
அதிகபட்சமாக 20 சென்டிமீட்டர் நீளம் மட்டும் வளரக்கூடிய மிக்கச்சிறிய மீன் இனம் இது. பெரு நாட்டின் (Peru) கடற்கரைப்பகுதிகளில் உள்ள இந்த சிறு மீன், உலகம் முழுவதுமே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துகிற வல்லமை உடையது. ஏதோ ஒரு காரணத்தால் பெருவில் இந்த மீனின் வரத்து குறைந்துவிட்டால், எங்கோ ஒரு மூலையில் இருக்கிற சீனாவில் பன்றிகள் பசியில் வாடும்; ஸ்காட்லாந்தில் உள்ள மீன் பண்ணைகளில் தீவனத் தட்டுப்பாடு ஏற்படும்.
உலகெங்கிலும் உள்ள விலங்கு மற்றும் மீன் பண்ணைகள் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத கண்ணிகளால் இந்த மீனோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் ஒருவர் சால்மன் மீனை ருசித்து சாப்பிடுகிறார் என்றால், இந்த மீனையும் சேர்த்தே சாப்பிடுகிறார் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும். உலகில் உள்ள பல உணவுச்சங்கிலிகளில் இந்த மீன் வலுக்கட்டாயமாகப் புகுத்தப்பட்டிருக்கிறது.
“ஆங்கோவெத்தா” என்று ஸ்பானிஷில் செல்லமாக அழைக்கப்படுகிற இந்த மீனின் ஆங்கிலப்பெயர் Peruvian Anchovy. பெரு நாட்டின் கடற்பகுதிகளில் காணப்படும் ஒருவகை நெத்திலி மீன் இனம் இது.
பதினான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நெத்திலியும் மத்தி மீனும் சிப்பிகளும் பெரு நாட்டில் அதிக அளவில் உணவுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மீன் வளங்களால் தொடர்ந்து கிடைத்த புரதச்சத்தும் ஊட்டமும் பெருவின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவி செய்தன. நெத்திலியும் மத்தியும் போதுமான அளவில் கிடைத்தன என்பதால் நாடோடிகளாகத் திரிந்த தொல்குடிகள் ஒரே இடத்தில் வசிக்க முடிவு செய்தனர்.அப்படி வசிக்கத் தொடங்கிய நிகழ்வுதான் பெருவின் நாகரீகத்துக்கே அடிப்படை! பெருவின் பண்டைய நகரங்களில் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் எலும்புகளில் கிட்டத்தட்ட 80% எலும்புத்துண்டுகள் இந்த நெத்திலி மீனுடையவைதான். கி.மு.2500ல் பருத்தியை விளைவிக்கக் கற்றுக்கொண்ட தொல்குடிகள், நூல் வலைகளை உருவாக்கி இன்னும் இலகுவாக மீன்களைப் பிடிக்கத் தொடங்கினர். மீன் உணவுகளின் துணை இருந்ததால்தான் பண்டைய பெரு மக்களால் ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து தப்பிக்க முடிந்தது.
அந்த காலகட்டத்தோடு ஒப்பிட்டால் பெருவின் இன்றைய நிலை அப்படியே தலைகீழ் எனலாம். பெருவில் உள்ள 40% மக்கள் பசியோடு இருக்கிறார்கள். ஆறில் ஒரு குழந்தை தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகிறது. மொத்த குழந்தைகளில் 70%க்கும் மேல் ஊட்டச்சத்து குறைபாட்டோடு இருக்கின்றனர். அடுத்தடுத்த திட்டங்களை அமல்படுத்தினாலும் தலைவிரித்து ஆடுகிற ஊட்டச்சத்து பிரச்சனையை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள் பெருவின் ஆட்சியாளர்கள்.
இத்தனை பிரச்சனைகள் இருக்கும்போது கிடைக்கும் ஒவ்வொரு மீனும் உணவுத்தட்டுக்குப் போகும் என்றுதானே யூகிப்போம்? அதுதான் இல்லை. சராசரியாக 4-8 மில்லியன் டன் நெத்திலி பிடிக்கப்படுகிறது. அதில் 98% மீன்கள் ஏற்றுமதிக்காக அனுப்பப்படுகின்றன! இரண்டு சதவிகிதத்துக்கும் குறைவான மீன்களே உள்ளூர் சந்தைகளில் விற்கப்படுகின்றன! அவையும் விரும்பி உண்ணப்படுவதில்லை.
