வெயில் கொட்டும் மதிய நேரத்தில் காபி டேயின் செயற்கைத் தோட்டத்தில் ஒரு மடையனைப் போல அமர்ந்திருந்தேன். மெல்லிய இசை உறுத்தலில்லாமல் நுரைத்து ததும்பியது. இருளின் நிறமும் ஒளியின் நிறமும் தழுவிக் குழைந்தன. அனைத்தையும் புறந்தள்ளி வெறுப்பின் உச்சத்தில் உயிர் வெறுத்து அமர்ந்திருந்தேன்.
மடையன், முட்டாள் போன்ற வார்த்தைகளின் வீரியம் என் மனநிலையை உணர்த்த போதுமானதாக இல்லை. சிஏ ஃபர்ஸ்ட் கிளாசில் பாஸ் செய்து நாலைந்து கம்பெனிகளுக்கு அட்வைசராக இருந்து லட்சங்களில் புரண்ட அறிவிலி. ஐம்பதாவது வயதில் பணம் வெறுத்துப்போய் வாலன்ட்ரி ரிடையராகி வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் திட்டமிட்டு வாழ்பவன். மரணத்தைக் கூட எமனின் முடிவுக்கு விடாமல் எழுபது வயதில் வலியில்லாமல் உயிர் துறக்க கோர்ட்டில் மனு செய்ய எண்ணியிருந்தவன். இவை அத்தனையும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை. இப்பொது எமனை எதிர்த்து கேஸ் போடவும் தயாராயிருந்தேன்.
எனக்கெதிரே அவள் குடித்து விட்டு வைத்த கோப்பையின் விளிம்பில் காபியின் மிச்சம் தேன் நிறத்தில் படிந்திருந்தது. அதில் பிக்காசோவின் ஓவியமாய் உதட்டு ரேகைகள். ஒரு காலத்தில் அந்த வரிகளில் புதைந்து உயிர் விடக் காத்திருந்தவன் நான்.
சர்வர் கோப்பையை எடுக்க முயல, அவசரமாய் தடுத்து இன்னொரு காபி ஆர்டர் செய்தேன். தலை நரைத்த என்னை வித்தியாசமாய் பார்த்து விட்டுச்சென்றான். அவனுக்கென்ன தெரியும்! இது எனது வாழ்வில் வந்த முதல் காதலியுடன் ஓட்டலில் அமர்ந்து பருகிய முதல் காபி. இன்னும் சற்று நேரம் அவை ஜோடியாக இருக்கட்டும். கோப்பையின் இரண்டு காதுகளையும் திருப்பி, ஒட்டி வைத்தேன். இரு கண்களைப் போல என்னைப் பார்த்து சிரித்தன.
மேகத்தின் நீரைத் தொட்டு சூரியனுக்கு வானெழுதும் கடிதமாய் கோப்பையின் விளிம்பில் புன்னகையை எழுதி விட்டு சற்று முன்னர் எழுந்து சென்றவள் சுஜி! நாங்களிருவரும் இளமொட்டுப் பருவத்தில் ஒன்றாய் வளர்ந்தவர்கள். அவளுடைய அப்பா என்னுடைய அப்பாவுடன் வங்கியில் பணிபுரிந்தார்.
இரண்டு குடும்பங்களும் சினிமா, கோயில் என்று சுற்றுமளவு பழக்கம். பால்யத்தில் இருவரையும் நிற்க வைத்து எடுத்த போட்டோ இன்னும் என்னிடம் இருக்கிறது. இதய சைஸில் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட அதில், பூப்போட்ட பிராக்கில் மருட்சியுடன் நிற்கும் அவள் கண்களுக்கு பன்னிரண்டு வயதும், முடியை வழித்து வாரி, அசடு வழியும் என் கண்களுக்கு பதினைந்து வயதுமிருக்கும்.
அவளை முதன்முதலாய் பார்த்த தினம் நன்றாக ஞாபகத்தில் உள்ளது. மறுநாளிருந்த முழு ஆண்டு பரீட்சைக்காக படித்துக் கொண்டிருந்தேன். மாலை நாலு மணிக்கே கருமேகங்கள் சூழ்ந்து சோவென்ற மழை வீட்டின் ஓடுகளை கழுவிக் கொண்டிருந்தது. வேகமாக வீசிய குளிர் காற்று ஜன்னலுக்குள் திவலைகளை வீச, போர்வையை இறுக்கிக் கொண்டு வரலாற்றில் முகலாயர்களுடன் சண்டையிட்டேன்.
