கடலும் மனிதனும்;19 ’எடைக்கு எடை வைரம்! – ஒரு நிறத்தின் கதை’ – நாராயணி சுப்ரமணியன்
தொடர் | வாசகசாலை
![](https://vasagasalai.com/wp-content/uploads/2021/01/Queen_Victoria-780x405.jpg)
பண்டைய ரோமானிய அரசர் காலிக்யூலா ஒருவரை அன்போடு விருந்துக்கு அழைக்கிறார். விருந்துக்கு வந்த நண்பரைப் பார்த்த காலிக்யூலா, உடனே அவரை சிரச்சேதம் செய்யுமாறு வீரர்களுக்கு ஆணையிடுகிறார்!
வந்தவர் அப்படி என்ன தவறு செய்திருப்பார்?
காலிக்யூலாவின் சர்வாதிகாரப் போக்கையும் முரண்பாடுகள் நிறைந்த முரட்டு குணத்தையும் அறிந்தவர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்காது. ஆனால், இந்த சிரச்சேதத்துக்கு சொல்லப்படும் பல காரணங்களில் ஒன்று வந்தவர் அணிந்திருந்த துணியின் நிறம்!
சரியாக சொல்லப்போனால், வந்தவர் அணிந்திருந்த துணியின் ஊதா நிறம்.
ஊதாநிற உடைகளை அடிக்கடி காலிக்யூலா விரும்பி அணிவாராம். தன்னைக் கடவுளாகவே காலிக்யூலா வரித்துக்கொண்டதாகவும் குறிப்புகள் உண்டு. விருந்துக்கு வந்த நண்பரின் உடை முழுக்க ஊதா நிறத்தில் ஒளிர்ந்தது என்றும், அந்த செல்வச் செழிப்பைப் பார்த்து மனம் தாங்காத காலிக்யூலா சிரச்சேதத்துக்கு உத்தரவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
ஊதா நிறத்தைப் பற்றிய நிறவியல் வல்லுநர்களின் விவரணைகளில், “ராஜ பரம்பரையைச் சேர்ந்த”, “செல்வச் செழிப்பான”, “சொகுசான” போன்ற சொற்களை அதிகம் பார்க்க முடியும். உயர்பிறப்பு, சொகுசு, அதிகாரம், பதவி, இலட்சியம் ஆகியவற்றுக்கான குறியீடாக ஊதா நிறம் பார்க்கப்படுகிறது. ஊதாவைப் பற்றிய இந்தக் கற்பிதங்கள் மனித மனத்தில் ஆழமாகப் புகுந்திருப்பதற்குப் பின்னால் ஒரு நெடிய வரலாறு உண்டு. காலிக்யூலாவின் பொறாமையும் இதுபோன்ற நிறக் குறியீடுகளும் இணையும் புள்ளி அது.
பண்டைய ஃபெனிசீயாவின் டயர் நகரத்தின் கடவுள் மெல்க்வார்ட். தன் காதலி டைரோஸுடன் இவர் ஒரு நாள் கடற்கரையில் உலாவிக்கொண்டிருக்கும்போது, இவர்களின் செல்ல நாய்க்குட்டி அங்கிருந்த சிப்பி, சங்கு, கிளிஞ்சல்களை கடித்துப் பார்த்து விளையாடிக்கொண்டிருந்தது. ஒரு சங்கைக் கடித்ததும் நாயின் வாய், மூக்கு முழுக்க ஊதா சாயம் அப்பிக்கொண்டதைப் பார்த்த காதலி டைரோஸ், அந்த ஊதா நிறம் மிகவும் அழகாக இருப்பதாகவும், அந்த நிறத்தில் தனக்கு உடை ஒன்று வேண்டுமென்றும் மெல்க்வார்ட்டைக் கேட்டாள். காதலியின் விருப்பத்திற்கேற்ப சங்கிலிருந்து ஊதா சாயத்தைப் பிரித்தெடுத்த மெல்க்வார்ட், முதல் ஊதா சாயத்தை உருவாக்கினார்.
ஃபெனீசியர்களின் இந்தப் புராணக்கதைக்கு எதிர்க்கதைகளைத் தருகிறார்கள் ரோமானியர்களும் கிரேக்கர்களும். மெல்க்வார்ட் என்ற கடவுளுக்கு மாற்றாக ஹெர்குலீஸ் என்ற கடவுளை வைத்துப் புராணக்கதை ஒன்றை முன்வைக்கிறார்கள். இதே கதை கிரேக்கத்தில் ஹிராக்கிள்ஸ் என்ற கடவுளோடு இணைத்து சொல்லப்படுகிறது.