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்படும் வறியர்கள் இருக்கிற ஒரு நாட்டிலிருந்து இத்தனை மீன்கள் ஏன் ஏற்றுமதி செய்யப்படுகின்றன? அந்த அளவுக்கு ஒரு சிறு நெத்திலி மீனுக்கு என்ன சிறப்பம்சம் இருக்கிறது? இந்த கடற்கரையில் மட்டும் ஏன் இத்தனை மீன்கள் குவிகின்றன?
எண்ணிக்கை/மொத்த எடையின் அடிப்படையில் பார்த்தால் உலக அளவில் அதிகம் பிடிக்கப்படுகிற மீன் இனம் இது. இது நுண்பாசிகளை உண்கிற மீன் இனம் என்பதால் கூட்டமாக நீந்தும் இயல்புடையது. பல்லாயிரக்கணக்கான டன் எடையுள்ள மிகப்பெரிய மீன் கூட்டம் என்பது ஒரு சாதாரண நிகழ்வு. இதுபோன்ற வகை மீன்களை வளைத்துப் பிடிப்பது எளிது. ஆகவே குறைவாக செலவழித்தாலே அதிக எண்ணிக்கையில் இந்த மீன்களைப் பிடித்துவிட முடியும்.
பெருவின் கடலோரப் பகுதிகள் இந்த மீன்களின் வளர்ச்சிக்கு ஏற்றவை. Upwelling என்று அழைக்கப்படுகிற ஒரு கடல்சார் நிகழ்வு இங்கு தொடர்ந்து நடந்தபடியே இருக்கும். கடலின் ஆழத்தில் இருக்கிற, குளிரான, ஊட்டசத்துக்கள் நிறைந்த நீர், கடலின் மேற்பரப்புக்கு வருவது Upwelling என்று அழைக்கப்படுகிறது. இது நடக்கும்போது, மேலிருந்து வருகிற சூரிய ஒளியையும் குளிர்ந்த நீரில் இருக்கிற சத்துக்களையும் எடுத்துக்கொண்டு நுண்பாசிகள் வேகமாக வளரும். நுண்பாசிகள் தழைத்து வளரும்போது அந்த வாழிடமே செழிப்பானதாக மாறிவிடும். நுண்பாசிகளை உண்கிற நெத்திலி போன்ற சிறு மீன்கள், மீன்களை உண்கிற பெரிய மீன் வகைகள், கடல் பாலூட்டிகள், கடற்பறவைகள் எல்லாமே அந்த வாழிடத்தில் வந்து குவியும்.
இதுதவிர, Humboldt current என்று அழைக்கப்படுகிற ஒரு குளிர் நீரோட்டமும் பெருவின் கடற்கரையை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும் பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுவந்து சேர்க்கிறது. நீரோட்டங்களாலும் ஆழத்திலிருந்து மேலே வரும் குளிர் நீராலும் செறிவூட்டப்பட்ட பெருவின் கடலோரம், உலகிலேயே வளம் அதிகம் உள்ள ஒரு வாழிடமாக மாறியிருக்கிறது. உலகில் உள்ள மொத்த மீன்களில் 10% முதல் 20% வரை இங்கிருந்து மட்டுமே பிடிக்கப்படுகின்றன!
நல்ல சூழல் இருப்பதால் நெத்திலி மீன்கள் எளிதில் பல்கிப் பெருகின. ஆகவே பண்டைய பெரு நாட்டில் நெத்திலி ஒரு முக்கியமான உணவாக இருந்தது. காலப்போக்கில் ஸ்பெயின் நாட்டின் காலனியாதிக்கம், பல்வேறு உள்நாட்டுப் பிரச்சனைகள் எல்லாமே இந்த உணவைப் பற்றிய பார்வையையே மாற்றின. 1940கள் வருவதற்குள் இந்த மீன் முற்றிலுமாக மதிப்பிழந்தது. “உரமாகப் பயன்படுத்துவதற்கு ஏற்றது” என்று இந்த மீனை வர்ணித்தார்கள் உள்ளூர் மக்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பின் தொழில்நுட்பங்கள் வளர்ந்த காலகட்டத்தில்கூட, புதிய வலைகளோடும் கப்பல்களோடும் நெத்திலியைப் பிடித்து உர நிறுவனங்களுக்கே அதிகம் விற்றார்கள்!