சிறிய மான் குட்டி போல அவள் கதவு வழியாக எட்டி பார்த்தாள். வெள்ளையா, சிவப்பா என்று சொல்ல முடியாத பளிச்சென்ற நிறத்துடன் ஜவுளிக் கடை பொம்மை போலிருந்தாள். இடக்கையில் குடை, வலக்கையில் ஒயர் கூடை. என்னை பார்த்து ‘அம்மா குடுத்துட்டு வர சொன்னா’ என்றாள். பெரிய கண்கள், சுருட்டை முடி, முட்டி வரையில் பிராக்குடன் அவள் தெளிவாகப் பேச, எனக்கு யாரிது என்றிருந்தது. ‘அம்மா’ என்று கத்தி விட்டு அவளையே பார்த்தேன். அவள் அடுப்படிக்குச் செல்ல ‘வாம்மா, எதுக்கு இந்த மழையில?’ என அம்மா உள்ளே அழைத்துச் சென்றாள். அப்போது பார்த்த அவள் முகம் என்னுடைய அன்றைய முகத்தை விட தெளிவாய் ஞாபகமுள்ளது.
அவர்கள் வீட்டிற்கு சென்றாலும் என்னுடைய வீட்டிற்கு வந்தாலும் என் தோளில் கையைப் போட்டுக்கொண்டு அமர்ந்து கொள்வாள். பெண்களின் வாசமின்றி ஒரே பையனாக வளர்ந்தவனுக்கு அவளுடைய அருகாமை புதுமையாய் இருக்கும். மெத்தென்ற அவள் உடலின் மென்மையும் பரிசுத்த வாசனையும், புதுவித கிளர்ச்சியை ஏற்படுத்தும். திரைப்படங்களில் இரு பூக்கள் ஒட்டிக்கொள்வதே காதல் என்றிருந்த நான் அந்த காதல் ஜோடிகளாய் எங்களை நினைத்து கொள்வேன். அவள் இருக்கையில் ஏற்படும் படபடப்பையும், உற்சாகத்தையும் என் அம்மாவுக்கு தெரியாமல் மறைப்பதே பெரும்பாடாய் இருக்கும்.
என்னடா பேரு இது, கமல் கார்த்திக் என்று அவள் சிரிக்கையில், ‘கமலை அப்பாவுக்கு பிடிக்கும். கார்த்திக்கை அம்மாவுக்கு பிடிக்கும். ரெண்டையும் சேர்த்து வச்சதில் நான் ஊருக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்கேன்’ என்று சொன்னதை கேட்டு கழுத்தை சாய்த்து சிரித்தவாறு என் காதை செல்லமாகப் பிடித்து திருகியது நெஞ்சக கோயிலில் நினைவே சுகந்தமாய் பதிந்து விட்டது. இப்போதும் நினைக்கையிலும் காதுமடல்கள் குறுகுறுக்கின்றன.
சர்வர் காபியை வைத்து விட்டு, ‘வேறேதும் வேணுமா?’ என்று கேட்டுச் செல்கிறான். அவனிடம் இழந்த காலத்தை மீட்டுக் கொடு என்று எப்படி கேட்பது.?
அப்போதெல்லாம் காதல் என்பது கெட்ட வார்த்தை. காதல் உணர்வு கெட்ட சக்தி. அந்த கெட்ட சக்தி எப்போதிருந்து என்னுடலில் புகுந்ததெனத் தெரியவில்லை. இளவெயிலை உருக்கி வார்த்தது போன்ற கொடியுடலில் அடர் சிவப்பு தாவணி, பாவாடை, சிகப்புக்கல் மூக்குத்தி, பூசுமஞ்சள் நிற தங்க செயின், கூத்தாடும் ஜிமிக்கியுடன் சுஜியை பார்த்ததிலிருந்தா, பஸ் ஏறும்போது வெள்ளைச் சுடிதாரில் புரண்டு அலைமோதும் கேசத்தில் சிக்கி மனம் தவித்ததிலிருந்தா என நினைவில்லை. பிறை சூடிய பித்தனாய் காதல் சூடி திரிந்தேன்.