பல்வேறு பண்டைய தேசங்கள் “நாங்கதான் கண்டுபிடிச்சோம்” என்று ஊதாவை முன்வைத்துப் புராணங்களையே இயற்றுவதற்கு என்ன காரணம்? இந்த ஊதா நிறத்தில் அப்படி என்னதான் சிறப்பு?
டைரியன் ஊதா, இராஜ ஊதா, பேரரசர்களுக்கான ஊதா என்று இதற்குப் பல பெயர்கள் உண்டு. வாடாமல்லி நிறம், கத்திரிப்பூ நிறம், ஊதா நிறம் என்றேல்லாம் குறிக்கப்படும் இந்த நிறத்தின் பெயர் “Royal Purple” என்பதாகத்தான் இன்றும் இருக்கிறது. ஃபெனிசியா என்ற பெயரே “ஊதா நிறத்தின் நிலம்” என்ற பொருள்தரும் பண்டைய சொற்களிலிருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
யார் ஊதா சாயத்தை முதலில் கண்டுபிடித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. மினோவாவின் குறிப்புகள் இதை விட முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று கூட சொல்லப்படுகிறது. நமக்குக் கிடைப்பதெல்லாம் புராணங்களும் செவிவழிச் செய்திகளும் மட்டுமே. ஏதோ ஒரு தற்செயல் நிகழ்வில், ஒரு வகை கடல் சங்குக்குள் ஊதா நிறம் ஒளிந்திருக்கிறது என்று யாரோ கண்டுபிடித்துவிட்டார்கள்.
ஊதா நிறம் கிடைக்கும் சங்கு வகையின் பெயர் ம்யூரெக்ஸ். பல வகை ம்யூரெக்ஸ்கள் இருக்கின்றன என்றாலும் ஒரு சில ஆழ்கடல் இனங்களில் மட்டுமே ஊதா சாயம் கிடைக்கும். இரையைப் பிடிப்பதற்கும் முட்டைகளைப் பாதுகாப்பதற்கும் இந்த சங்குகள் ஒருவகை திரவத்தை சுரக்கும். அந்த சுரப்பிகளுக்குள்ளிருந்து ஊதா சாயம் கிடைக்கிறது. பண்டைய ஃபெனீசியர்கள் மீன்பிடிக் கூண்டுகளை ஆழ்கடலில் இறக்கி, இந்த சங்குகளைப் பிடித்து வருவார்கள். பிடித்து வந்த எல்லா சங்குகளும் பல நாட்கள் கடற்கரை வெயிலில் காயவைக்கப்படும். கிட்டத்தட்ட அழுகும் நிலைக்கு சங்குகள் வந்த பின்பு, சங்குகள் கொஞ்சமாக நசுக்கி, இடிக்கப்படும். பிறகு ஓட்டுக்குள்ளிருக்கும் சதையிலிருந்து ஒரு வகை சுரப்பிகள் மட்டும் பிரித்து எடுக்கப்படும். இந்த சுரப்பிகளை ஒன்றாகச் சேகரித்து, நிறைய உப்பு போட்டு, மூன்று நாட்கள் தகரப் பாத்திரங்களில் தொடர்ந்து வேக வைக்க வேண்டும். இறுதியில் ஊதா சாயம் கிடைக்கும்.
சரியான வகை சங்கைத் தேர்ந்தெடுப்பது, காயவைப்பது, இடிப்பது, சுரப்பிகளைப் பிரித்தெடுப்பது, வேக வைப்பது என்று முதுகை ஒடிக்கும் வேலை இது. இவ்வளவு கஷ்டப்பட்டாலும் கிடைக்கிற சாயத்தின் அளவு துளிதான். ஒரு கிராம் சாயம் வேண்டுமானால் 12,000 சங்குகளைப் பதப்படுத்தவேண்டும்!