1950களில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் மத்தி மீன் தொழில் கடும் சரிவை சந்தித்தது. இந்த மத்தி மீனைக் கோழிப்பண்ணைகளில் தீவனமாகப் பயன்படுத்திய முதலாளிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர். பெரிய அளவில் தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
“நாங்க இருக்கோம்” என்று சவாலை எதிர்கொண்டது பெரு. மீன்களைப் பதப்படுத்தும் சிறு இயந்திரங்கள் சட்டவிரோதமாக கலிஃபோர்னியாவிலிருந்து பெருவில் சென்று இறங்கின. தீவனமாக மீனை மாற்றும் தொழில்நுட்பத்தை அறிந்துகொண்ட பெருவின் மீனவர்கள், டன் கணக்கில் நெத்திலி மீன்களைப் பிடிக்கத்தொடங்கினார்கள். 1940களில் சில ஆயிரம் கிலோக்கள் மட்டுமே பிடிக்கப்பட்ட நெத்திலி, 1960களின் முடிவில் ஒரு லட்சம் டன்னை எட்டியது! 1970களில் பன்றிகளுக்கு உணவாகவும் செல்லப்பிராணிகளுக்கு உணவாகவும்கூட இந்த மீனைப் பயன்படுத்தலாம் என்று யாரோ கண்டுபிடித்துவிட, இன்னும் பெரிய அளவில் இந்த மீன்பிடித்தொழில் விரிவுபடுத்தப்பட்டது. ஒரு வருடத்தின் சராசரி ஒரு கோடியே இருபது லட்சம் கிலோ என்ற புதிய உச்சத்தைத் தொட்டது!
1980களின் பிற்பகுதியில் “பண்ணையில் மீன்களை வளர்க்கும்போது, அதற்குத் தீவனமாகவும் இந்த நெத்திலியைப் பயன்படுத்தலாம்” என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உலகமெங்கும் உள்ள மீன் பண்ணைகளுக்குப் பெருவிலிருந்து தீவன மூட்டைகள் அனுப்பப்பட்டன. மீன் எண்ணெய்க்கான ஒரு சந்தை உருவானபோதுகூட இந்த நெத்திலியை நோக்கியே உலகநாடுகள் பார்வையைத் திருப்பின.
மீன் எண்ணெய்க்காக, மீன்களுக்கான தீவனமாக, பன்றிகளுக்கான தீவனமாக, உரமாக, பல்வேறு விதங்களில் உருமாறி இன்று இந்த சிறு நெத்திலி உலகம் முழுவதும் பயணிக்கிறது. பெருவில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களில் கிட்டத்தட்ட 87% பேருக்கு இந்த நெத்திலிதான் வாழ்வாதாரம்! இந்த மீனைப் பிடிப்பவர்களாக, இந்த மீனைப் பதப்படுத்துபவர்களாக, இந்த மீனை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் பணியாளர்களாக எல்லாருமே இந்த மீனுடன் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒன்றரை பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மிகப்பெரிய தொழில் இது!
ஊட்டச்சத்து குறைபாடு மலிந்துபோய் இருக்கும் ஒரு நாட்டில், கிடைக்கிற மீன்களும் ஏன் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்ற கேள்விக்கு இதுதான் பதில் – இந்த மீனை அப்படியே சாப்பிடுவதை விட, பதப்படுத்தி தீவனமாக ஏற்றுமதி செய்தால், இதன் நிகர மதிப்பு 300 மடங்கு அதிகம்! “இந்த மீனைப் பதப்படுத்தியதும் ஒரு நறுமணம் வரும். அது என்ன தெரியுமா? பணத்தின் நறுமணம் அது” என்று விழி விரியப் பேசுகிறார்கள் பெருவின் மீனவர்கள்.
