார்கள் .

ஆச்சரியத்தில் கண்கள் மின்னியது ஸ்வேதா மிஸ்ஸுக்கு. எழுந்து நின்று கைதட்டினார் .

“Fantastic டா . அற்புதமா டான்ஸ் பண்றீங்க மூணு பேரும் .”

“தேங்க் யூ மிஸ்”

மூன்று பேருக்கும் பயங்கர மகிழ்ச்சி. மகிழ்ச்சி புன்னகையோடே மூச்சு வாங்கிக்கொண்டு வந்து சோபாவில் உட்கார்ந்தார்கள் .

“ஆத்யா அக்கா தான் எங்க ரெண்டு பேருக்கும் சொல்லிக் கொடுத்தாங்க . அதும் எனக்கு ஒரு ஸ்டெப் வரவே இல்ல மிஸ் . ஆதினி அக்கா நேத்து நைட் ரொம்ப நேரம் எனக்கு பிராக்டிஸ் கொடுத்தாங்க . ஆத்யா அக்காவும் ஆதினி அக்காவும் பரதம் டான்சர்ஸ்”

“அப்படியா . குட் .குட்”

மூன்று பேருக்கும் ரொம்பவே மகிழ்ச்சி

பின் கொஞ்சம் நேரப் பேச்சுக்களுக்குப் பிறகு ஸ்வேதா மிஸ்ஸைப் பார்த்து ஆதினி சைகை மொழியில் கேட்டாள் .

“வீடு ரொம்ப அழகா இருக்கு . முழு வீட்டையும் பார்க்கலாமா”

அதைப் பார்த்த ஆத்யா, ஆதினி சொன்னதை மிஸ்ஸுக்கு விளக்கிச் சொல்ல முற்பட்டாள்

“மிஸ் இப்போ அவ சொல்றா ………”

ஆத்யா சொல்வதுக்குள் அவளின் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்திய ஸ்வேதா மிஸ் ஆதினியைப் பார்த்து

“பாக்கலாம் . நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே பார்க்கலாம் வா” – என்று சொல்லி ஆதினியை நோக்கிக் கையை நீட்டினார். ஸ்வேதா மிஸ்ஸின் கையைப் பிடித்துக்கொண்ட ஆதினி மிஸ்ஸோடு வீட்டுக்குள் சென்றாள்.

அப்போது ஜானு ,” மிஸ் ஆத்யா அக்காவும் நானும் வெளிய இருக்கும் செடி எல்லாம் பார்த்துட்டு வரோம் மிஸ்”

“சரி ஜானகி . கேட் தாண்டி வெளிய போகக் கூடாது ரெண்டு பேரும், சரியா”

“சரி மிஸ்” ரெண்டு பேரும் ஒன்றாகச் சொன்னார்கள் . பின் வெளியே வந்து சுற்றிப் பார்த்தார்கள் . காம்பவுண்டுக்குள் மிஸ்ஸோட இரு சக்கர வாகனம் நின்றிருந்தது .

வீட்டுக்கும் காம்பவுண்ட் சுவருக்கும் இடையே நிறைய செடிகள் இருந்தன .

இருவரும் ஒவ்வொரு செடியாகப் பார்க்கத் தொடங்கினார்கள் 

ஸ்வேதா மிஸ்.. ஆதினிக்கு வீட்டைச் சுற்றிக்காட்டத்தொடங்கினார் .

ஹாலைக் கடந்து இடது புறமாய் டைனிங் ஹால் இருந்தது .

அதற்கும் அடுத்து சமையலறை இருந்தது .

பின் வீட்டின் வலது புறத்தில் இரண்டு அறைகள் இருந்தன .

அவற்றுள்.. முதல் அறைக்குள் நுழைந்தாள் ஆதினி

அந்த அறை முழுவதுமே அடர் நீல நிறத்தில் இருந்தது .

வேலைப்பாடுகள் நிரம்பிய ஒரு மரக்கட்டில் அறையின் நடுவே இருந்தது .

அறையின் இடது ஓரத்தில் ஒரு மர அலமாரியும் இன்னொரு புறம் ஒரு மர சோஃபாவும் இருந்தன .