இவ்வளவு போராடி ஒரு கிராம் சாயத்தை உருவாக்க வேண்டுமா? வேறு வகை ஊதா சாயங்கள் இல்லையா என்று நமக்கு சந்தேகம் வரலாம். மனித இனம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக விதவிதமான நிறச்சாயங்களைத் தேடி அலைந்துவருகிறது. அந்த காலத்து மக்களுக்கு சாயத்தைக் கண்டுபிடிப்பது ஒரு பிரச்சனை என்றால், அந்த சாயம் எளிதில் மங்கிப்போகாமல் இருப்பதும் முக்கியமானதாக இருந்தது. முதலில் சிவப்பு நிறத்தில் சாயமேற்றி, பிறகு நீல நிறத்தில் சாயத்தையும் அதே துணியில் ஏற்றினால் கொஞ்சமாக ஒரு ஊதா நிறம் துணியில் தெரியும். அதுவும் நிரந்தரமாக இருக்காது, அடிக்கடி துவைத்து வெயிலில் காயவைக்கும்போது காலப்போக்கில் நிறம் மங்கிவிடும்.
ஆனால் இந்த சங்கு சாயம் அப்படியல்ல, “எவ்வளவு அடிச்சாலும் தாங்குவேன்டா” என்றபடி மழையையும் வெயிலையும் எதிர்த்து நின்றது. இன்னும் சொல்லப்போனால், “வெயில் பட பட, இந்த சங்கு ஊதாவின் அடர்த்தி அதிகரித்துக்கொண்டே போகிறது” என்று வியக்கிறார்கள் பண்டைய வரலாற்று ஆசிரியர்கள். அவர்கள் சொல்வது உண்மைதான். பொதுவாக பண்டைய ஓவியங்கள், சிலைகளில் தீட்டப்பட்ட வர்ணங்கள் காலப்போக்கில் மங்கிவிடும். ஆனால், சமீபத்திய ஒரு அகழ்வாராய்ச்சியில், 2500 வருடம் பழமையான, சங்கு ஊதாவால் நிறமேற்றப்பட்ட ஒரு துணி கிடைத்திருக்கிறது. நேற்றுதான் சாயமேற்றப்பட்ட துணியைப் போல் அது பளபளக்கிறது!
சாயத்தைப் பிரித்தெடுக்கும் முறையில் இருக்கிற உழைப்பு, கிலோ கிலோவாக சங்குகளைப் பதப்படுத்தினாலும் சில கிராம் சாயம் மட்டுமே கிடைக்கும் என்பதால் வருகிற அரிதான தன்மை, வெயிலுக்குத் தாக்குப்பிடிக்கும் ஊதாவின் இயல்பு, எல்லாமாக சேர்ந்து இந்த நிறத்தின் விலையைப் பலமடங்கு உயர்த்தின. ஒரு கிலோ ஊதா சாயத்தின் விலை மூன்று கிலோ தங்கத்தின் விலைக்கு ஒப்பானது! இன்னும் சரியாக சொல்லப்போனால், அந்த காலகட்டத்தின் நிலவரப்படி, ஒரு கிலோ ஊதா சாயத்தின் விலை, ஒரு கிலோ வைரத்தின் விலைக்கு ஒப்பானது!
இந்த சங்குகளிடமிருந்து சாயத்தைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம், சங்குகளை எப்படிப் பதப்படுத்தினால் எந்த மாதிரி நிறத்தில் சாயம் கிடைக்கும் என்பதெல்லாம் ஃபெனீசியர்களுக்கு மட்டும் தெரிந்த ரகசியமாக இருந்தது. தவிர, ஃபெனீசியாவின் கடற்கரையில் இந்த வகை சங்குகள் கொட்டிக் கிடந்தன. பண்டைய ஃபெனீசியாவின் முக்கிய ஏற்றுமதியாக இந்த ஊதா சாயம் மாறியது. கொள்ளை விலை என்பதால் ஊதா நிறத்தின் மதிப்பும் உயர்ந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக ஊதாவின் புகழ் எங்கும் பரவியது. ஃபெனிசியாவில் நூற்றுக்கணக்கான ஊதா சாயப்பட்டறைகள் உருவாக்கப்பட்டன. சாயம் பிரித்தடுக்கப்பட்ட பின்பு மீதமிருக்கும் ஓடுகள் கடற்கரைகளில் குவியல் குவியலாகக் கொட்டப்பட்டன. விலை கூடுதல் என்பதால் யாராலும் முழு ஊதா துணிகளை வாங்க முடியவில்லை. அதிகபட்சமாக ஒரு ஊதா இழையை உடையில் சேர்த்துக் கொள்ளலாம். எவ்வளவு செல்வச்செழிப்பு இருக்கிறதோ ஊதா பட்டையின் அகலம் அத்தனை பெரிதாக இருக்கும். அரசர்களால் மட்டுமே முழு ஊதா உடைகளை வாங்க முடிந்தது.
