தொடர்கள்
Trending

கடலும் மனிதனும்;21 ‘கடலுக்குள் நீந்தும் எண்ணெய்க் கிணறுகள்’ – நாராயணி சுப்ரமணியன்

தொடர் | வாசகசாலை

திறமையான வேட்டைக்காரர் என்றால் பன்னிரெண்டு கிலோமீட்டர் தூரத்திலிருந்தபடியே திமிங்கிலம் இருப்பதைக் கண்டறிய முடியும் என்று சொல்லப்படுகிறது. அதன் முதுகிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடிக்கும் விதத்தையும், துடுப்பையும் வைத்தே, நேரடியாகப் பார்க்காமலேயே அது என்ன திமிங்கிலம் என்று கணித்துவிடுவார்கள் அனுபவம் வாய்ந்த வயசாளிகள்!

திமிங்கிலம் கண்ணில் பட்ட உடனே கப்பலின் மீகாமனுக்கு (தலைவன்) தகவல் தெரிவிக்கப்படும். கப்பலிலிருந்து சிறு படகுகள் கடலுக்குள் இறக்கப்படும். சில மாலுமிகளும், ஒரு தலைமை வேட்டைக்காரரும் படகில் பயணிப்பார்கள். திமிங்கிலங்களுக்கு அபாரமான செவித்திறன் உண்டு என்பதால் ஒரு சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்தாமல் அவற்றை அணுக வேண்டும். அருகில் சென்ற பிறகு,  தலைமை வேட்டைக்காரர், படகின் முனையில் நின்றுகொண்டு, ஒரு எறிஉளியை (harpoon) திமிங்கிலத்தின் முதுகில் பாய்ச்சுவார்.

காயம்பட்ட திமிங்கிலம் உடனே ஆழ்கடலுக்குச் செல்லும். எறிஉளியின் மறுமுனையில் கயிறு கட்டப்பட்டிருக்கும். அது போதுமான அளவில் இல்லாவிட்டாலோ, திமிங்கிலம் வேகமாக ஆழத்துக்குப் பாய்ந்தாலோ படகு கவிழும். படகிலிருந்து விழுந்துவிட்ட மாலுமிகள் நீந்தியபடி படகை நேராகத் திருப்பிவிட்டு, அதில் ஏறிக்கொண்டு, கயிற்றின் மறுமுனையைப் பிடித்தபடி திமிங்கிலம் மேலே வருவதற்குக் காத்திருப்பார்கள்.

மூச்சு விடுவதற்காகத் திமிங்கிலம் கடலின் மேற்பரப்புக்கு வரும். மனிதர்களைப் பார்த்ததும் வேகமாக நீந்தத்தொடங்கும். சில திமிங்கிலங்கள் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில்கூட நீந்தும். கயிற்றைப் பிடித்தபடி படகில் உள்ளவர்கள் திமிங்கிலத்தைப் பின்தொடர்வார்கள்.

வேட்டை முடிந்தபின்பு படகில் இருப்பவர்களை மீட்டுக் கரைக்குக் கூட்டிச்செல்லவேண்டியது கப்பலில் இருப்பவர்களின் வேலை. ஆகவே இந்த மொத்த நிகழ்வையும் நகம் கடித்தபடி கவனிப்பார்கள் கப்பலில் இருக்கிற மாலுமிகள்.

சில மணிநேரங்கள் படகை அங்கும் இங்கும் இழுத்து அலைந்தபிறகு, காயம் பட்ட திமிங்கிலம் கொஞ்சம் சோர்வடையும். அப்போது மாலுமிகளும் வேட்டைக்காரருமாக இணைந்து, திமிங்கிலத்தின் இதயத்திலோ நுரையீரலிலோ ஒரு பெரிய எறிஉளியால் குத்துவார்கள். ரத்தம் பீய்ச்சியடிக்கும்.

திமிங்கிலம் தன் சுவாசத்துக்காகப் போராடும். பிரம்மாண்டமான உருவம் என்பதால் அது ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் அலைகள் எழும், படகு அலைக்கழிக்கப்படும். ஒருகட்டத்தில் திமிங்கிலம் சுற்றியபடி சிறு சிறு வட்டங்களாக நீந்தத் தொடங்கும். இதை flurry என்கிறார்கள். பலமுறை இவ்வாறு சுற்றி பின்பு, தண்ணீரைத் தனது வாலால் ஓங்கி அடிக்கும் திமிங்கிலம், பக்கவாட்டில் புரளும். திமிங்கிலம் இறந்ததற்கான அறிகுறி இது.

இந்தப் போராட்டம் நடந்து முடிய சில மணிநேரங்கள் ஆகும். ஆனால், திமிங்கிலம் இறந்த பின்பும் படகில் இருப்பவர்களால் ஒரு நிமிடம் கூட ஆசுவாசமாக அமர முடியாது. திமிங்கிலத்தின் ரத்தம் வெளியேறத் தொடங்கிவிட்டது என்பதால் வேட்டை மீன்கள் வரத் தொடங்கிவிடும். அதனால் உடனடியாக திமிங்கிலத்தின் பிரம்மாண்டமான உடலை அவர்கள் கப்பலின் மேல்தளத்திற்குக் கொண்டு சேர்த்தாக வேண்டும்.