“இத்தனைக்கும் வெளியிலிருந்து பார்த்தால் இது லாபம் கொழிக்கிற தொழில் போல் இருக்கலாம். ஆனால் இந்தத் துறையில் இருக்கும் ஒரு பணியாளருக்கோ மீனவருக்கோ கையில் மிஞ்சுகிற பணம் மிகவும் கம்மி” என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
ஏற்கனவே வறுமையின் பிடியில் இருக்கும் ஒரு நாட்டில், “விற்பனை செய்து அதிக அளவில் காசு சம்பாதிப்பதை விட, பேசாமல் நீங்களே அந்த நெத்திலியை சாப்பிடுங்கள்” என்று எளிதில் சொல்லிவிடமுடியாது. தவிர, பல ஆண்டுகளாக தீவனமாகவே ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது என்பதால் “நெத்திலி மனிதர்கள் சாப்பிடத்தகுந்த மீன்” என்ற ஒரு எண்ணமே பெரு மக்களிடம் இல்லை. “தீவன மீன்” என்ற ஒரு கண்ணோட்டத்திலேயே இது அணுகப்படுகிறது.
இந்த அடிப்படைகளை மனதில் வைத்துக்கொண்டு ஆய்வு செய்த அறிவியலாளர்கள், “இந்த மீன் உணவுக்கு ஏற்றது. பெருவின் ஊட்டச்சத்து பிரச்சனைகளுக்கு இது முடிவு கட்டும்” என்ற ஒரு கருத்தை முன்வைத்தார்கள். பெருவின் நாடுதழுவிய ஊட்டச்சத்துத் திட்டங்களில் இந்த மீன் குழந்தைகளுக்கு உணவாக வழங்கப்பட்டது. இது நடந்த பிறகும்கூட மக்களுக்கு இந்த மீன் பற்றிய புரிதல்கள் பெரிதாக மாறவில்லை. “அரசாங்கத் திட்டத்தில் தரப்படுகிற மீன்” என்ற அளவில் மட்டுமே இந்த மீன் நின்றுபோனது.
2006களில் பெருவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றான கரால் (Caral) நகரத்தைப் பற்றிய பல தகவல்கள் வெளிவந்தன. “அமெரிக்க கண்டத்திலேயே மிகவும் பழமையான நகரம்” என்று கரால் அறிவிக்கப்பட்டது. பண்டைய காலத்தில் இந்த நெத்திலிமீனின் முக்கியத்துவமும் பொதுமக்களின் பார்வைக்கு வந்தது. தங்கள் மூதாதையர்களை நினைத்துப் பெருமிதம் கொண்ட பெரு மக்கள், நெத்திலி மீனையும் வாஞ்சையோடு பார்க்கத் துவங்கினார்கள்.
அடுத்தடுத்து சிறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பெரிய உணவகங்களில் இந்த நெத்திலி மீன் பரிமாறப்பட்டது. “ஆங்கோவெத்தா வாரம்” ஒன்று கொண்டாடப்பட்டு, இந்த மீன் பிரபலப்படுத்தப்பட்டது. மெதுமெதுவாக இந்த மீனை உணவில் இணைத்துக்கொண்டனர் பெரு மக்கள். 2006ல் தொடங்கி 2018க்குள்ளாகவே இந்த மீனை உண்ணும் பழக்கம் பத்து மடங்கு அதிகரித்தது!
மக்களின் உணவுப்பழக்கம் மாறிவிட்டாலும், ஏற்றுமதிக்கான தேவை இன்னும் அதிகரித்தபடியே இருப்பதை சுட்டிக்காட்டும் அறிவியலாளர்கள், உணவை மாற்றுவதால் மட்டும் இந்தத் தொழிலின் தன்மை மாறிவிடாது என்கிறார்கள். ஏற்றுமதிக்கான தேவை இருக்கிற வரையில் தீவனத்துக்காக இந்த மீன் பிடிக்கப்படுவது நிற்காது என்பது அவர்களது வாதம்.
தீவனத்துக்காக ஒரு மீன் பிடிக்கப்படுவதில் என்ன பிரச்சனை?
ஒரு மீனை அப்படியே சாப்பிடுவது என்பது வேறு, அந்த மீனைத் தீவனமாகப் போட்டு வளர்க்கப்படும் பன்றி இறைச்சியையோ பண்ணை மீனையோ நாம் சாப்பிடுவது வேறு. அதனால் வரும் சூழல் சீர்கேடுகள் அதிகம். அரை டன் சால்மன் மீன் வளர்வதற்கு சராசரியாக ஒரு டன் தீவன மீன்கள் தேவைப்படுகின்றன. ஐம்பது சதவிகிதம் தீவனம் வீணாகிறது என்று இதை நாம் புரிந்துகொள்ளலாம். மீனுக்கு மீன் இந்த விகிதம் மாறுபடும் என்றாலும், ஒரு சதவிகிதம் தீவனம் வீணாகிறது என்றால்கூட அது விரயம்தான்.