இவை மூன்றின் நுணுக்கமான வேலைப்பாடுகளை ரசித்த ஆதினி அறையின் இன்னொரு பக்கச் சுவரைப் பார்த்தாள்.

அந்தச் சுவர் முழுதும் நிரம்பி இருந்தன.. புகைப்படங்கள் .

அத்தனையும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள்

அவற்றின் அருகே சென்று ஒன்று ஒன்றாய்ப் பார்த்தாள் ஆதினி

நிழல்கள்

இருளான வெளிச்சங்கள்

சிறகுகள்

எங்கோ திரும்பிப் பார்த்துக்கொண்டிருக்கும் மனிதர்கள்

மறைந்திருக்கும் மனித முகங்கள்

இன்னும்.. இப்படி..

ஸ்வேதா மிஸ்ஸைப் பார்த்த ஆதினி

“இது எல்லாமே நீங்க எடுத்த புகைப்படங்கள் தானே”

‘ஆம் ‘ என்று கண்கள் சிமிட்டித் தலை அசைத்தார் ஸ்வேதா மிஸ் .

புன்னகைத்தாள் ஆதினி 

ஸ்வேதா மிஸ் சைகை மொழியில்”அந்த ரூம் போலாமா” என்றார் 

இருவரும் அடுத்த அறைக்குச் சென்றார்கள் 

அந்த அறைக்குள் நுழைந்த நொடி ஆதினி மலைத்துத் போய்க் கதவருகே நின்றுவிட்டாள்.

அறையின் உள்ளே போகாமல் திரும்பி ஸ்வேதா மிஸ்ஸைப் பார்த்தாள் .

சிரித்த ஸ்வேதா மிஸ் ஆதினியின் தோளில் கை வைத்து அறையின் உள்ளே அழைத்துச் சென்றார் .

அந்த அறையின் அழகில் பிரமித்து நின்றாள் ஆதினி .

அறை முழுவதும் வெளிர் மஞ்சளிலும் வெள்ளை நிறத்திலும் நிரம்பி இருந்தது .

அறையின் மூன்று பக்க மஞ்சள் சுவர்களிலும்.. ஆங்காங்கே புல்லாங்குழல்களும்.. அதனோடு இணைந்த மயில் இறகுகளும்.. மாட்டப்பட்டு இருந்தன .

நான்காவது சுவரில் சுவரோடு இணைந்த ஒரு பெரிய மர அலமாரி இருந்தது .

அந்த அலமாரிக்கு நேர் எதிரே சுவரில் புல்லாங்குழல்களுக்கு நடுவே ஒரு பிரம்மாண்ட புகைப்படம் மாட்டப்பட்டு இருந்தது .

அந்தப் புகைப்படத்துக்குக் கீழே ஒரு சின்னஞ்சிறு மேஜையில் ஒரு மஞ்சள் நிறப் பட்டுப் புடவையும் அதன் மேல் இரண்டு வளையல்களும் வைக்கப்பட்டு இருந்தன .

புடவைக்கும் வளையல்களுக்கும் பின்னால் ஒரு விளக்கு ஏற்றப்பட்டு இருந்தது .

அத்தனையின் அழகினையும் பார்த்த ஆதினி அந்தப் புகைப்படத்தின் அருகே சென்றாள். பின் ஸ்வேதா மிஸ்ஸிடம்,”இவங்க உங்க அம்மாவா” 

“ஆமாம்” – சைகை மொழியில் 

அப்போ ஆதினி கேட்டாள்

“உங்களுக்கு சைன் லாங்வேஜ் தெரியுமா மிஸ்”

“தெரியும்” என்று புன்னகையோடே சைகை மொழியிலேயே பதில் சொன்னார் ஸ்வேதா மிஸ் .

‘எப்படி ‘ என்ற கேள்வியோடு ஸ்வேதா மிஸ் முகத்தைப் பார்த்தாள் ஆதினி .

ஸ்வேதா மிஸ் அதற்கு புன்னகைத்துக்கொண்டே அவரின் அம்மாவின் படத்தைக் காண்பித்து

“அம்மா… பேச மாட்டாங்க.”

ஆதினி அமைதியாய் அம்மாவின் புகைப்படத்தைத் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் ஸ்வேதா மிஸ்ஸைத் திரும்பிப் பார்த்தாள் .

