சிறுகதைகள்
Trending

ஜெய்புன்னிஸா- மானசீகன்

1.

அது பழைய ஓரியண்டல் ஃபேன். அதனால்தான் அப்படித் தடதடத்துக் கொண்டிருந்தது. நாற்காலியில் அமர்ந்திருப்பவர் டாக்டர் சேட். மனோதத்துவத்தில் பெரிய கில்லாடி. விக்கிரவாண்டி ரவிச்சந்திரனைப் பலமுறை விவாதத்தில் மடக்கியவர். ‘பலவீனமான மனங்கள் தானே பிரம்மாவாகிப் படைக்கும் சிருஷ்டிகளே ஆவிகள்’ என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கை. ஃபிராய்டு இவருக்குக் கிட்டத்தட்ட கடவுள். ‘பிற்கால கார்ல் யுங் மட்டுமே உலகத்தின் ஒரே கெட்ட ஆவி’ என்று அடிக்கடி சொல்வார்களே. ‘ஆவியின் இருப்பு அவசியம்தான்.. அது இல்லையென்றால் உலகத்தின் சிறந்த உணவான இட்லியை எப்படித் தயாரிப்பதாம்?’ ஹெஹெ ன்னு சிரிப்பார்.‌ இவருடைய நகைச்சுவை உணர்வின் தரம் அந்த அளவுக்குத்தான். ஆனால் மனித மனதின் ஆழங்களை ஒரு நொடியில் படித்து விடுவார். ஏர்வாடி, குணசீலத்தால் கூட குணப்படுத்த முடியாத பேய் பிடித்தவர்கள் இவரிடம் வந்தால் ஆறே மாதத்தில், ‘பேய் இல்லை..இல்லவே இல்லை’ என்று அவர்கள் வாயாலேயே சொல்ல வைத்து விடுவார். அவ்வளவு வாய் ராசி.

அக்கீம் அவர் கிளினிக்குக்கு வெளியேதான் சிகரெட் குடித்துக் கொண்டிருக்கிறான். மூடிய கதவின் உள்ளே டாக்டருக்கு எதிரே அவன் அக்கா..

” வீட்டுக்காரு எங்க இருக்காரு?”

“வெளிநாட்ல”

” எந்த நாடு?”

“சவூதி”

“அந்தப் பேயைக் கொன்னுரலாமா?”

“…………….”

‘உங்களத்தான்?’

“பேய எப்பிடிக் கொல்ல முடியும்?”

“நா கொல்லுவேன். அதுல எக்ஸ்பர்ட் நானு. அதுக்காக ஜெயிலுக்குக் கூட போய்ட்டு வந்திருக்கேன். நீங்க நிம்மதியா தூங்கனுமா வேணாமா? ஒங்க மகன் ..அந்தக் குட்டிப் பய்யன் பேரென்ன?”

“யாசிர்”

“ம்..யாசிர்”

“அவன் உயிரோட இருக்கனும்ல”

“அக்கா நல்லவங்க அப்டிலாம் செய்ய மாட்டாங்க”

“யார் சொன்னா?”

“அவங்களேதான்”

“எப்ப?”

“தினமும்”

“எப்டி வருவாங்க?”

“உருவம் தெரியாது. ஒரு உடம்பு எரியுற மாதிரி காட்சி தெரியும். கூடவே அலறல் சத்தம்‌. கொஞ்ச நேரத்துல காதுல கிசுகிசுப்பா என்ட்ட பேசுவாங்க‌. ப்ரியமா..அன்பா…தோழி மாதிரி..அக்கா மாதிரி…அம்மா மாதிரி…”

“ஒங்களுக்கு அக்கா இருக்காங்களா?”

“இல்ல..”

“அம்மா?”

“ஒம்போது வயசுல செத்துட்டாங்க”

“நெருங்குன தோழி..?”

“எனக்கு எட்டாவதுல பெரியம்ம வந்துட்டு போனப்புறம் மூஞ்சியெல்லாம் அம்மைத் தழும்பு… ந்தா இப்பவும் இருக்கே( முகத்தை கோணிக் காட்டுகிறாள்)யாரும் என்கிட்ட பேச…”

“அழுறீங்களா?”

“……. ”

“cool… cool”

“சரி..இப்ப அந்தம்மா எங்க”

“அக்காவா.? பக்கத்து சேர்லதான் உக்காந்திருக்காங்க. இப்பக்கூட எங்கண்ணீர தன் குரலால் துடைச்சு விட்டாங்க”

“குரலால தொடச்சாங்களா?? ஓகே..ஒங்க வீட்டுக்காரு ஒங்க மேல ப்ரியமா இருப்பாரா?”

“ஒங்களத்தான் கேக்குறேன்”

“…………..”

” ஹலோ…….”

“இல்ல… அக்கா அது பத்தி ஒண்ணும் சொல்ல வேணாங்கிறாங்க…”

“அக்கா… இது ட்ரீட்மெண்டுக்காக ஒங்க தங்கச்சி நல்லாருக்கனும்ல.. ப்ளீஸ்… ஏன் இடைல எந்திரிக்கிறீங்க…”

“அக்கா…அக்கால்ல..அவங்க விசுவிசுன்னு எந்திரிச்சு வெளிய போயிட்டாங்க”

“ஓகே ஓகே.. அவங்க கிட்ட நா அப்புறம் பேசிக்கிறேன். அக்காவ எப்ப மொத மொத பாத்தீங்க?”

“இந்த வீட்டுக்கு வந்து நாலு வருஷம் ஆச்சு. இங்க வர்றப்பவே ஆசிர் பொறந்துட்டான். அவரு அதுக்கு கொஞ்ச நா முன்னாடிதான் வெளிநாடு போனாரு. மொத மூணு வருஷம் எனக்கு எதுவுமே தோணுனதில்ல. அக்கா இந்த வீட்லதான் தீ வைச்சு இறந்தாங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா பயமே இருந்ததில்லை. நா நல்ல தொழுகையாளி. யாசின் குர்ஆனுன்னு ரெகுலரா ஓதுவேன். மத்தவங்க பயமுறுத்தினாலும் நா சின்னதாக் கூட எதையுமே உணர்ந்ததில்ல. போன வருஷம் இவரு வந்தாருல. அப்பத்தே..”

“அப்ப என்ன நடந்துச்சு?”

“இவரு…இவரு…சொல்லக் கூச்சமா இருக்கு”

“சும்மா சொல்லுங்க …நா ஒங்க அக்கா மாதிரி”

அவள் கண்கள் லேசாய் மின்னின.

“இவரு எங்கூட சரியா பேசவே மாட்டார். மூஞ்சியப் பாக்கவே மாட்டார். முத்தம் கொடுத்ததே இல்ல தெரியுமா? ”

“அழாதீங்க ப்ளீஸ்…அக்கா சொல்றேன்ல”

இப்போது டாக்டர் பெண்மை நிரம்பிய குரலில் பேசத் தொடங்கியிருந்தார்.

‘”வருவாரு. பாவாடையைத் தூக்கிட்டு ……அவ்ளவுதேன். ஒடனே மல்லாந்து தூங்கிருவாரு. இல்லாட்டி சிகரெட் புடிக்க வெளில போயிருவாரு. வெளிநாட்டுக்குப் போயிட்டு லீவுக்கு வந்தப்ப குடிச்சுட்டுதான் கூடப் படுக்க வருவாரு. எனக்குன்னா குமட்டும். ஆனாலும் சகிச்சுக்குருவேன். ஒரு நா எனக்கு ரொம்ப ஒரு மாதிரியா இருந்துச்சு. அது என்னன்னு சரியா சொல்லத் தெரியல. பீரியட் வந்து 11 , 12 ,13 நாளுகள்ல பொம்பளைகளுக்கு ஒரு மாதிரி ஒடம்புலயும், மனசுலயும் ஜிவ்வுன்னு வேகம் கிளம்பும்ல. எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்ல கூட இத எழுதிருப்பாரு..”

