“இங்கு ஆய்வுகள் சாதிக் கண்ணோட்டத்தோடு நடக்கின்றன” – ஜீவபாரதி
நேர்காணல்கள் | வாசகசாலை

கே. ஜீவபாரதி (74) கடந்த 47 ஆண்டுகளாக கவிதை, ஆய்வு நூல், கட்டுரை, சிறுவர் இலக்கியம், சட்ட மன்ற உரைகள் என பலவகைப்பட்ட 115 நூல்களை இதுவரை எழுதியுள்ளார். பல்கலைக்கழகங்கள் செய்யாத பலவற்றை, ஒரு தனிநபராக சாதித்து உள்ளார். மறைந்த திரைப்பட இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி உள்ளார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் புதிய வெளிச்சத்தை தமிழ் உலகுக்குத் தருபவை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ‘நூறு கம்யூனிஸ்ட் தியாகிகளின்’ வரலாற்றைத் தொகுத்து வருகிறார். பன்முக ஆளுமை கொண்ட கே. ஜீவபாரதி தனது அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.
கே : பசும்பொன் தேவர் பற்றி விடாமல் எழுதி வருகிறீர்களே!
ப : பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பார்வார்டு பிளாக் கட்சியில் இருந்தார். பார்வார்டு பிளாக் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் முரண்பாடு இருந்தது. அதன் தொடர்ச்சியாக முதுகுளத்தூர் படுகொலை நடந்தது. நடந்த அரசியல் கொலையை தேவர்களுக்கும், தலித்துகளுக்குமான சாதிக்கொலையாக அன்றைய ஆளும்கட்சியான காங்கிரஸ் மாற்றிவிட்டது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாதிய தலைவராகத்தான் அறியப்படுகிறார். ஆனால், அவர் சோசலிசச் சிந்தனை கொண்டவர்; உறுதியான ஏகாதிபத்திய எதிர்ப்பாளர். அவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக ஆதரித்தது. ‘தோழர் பசும்பொன்’ என்று தலைப்பிட்டு ஜனசக்தியில் கட்டுரை வந்துள்ளது. பசும்பொன் தேவரை சரியாகக் காட்ட வேண்டும் என்பதற்காக அவரைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். அவரது சட்டப் பேரவை உரைகளை மட்டுமின்றி, மேடைப் பேச்சுகள், தேர்தல் உரை என அவரது பன்முகத் தோற்றம் தெரியும் வண்ணம் பத்து நூல்களை எழுதியுள்ளேன். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், 1952-ஆம் ஆண்டு, முதலாவது சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்துள்ளார். பொள்ளாட்சி மகாலிங்கம், பசும்பொன் முத்துராமலிங்க தேவரைப் பற்றி, ஒரு உரை நிகழ்த்தச் சொன்னார். நான் பேசி முடிந்தவுடன் என்னை கட்டித்தழுவிக் கொண்டார். அவர் பசும்பொன் தேவரோடு அதே சட்டமன்றத்தில் இணைந்து பணியாற்றிவர். அவரது பாராட்டு நான் சரியாக வரலாற்றைப் பதிவு செய்துள்ளேன் என்ற திருப்தியை எனக்குத் தந்தது.
கே: மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து இருக்கிறீர்கள். அந்த அனுபவத்தைச் சொல்லுங்களேன் !