தீவன மீன் தொழிலில் இருக்கும் சமூக பொருளாதார சிக்கல்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். பெரிய மீன்களைப் பண்ணையில் வளர்ப்பதால் கிடைக்கும் லாபத்தோடு ஒப்பிடும்போது, தீவன மீன்பிடித்தொழிலில் கிடைக்கும் லாபம் பல மடங்கு குறைவு. தீவன மீன்கள் மூன்றாம் உலக நாடுகளிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பதையும், பெரிய மீன் பண்ணைகள் வளர்ந்த நாடுகளில் அதிகம் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். “அறம்சார் கடலுணவுப் பழக்கம்” (Ethical seafood consumption) என்ற போர்வையில் மேலை நாடுகளில் பரிமாறப்படும் பல பண்ணை மீன்கள், எங்கேயோ ஒரு சிறு நாட்டிலிருந்து வரும் தீவனத்தைத் தின்று வளர்பவைதான்.
“அமெரிக்காவில் இப்போது கிடைக்கும் சால்மன் மீனின் விலை குறைந்திருக்கிறது என்கிறார்கள். குறைந்த விலையில் எப்படி ஒரு மீனை விற்க முடிகிறது? ஏனென்றால் இவர்கள் விலையை குறைக்கிறேன் என்ற பெயரில் அந்த பாரத்தை வாழிடங்களின்மீதும் சூழலின்மீதும் மூன்றாம் உலக நாடுகளின் சமூகக் குழுக்களின்மீதும் ஏற்றுகிறார்கள். அங்கே பாரம் கூடுகிறது, இங்கே விலை குறைகிறது.” என்று காட்டமாக எழுதுகிறார் சூழலியலாளர் ஜான் வோல்பே.
பண்ணையில் பெரிய மீன்களை வளர்ப்பதிலும் தீவனமாக மீன்களையே தருவதிலும் உள்ள சிக்கல்கள் பன்முகத்தன்மை வாய்ந்தவை. அதிலும் குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளில் இப்போதுதான் பெரிய அளவில் பண்ணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் முற்றிலும் வேறானவை. சரி/தவறு என்று எதையும் எளிதில் வகைப்படுத்திவிடமுடியாது. அறம் சார்ந்த சிக்கல்கள், சூழலியல் பிரச்சனைகள், பொருளாதாரக் குழப்பங்கள் என்று இதில் பல கோணங்கள் உண்டு.
காலநிலை மாற்றம், எல்–நினோ பிரச்சனை என்று அடுத்தடுத்து அடிகள் விழுந்தாலும், அதீத எண்ணிக்கையில் இருப்பதால் இப்போதைக்கு இந்த நெத்திலி மீன்கள் போதுமான அளவு கடலில் நீந்திக்கொண்டிருக்கின்றன. இவற்றைத் தீவனமாக மாற்றி வெளிநாட்டுக்கு அனுப்பிவிடாமல் பசித்திருக்கும் பெரு மக்கள் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்பதுதான் சூழலியல் ஆர்வலர்களின் விருப்பம். பெரு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதே வேளையில், இந்தக் கடற்பகுதியைத் தீவனக்கிடங்காக பாவிக்கும் மேலை நாடுகளை நோக்கியும் அவர்கள் குரல் உயர்த்துகிறார்கள். மாற்றத்துக்குக் குறுக்கே நின்றுகொண்டிருக்கிறார்கள் பெரிய மீன் பண்ணைகளின் உரிமையாளர்கள்.
இதே பெரு கடற்கரையில், எழுபதுகளில் நெத்திலிகள் சரிந்த அதே நேரத்தில் இன்னொரு பெரிய கடல்சார் தொழிலும் ஆட்டம் கண்டது. ஏற்றுமதி ஸ்தம்பித்துப்போனது. கடல்சார் பொருட்களிலேயே மிகவும் விநோதமானது என்று இதைச் சொல்லலாம்.
அப்படி என்ன பொருள் அது?
தொடரும்…