பெண்கள் சைக்கிள் ஓட்டுவது அந்த கிராமத்தில் ஆச்சரியமான விஷயம். அதிலும் டைட்டான மேல் சட்டை, நீண்ட பாவாடை அணிந்து லேடீஸ் சைக்கிளில் அவள் செல்வதை ஊரே ஆசையுடன் பார்க்கும். அவள் நிழல் மறைந்ததும் புறம்பேசித் தீர்க்கும். கிராமத்தின் தெருக்களை அலங்கரித்த நகர தேவதை அவள். என் இளம்பருவத்தில் குடிபுகுந்த வசந்தம்.
அவளை நான் ஏக்கத்துடன் கவனிப்பதை யார் முதலில் பார்த்தார்கள் என தெரியவில்லை. அடிக்கடி என் வீட்டிற்கு வந்ததாலோ என்னவோ ‘உன் ஆளுடா’ என்று எங்களைச் சேர்த்து வைத்தனர். அதற்கு பிறகு என் வயது பையன்களிடம் தனி மவுசு உண்டானது எனக்கு. அவள் சைக்கிளேறும் கணத்தில் என்னிடம் முதல் தகவல் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். சுஜியை நான் பின்தொடரும் போதுதான் பெண்களில் உடல்களில் இருக்கும் இத்தனை நெளிவுகளை கண்டறிந்தேன். ஒவ்வொரு நெளிவும் நீர்ச்சுழலாய் மனதை மூழ்கடித்தது.
அவளைக் காணாமல் ஏமாந்து திரும்பி, ‘எங்கடா காணாம்’ என்று ஒருமுறை கேட்டதற்கு, ‘சும்மா சொன்னேன்’ என்று சிரித்த கோபாலை செவுட்டில் அறைந்திருக்கிறேன். அதற்கு பரிகாரமாய் அவனுடைய காதலுக்கு அணிலாய் உதவியிருக்கிறேன்.
அவள் அருகிலிருக்கும் தருணங்களில் என் மனதிற்கு காய்ச்சல் வந்து விடும். உலகமே மறக்குமளவு மகிழ்ச்சியில் ததும்பும். கண்கள் விரிய, ஜிமிக்கி ஆட பேசுகையில் கலீல் ஜிப்ரான் கவிதை போலிருப்பாள். அருகாமையில் அன்பு செலுத்தி பிரிவில் வதை செய்யும் மாயக்காரி.
சுஜி எப்போது விலகத் துவங்கினாள் என்பதும் நினைவில்லை. ‘அவ பெரியவளாயிட்டா. அவங்க வீட்டுக்கெல்லாம் அடிக்கடி போகாத’ என்று அம்மா சொன்ன பிறகு நடந்திருக்கலாம். பெரியவள் ஆவதை ஏதோ பாரத ரத்னா வாங்கியதாய் நினைத்து பெண்கள் அலட்டிக் கொண்ட காலமது. ஸ்கூலிலிருந்து நின்று விட்ட என் கிளாஸ் பெண்கள், ‘கமலூ… இன்னுமா படிக்கிற?’ என இடுப்பில் குழந்தையுடன் கேட்டதும் நிகழ்ந்துள்ளது. அருகில் தடிமாடு போல புருசனை வைத்துக் கொண்டு கேட்டவளை, ‘ஆமா சரசு’ என சொல்வதா, ‘ஆமாக்கா’ என்று சொல்வதா என அசடு வழிந்திருக்கிறேன். அந்த கால கட்டத்தில் திடீரென சுஜி என்னை விட உயரமாக வளர்ந்ததாலும் இருந்திருக்கலாம். அவள் உயரத்தைத் தாண்ட எனக்கு நான்கு வருடங்களாகியது.
பெண்களின் உடல் கீழடி அதிசயங்களாய் எனக்கு மாறத் துவங்கியது. அவளிடம் பேசுவதில் புதிய தயக்கமும், ஈர்ப்பும் முளை விட்டது. முகத்தை ஏறிட்டு பார்க்கவே கூச்சமாய் இருந்தது. லைப்ரரிக்கு புத்தகம் எடுக்கப் போகும் அவளை பின்தொடர்ந்து சென்று எதேச்சையாய் பார்ப்பது போல புன்னகைத்திருக்கிறேன். அப்போதும் பேசத் துணிவிருந்ததில்லை. ஆண்களே முதலில் பேசவேண்டுமென்று எழுதாத சட்டமிருந்தது போல. அவளும் பேசமாட்டாள். உதடுகளை வலப்புறம் சுளித்து வலம்புரி சங்காய் அலட்சிய சிரிப்பை உதிர்த்து செல்வாள்.