கிளியோபாட்ராவை சந்திக்கச் சென்ற ஜூலியஸ் சீஸர், அவர் அறையில் இருந்த ஊதா திரைச்சீலைகள், மெத்தைகளைப் பார்த்து மெய்மறந்து போனார். அவரது படகுகளில் கூட ஊதா பாய்மரங்களே இருந்தன! அந்த அளவுக்கு செல்வத்தில் செழித்திருந்தார் கிளியோபாட்ரா! “ஊதா நிறப் பாய்மரங்களின் செழிப்பில் காற்றுக்கே காதல் வரும்” என்று உருகுகிறார் ஷேக்ஸ்பியர். கிளியோபாட்ராவின் அழகையும் ஊதாவின் மயக்கும் நிறத்தையும் மனதில் சுமந்துகொண்டு நாடு திரும்பிய சீஸர், அன்று முதல் ஊதா நிற உடைகளை விரும்பி அணியத் தொடங்கினார். “அரசனைத் தவிர யாரும் ஊதா நிற உடைகளை அணியக் கூடாது” என்று சட்டம் போட்டார்!
இதே போன்ற சட்டங்கள் பல நாடுகளில் ஒரே சமயத்தில் இயற்றப்பட்டதுதான் ஆச்சரியம். ரோமானியப் பேரரசுகளும் இங்கிலாந்தும் எகிப்தியப் பேரரசுகளும் இதுபோன்ற சட்டங்களைக் கொண்டு வந்தன. முழுவதுமாக ஊதா நிறத்தாலான உடைகளை அணிய அரசருக்கு மட்டுமே உரிமை இருந்தது. அரசராக மனதுவைத்து யாருக்காவது ஊதா நிற உடைகளைப் பரிசளித்தால் மட்டுமே அவர் அந்த உடையை அணியலாம். அரச குடும்பத்தினரின் நிறமாக ஊதா மாறிப்போனது. அரசகுடும்பத்தினர் வசிக்கும் மாளிகைகள், வீடுகளில் உள்ள பளிங்குக்கற்களில் கூட ஊதா நிறம் ஏற்றப்பட்டது!
போகப்போக ஊதா மோகம் மொழிக்குள்ளும் புகுந்துகொண்டது. “ஊதா உடைகளை அணிந்தார்” என்று உருவகமாக யாராவது எழுதினால் “அரச பதவி ஏற்றார்” என்று பொருள்! “ஊதாவில் பிறந்தவன்” என்றால் “அரச குடும்பத்தில் பிறந்தவன்” என்று பொருள்! “யூதர்களின் அரசர் என்பதால், இயேசுநாதர் ஊதா உடைகளை அணிந்தார்” என்கிறது விவிலியம். மறுமலர்ச்சிக் காலத்தின் பல ஓவியங்களில், டாவின்ஸி, மைக்கேல் ஏஞ்சலோ உள்ளிட்ட பல ஓவியர்கள், “ராஜபரம்பரை” என்பதை வெளிப்படுத்த வேண்டுமானால், அந்த கதாபாத்திரங்களுக்கு ஊதா நிற உடைகளை அணிவித்துவிடுவார்கள்! ஊதா மோகம் தலைக்கேற தலைக்கேற, அரசரின் முன்னால் யாராவது ஊதா நிறத்தில் உடை அணிந்து வந்தால், தன் செல்வச் செழிப்பை கர்வத்துடன் வெளிப்படுத்துக்கொள்வதாகவும், “அரசனுக்கு நிகர் நான்” என்று பறைசாற்றிக்கொள்தாகவும் அர்த்தம் என்ற கருத்தும் பரவியது!
ஊதா உடை அணிந்து வந்த விருந்தினரைக் காலிக்யூலா ஏன் கொன்றார் என்பது இப்போது புரிந்திருக்கும்.