ஸ்வேதா மிஸ் தொடர்ந்தார் .

“அம்மா பிறந்ததுல இருந்தே அவங்களால பேச முடியாது.”

……..

“ரொம்ப அழகா இருக்காங்க இல்ல”

‘ஆம் என்று தலை அசைத்தாள் ஆதினி.

“சைகை மொழியில அவ்ளோ அழகா நாட்டியம் மாதிரி பேசுவாங்க. நான் காலேஜ்ல படிக்கும்போது இறந்துட்டாங்க . ரோட் ஆக்சிடென்ட் . ஒரு டர்னிங்ல திடிர்னு வந்த லாரி அம்மா மேல மோதி . அந்த இடத்துலயே”

கண்ணீர் வந்தது ஸ்வேதா மிஸ்ஸுக்கு .

ஆதினி மிஸ் அருகே சென்று மிஸ்ஸின் கை மேல் கை வைத்தாள் .

பின் சுவரில் மாட்டப்பட்டு இருந்த புல்லாங்குழல்களைப் பார்த்த ஆதினி அவற்றைச் சுட்டிக் காட்டிக் கேட்டாள் .

“உங்க அம்மா புல்லாங்குழல் வாசிப்பாங்களா”

“ஆமாம்”

சொல்லிக்கொண்டே நடந்த ஸ்வேதா மிஸ் அந்த மர அலமாரியைத் திறந்தார் .

அலமாரிக்குள் அம்மா புல்லாங்குழல் இசைக்கும் புகைப்படங்கள் வரிசையாய் அடுக்கப்பட்டிருந்தன .

அவற்றின் அழகில் ஒரு நொடி மெய் சிலிர்த்தது ஆதினிக்கு .

ஸ்வேதா மிஸ் தொடர்ந்தார் 

“என் அளவுக்கு அவங்க நேசிச்சது புல்லாங்குழல் இசையைத்தான்”

சைகை மொழியிலேயே தொடர்ந்தார் ஸ்வேதா மிஸ்

“அம்மா ஒவ்வொருமுறை புல்லாங்குழல் இசைக்கும் போதும் அந்த இசையை நான் ரசித்ததை விட அந்த இசையின் மூலமாக அம்மா என்ன சொல்ல நினைக்கிறாங்க அப்படின்னு நான் புரிஞ்சுக்கிட்டது அதிகம்”

“அம்மா வாழ்நாள் முழுக்க அதிகமா பேசினது என்னோடதான் . அவங்க வேற யார்கிட்டயாவது பேச நினைச்சதையும் எப்பவும் என் மூலமாத்தான் பேசுவாங்க”

ஆதினி உருக்கமானாள் 

“எப்பவும் என்னோட மட்டுமே பேசிட்டே இருந்த என் அம்மா இப்போ என் வாழ்க்கைல நடக்கப்போற இவ்ளோ பெரிய மகிழ்ச்சில என் கூட இல்ல”

வருத்தம் தோய்ந்தது ஸ்வேதா மிஸ் முகத்தில் 

அப்போது

ஸ்வேதா மிஸ்ஸின் முகத்துக்கு நேராக வந்து நின்ற ஆதினி…

சுற்றி இருந்த புல்லாங்குழல்கள் அத்தனையையும் விரல் நீட்டி மிஸ்ஸுக்குக் காட்டிவிட்டுக் கேட்டாள் 

“அம்மா இப்போ உங்ககூட இல்லையா”

….

புல்லாங்குழல்களையும் அம்மாவின் புகைப்படத்தையும் ஆதினியையும் பார்த்த ஸ்வேதா மிஸ்ஸுக்கு மகிழ்ச்சியும் சோகமும் ஒன்றாக உருவானது

இந்த வார்த்தைகளை அவர் எதிர் பார்த்திருக்கவில்லை

இரண்டு நொடி அமைதியானவர்.. கண்களைத் துடைத்துக் கொண்டார்.

பின் 

ஆதினியின் கன்னத்தில் கை வைத்துப் புன்னகைத்தார்.

……

“சரி வா, டின்னர் சாப்பிடப் போலாம்” 

டைனிங் ஹால் ஜன்னலின் அருகே சென்ற ஸ்வேதா மிஸ்”ஆத்யா ஜானகி ரெண்டு பேரும் உள்ள வாங்கடா டின்னர் சாப்பிடலாம்”

ஜானுவும் ஆத்யாவும் உள்ளே வந்தனர் .