செவ்வாயில் அரும்பியது சிரிப்பா, கிண்டலா என்று உறைத்ததில்லை. நான் இல்லாத வேளைகளில் என் வீட்டிற்கு வந்து கதை புத்தகங்களை வாங்கிச் செல்வாள். ஏன் கொடுத்தாய் என்று அம்மாவிடம் பொய்யாக கோபித்திருக்கிறேன். அவள் மார்புடன் அணைத்தவாறு எடுத்து வந்து திரும்பி கொடுத்த புத்தகங்களில் லெட்டரேதும் உள்ளதா என தேடியிருக்கிறேன். கொஞ்சம் மகரந்தத்தின் வாசமும், விக்சின் வாசமும் அடிக்கும். விக்ஸ் பாட்டியுடையதாய் இருக்கும். மகரந்தம் மலரினுடையது. நான் புத்தகத்தை முகத்தில் விரித்தவாறு தூங்கியதன் காரணத்தை இதுவரை யாரும் அறிந்ததில்லை.
சுஜி பெரியவளான பின்னர் எங்கள் முதல் ஸ்பரிசம் அவளுடைய பாட்டி பாத்ரூமில் வழுக்கி விழுந்தபோது நடந்தது. ‘அவங்கப்பா ஊருக்கு போயிருக்காரு. போயி ஹெல்ப் பண்ணிட்டு வா’ என கூறியதைக் கேட்டு தந்தை சொல்மீறா ராமனாய் அவள் வீட்டிலேயே இரண்டு நாள் தவமிருந்தேன். பாட்டியின் முகத்தை பார்த்ததை விட சுஜி முகத்தை பார்த்து கிடந்ததே அதிகம். அவள் நொங்கு கண்கள் கள்ளின் போதையளித்தன. ஸ்லீவ்லெஸ் கைகள் என்னை ஹார்ட் லெஸ்ஸாக்கின. ஆனாலும் முகத்தைப் பார்த்துப் பேச முடிந்ததில்லை. அவள் மற்றவரிடம் கையசைத்து பேசுவதை அபிநயம் செய்யும் கலைவாணியை பார்ப்பது போல பார்த்து சேவித்திருக்கிறேன்.
‘அம்மா சில்லறை வாங்கிட்டு வர சொன்னா’ என்று உள்ளங்கையில் அழுத்தி காசு கொடுத்த நொடிகளை பல்லாயிரம் முறைகள் எனது மனம் ரீவைண்ட் செய்து பாத்திருக்கும். அந்த கணத்தில் நானும் பெரியவனாகி விட்டதை வெளியில் சொல்ல முடியவில்லை.
காசை வாங்கும்போது உரசியது கைகளல்ல, மனங்கள். விரல் தீண்டிய குளிர்ச்சி ஆத்மாவை சுத்தம் செய்து காதலின் புனிதத்தையும், மகோத்துவத்தையும் கற்பித்தது. காதலை விட சிறந்த விஷயம் உலகத்தில் இல்லை என்று கோபாலிடம் சத்தியம் செய்தேன்.
அவள் விரல் உரசிக் கொடுத்த டீயில் என் விரலே முதலில் இனிப்பை உணர்ந்தது. எங்கள் விழிகள் உரசிய வேகத்தில் உபரி மின்சாரம் தயாரித்திருக்கலாம். என்னை மட்டுமே தொட்டு வரமளித்தாள் என்று எண்ணிப் பூரித்துக் கொண்டிருந்த நேரத்தில் வேலைக்காரம்மாவுக்கும் உள்ளங்கை அழுத்தியே காசு கொடுத்தாள். அது தற்செயலே என தேற்றிக் கொள்ள பத்து நிமிடம் பாத்ரூமில் அழுது முகம் கழுவ வேண்டியிருந்தது. தங்கையிடம் என்னைக் காட்டி சிரித்ததை காதல் என எண்ணியிருக்கிறேன். இளக்காரமோ என்று சுருங்கியுமிருக்கிறேன்.