“நாவல்லாம் படிப்பீங்களா?”

அவள் கண்கள் இன்னும் கூடுலாகப் பளிச்சிட்டன..

“ம்..லட்சுமி, அநுத்தமா, சிவசங்கரி, இந்துமதி, பாவை சந்திரன், சுஜாதா, பாலகுமாரன், ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார், ரமணிச்சந்திரன், சுபா, பிகேபி, தேவிபாலா, இந்திரா சௌந்தர்ராஜன், கோட்டயம் …”

” ok…’11 12 13’ நாட்கள் பத்தி சொல்லிட்டிருந்தீங்க”

“ஆமா. அதே டயம்தான்… அன்னிக்கு ரெண்டு பேரும் அந்த மாதிரி ஒண்ணு மண்ணா இருக்குறப்ப ஏதோ ஒரு வேகத்துல நா எம்பி கன்னத்துல முத்தம் கொடுத்துட்டேன். அவரு டக்குன்னு நிறுத்திட்டு ஒரு பார்வை பாத்தாரு. அத என்னால தாங்கவே முடியல. படார்னு எந்திரிச்சவரு என் முடியப் புடிச்சுத் தூக்கி ஓங்கி அறைஞ்சாரு. ‘ஏண்டி …….. நா இல்லாதப்பா நல்லா ஊர் மேஞ்சிருக்க? இந்த மூஞ்சிக்கு எவன்டி வர்றான்? நானு நல்லா குண்டி தேயப் பாலைவனத்துல ஒழைக்கிறே. நீயி கூதிக் கொழுப்பெடுத்து அலையிற சும்பக் கூதிகளுக்குக் காசக் கொடுத்து அரிப்பத் தீத்துக்குறியா…தூ’ ன்னு துப்பிட்டு லுங்கியைத் தூக்கி தலைவழியா போட்டு சட்டையை மாட்டிக்கிட்டு வெளில போயிட்டார். மூஞ்சியெல்லாம் எச்சீ. யாசிர எந்தம்பி அம்மா வீட்டுக்குத் தூக்கிட்டுப் போயிட்டான். எனக்கு பீக்கிடங்குல யாரோ தள்ளி விட்ட மாதிரி இருந்துச்சு. தொடைல பிசுபிசுப்பா. மூஞ்சில எச்சி. அந்த இடத்துல……..ச்சீ..ச்சீ…கருமம். கருமம். என் ஒடம்ப அப்படியே வெட்டிப் போடனும் போல இருந்துச்சு. பாத்ரூம் போற வழிலதான் கிச்சன். அப்பத்தே முடிவு செஞ்சேன். கேஸப் பொருத்தி செத்துரனும்னு. இந்த உடம்பு எரிஞ்சு சாம்பலாகனும் அதேஞ் சரின்னு. அப்பத்தான் என் முன்னாடி அக்கா மொதமுறையா எரியுற உடம்போட தெரிஞ்சாங்க. வாயில கை வச்சு வீல்னு கத்திக்கிட்டு உள்ள வந்தா அங்கயும் அதேதேந் தெரியுது. கண்ண மூடி ஸலவாத்து சொன்னா கண்ணுக்குள்ளயும். அப்பத்தான் அக்கா என் காதுக்கிட்ட வந்து மெதுவா பேச ஆரம்பிச்சாங்க…’

“நா ஒங்கள தொடுவேனா?”

சடாரென்று நிமிர்ந்து மேலே பார்த்தவள் கொஞ்சம் நாணத்தோடு சேலைத் தலைப்பை இழுத்து விட்டுக் கொண்டாள். “அக்கா வந்துட்டீங்களா… ஆமா டாக்டர் எங்க?”

“நாம வீட்டுக்கு வந்துட்டோம். ம்.. இப்ப சொல்லு”

“தொட மாட்டீங்க. காதுக்குள்ள மெதுவா பேசுவீங்க. அந்தக் குரல் ஐஸ்கிரீம காதுல துளித்துளியா ஊத்துற மாதிரி இருக்கும். குரல்லயே கண்ணீர தொடச்சு. மடியில போட்டு, தலை கோதி, விரல் நீவி, உடம்பெல்லாம் தடவிக் கொடுத்து…அக்கா எனக்கு வேறு யாருக்கா இருக்கா?

ஓங்கிய குரலில் அழத் தொடங்கினாள்..

“அழாதீங்க ப்ளீஸ்… அக்காவும் அழறாங்க பாருங்க. கண்ண தொடைச்சுக்கங்க. ஆமா அக்கா அதுக்கப்புறம் தினம் வந்தாங்களா?”

“அவரு என்கூட படுக்க வந்தா அக்கா எரியுற உடம்போட கத்திக் கூப்பாடு போடுவாங்க. நானும் இவரைத் தள்ளி விட்டு அதே மாதிரி கத்துவேன். எது நானு? எது அக்கான்னு எனக்கே தெரியாது. தினம் இப்டித்தே. இவரு எங்க வீட்ல போயி பஞ்சாயத்து வச்சாரு. பஞ்சாயத்துல நா அடக்க ஒடுக்கமாத்தேன் இருப்பேன். ஆனா நைட்டானா அக்கா வந்துருவாங்க. அவரு முயற்சி பண்ணிப் பாத்துட்டு வெளில போனப்புறம் அக்கா என்கிட்ட பேச ஆரம்பிப்பாங்க. இப்டியே போச்சு. அதுக்கப்புறம் அவரு வெளிநாடு போயிட்டாரு. ஆனா போறப்பவே எல்லார்ட்டயும் கட்டன்ரைட்டா சொல்லிட்டாரு. அடுத்த தடவை நா வர்றப்ப இவ இதே மாதிரி இருந்தா ஒடனேயே ‘தலாக்’ தேன்னு. இப்ப ஃபோன்ல கூட பேசுறதில்ல. தம்பிட்ட மட்டும் பேசி அவன் பேருக்கே பணம் அனுப்பி விட்ருவார்.

“சரி அவர் போனப்புறம் அக்கா தெனமும் வருவாங்களா?”

“தெனம் வந்து பேசுவாங்க. சில நேரம் நடுராத்திரி வரை‌. சிலநாள் விடியுற வரை. ஒண்ணு ரெண்டு நா காலைல பத்து பண்ணெண்டு மணி வரை பேசிக்கிட்டே இருப்போம். ஆனா உடம்பு எரியுற மாதிரி கண்ல தெரியுறது எப்பவாவதுதே”

‘நல்லா யோசிச்சுப் பாருங்க..அது எப்ப?’

“ம்..எப்பவாவது. மாசத்துக்கு ஒண்ணு ரெண்டு தடவை”

“நிதானமா நினைவு படுத்திச் சொல்லுங்க. அந்த ரெண்டு மூணு நாள் கண்டிப்பா இந்த ‘ 11 12 13 ‘ தானே?”

“ம்…ம்…ஆமா ஆமா. நீங்க கேட்டப்புறம்தே எனக்கே தோணுது. அப்பத்தான் அப்பத்தான்”

“கூட யாராவது ஒறவுக்காரங்க இருந்தா ஐ மீன் அந்த நாள்ல ..”

“வரமாட்டாங்க. ஆனா எல்லோரும் தூங்குனப்புறம் மெதுவா யாருக்கும் சத்தம் கேக்காத மாதிரி பேசிக்குவோம்”

“அக்கா தன் சாவைப் பத்தி ஒங்க கிட்ட சொல்லிருக்காங்களா?”