ஆதினி, ஸ்வேதா மிஸ்ஸுக்குக் கிச்சனில் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வர உதவி செய்தாள் . 

ஆத்யா தட்டம் மற்றும் ஸ்பூன்களை மேஜை மேல் அடுக்கி வைத்தாள் .

ஜானு டம்ப்ளர்களை அடுக்கித் தண்ணீர் நிரப்பினாள் .

பின் நால்வரும் உட்கார ஸ்வேதா மிஸ் எல்லாருக்கும் உணவு பரிமாறிவிட்டுத் தானும் எடுத்துக்கொண்டார் .

பன்னீர் நூடுல்ஸ் .. மஷ்ரூம் மஞ்சூரியன் .. வெஜிடபிள் சாலட் .. திராட்சை.. அதோடு தேன் கலந்த வாழைப்பழத் துண்டுகள் .

ஆத்யா, “பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு மிஸ்” என்றாள்

“நன்றி மா” ஸ்வேதா மிஸ்

பின் ஸ்கூலில் நடந்த சில கலாட்டாவான சுவாரசியமான சம்பவங்களை ஜானு ஒன்று ஒன்றாய் நினைவுபடுத்திச் சொல்ல ஆரவாரத்தோடு உணவு நேரம் சென்றது .

அப்போது சட்டென்று அமைதியான ஜானுவுக்கு மீண்டும் நினைவு வந்தது

‘மிஸ் இனிமேல் ஸ்கூலுக்கு வர மாட்டாங்க’

சாப்பிடுவதை நிறுத்திவிட்டுத் தட்டில் ஸ்பூனை வைத்துக் கலக்கிக்கொண்டே மெதுவாய் அவளுக்கு மட்டும் கேட்பதாய் நினைத்து அழ ஆரம்பித்தாள் .

ஜானு அழுவதைக் கவனித்த ஆத்யா, ஆதினி, ஸ்வேதா மிஸ் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள் . ஜானுவைக் கவனித்தபடி மூவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள் .

பின் கொஞ்சம் நேரத்தில் ஜானுவும் அழுகை நின்று இவர்களோடு இணைந்துகொள்ள அனைவரும் சாப்பிட்டு முடித்தனர் .

பின் நால்வரும் சேர்ந்து மேஜையைச் சுத்தம் செய்துவிட்டு ஹாலில் வந்து உட்கார்ந்தார்கள் .

அப்போ ஜானு கேட்டாள்

“மிஸ் நீங்க க்ளாஸ்ல ஒரு முறை எங்களுக்கு ஒரு பாட்டு பாடினீங்க இல்ல . அந்தப் பாட்டை ப்ளீஸ் இப்போ பாடுங்க மிஸ்”

ஜானு சொன்னதைக் கேட்டு ஸ்வேதா மிஸ் ஆதினியையும் ஆத்யாவையும் திரும்பிப் பார்த்தார் .

“பாடுங்க மிஸ் ப்ளீஸ்” என்று இருவரும் கேட்க ..

ஸ்வேதா மிஸ் மெதுவாகப் புன்னகைத்துக்கொண்டே பாடத்தொடங்கினார் . அந்தப் பாடலை 

பன்னீரில் நனைந்த பூக்கள்
மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம்
எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்
விழியில் வண்ணக்கோலம்
சத்தம் கொண்டு சந்தம் கண்டு
பாட்டுப்பாடு குயிலே
பன்னீரில் நனைந்த பூக்கள்
மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம்
எங்கும் மிதக்க
பார்த்து ரசிப்பேன்

ஸ்வேதா மிஸ் பாடப்பாட ஆர்வமாய்க் கேட்டுக்கொண்டிருந்த மூன்று பேரும் மிஸ் பாடி முடித்தவுடன்

“ஏ…ஏ…ஏ” 

மகிழ்ச்சிக் கைதட்டல் .