ப : நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் 15 ஆண்டுகள் விற்பனையாளர், கணக்காளர், மேலாளர், மெய்ப்பு திருத்துபவர் என பல பணிகளை நான் செய்திருக்கிறேன். எனது பெரியப்பா ஆர். வேலுச்சாமி தேவர், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். நெல்லை சதி வழக்கில் முதல் குற்றவாளி. இதே வழக்கில்தான் பாலதண்டாயுதமும், ஆர்.நல்லக்கண்ணுவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள். எனக்கு கம்யூனிஸ்ட் தலைவரான ராமமூர்த்தி பெயரை வைத்திருந்தார்கள். ‘பூதலப்புரம் இராமமூர்த்தி’ என்ற பெயரில் என் முதல் கவிதை வந்தது. கவிஞர் பொன்னடியான், ஏதாவது ஒரு புனைப்பெயரை வைத்துக் கொள்ளச் சொன்னார். எனவே ஜீவாவையும், பாரதியையும் சேர்த்து ஜீவபாரதி என வைத்துக் கொண்டேன். கவிதைகள் எழுதினேன்; கவியரங்குகளில் கலந்துகொண்டேன். திரைப்படத்திற்கு பாடல் எழுத வேண்டும் என்று ஆசை வந்தது. ராசி. அழகப்பன், என்னை மணிவண்ணனிடம் அறிமுகப்படுத்தினார். மணிவண்ணன், ஆரம்ப காலங்களில் மார்க்சிய இலெனிய கட்சியில் இருந்தவர். சாரு மஜூம்தாரோடு தொடர்பில் இருந்தவர். வாசிப்பு வழக்கம் கொண்டவர். விலைவாசி உயர்வை எதிர்த்து சுவரெழுத்துகளில் எழுதியவர். மதுரை சிறையில் கல்யாண சுந்தரத்தோடு 32 நாட்கள் சிறையில் இருந்தவர். அப்போது ஜனசக்தியில் என் கவிதைகளைப் படித்து இருக்கிறார். கவிஞராகப் போன நான், உதவி இயக்குனராக சேர்ந்து 11 வெற்றிப் படங்களில் பணியாற்றி்னேன். மணிவன்ணன், தனது குருவான பாரதிராஜா பெயரைச் சொல்லக்கூடாது என்று கருதி, என்னை ஜீவா என்றே கடைசிவரை அழைத்தார். தனக்கு சமதையான மரியாதையை எனக்குத் தந்தார். ஒருவேளை அப்படி சம மரியாதை தராமல் இருந்திருந்தால், நானும் இயக்குநராக மாறி இருப்பேனோ என்னவோ தெரியாது. சுந்தர்.சி, ஆர்.கே.செல்வமணி இவர்களெல்லாம் எனக்கு பின்னர் வந்தவர்கள். காலம் கடந்தும் எனது பெயர் நிலைக்க வேண்டும் என்றால், எழுதுவதே சிறந்தது என்று கருதி எழுதுவதை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அது சரியான முடிவென்று இப்போது நினைக்கிறேன். எனது படைப்புகளை ஆய்வு செய்து, பாகை கண்ணதாசன், முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சென்னை வெள்ளத்தில் எனது வீடு பாதிக்கப்பட்ட போது நடிகர் சத்தியராஜ் இரண்டு இலட்ச ரூபாய் கொடுத்தார்.
கே: ஆய்வுகள் நடைபெறுவதில் உள்ள பிரச்சினைகள் என்ன?
ப : ஆய்வுகள் சாதிக் கண்ணோட்டத்தோடு நடக்கின்றன. பிரபலமானவர்களைப் பற்றிய ஆய்வுகள் நடக்கின்றன. ஆளைப் பார்த்து விமர்சனம் எழுதும் போக்கு உள்ளது.
காந்தியால் கவரப்பட்டு, தேவக்கோட்டையில் ஓராசிரியர் பள்ளியின் பார்ப்பன ஆசிரியர், தனது வீட்டில் வைத்து ஒரு தலித் சிறுவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார். மாணவனை ஒரு காவல் ஆய்வாளர் அடித்துப்போட்டு, தனது பெண்ணை உனக்கு கொடுப்பாரா என்று அந்த மாணவனைக் கேட்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த ஆசிரியர் தனது மகளை அந்த மாணவனுக்கு திருமணம் செய்விக்க அழைப்பை அந்த காவல் ஆய்வாளரிடம் கொடுக்கிறார். இது நூறு ஆண்டுகளுக்கு முன்னால், இருபதுகளின் முற்பகுதியில் தமிழ்நாட்டின் தென்கோடியான தேவக்கோட்டையில் நடந்தது. அந்த ஆசிரியரின் பெயர் நமக்குத் தெரியவில்லை. இது போல எத்தனையோ வரலாறுகள் கொட்டிக் கிடக்கின்றன. இதனை ஆய்வுகள் வெளிக் கொண்டு வர வேண்டும்.