அந்த நிகழ்வு எங்களுக்குள் நடக்காமலே போயிருக்கலாம். மனதில் கொள்ளி இட்டது போன்ற வலியுடன் வாழ்வைக் கடத்த நேர்ந்திருக்காது. அது நடந்திராவிட்டால் ஒருவேளை நாங்கள் காதலித்து இருப்போம். காபி பில் வைத்து விட்டுப் போகும் இந்த சர்வரைப் போல் ஒரு மகனும் பிறந்திருக்கலாம்.
அன்றிரவு தீபாவளி பலகாரம் கொடுக்க சென்றது நினைவிருக்கிறது. குவாட்டர்சின் அனைத்து வீட்டு வாசல்களிலும் கலசமும், சங்குசக்கரமும் நெருப்பு பொறிகளை பாப்கார்னாய் இறைத்துக் கொண்டிருந்தன.
‘இனிப்பை வேறு பாத்திரத்தில் மாத்திட்டு நம்ம பாட்டி போட்டதை போட்டு குடுடி’ என்று அவள் அம்மா சொன்னதைக் கேட்டு என்னை அடுப்படிக்கு அழைத்துச் சென்றாள். மிக அருகில் நின்று பலகாரத்தை மாற்றியபோது ஏக பதட்டமாக உணர்ந்தேன். இதயத்துடிப்பு கட்டு பட்டாசாய் வெடித்துக் கொண்டிருந்தது.
‘என்னடா வரவர பாக்கவே முடியல’ என்று அவள் உரிமையுடன் கேட்டது நியாபகம் இருக்கிறது. எப்படி, எப்போது கட்டிப்பிடித்தேன் என்றே நினைவில்லை. சுஜி வெறுப்புடன் தள்ள, நான் வேகமாக வெளியேறும்போது கதவருகில் நின்ற அவளது அம்மாவை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. எனது உலகமே நின்று போனது. வீட்டுக்கு சைக்கிளில் எப்படி வந்தேன் என்பது சுத்தமாய் நியாபகம் இல்லை.
பிரளயம் வெடிக்கும் முன்னர் அம்மாவிடம் சொல்லி விடலாமா என்று யோசித்தேன். அவளுடைய அப்பா கோபத்துடன் வருவார் என பயத்துடன் காத்திருந்தேன். அவள் வீட்டிலிருந்து யாரும் வரவில்லை. அதன் பின்னர் நான் அவள் வீட்டுக்கு போகவுமில்லை.
எனது அப்பாவிடம் ஏதாவது சொன்னார்களா என்றும் தெரியாது. கேட்கும் துணிவும் இருந்ததில்லை. இரு குடும்பங்களுக்கும் இடையில் மயிற்கண் விரிசல் விழ நானே காரணம். அவளது பெற்றோரை எங்கே பார்த்தாலும் மயில் இல்லாமல் உலகை சுற்ற எஸ்கேப் ஆகி விடுவேன்.
அதன் பின்னர் ஒருமுறை கோவை செல்கையில் பஸ்ஸில் அவளைப் பார்த்தேன். நடுபஸ்ஸில் நானிருக்க அவள் தோழிகளுடன் டிரைவருக்கு பின்னால் நின்றாள். பார்ப்பாளா என்று ஆயிரம் முறை எதிர்பார்த்து தற்செயலாய் பார்ப்பது போல நாலைந்துமுறை பார்த்துக் கொண்டோம். அவள் கண்களை சந்தித்த நொடியில் உடல் குளிர்ந்து நிராயுதபாணியாய் உணர்ந்தேன். சிரிப்பதற்குள் திரும்பி கொண்டாள்.
நான் பீஜி முடித்து வெளியேறுகையில் அவள் பீஜி சேர்ந்தாள். நான் ஆடிட்டரிடம் வேலை கற்று தனி அலுவலகம் திறக்கையில் காலேஜ் லெக்சரர் ஆனாள். சுஜியைப் பற்றிய தகவல்களை அம்மா சொல்லும்போது அதிக ஆர்வம் காட்டாமல் கேட்டுக் கொள்வேன். அதன் பின்னர் ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித், ஜெனீபர் லோபஸ் என்று பலரை காதலித்துத் தோல்வி அடைந்தாலும் சுஜியோடான முதல் காதல் இளம் நெஞ்சு ஆணியாய் பதிந்தே இருந்தது. சுஜி திருமண ரிசப்ஷனுக்கு எனது பெற்றோர் போன இரவில் முதலும் கடைசியாய் தண்ணியடித்து மனதைக் கழுவினேன்.