சங்கு சாயத்தைப் பிரித்தெடுப்பது அதிக உழைப்பை மட்டுமல்ல, நாற்றத்தைத் தாங்கும் சக்தியையும் அதிகமாகக் கோரும் ஒரு வேலை. அழுகிய தசையிலிருந்து, காய்ந்த சங்கிலிருந்துதான் சுரப்பிகளைப் பிரித்தெடுக்க முடியும். பிறகு அந்த அழுகிய சுரப்பிகளை மூன்று நாட்கள் வேக வைக்கவும் வேண்டும். “நானெல்லாம் சாக்கடைக்குள்ளேயே ஒரு மாமாங்கம் கூடு கட்டி வாழ்ந்த வித்தைக்காரன்” என்று மார்தட்டிக்கொள்பவர்கள் மட்டுமே இந்த வேலையை தைரியமாகச் செய்ய முடியும். இந்த நாற்றத்தாலேயே சாயப்பட்டறைகள் ஊருக்கு வெளியே பல கிலோமீட்டர்கள் தள்ளி நிறுவப்பட்டன. “திருமணத்திற்குப் பிறகு திடீரென்று ஒருவன் ஊதா சாயப்பட்டறையில் வேலை செய்யத் தொடங்கினால், நாற்றம் காரணமாக அவனை விவாகரத்து செய்ய மனைவிக்கு முழு உரிமை உண்டு”, என்கிறது யூதர்களுக்கான ஒரு சட்டப்புத்தகம்!
எகிப்து மம்மிகள் தொடங்கி தைல வண்ண ஓவியங்கள் வரை கொலோச்சிய ஊதா நிறம் உலகெங்கும் போற்றப்பட்டது. ஃபெனீசியா மீதான படையெடுப்பு உட்பட பல நிகழ்வுகள் இந்த சாயப்பட்டறைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்தாலும் அந்த நிறத்தின்மீதான மயக்கம் குறையவேயில்லை. 1856ல் பிரிட்டனைச் சேர்ந்த வில்லியம் ஹென்றி பெர்க்கின்ஸ் என்பவர் செயற்கை ஊதா சாயம் ஒன்றைக் கண்டுபிடித்தார். அத்தோடு இந்த சங்கு ஊதா மோகம் முடிவுக்கு வந்தது.
செயற்கை சாயங்கள் பயன்படுத்தப்படும் இன்றைய காலகட்டத்தில் கூட, ஊதாவின் மீதான இந்த “ராஜபரம்பரை” மயக்கங்கள் இன்னும் மாறவில்லை. இங்கிலாந்தைச் சேர்ந்த அரச குடும்பத்தினரோ, அல்லது மேலை நாட்டு அரசியல்வாதிகளோ ஊதா நிறத்தில் ஒரு கைக்குட்டையை வைத்திருந்தால் கூட, ஃபேஷன் நாளிதழ்கள், “ராயல் பர்ப்பிள்” என்று வர்ணித்து அந்த நிறம் தரும் கம்பீரத்தைப் பக்கம் பக்கமாக விவரிக்கின்றன. “இங்கிலாந்து இளவரசர் அணிந்திருக்கும் ஊதா நிற கழுத்துப்பட்டை ஒரு எதேச்சையான தேர்வு அல்ல. அது அதிகாரத்தின் குறியீடு” என்று சமீபத்தில்கூட ஃபேஷன் கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது.
சூழலியல் ரீதியாகப் பார்த்தால், சங்குகளைக் கொன்றால் மட்டுமே இந்த சாயத்தைப் பிரித்தெடுக்க முடியும் என்பது ஆபத்தானது. ஊதா மோகம் பரவலாக இருந்த காலத்தில், சாயப்பட்டறைகளை ஒட்டியுள்ள கடற்கரைகளில் எல்லாம் இந்த வகை சங்குகள் தொடர்ந்து அழிந்தன. இவை பழைய எண்ணிக்கைக்கு மீண்டு வருவதற்குப் பல தசாப்ங்கள் தேவைப்பட்டன. “செயற்கை சாயமா இயற்கை சாயமா?” என்று இப்போது தலைதூக்கும் விவாதங்களில், இயற்கை சாயங்களால் ஏற்படும் இதுபோன்ற சூழல் சீர்கேடுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
சாயத்தின் ராஜ வரலாறு இது என்றால், வெறும் தண்ணீரால் விளைந்த பெரும் சூழலியல் சீர்கேடு ஒன்றும் வரலாற்றில் உண்டு. அது என்ன?
தொடரும்…