“இல்ல. ஆனா எனக்கு அதுல நெறய சந்தேகம் இருக்கு. அக்கா புருஷன் அவங்க தீ வச்சு செத்து ஒரே மாசத்துல கல்யாணம் கட்டி இப்ப அவருக்கு ரெண்டு பொம்பளப்புள்ளைக. அவருக்கு அக்கா ஞாபகமே கெடயாது. அக்கா மாமியாரு , நாத்தனாரு யாருமே நல்லவங்க இல்ல. அக்கா மேல ஏதோ பழி போட்டு அவங்க தீ வச்சிக்கிட்டதா எல்லாஞ் சொல்றாங்க. ஆனா அக்காவுக்கு என்னமோ நடந்திருக்கு. எனக்குத் அது அடிக்கடி தோணும்”

“அக்காட்ட கேட்ருக்கீங்களா?”

“கேட்டேன். அக்கா சொல்லாது. அதக் கேட்டா நீ அழுவ. நீ அழுதா என் மனசு தாங்காதுன்னு முடிச்சு விட்ரும். ஆனா அக்கா தங்கமானவங்க. அவங்க இளையகுடியா சந்தோஷமா வாழுறாங்க. அவங்களோட மூத்த மகளுக்கு இப்பதே கல்யாணம் ஆச்சு. இளைய மகளுக்கு நிச்சயம் பண்ணிட்டாங்க. அக்கா அவங்களுக்கு இதுவரைக்கும் சிறு தொந்தரவு கூட கொடுத்ததில்ல. அதான் அக்கா. என் செல்ல அக்கா”

“எங்கிட்ட ஏதாவது சொல்லனுமா ஒங்களுக்கு”

“எனக்கு ஒண்ணும் இல்ல. நா நல்லா இருக்கேன். அவரு தலாக் சொன்னா பரவாயில்லை. யாசிருக்கு மட்டும் வழி பண்ணச் சொன்னா போதும். கொஞ்சம் சொத்து இருக்கு. அது போதும். கண்ட கண்ட பாவாக்கள், தர்ஹா, பேயோட்டறவன் எல்லாம் வேணாம். அக்காவுக்கு வலிக்குது போல. அந்த மாதிரி நேரத்துல அக்கா குரல் ஒரு மாதிரியா இருக்கு. ப்ளீஸ் டாக்டர். ப்ளீஸ்…ப்ளீஸ்”

“ok ok நா பேசிடறேன்..வெளில போயி அக்காவ வரச் சொல்லுங்க”

“தேங்க்ஸ் டாக்டர்”

வெளியேறும் போது அவள் முகம் அப்படி மலர்ந்து கிடந்தது.

“வாங்க அக்கீம்..உக்காருங்க”

“என்னாச்சு டாக்டர்..சரியாயிருவாங்களா?”

“அவங்க பக்காவா இருக்காங்க. டேஞ்சரஸ் பொஸிஷன். ஆனா அதை நார்மல் லைஃபுக்கு பாதிப்பு வராது மாதிரி கவனமா கையாண்டுக்கிட்டு இருக்காங்க. இப்ப நீங்க செய்ய வேண்டிய விஷயம் ரெண்டு. ஒண்ணு ஒங்க மச்சான தலாக் கொடுக்கச் சொல்லனும். ரெண்டு அந்த வீட்டைக் காலி பண்ணிட்டு அவங்கள ஒங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிருங்க.”

“டாக்டர் தலாக்கா?”

“ஆமா வேற வழியே இல்லை. காரணம் கேக்காதீங்க. சில விஷயங்களைச் சொல்ல முடியாது. வீடு காலி பண்றது இயல்பா நடக்கனும். அதாவது இதுக்காக காலி பண்ணி கூட்டிட்டு போறீங்கன்னு அவங்களுக்குத் தெரியக் கூடாது. அதுக்கு துருப்புச் சீட்டா யாசிரையோ , வேறு யாரையோ பயன்படுத்திக்கலாம்”

“அப்ப அந்த வீடுதான் பிரச்சினையா டாக்டர்..?”

“இல்ல. எல்லாருக்குமே பேய் புடிக்கக் காரணம் நம்ம சமூகம்தான். பேய்ங்கிறது இந்த சமூகம் பலவீனமானவங்க மனசுல வைச்சு விடற சுடுசாம்பல் கங்கு. அத ஊதி விட ஒரு கதை வேணும் அவ்வளவுதான். சடார்னு நெருப்பு எரிய ஆரம்பிச்சிரும். மூணாவது ஒண்ணிருக்கு ரொம்ப முக்கியமானது”

“என்ன டாக்டர்?”

“வீடு மாறினாலும், தலாக் சொன்னாலும் அது ஒங்க அக்காவ விட்டுப் போயிராது. நிஜத்தில் அப்படி ஒண்ணு இல்லவே இல்லை. ஒங்க அக்காவோட க்ரியேஷன் அது. ஆனா அவங்க ரொம்ப டீப்பா போயிட்டாங்க. வேற யாரா இருந்தாலும் ஒண்ணு ஆள் க்ளோஸ். இல்லன்னா சுத்தமா மூழ்கிருப்பாங்க. ஒங்க அக்கா மத்த நேரங்கள்ல படு நார்மலா இருக்காங்க. நம்மள விடத் தெளிவா யோசிக்கிறாங்க. அதுக்குக் காரணம் அவங்க உருவாக்கி வச்சிருக்கிறது வயலண்டே இல்லாத வெறும் குரல். முத ரெண்டையும் நீங்க பண்ணிட்டீங்கன்னா உருவத்தோட வருகை ரொம்ப குறைஞ்சிரும். அதுக்கப்புறம் அவங்களுக்கு நா தனியா கவுன்ஸ்லிங் தந்தா போதும். அது சுத்தமா நின்னிடும். அந்த கவுன்ஸ்லிங் என்னான்னு கேக்காதீங்க. அதுவும் சீக்ரெட். ஆனா அப்பவும் குரலை என்னால நிப்பாட்ட முடியாது. அதை பிரேக் பண்ண ஒரே வழிதான் இருக்கு.”

“என்ன டாக்டர்..?”

“ஒங்க அக்கா உருவாக்கி வச்சிருக்கிற அந்த பொம்பளயோட இமேஜை நாம் உடைக்கனும்.”

“செத்தவங்க இமேஜை எப்பிடி டாக்டர் ஒடைக்கிறது?”

“நீங்க முகநூலெல்லாம் பார்க்கிறது இல்லையா? அங்க முழுநேரத் தொழிலே இதானே? ஒகே அது தனி சப்ஜெக்ட். ஒங்க அக்கா அடிப்படைல மென்மையான குணம் கொண்டவங்க. யாருக்கும் கெடுதல் தரக் கூடாதுன்னு நினைக்கிற நல்லவங்க. அந்த எச்சரிக்கைதான் அவங்கள இப்ப வரை காப்பாத்திட்டு இருக்கு‌. ஸோ அவங்க உருவாக்குன பொய் பிம்பமும் அவங்கள மாதிரியே. இது நிஜம். அது நிழல் அவ்வளவுதான். ஆனா அந்த பொய் பிம்பத்தை நாம வில்லியா மாத்தப் போறோம்”

“புரியல டாக்டர்”

“அதாவது ஒங்க அக்கா ஒரு பேய் இருக்குன்னு நம்புறாங்க. அத கூடவே வச்சிக்கனும்னு நினைக்கிறாங்க. இப்ப அந்தப் பேய் ஒங்க அக்கா மாதிரி நல்ல பொண்ணு இல்ல. கொடூரமான ஆளு அப்படின்னு தெரிஞ்சா அத துரத்தி விட்ருவாங்க. ஆனா அது அவ்வளவு சுலபம் இல்லை. அத அவங்களே மனசார நம்பிச் செய்யனும்”

“அதுக்கு என்ன செய்யனும் டாக்டர்?”