காதல் தோல்வியின் வலிகளை ஆற்ற காலாகாலத்தில் கல்யாணம் செய்துகொள்வது தானே சரி. எனக்கும் திருமணமாகி ஒரு பெண் பிறந்து அவள் பெரியவளான விழாவுக்கு சுஜியின் பெற்றோர் வந்த போது என்னால் உலகைச் சுற்றி ஓட முடியாமல் போனது. ‘இதே ஊர்ல இருந்துட்டு பாக்கவே முடியல’ என்று அவளது அம்மா பாசமாய் கேட்ட போதுதான் அன்று சமையலறைக்குள் நடந்ததை அவள் பார்த்திருக்க முடியாதென்பது உரைத்தது. ‘சுஜீ சென்னைல இருக்காடா. அடிக்கடி உன்னைப் பத்தி கேட்பா’ என அவள் அப்பா சகஜமாய் பேசியபோதுதான் சுஜியும் எதையும் சொல்லவில்லை என்பது தெரிந்தது. இருப்பினும் அவர்களுடன் என்னால் முகம் கொடுத்து பேச முடியவில்லை. ‘கமல் நீ மாறவேயில்ல. இன்னும் ஷை டைப்தான்’ என்று சிரித்தனர்.
பத்து வருடங்களுக்கு பின்னர் எனது மகளின் திருமணம் நடந்த போது, ‘சுஜி நம்பர் வாங்கி தர்றேன். கூப்புடுறியா?’ என அம்மா கேட்டதுக்கு பதில் சொல்லவில்லை. என்னவென்று சொல்வது. இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் என்னால் அந்த நினைவை எளிதாக விலக்க முடியவில்லை.
வாழ்வின் ஆசைகள், நோக்கங்கள் ஈடேறி பழுத்த இலையாய் வாழ்க்கை மாறிய ஒரு நாள் சுஜியிடமிருந்து முகநூல் நட்புக்கான கோரிக்கை வந்தது. கொஞ்ச நேரம் நம்பவே முடியவில்லை. அவளது பெற்றோரின் படத்தை வைத்தே அடையாளம் தெரிந்து கொண்டேன். என்னை மன்னித்து விட்டாள் என்பது தெரிந்தது. கோரிக்கையை ஏற்று விட்டு லைக்கோ, கமெண்ட்டோ வரும் என்று காத்திருந்தேன். வழக்கம் போல சில மாதங்களுக்கு பதில் இல்லை. கொஞ்சம் கோபம் வந்தது.
என் விருப்பத்தை தெரிவிக்கும் அளவுக்கு அவளும் என்னிடம் பழகியதால்தானே கட்டிப் பிடிக்கும் துணிவு வந்தது. என்னவோ எல்லா தப்பையும் நானே செய்தது போல இன்று வரை மகாராணி மௌனம் காக்கிறாள்.
பேசினால் பேசட்டும் இல்லாவிட்டால் இதுவரை எப்படியோ அப்படி போகட்டும் என்று கடுப்பானது. ஆனால், அவள் பேசியபோது அந்தக் கோபம் அரை நொடி கூட நிற்கவில்லை.
நேற்றிரவு பால்கனியில் உலாத்தியபோது போன் அடித்தது. மெசஞ்சர் அழைப்பு. ‘ஹாய் எப்படி இருக்க. சுஜி பேசுறேன். என் பிரண்டோட கிரகப்பிரவேசத்திற்காக நாளை கோவை வர்றேன். பத்து மணிக்கு முடிஞ்சிரும். உன்ன எங்க பாக்கலாம்?’ என்று அடைமழையாய் அவள் பேசி முடித்த போது எனக்கு வழக்கம் போல வாய் உறைந்து போனது. தடுமாற்றத்துடன் எந்த இடம் என்று கேட்டு அதற்கருகிலிருந்த காபி டேக்கு வர சொன்னேன். இரவு முழுதும் தூங்காமல் காலம் நகர்வதை வேடிக்கை பார்த்தேன். எங்கள் இருவருக்குக்கும் இடையில் காலம் கிழித்த நெருப்புக் கோடாய் எரிந்த நிகழ்வை எப்படிக் கடப்பது, என்ன சொல்லி மன்னிப்பு கேட்பது என யோசித்தேன்.