வேலு நாச்சியார் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். இதைப் பார்த்து காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் வேலு நாச்சியாருக்கு, அவர் இறந்த இடத்தில் நினைவிடம் எழுப்பினார். ‘நந்தன்’ பொறுப்பாசிரியராக இருந்த இளவேனில், வேலு நாச்சியார் பற்றி தொடர் கட்டுரை எழுதச் சொன்னார். இந்த நூல் 16 பதிப்புகள் வந்துள்ளது. இப்போது வேலு நாச்சியார் பற்றி பொதுமக்கள் பேசுகிறார்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் காளை வைத்திருக்கும் வெள்ளையம்மாள் பற்றி யாருக்கும் தெரியாது. சிறையில் இருந்து வெளிவந்த பிறகு கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரை கோட்டை கட்டி அதனுள் இருந்திருக்கிறார். அதனைச் சுற்றி வெள்ளைக்காரன் முற்றுகை இட்டிருக்கிறான். வெள்ளையம்மாள், முற்றுகைக்கு ஆளாகி, கோட்டைக்குள் இருந்த ஆட்களுக்கு மாட்டுவண்டியில் சாப்பாடு எடுத்துச் சென்றார் என்றும், அப்போது 60 பேரைக் கொன்றார் என்றும் நாட்டுப்புற பாடல்களை ஆய்வு செய்து சொல்கிறார் பேராசிரியர் நா.வானமாமலை. நான் அவரது மாணவன். அவரை அருகில் இருந்து பார்த்தவன். எனவே களத்திற்கு சென்று, தரவுகளைத் திரட்டியே கட்டுரை எழுதுகிறேன். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நூலைப் பாடமாக வைத்துள்ளது.
தொமுசி ரகுநாதன் போல விருப்பு வெறுப்பின்றி, தரவுகள் அனைத்தையும் பதிவு செய்யும் ஆய்வுகள் வர வேண்டும். ‘இளங்கோவடிகள் யார்?’ என்ற நூலில், இளங்கோ அடிகள், சேரன் செங்குட்டுவனின் தம்பி அல்ல என்று கூறுகிறார். ‘காலமும் கருத்தும்’ என்ற ஆய்வு நூலையும் அவர் எழுதியுள்ளார். அவருக்கு மறுப்பு சொல்லும் விதமாக ஆய்வுகள் இதுவரை ஏதும் வரவில்லை.
கே : ஆய்வுகளுக்கு அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?
ப : சட்டமன்ற நூலகத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு யாரேனும் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் கடிதம் வேண்டும். சட்டப் பேரவையில் ஜீவா, சட்டமன்ற மேலவையில் பா.மாணிக்கம், சட்டப் பேரவையில் கே.டி.கே.தங்கமணி,சட்டப் பேரவையில் சோ.அழகர்சாமி , சட்டப்பேரவையில் எம். கல்யாண சுந்தரம், சட்டப் பேரவையில் மூக்கையா தேவர், சட்டப் பேரவையில் அருட்செல்வர் (பொள்ளாச்சி மகாலிங்கம் பற்றி), சட்டப் பேரவையில் சைதை துரைசாமி என்ற நூல்களைத் தொகுத்தேன். கன்னிமாரா நூலகத்தை பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை. ஆய்வாளர் என்று மதிப்போடு நடத்தினார்கள்.