“அந்தச் செத்துப் போன பொம்பளயோட இளையகுடியா புள்ளைகளுக்கு இந்த ஆவியால பெரிய துன்பம் நடந்ததா ஒங்க அக்காவை நம்ப வைக்கனும். அதுக்குக் காரணம் ஒங்க அக்கா அந்தப் பேயை வர வச்சதுதான்னு அவங்க சண்டைக்கு வரனும். அப்ப ஒங்க அக்கா மனசுல உருவாகுற வெறுப்பும், குற்ற உணர்வும்தான் அந்தக் குரல விரட்டும். இது எல்லாமே நாடகம்தான். ஆனா பிசிறில்லாம பண்ணனும்”

“ஆனா…அதுக்குப் பெறகு அக்கா டிப்ரஸன்ல போயிட்டா?”

“சான்ஸ் இருக்கு‌. ஆனா குழந்தை இருக்கில்லியா? அந்த நெனப்பு காப்பாத்திரும். நீங்க, ஒங்க அப்பா எல்லோரும் நம்பிக்கை தரனும். கூடவே இருக்கனும். நீங்க கொஞ்சம் லேட்டாக் கூட கல்யாணம் முடிங்க. அக்காவுக்காக. அப்றம் நாளைக்கு செத்துப் போன பொம்பளையோட வீட்டுக்கார். அதான் அந்த ஹவுஸ் ஓனர். அவரக் கூட்டிட்டு வாங்க”

“டாக்டர் அவரு கம்யூனிஸ்டு. இதெல்லாம் …”

“பேய்க்கு கட்சி கிடையாது. அது கம்யூனிஸ்ட், தி.க ன்னெல்லாம் பாக்காது. சொல்லப் போனா அந்த வீட்டுப் பொம்பளைகளுக்குத்தான் பேய் பிடிக்க வாய்ப்பு அதிகம். கேரளாவுல கிருஷ்ணய்யர் தெரியுமா..? நயங் கம்யூனிஸ்ட் அவரு. கடைசிக் காலத்துல செத்துப் போன பொண்டாட்டி யார் வயித்துல பொறப்பான்னு? ஆவி மீடியத்துகிட்ட தொணாந்துக்கிட்டு இருந்தாரு. அவர்ட்ட நா பேசிக்கிறேன். நீங்க இப்ப போகலாம்.”

“ஓகே டாக்டர்”

டாக்டர் சொன்னதிலிருந்து ஆறு மாசம். எல்லாமே சரியாக நடந்தது. டாக்டர் எழுதிய நாடகத்தின் டைரக்ஷன் வேலையை அக்கீம் வெகு திறமையாகச் செய்தான். அத்தா, பக்கத்து வீட்டுக்காரர்கள், இன்னொரு டாக்டர், அந்தப் பொம்பள புருஷன், இளையகுடியாள் எல்லோருமே வெகு சிறப்பாக நடித்தார்கள்

அத்தாவுக்கு ஹார்ட் அட்டாக் ரொம்ப சீரியஸ் என்றுதான் நாடகம் தொடங்கியது. அக்காவுக்கு அத்தா மீது நிரம்ப மரியாதை உண்டு. பதறிப் போய் ஆஸ்பத்திரியிலேயே கிடந்தாள். சற்றேறக்குறைய இதே காலகட்டத்தில், ‘வீடு இடிச்சுட்டு புதுசாக் கட்டி மருமகனைக் குடி வைக்கப் போறோம் ‘ என்று அந்த கம்யூனிஸ்ட் வீட்டைக் காலி செய்யச் சொன்னார். அது உண்மையிலேயே அவர்களின் மனசுக்குள் கிடந்ததுதான். அவளை எப்படி காலி செய்யச் சொல்வது? என்கிற யோசனையில் இருந்திருக்கிறார்கள். இப்போது ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். அத்தாவே கதின்னு கிடையாக் கெடந்ததால அவள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் பகலெல்லாம் ஆஸ்பத்திரில இருந்தாலும் நைட்டானா வீட்டுக்கு வந்து இரவெல்லாம் யாருடனோ பேசிக் கொண்டிருப்பாள். அதற்கடுத்து ஒவ்வொரு மாச இடைவெளியில் அந்த இரண்டு காட்சிகளும் துல்லியமாக அரங்கேற்றப்பட்டன. இதற்கிடையில் அத்தாவும் தேறி வீட்டுக்கு வந்து விட்டார். மச்சான் ஏற்கனவே ஃபோனிலேயே அக்காவிடம் தலாக் சொல்லி விட்டார். அதுக்கு முன்னாடி ஒரு தடவை சேட் டாக்டரிடம் கவுன்சிலிங்கும் போய் வந்து விட்டாள். ஆரம்பத்தில் இரவெல்லாம் ஒரே அழுகை. பிறகு ‘போக்கா ‘ , ‘ வராதாக்கா’ , ‘எங்கூட போசாத.. நீ கெட்டவ’ , ‘ உன்னைப் போயி நம்பினே பாரு’ , ‘ அவங்க பாவம்’ என்று நடுராத்திரியில் சத்தம் போடுவாள். யாராவது போய் என்னன்னு கேட்டால், ‘அவளப் போகச் சொல்லுடா..அவ என் அக்கா இல்ல ‘ ன்னு பல்லைக் கடித்தபடி அழுவாள். பகலெல்லாம் யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பாள். யாசிருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மட்டும் எந்திரம் போல் செய்தாள். அவளே விரும்பி தர்ஹாவுக்கு வந்து தினந்தோறும் தண்ணி ஓதிக் குடித்தாள். பழையபடி ஓதுகை, தொழுகைன்னு மாறினாள். யார் மந்திரிக்க வந்தாலும் கூட உட்கார்ந்து ஒத்துழைத்தாள். அத்தாவும் , அக்கீமும் அவளைக் கண்ணைப் போல பார்த்துக் கொண்டனர். எல்லாம் சரியாகி விட்டது. இப்போதெல்லாம் இரவுகளில் நிம்மதியாய் தூங்குகிறாள். பேச்சுக்குரலே இல்லை. டாக்டர் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.

“ஒங்க அக்கா அந்த ஆவி தன் உடம்புக்குள்ள இருக்கிறதா இன்னும் நம்ப ஆரம்பிக்கல. ஸோ நைட்டுல பேசுறத 48 நாள் நிறுத்திட்டாலே முடிஞ்சது. அவ குணமாயிட்டான்னு அர்த்தம். ஆனா மறுமணம் குறித்து இப்போதைக்கு பேசிடாதீங்க.”

இந்த ரெண்டு மாதங்களில் புதிதாய் வேறொரு பிரச்சினை முளைத்திருக்கிறது. அக்கா இப்போது பெரும்பாலும் அக்கீமையே உற்று உற்றுப் பார்க்கிறாள். அவள் பார்வையில் சொல்ல முடியாத ஏதோ ஒரு ஏக்கம் இருக்கிறது. பக்கத்தில் இருந்தால் கைகளைப் பிடித்துக் கொண்டே பேசுகிறாள். குளிக்கும் போது கூச்சமே இல்லாமல் கதவைத் தட்டி உள்ளே வந்து சோப்புத்தூள் எடுத்துப் போகிறாள். உடை மாற்றும் போது அருகில் வந்து சாதாரணமாகப் பேசுகிறாள். இதெல்லாம் கூடப் பரவாயில்லை. இரவுகளில் பலநேரம் அவனுக்கு அருகே வந்து ஒட்டிப் படுத்துக் கொள்கிறாள். விடிவதற்கு முன்னால் போய் விடுகிறாள். கைகளை அவன் மீது போட்டுக் கொள்வதோடு சரி. வேறு எதுவும் இல்லை. ஒரே ஒரு தடவை நெற்றியில் முத்தம் தந்தது போல் இருந்தது. இது அவனுக்கு என்னவோ போல் இருக்கிறது. சரியாகப் படவில்லை. இது எங்கு போய் முடியப் போகிறது? என்று யோசிக்க பயமாய் இருந்தது. அதற்காகத்தான் இன்று சேட் டாக்டரைப் பார்க்க வந்திருக்கிறான்.