அப்போது

வெளியே ஜானு அப்பாவின் கார் ஹாரன் சத்தம் கேட்டது . அப்பா காலிங் பெல்லை அழுத்தி சத்தமாக அழைத்தார்

“ஜானு”

அப்பாவின் குரல் கேட்டு ஜானு,”மிஸ், அப்பா வந்துட்டாங்க”

என்று சொல்லிக்கொண்டே வெளியே ஓடி வந்து அப்பாவைப் பார்த்து

“அப்பா இதோ வந்துட்டோம்”

என்று சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே ஓடினாள் .

அதற்குள் ஆத்யாவும் ஆதினியும் கிளம்புவதற்காக எழுந்து தயாராக நின்றார்கள் .

“மிஸ் நாங்க கிளம்பட்டுமா மிஸ்” என்று சொல்லிப் புன்னகைத்தாள் ஜானு . 

அப்போது ஸ்வேதா மிஸ்,”ஒரு நிமிஷம்” 

அருகிலிருந்த புத்தக அலமாரியைத் திறந்த ஸ்வேதா மிஸ் ‘பாரதியார் கவிதைகள்’ புத்தகத்தை எடுத்து வந்து ஜானுவுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார் .

பின்… தன்னுடைய அறைக்குள் சென்ற ஸ்வேதா மிஸ் ஒரு சின்னஞ்சிறு வீணையை எடுத்துவந்து ஆத்யாவுக்குக் கொடுத்தார் .

பின்…

ஆதினியைப் பார்த்த ஸ்வேதா மிஸ்.. 

அம்மாவின் அறைக்குள் சென்று.. வெளியே வந்து ஆதினியின் கையைத் தன் கையால் எடுத்து அம்மாவின் வளையல்களை ஆதினிக்கு அணிவித்துவிட்டார் .

ஆதினி ஸ்வேதா மிஸ்ஸைப் பார்த்தாள் .

ஸ்வேதா மிஸ் ஆதினியின் கன்னத்தை மெதுவாகக் கிள்ளிப் புன்னகைத்தார் .

“கிளம்பறோம் மிஸ்” ஆத்யா 

மூவரும் ஒரே நேரத்தில்” பை மிஸ்” என்று சொல்லிவிட்டுக் கதவுவரை சென்றபோது ஸ்வேதா மிஸ்

“ஜானகி …”

மூவரும் ஒன்றாகத் திரும்பிப்பார்க்க

“தேங்க் யூ சோ மச்”

ஜானுவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை .

“ஓகே மிஸ்” என்றாள் 

பின் மூவரும் ஓடிச்சென்று காருக்குள் உட்கார்ந்து கதவைச் சாத்திக்கொண்டு கண்ணாடியை இறக்கி”பை மிஸ்” என்று கத்த, அப்பா காரைக் கிளப்பிச் சென்றார் .

கார் சாலை வளைவைக் கடக்கும் வரை

“பை மிஸ்”

“பை மிஸ்”

“பை மிஸ்”

கேட்டுக்கொண்டே இருந்தது.

உள்ளே போக மனமே இல்லாமல் கொஞ்சம் நேரம் கேட்டருகே நின்றிருந்த ஸ்வேதா மிஸ் பின் கேட்டைச் சாத்திவிட்டு உள்ளே சென்றார்.

அங்கே ஹாலில்..

ஜானு உட்கார்ந்திருந்த சோபா மேல் ஒரு கிரீட்டிங் கார்ட் இருந்தது

ஸ்வேதா மிஸ் …

“ஒ ஜானகி …. இந்தப்பொண்ணு இருக்காளே ..” – என்று சிரித்துக்கொண்டே அதை எடுத்துத் திறந்து பார்த்தார் .

அதற்குள் ஜானு இவ்வாறு எழுதியிருந்தாள்

*

‘Miss.. Wish You a Very Happy Married Life..

நீங்க திரும்பவும் நம்ம ஸ்கூலுக்கு வந்து எங்களோட இங்கிலீஷ் மிஸ்ஸா எங்களுக்குக் க்ளாஸ் எடுக்கப்போகும் டேக்காக வெயிட் பண்றேன் மிஸ்.

பன்னீரில் நனைந்த பூக்கள்
மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம்
எங்கும் மிதக்க
பார்த்து ரசிப்பேன்

– ஜானகி

(ஜானு தொடர்வாள்…)

kritikadass86@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button