குறித்த நேரத்திற்கு முன்பாகவே இடத்திற்கு வந்து சேர்ந்தேன். மீண்டும் சிறுவன் ஆகியதைப் போல நெஞ்சமெல்லாம் பதட்டம். வந்திருக்க கூடாதோ என்று பயம். பத்து மணிக்கு நீல நிற பட்டுப் புடவையில் அவள் நுழைகையில் காபி டேயிலிருந்த அத்தனை மனங்களும் தாளம் மாறி துடித்திருக்கும். ஆரத்தி பொழுதில் எழுந்து வந்த அம்மனாய் நுழைந்தவளைப் பார்த்ததும் எனது உலகம் மீண்டும் சுழலத் துவங்கியது. விரிந்த விழிகளுடன் நான் எழுந்து சிரிக்க, உலகின் அத்தனை பேரும் என்னைப் பொறாமையுடன் பார்த்தனர். தலைக்கு டை அடித்திருக்கலாம் என அவசரமாக சபித்துக் கொண்டேன்.
‘ஹாய், எப்படி இருக்க?’ என்று தொடங்கி இன்டர்வியூ போல் சடசடவென்று கேள்விகள் விழ, மெதுவாய் யோசித்து பதில் கூறினேன். எனது வேலை, மனைவி, அமெரிக்கா சென்றிருக்கும் மகளைப் பற்றிக் கேட்டாள். ‘எஸ் சார்’ என்ற சர்வரிடம் ரெண்டு காபி ஆர்டர் செய்து விட்டு மெதுவாக பதட்டம் நீங்கி அவளைப் பற்றி கேட்டேன். அவளுடைய கணவர் பார்மெசூட்டிக்கல் கம்பெனியில் பெரிய பதவியில் வேலையில் இருக்கிறார். ஒரே பையன். இதே நகரத்தில் இருக்கும் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருக்கிறான். என்னை கூட்டிட்டுப் போக வருவான் என்றாள்.
என் மனதை அணையாச் சிதையாய் எரிக்கும் அந்த நினைவைப் பற்றி எப்படி பேச்சை எடுப்பது என்று நான் தவித்துக் கொண்டிருக்கும் போது, அவளே தொடங்கினாள்.
‘நீ ஏன் அப்படி ஓடுன அன்னைக்கு? நான் அதை பெருசுபடுத்தவே இல்லை. பயந்துட்டியா?’ என்று அவள் சாதாரணமாய் கடந்து செல்ல, வெள்ளம் வடிந்த நிலமாய் பெருமூச்சு விட்டேன்.
அடிப்பாவி! இதைச் சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லியிருந்தால் இத்தனை காலம் இதனைத் தூக்கிச் சுமக்க வேண்டியிருந்திருக்காதே என்றிருந்தது.
புன்னகை மன்னன் ரிங் டோனில் ஒலித்த போனை எடுத்து, ‘ஒரே நிமிஷம்’ என்று கட் செய்து விட்டு, ‘பையன் வந்துட்டான். உன் நம்பர் சொல்லு. போன் பண்றேன்’ என்று கேட்டு மிஸ்டு கால் தந்து விட்டு, ‘எல்லாரையும் கேட்டதா சொல்லு. பை’ என்று புறப்பட்டாள்.
அவள் பிரியும்போது, ‘யன் எந்த கம்பெனியில் வேலையில் இருக்கான்?’ என்று கேட்டேன். கம்பெனியின் பெயரைக் கூறினாள். ‘அவன் பேரு?’ என்று கேட்டதும் முதன் முறையாய் அவள் கண்களில் இது வரையில் பார்த்திராத காதல் ஒருகணம் மின்னி மறைந்தது. அலட்சியமாய் இல்லாமல் வலியுடன். அவள் திரும்பிச் சென்ற பின்னரும் அவள் சொன்ன பெயர் என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.
‘கமல் கார்த்திக்’