டாக்டர் கிளினிக் இடையில் நாலஞ்சு மாசமாய் பூட்டி இருந்தது. வெளிநாடு போயிருப்பதாகச் சொன்னார்கள். அந்த இரு நாடகங்கள் அரங்கேறுகிற போது கூட அவர் ஊரில் இல்லை. டாக்டரிடம் தனியே போய் இந்த ரெண்டு மாச மேட்டரை முழுதாய்ச் சொல்லி விட வேண்டும் என்றுதான் வந்திருக்கிறான். அக்காவைத் தற்செயலாக டாக்டரை சந்திக்க வைக்க வேண்டும். கவுன்ஸ்லிங் என்று கூப்பிடக் கூடாது.”

இவன் போன போது கிளினிக்கில் இருந்த பொருட்களை மினிடோர் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். கம்பவுண்டர் சலீம் ஆட்களை ஏவிக் கொண்டிருந்தான்.

“சலீம் என்னாச்சு”

“டாக்டரோட மகன் எல்லாத்தையும் பெரியகுளம் கொண்டு வரச் சொல்லிட்டாரு. அவரும் டாக்டருதானே.? இதய டாக்டர். என்னைய அங்க வரச் சொல்லிட்டார்.”

“நம்ம டாக்டர் எங்க?”

சலீம் என்னை ஏற இறங்கப் பார்த்தான். “உங்களுக்கு விஷயமே தெரியாதா? ”

நான் டாக்டருக்கு ரொம்ப நெருக்கம் என்று தெரியும் அவனுக்கு. வயசு வித்தியாசம் இல்லாமல் நாங்கள் சகல விஷயங்கள் குறித்தும் பேசுவதை நேரில் பார்த்தவன் அவன்.

“தெரியாது சலீம்..என்ன?”

“டாக்டரு கொடைக்கானல்ல இருந்து வர்றப்ப கார் ஆக்சிடென்ட். ஃபுல் தண்ணி வேற. ஸ்பாட் அவுட்”

“யே என்ன சொல்ற? டாக்டர் என்னிக்கு குடிச்சார்?”

“வாஸ்தவம்தே. குடிக்க மாட்டார். ஆனா ஒருத்தன் குடிக்கிறதும், குடிக்காமப் போறதும் அவன் கைலயா இருக்கு…?”

“……………”

” டாக்டரு இந்த நாலு மாசமா வெளிநாடெல்லாம் போகல. எங்கள அப்டி சொல்லச் சொல்லிருந்தார். நடக்கக் கூடாததெல்லாம் நடந்தா ஒரு மனுஷன் எவ்வளவ தாங்குறது? ஊருல எல்லாவனோட மன ஊனத்தை நிமித்தினாலும் அவருக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்குதானே?? மனநோய் டாக்டர்க்கு மனச அல்லா என்ன இரும்புலயா செஞ்சு விட்ருக்கான்…?”

“சலீம்…என்ன…..?”

“டாக்டர்க்கு பையனுக்கு அப்றம் ரெண்டு பொண்ணு தெரியும்ல? மூத்தத ராம்நாட்ல கொடுத்திருத்தார். நல்லா வாழ்ந்து ஒத்தப் பொம்பளப் புள்ள பெத்ததுக்கு அப்றம் திடீர்னு யாரும் இல்லாதப்ப வீட்டப் பூட்டி புள்ளயோட தீ வச்சிக்கிருச்சு. இத்தினிக்கும் புருஷனோடவோ, மாமியாக்காரியாடவோ ஒரு பொட்டுச் சண்டை இல்ல. சாகுறதுக்கு முதநா கூட பாவி மக புருஷன் கூட படத்துக்குப் போயிருந்தாளாம். போலிஸ் அந்தம்மா செல்லெல்லாம் எடுத்து நோண்டிப் பாத்திருச்சு. எந்தக் கெட்ட சகவாசமும் இல்ல. என்ன விதியோ. அப்பவே ஆள் பாதியாயிட்டார்.”

அக்கீம் மூச்சடைத்து நின்றிருந்தான். நிற்க முடியாமல் கால்கள் தடுமாறின.

“அது முடிஞ்சு சரியா ஒரு மாசத்துக்கு அப்புறம் இளைய மகளக் கட்டுனவன கார் ஏத்திருச்சு. கல்யாணம் ஆயி ஆறே மாசம். ஏத்துனது அவன் கார்தே. பெரிய கல்லு வச்சு குமுளி மலைப்பாதைல நிறுத்திருக்கான். அது இந்த வாக்குல திரும்ப வாய்ப்பேயில்லை. எல்லாருமே சொல்றாங்க அத. ஆனா என்ன எழவோ எவன் கண்டான்?? கரெக்டா அவனைத் தள்ளி கூடவே காரும் மலைலர்ந்து உருண்ட்ருச்சு. ஆறே மாசத்துல தாலியறுத்து பாவிமக தெருவுல நிக்கிறா. அப்புறம் அந்த மனுஷன் குடிக்காம என்ன செய்ய முடியும்? ந்தா வர்றேப்பா…வர்றே….சார் ஒரு நிமிஷம்”

அக்கீம் பேயடித்தது போல அந்த மதிலில் சரிந்தான். சலீம் தன் தலையில் கொட்டி விட்டுப் போன தீக்கங்குகள் மயிர்க்கால்களைப் பொசுக்கத் தொடங்கியிருந்தன.

இதெப்படிச் சாத்தியம்? சலீம் சொன்ன இரு சம்பவங்களும் அக்காவுக்காக வரி பிசகாமல் டாக்டர் எழுதிய திரைக்கதை.

அவன் உடம்பு முதன்முதலாய் அதுவரை அறியாததொரு அமானுஷ்யத்தை உணர ஆரம்பித்திருந்தது

2.

உடலை விட்டுப் போன உடனே என்னவாகிறது உயிருக்கு? இந்தக் கேள்வி மட்டும் தோன்றாமலிருந்தால் மதங்கள் பிறந்திருக்காது இல்லையா? எல்லா மதங்களின் அடிப்படைக் கட்டுமானமும் மரணத்தில்தான் நிலை கொண்டிருக்கிறது. மரணத்தின் மர்மமல்லவா இந்த உலகை இயக்கிக் கொண்டிருக்கிறது. அது மட்டும் மல்லாக்கப் படுத்துக் கிடக்கும் பொம்பளையைப் போல் தன் காலை அகட்டிக் காட்டினால் எல்லாம் ப்பூ வென்று போய் விடும்.