தமிழக அரசின் ‘கனவு இல்லம்’ திட்டத்தில் ஞான பீடம், சாகித்திய அகாதெமி, தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடு வழங்குகிறது. ஞானபீடம் பரிசு பெற்ற அகிலன், ஜெயகாந்தன் இருவரும் இறந்துவிட்டனர். சாகித்திய அகாதமி பரிசு பெற்றவர்களுக்கு வீடு வழங்குகிறது. இவர்களில் பலருக்கு ஏற்கனவே சொந்த வீடு உள்ளது. அரசுப் பணிகளிலும் உள்ளனர். தமிழக அரசு விருது பெற்றவர்களை கனவு இல்லம் திட்டத்தில் கண்டு கொள்வதில்லை. தமிழக அரசு விருது பெற்றவர்களை தமிழக அரசே கண்டுகொள்ளவில்லை என்றால், வேறு யார் கண்டுகொள்வார்கள்.
பதிப்பகங்களை நாம் குறைசொல்ல முடியாது. புத்தகங்கள் விற்பனைக்கு ஏற்றபடி அவர்கள் நூல்களை வெளியிடுவார்கள். அரசாங்கம் ஆய்வுகளை ஊக்குவிக்க, இத்தகைய ஆய்வுகளில் விருப்பமுள்ளவர்களுக்கு உதவித்தொகை தர வேண்டும். தமிழ் ஒளி பற்றி ஆய்வுகள் வரவில்லை. கேசிஎஸ் அருணாச்சலத்தின் நூற்றாண்டு (2021) முடிந்து விட்டது. அவரைப் பற்றி ஆய்வு வரவில்லை. ஆய்வு செய்ய வேண்டியவை எவ்வளவோ உள்ளன.
சட்டப்பேரவையில் ஜீவா என்ற நூல் இதுவரை 13 பதிப்புகள் வந்துள்ளது. ‘தமிழ்நாடு என பெயரிட வேண்டும்’, ‘தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்’ என்றெல்லாம் முதலாவது சட்டமன்றத்திலேயே ஜீவா பேசியிருக்கிறார். அப்போது திமுகவிற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை. தமிழ்நாடு என பெயரிட வேண்டும் என்று முதலில் அண்ணா பேசினார் என்று சொல்லி வருகிறார்கள். சரியான ஆய்வுகள் மக்களின் கருத்துகளை மாற்றும்.
கே : 1977 முதல் எழுதி வருகிறீர்கள். திருப்தியாக உணர்கிறீர்களா?
ப : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு சிலை அமைக்கும் குழுவை இரத்தினம் பிள்ளை தலைமையில் அமைத்து, ஐந்து இலட்சம் நிதி திரட்டி அவருக்கு சிலை அமைத்தோம். பாரதிதாசன் பற்றி ‘ உலகப்பன் காலமும் கவிதையும்’ என்ற தலைப்பில் நான் எழுதிய நூலுக்கு தமிழக அரசு முதல் பரிசு வழங்கியிருக்கிறது. 56 வயது வரை வாழ்ந்த ஜீவாவிற்கு 56 நூல்கள் எழுத வேண்டும் என முடிவெடுத்து, இதுவரை 22 நூல்கள் எழுதியுள்ளேன். ஜனசக்தியின் நடுப்பக்க கட்டுரை, பொறுப்பாசிரியாக பலரை எழுத வைத்திருக்கிறேன். கலைஞர் பொற்கிழி விருது, நக்கீரன் பத்திரிகையின் சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளையின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ ஆகியவை என் எழுத்துக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க விருதுகளாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா வருகிற டிசம்பர் 25-ஆம் நாள் தொடங்குகிறது. அதை முன்னிட்டு கம்யூனிஸ்டு தியாகிகளின் வரலாற்று நூலை தொகுக்கும்படி கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனும், என்.சி.பி.எச்.இன் நிர்வாகிகள் க.சந்தானமும், ஸ்டாலின் குணசேகரனும் கேட்டுக் கொண்டார்கள். நூறு தியாகிகளின் வரலாற்றைத் தொகுத்துள்ளேன். அந்த நூல் அச்சில் உள்ளது. ‘பறவை எங்கு சென்றாலும் அங்கு தன் சிறகை விட்டுச் செல்லும்’ என்பார்கள், அதே போல ஒவ்வொரு துறையிலும் என் தடத்தை பதித்து இருக்கிறேன்.