நான் எரிந்து கொண்டிருந்ததை நானே பார்த்தேன். அவள் மெல்ல அடங்கிக் கீழே விழுந்தாள். நான் நின்றிருந்த… இந்த வார்த்தை சரியில்லை. நின்றிருந்த என்று எப்படிச் சொல்வது? மிதந்து கொண்டிருந்த இடம். ஆம், இதுதான் சரி. ஒரே இருளாக இருந்தது. இருள் என்றால் மின்சாரம் போன பிறகு உங்கள் அறை இருளாகிறதல்லவா? அந்த இருள் இல்லை. இது வேறு. இதை நிச்சயம் உங்கள் கண்களால் பார்க்க முடியாது. எனக்குக் கண் இல்லை என்பதால்தான் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் சகலத்தையும் உணர்வது என் மனதால். அதில் துடித்துக் கொண்டிருக்கிற அந்த ஒரே ஆசையால். எனக்கு முன்னால் ஒரு படம் ஓடிக் கொண்டிருந்தது. படம் என்றால் முழுநீளப் படம் இல்லை. துண்டு துண்டான காட்சிகள். அதில் நான் என்று சொல்லப்பட்ட அவள் இருந்தாள். அவள் அழகாக இருந்ததாகவோ அல்லது அசிங்கமாக இருந்ததாகவோ எனக்குத் தோன்றவில்லை.என் வரையில் இப்போது அதற்கெல்லாம் பொருள் இல்லை. அவளுக்கு ஒரு அம்மா இருந்தாள். அவள் வெள்ளைச் சேலை உடுத்தி சதா அழுதபடியே இருந்தாள். அவளை எப்படி வளர்க்கப் போகிறேன்? என்று கவலைப்படுவதாகச் சொல்லிக் கொண்டாள். ஆனால் நிஜத்தில் அவள் கவலை எல்லாம் சட்டியில் இருக்கும் சோத்தைப் பற்றித்தான். ரம்ஜானுக்கு அண்ணன் எடுத்துத் தரப் போகும் புது வெள்ளைப் புடவை பற்றிதான். அந்த அம்மா இவளைத் தேவையில்லாத சுமையென்றே கருதியிருந்தாள். அது இப்போது தெரிகிற மாதிரி அப்போது அவளுக்குத் தெரியவில்லை‌. அவள், அம்மாவின் அழுகையை நிஜமென்று நம்பினாள். அம்மாவுக்குப் பிடிக்காத அத்தையையும், அத்தை பெண்களையும் தன் விரோதிகளென்று கருதினாள். தகப்பனில்லாத தன்னைப் பராமரிக்கும் தாய்மாமாவை ‘ தெய்வம் ‘என்று மனதில் வைத்துத் தொழுதாள். ஆனால் மனிதர்களை தெய்வம் என்று அழைக்கக் கூடாதென்று அவள் மதத்தில் சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆகவே அதை வெளியில் சொல்லவில்லை. அத்தையும் , அத்தை பெண்களும் அவள் விழப் போகும் ஒரு நாளுக்காகக் காத்திருந்தார்கள். உண்மையில் அந்த நாள் மட்டுமே அவர்கள் எதிர்பார்க்கும் பண்டிகை. ரம்ஜானோ, பக்ரீத்தோ அல்ல. அவள் மாமாவுக்கு ஒரு மகன் இருந்தான். அவனுக்கு அப்போது பெரிய வேலை கிடைத்ததாக எல்லோரும் பேசிக் கொண்டார்கள். இவளும் தான். அந்தப் பெரிய வேலை இரவு, பகல் பார்க்காமல் விழித்திருந்து வண்டி ஓட்டுவது தான். ஆனால் ‘கவர்மெண்ட் சம்பளம்’ என்பது பெரிய விஷயமில்லையா? இவளுக்கு மட்டும் அது பெரிய விஷயமில்லை. அவன்தான். அவன் மட்டும்தான். அவள் அந்த மாமா மகனைக் கண்டால் ஓடி ஒளிந்து கொண்டாள். அதற்கு அவளே வெட்கம் என்று பெயர் வைத்துக் கொண்டாள். அவன் அவளை ஒரு குழந்தையாகவே நடத்தினான். பத்து வயசுக்கு மேல் வித்தியாசம் என்பதால் குழந்தையிலிருந்து இவளைப் பார்த்தவனுக்கு அவள் மார்புகளின் வளர்ச்சியோ, பின்புறத்தின் எடுப்போ, கன்னத்தின் செழுமையோ, இடையின் குழைவோ எந்த ரசாயன மாற்றத்தையும் உருவாக்கவில்லை. அவன் தொட்டிலில் படுத்துக் கிடக்கும் பாப்பாவுக்கு கிளுகிளுப்பையை ஆட்டுவது போலவே இவளைப் பார்க்கும் போதெல்லாம் கனிவோடு சிரித்துக் கொண்டான். தன் சௌந்தர்யத்தின் மர்மத்தை அவளே அவனுக்குத் திறந்து காட்டினாலும் அது கல்யாணத்தில் முடியாதென்று அவளுக்குத் தெரிந்து விட்டது. அத்தைக்காரியோ, அவள் மகள்களோ அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். அம்மா தின்று தின்று இப்போது நடமாட்டம் இல்லாமல் படுக்கையில் கிடக்கிறாள். ஆனால் பகல் கனவுகளில், குடும்பம் நடத்த யாரைக் கேட்க வேண்டும் அவள்? அப்படிக் குடும்பம் நடத்தி அதன் விளைவாக ஒரு பிள்ளையே பெற்று வைத்திருந்தாள். ஆண் பிள்ளை. அதைக் கொஞ்சி, பால்தந்து, சீராட்டி, இருவருக்கும் நடுவில் படுக்கப் போட்டு எல்லாம் அந்தப் பாழாய்ப் போன கனவுகளில் மட்டும். அத்தை கவர்மெண்ட் மாப்பிள்ளைக்கு பெரிய இடத்தில் பெண் பார்த்தாள். இரண்டு மாதத்தில் திருமணம். மச்சான்காரனிடம் இவள் மெல்லிய பதட்டத்தை உணர்ந்தாள். ஆனால் அதன் காரணம் இன்னதென்று விளங்கவில்லை. அன்று எல்லோரும் பத்திரிக்கை வைக்க வெளியூர் போயிருந்தார்கள். இவளும் அம்மாவும்தான். அம்மா படுத்துக் கிடந்தபடி பறந்து போகும் பிரியாணித் தட்டைப் பார்த்து, ‘ வா’ வா’ என்று கெஞ்சிக் கொண்டிருப்பாள். எப்போதும் இல்லாத அளவுக்குக் குடித்து விட்டு வந்த மச்சான் கதவைத் திறந்ததும் பொத்தென்று அவள் மேல் விழுந்தான். காத்துக் காத்துக் கிடந்த கரிசக்காட்டின் மேல் பெருமழை விழுந்தால் அது வேண்டாமென்றா விலகும்? அவள் நினைத்து நினைத்துப் பலதடவை மீட்டிப் பார்த்திருந்த நாடகம் அன்று நிஜமாகி விட்டது. ஆனால் அதற்கடுத்த நாட்களிலும் அவனிடம் அதே கனிவான சிரிப்பு. நிகழ்ந்தது எதுவும் அவன் நினைவில் இல்லையென்று உடனே புரிந்து கொண்டாள்‌. என்ன இருந்தாலும் பெண்ணல்லவா? அன்றிரவு முட்டக் குடித்து விட்டு திருமணத்திற்கான பயத்திலிருந்து விடுபட நண்பர்களோடு மூல வீட்டுச் சந்திராவைத் தேடிப் போனதும், ஏதோ ஒரு பயத்தில் அதே உடம்புக் கொதிப்போடு திரும்பி வந்ததும், கதவைத் திறந்த இவளை அவளென்று எண்ணியே பாய்ந்ததும் இப்போதல்லவா புரிகிறது? அவன் வரையில் சந்திராவையே சாய்த்து விட்டோம். இனி எவளாயிருந்தால் என்ன? என்கிற மப்பு உடம்பில் ஏறியிருந்தது. அந்த மப்புக்கு ஒரு மாசம் கூட ஆயுசு இல்லை. திருமணத்திற்கு எண்ணி சில நாட்களே இருக்கும் போது நிச்சயம் போட்டவள் யாருடனோ ஓடிப் போனது இவளைத் தவிர எல்லோர் தலையிலும் கல்லைத் தூக்கிப் போட்ட கதையானது. இவள் விரும்பிய வாழ்க்கையை எவளோ ஒருத்தி தானமாகத் தந்து விட்டு ஊரெல்லாம் பேச்சு வாங்கினாள். மண்டபத்தில் வைத்து கருகமணியைப் போடும் போதும் கூட அந்த மூணு பேரும் இவள் விழ வேண்டுமென்றுதான் காத்திருக்கிறார்கள் என்பது வெறும் பார்வையில் இருந்தே புரிந்து விட்டது. முதல் நாலு நாட்கள் வழக்கம் போல் அவன் கிலுகிலுப்பையை ஆட்டுவது மாதிரி இவளைப் பார்த்துச் சிரித்து விட்டு கைகளைக் கட்டித் தூங்கி விடுவான். அவளுக்கு எதைச் சொல்வதற்கும் அவன் நேரம் வழங்கவில்லை.

ஐந்தாவது நாள்தான் அது நிகழ்ந்தது. அன்றும் அத்தை, மாமா, சின்ன நாத்தனார் வீட்டில் இல்லை. மச்சான் கல்யாண லீவு முடிந்து பஸ்ஸை மிதிக்கக் கிளம்பி விட்டான். இரவு டியூட்டி. அம்மாக்காரி வழக்கம் போல் பறக்கும் தட்டை யாசித்துக் கொண்டிருந்தாள். அவள் சிறுநீர் முட்டி இடையில் எழுந்த போதுதான் எவனோ ஒருவன் பால்கனி வழியாக உள்ளே இறங்கி நின்றிருப்பது தெரிந்தது. இவளைப் பார்த்ததும் என்ன நினைத்தானோ? உடனே கதவைத் திறந்து வெளியே ஓடினான். இவள் பதட்டத்தில் அவன் பின்னாலேயே போனாள். எவனோ ஒருவன் வீட்டிலிருந்து வெளியே வேகமாக ஓடியதையும், இவள் வெளி விளக்கைப் போட்டு கதவு திறந்து நின்றதையும் எதிர் வீட்டில் இருந்த மூத்த நாத்தனார்க்காரி பார்த்து விட்டாள். நான்கு கண்களும் குரோதத்துடன் சந்தித்துக் கொண்டன. நாத்தனார் உடனே விளக்கை அணைத்து விட்டாள். இவள் அப்படியே தரையில் சரிந்தாள். அந்த இரவில்தான் இவளுக்கு ஏழு நாட்கள் வரை தள்ளிப் போயிருப்பதும் நினைவுக்கு வந்தது. விரல் விட்டு எண்ணி பார்த்தாள். இடையில் இரண்டு தடவை எழுந்து வாந்தி வேறு எடுத்தாள். இருபத்தாறு நாட்கள் ஆகிவிட்டால் பழைய துணி தேடுவது அவளுடைய மாறாத வழக்கம். இந்த மாதம் 35 நாட்களாகி விட்டன. இது அதுவேதான் என்று புரிந்து போனது. ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு ஒரு தடவை கூட தொடாத கணவன், அவனுக்கே தெரியாமல் நிகழ்ந்த அந்தரங்கம், இரவில் கதவைத் திறந்து ஓடிய புது ஆம்பளை, நாத்தனாரின் பார்வை எல்லாவற்றையும் முடிச்சுப் போட்டுப் பார்த்தாள். அவளுக்கு விளங்கி விட்டது. அவர்கள் விழக் காத்திருந்த தருணம் இதோ வந்து விட்டது. அந்த இரவு அவள் அழுகையை ஏந்திக் கொண்டதை சூரியனிடம் சொல்லியனுப்பியது. வந்தவுடன் கால்களில் விழுந்து சகலமும் சொல்ல கதவின் முன்பாகவே காத்திருந்தாள். அதிகாலையில் அவன் குரல் கேட்டது. ஆனால் கூடவே இன்னொரு குரலும். அது பெரிய நாத்தனாருடையது. எல்லாம் முடிந்து போனதென்று அவளுக்கு விளங்கி விட்டது. மச்சானுக்கு பால் ஆற்றித் தருவதற்காக பத்த வைக்கும் அந்த ஸ்டவ் மட்டுமே விடுதலையைத் தரும் என்று நினைத்து அதை நோக்கி ஓடினாள். ஆனால் அது விடுதலைக்குப் பதிலாக உடல் முழுவதும் நமநமக்கிற பயங்கரமான எரிச்சலைத் தந்தது. அம்மா, மச்சான் , மாமா எல்லோரையும் மறக்க ஆரம்பித்திருந்தாள். எல்லோரையுமே மன்னிக்கும் இடத்திற்கும் வந்து விட்டாள். எல்லாம் முடியப் போகிற கடைசி நொடியில் அவள் மனம் அரற்றியது. “யாரும் அறியாத இந்த இரகசியத்திற்கு என்ன பதில்?” அவள் தன் வயிற்றில் ஓங்கி அடித்துக் கொள்ள விரும்பினாள்.

அதற்குள் நான் மேலே வந்து விட்டேன்.

நீண்ட நாட்கள் இங்குதான் மிதந்து கொண்டிருந்தேன். என் மனதில் அந்த முகம் ஒரு புகைப்படத்தைப் போல் பதிந்து கிடந்தது. அவள் மீட்டிய பகல் கனவுகளில் பெற்று வளர்த்து பள்ளிக்குச் சேர்கிற வயது வரை வந்து விட்ட முகம். அந்தக் கற்பனை முகத்திற்கு உரியவன் தானே அவளோடு சேர்ந்து எரிந்து போனான்? எந்தக் காத்திருப்புக்கும் ஒரு காரணம் இருந்தாக வேண்டும். என் காத்திருப்பு அவன்.

அவனை முதன்முதலில் என் இடத்தில் வைத்துத்தான் பார்த்தேன். அப்போது அவன் ரொம்ப வளர்ந்து விட்டிருந்தான். திருமணமாகப் போகிற பருவம். நான்தான் சாகப் போகிற கிழ மூஞ்சி வரை அவன் முகத்தை விதவிதமாக மனதுக்குள் ஓட்டிப் பார்த்திருக்கிறேனே?அவன் அக்கா நான் எரிந்த வீட்டிற்குத்தான் குடி வந்திருக்கிறாள். கிட்டதட்ட எரியும் போதிருந்த அவள் வயதுதான் அவனுக்கும். அவனைப் பார்த்ததும் எனக்குள் இரு உணர்வுகள் சுரந்தன. நான் அவனைக் கொண்டாடவும் விரும்பினேன், அவனால் கொண்டாடப்படவும் துடித்தேன். என் மிச்ச வாழ்க்கையை அவனுக்குப் பாலாக்கிப் புகட்டியபடியே அவனோடு முயங்க வேண்டும் என்று வெறி கிளர்ந்தது. எனக்கு அன்னை, காதலி என்கிற பேதமில்லை. வெறும் ஆசைகள் மட்டுமே நான். திரவநிலையில் வழிய முடியாத, உடல் சூட்டை உணர முடியாத , எதையும் இந்த சூட்சம உடலுக்குள் அனுமதிக்க முடியாத வெறும் ஆசைகளே நான். நானென்பது என் ஆசைகள் தான். அவன் என்னை அன்னையாகவோ, மனைவியாகவோ வேறு என்னவாகவோ உணரட்டும். என் ஆசைகளை உலகமாக்கி அதற்குள் அவனைப் பிடித்து வைக்க வேண்டும். ஒளிக்கு நிகரான வேகத்தில் பயணிக்கிற போது காலம் நின்று விடுவதாக ஒரு முட்டாள் விஞ்ஞானி சொன்னானாமே? என் ஆசைக்கு ஒளியை விட வேகம் அதிகம். நான் காலத்தை நிறுத்துவேன். ஆம்; காலம் நின்றிருக்கிறது. இந்த ஆசைகள் முழுமையாக வடிகிற ஒரு நாளில் நொடி முள்ளின் அடுத்த அசைவு நிகழும். அதற்கு சில யுகங்கள் ஆகலாம். அதுவரை அவனை யோனியிலும், கர்ப்பப் பையிலும் மாறி மாறி ஏந்திக் கொள்கிறேன்.

படித்துக் கொண்டிருந்த டயரி நழுவிக் கீழே விழுந்தது. அவன் அதைப் பிடித்து விட வேண்டும் என்கிற தவிப்போடு குனிந்தான். அப்போதுதான் கவனித்தான். அது பல்லாயிரம் அடிகள் கொண்ட பள்ளம். மரங்கள் அடர்ந்த அந்தப் பள்ளத்தாக்கை நோக்கி அந்த டயரியும் அவனும் ஒன்றையொன்று துரத்தும் இரு பறவைகளைப் போல் விழுந்து கொண்டிருந்தனர்.

‘ ஆ….. ‘என்கிற அலறல் அந்தப் பள்ளத்தாக்கில் விழுந்து இந்த அறையில் எதிரொலித்தது. அவனால் கண்களைத் திறக்க முடியவில்லை. அறைக்குள் யாரோ குளிக்கிற ஓசை கேட்டது. நிச்சயம் அது ஒரு பெண்தான். அதை மட்டும் உணர முடிந்தது. அவன் உடலில் ஒட்டுத் துணியவில்லை. மேலே ஒரு கம்பளி கிடந்தது. உடம்பெல்லாம் அடித்துப் போட்ட மாதிரி இருந்தது. மிகப்பெரிய ஆபத்தென்று தான் கருதிய ஒன்று வெறும் கனவுதானே? என்கிற நிம்மதியை அவனால் முழுமையாக அனுபவிக்க இயலவில்லை. உண்மையில் இப்போது நினைவிற்கு வரும் மங்கலான ஞாபகங்களில் எது கனவு? எது நிஜம்? உண்மையில் நான் யார்? அல்லது இதுவுமொரு கனவா? உள்ளே குளித்துக் கொண்டிருக்கும் பெண்ணுக்கும் , எனக்கும் என்ன சம்பந்தம்? படுக்கையைப் பார்த்தான். அதிலிருந்த கறையின் ஈரம் முழுமையாகக் காயவில்லை. ஓ ..இப்போதுதான் நிகழ்ந்திருக்கிறதா? என்னோடு கூடிக் களித்து விட்டு இப்போது குளித்துக் கொண்டிருக்கும் அவள் யார்? காதலியா? மனைவியா? விபச்சாரியா? இல்லை…..” அவனுக்கு உடல் வியர்த்தது.

படுக்கையை விட்டு எழுந்தான். காலுக்குக் கீழே என்னவோ கிடந்தது. குனிந்து எடுத்தான். அது ஒரு திருமண ஆல்பம். தான்தான். பக்கத்தில் இருப்பது அவள்தான். ஆம் அவளை எப்படிக் கூப்பிடுவேன் என்பது கூட ஞாபகம் வந்து விட்டது. ‘ தங்கம் ‘ , ‘ தங்கம்’ முதலில் மெதுவாகவும், பிறகு வேகமாகவும் கூப்பிட்டுப் பார்த்தான்.‌

” ம்…”

இப்போது ஷவர் நின்றிருந்தது.

“முழிச்சுட்டீங்களா?? உலுல்லா பண்ணி முடிச்ச ஒரு செகண்ட்லயா இப்டி கும்பகர்ண தூக்கம்? அதான் பேய்க்கதை எழுதற எழுத்தாளருக்கு எல்லாம் கழுத்தை நீட்டக் கூடாதுங்கறது”

அவள் குரல்தான். எத்தனை மாலைகளில் தவிக்க வைத்த குரல். எத்தனை இரவுகளில் கிளர்த்திய குரல். அந்தக் குரலை நினைத்தவுடன் மீண்டும் உடல் அதிர்ந்து முறுக்கிக் கொண்டது. உலுல்லா..இருவருக்கு மட்டுமே புரிந்த அந்தரங்கமானதொரு சொல்.

ஆல்பத்தைப் புரட்டினான். ஆட்களைப் பார்க்கப் பார்க்க ஒவ்வொன்றாய் நினைவு வந்தது. மேலே நிமிர்ந்து பார்த்தான். இருவரும் ஜோடியாக எடுத்த படங்கள். அவளுக்கு எவ்வளவு அழகான சிரிப்பு? தான் அவள் நிழலை ரசித்துக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்து விட்டாள் போல. உள்ளிருந்து சிரிக்கிறாள். சிரி..சிரி..ஈரத்தோடு வெளியே வருவாய் அல்லவா? உன்னை…

கண்ணாடி அலமாரிக்குள் ஷீல்டுகள் அடுக்கப்பட்டிருந்தன. எல்லாம் விருதுகள். ஒவ்வொரு நிகழ்ச்சியும் நினைவுக்கு வந்தது. நானொரு எழுத்தாளன் அல்லவா? எழுத்தாளர் அமானுஷ்யன். ஒரிஜினல் பெயரென்ன…ஆ…ஹக்கீம்.

மேசையில் அலைபேசி கிடந்தது. எடுத்துப் பார்த்தான். ஓ…கீழே விழுந்திச்சு இல்ல அப்ப அதா அப்படியே நிக்குது. செட்டிங்ஸ்க்குப் போய் டேட் மற்றும் டைம் தேடினான்.

சரியாக அந்த நேரத்தில் அலைபேசி அடித்தது. அந்த ரிங்டோன் பாடல் கேட்டது மாதிரியும், கேட்காதது மாதிரியும் ஒரு மாதிரி வித்தியாசமாக இருந்தது. எப்போதோ சாம்பலாகி விட்டது போலவும், இன்னும் எழுதப்படாமல் காற்றில் அலைந்து கொண்டு இருப்பது போலவும் அந்தக் குரலில் பயங்கர வசீகரம்.

அலைபேசியில் அக்கா என்று எழுத்துக்கள் ஒளிர்ந்தன. கொஞ்சம் குழப்பத்தோடு பச்சை நிற சிம்பலை அமுக்கினான்.

“அக்கா பேசறண்டா…ஏ ஃபோன எடுக்கவே இல்ல ரொம்ப நேரமா…? அந்தப் பொண்ணு வீட்லயும் ஓகே சொல்லிட்டாங்கடா. பொங்கல் முடிஞ்சு நிச்சயம் வச்சுக்கலாமா?”

” ………….”

“என்னடா ஃபோட்டாவ பாத்து நிலையழிஞ்சு நின்னவன் இப்ப நிச்சயம்ன ஒடனே இந்த இழு இழுக்கிற…”

“அக்கா அவ பேரு என்ன?”

‘லேய் வந்தே வகுந்துருவே… என் பேருதானடா அவ பேரும். அதுக்கு ஒரு பாட்டம் சந்தோஷத்துல குதிச்சியே. நெனவில்ல’

“அக்கா தப்பா நெனச்சுக்காத ….ஒம் பேரு…?”

கடிகாரத்தின் நொடி முள் நகர ஆரம்பித்திருந்த அந்தத் தருணத்தில் அந்த அறை, வீடு, பூமி யாவும் கரகரவென இடைவெளியே இல்லாமல் சுற்ற ஆரம்பித்திருந்தது.

இரு காலங்களின் உறைதலுக்கு அப்பாலிருந்து அலைபேசி வழியாகவும், பாத்ரூமிலிருந்தும் ஒரே குரல் அலையலையலையாய் எழுந்து அவன் மீது படிந்தது.

“ஜெ..ய்..பு..ன்..னி..ஸா…”

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button