கப்பலின் மேல்தளத்துக்குத் திமிங்கிலத்தின் உடல் வந்து சேர்ந்த பின்பு கப்பல் பணியாளர்களுக்கு வேலை தொடங்கும். ஆறு மணிநேரத்துக்கு ஒரு குழு என்று ஷிப்ட் முறையில் வேலை பகிர்ந்து அளிக்கப்படும். திமிங்கிலத்தின் உடலை உடனே பதப்படுத்தி, அதில் இருக்கும் கொழுப்பைப் பிரிக்கவேண்டும். பணியாளர்களின் திறன், திமிங்கிலத்தின் எடை, தட்பவெப்ப சூழல் ஆகியவற்றைப் பொறுத்து இதற்கே பல வாரங்கள் ஆகும்.

தசையையும் கொழுப்பையும் தனித்தனியாகப் பிரித்து, சிறு துண்டுகளாகக் கொழுப்பை வெட்டுகிற வேலை அது.முதுகை ஒடிக்கிற வேலை. பிறகு கொழுப்பை வேகவைத்து எண்ணெயை எடுக்கவேண்டும். கப்பல்  தளம் முழுக்க எண்ணெயும் கொழுப்பும் ரத்தமும் சகதியாக அப்பியிருக்கும் என்பதால் நடக்கும்போது வழுக்கும். தடுமாறி கடலில் விழுந்த பல மாலுமிகள், ரத்த வாடைக்குக் கப்பலை அண்டிவந்த சுறாக்களுக்கு இரையாகியிருக்கிறார்கள்! பெரிய உடலை அறுத்தெடுக்கும் கருவிகளால் காயம்பட்ட மாலுமிகள், சீழ்பிடித்து நோய்த்தொற்றால் இறந்திருக்கிறார்கள். கொழுப்பைக் கொதிக்கவைக்கும்போது புயல் அடித்துவிட்டால், நூற்றுக்கணக்கான லிட்டர்கள் கொதிக்கும் எண்ணெய் இருக்கும் பீப்பாய்கள் அப்படியே கவிழ்ந்துவிடும். கொதிக்கும் எண்ணெயால் தீக்காயம் வந்து பலர் இறந்திருக்கிறார்கள்.

பல ஆண்டுகள் குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டிய தனிமை, வேலைச்சுமை, கொழுப்பின் நாற்றத்தால் ஏற்படும் மன உளைச்சல், அபாயகரமான சூழல் என்று அச்சுறுத்தல்கள் நிறைந்த தொழில் இது. “அய்யே! எல்லாவற்றிலும் அந்த எண்ணெய்ப்பிசுக்கு! சட்டை, பேண்ட், என் தோலின் துளைகள், தலைமுடி, கை, கால் எல்லாவற்றிலும் அந்தப் பிசுக்கு ஒட்டிக்கொண்டிருக்கிறது. கடுமையான நாற்றம் வேறு. இதிலிருந்து விடுதலையே கிடைக்காது போல!” என்று தன் கப்பல் குறிப்பில் எழுதுகிறார் 1800களைச் சேர்ந்த மாலுமி சார்லஸ் நோர்டாஃப்.

இத்தனை ஆபத்துகளையும் தாங்கிக்கொண்டு ஏன் திமிங்கிலங்களை வேட்டையாட வேண்டும்? அதில் அப்படி என்னதான் இருக்கிறது?

“நாகரீக வளர்ச்சியே அதில்தான் இருக்கிறது! தொழில்புரட்சியின் சக்கரங்களுக்கு எண்ணெய் ஊற்றியவை திமிங்கிலங்கள்தானே?” என்று சிலாகிக்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

எடிசனுக்கு முந்தைய காலகட்டம். விளக்குக்கு எண்ணெய், மெழுகுவர்த்திகளுக்கான மெழுகு என்று விதவிதமாக எரிபொருள் தேவைப்பட்டது. மண்ணெண்ணெய்க்கு முந்தைய சமூகம் அது. அந்தக் காலகட்டத்துக்கே விளக்கேற்றி வைத்த பெருமை திமிங்கிலங்களுக்கே உரியது!

திமிங்கிலங்களின் கொழுப்பிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய்தான் அப்போது முக்கியமான வணிக எண்ணெயாக இருந்தது. தெருவிளக்குகளுக்கு ஊற்றவும் கலங்கரை விளக்கங்களுக்கு எரிபொருளாகவும் சுரங்கத் தொழிலாளர்களின் விளக்குகளுக்கும் இந்த எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. “இரவில் மனிதர்களின் செயல்பாடு விளக்கை நம்பித்தான் இருந்தது. இன்னமும் சொல்லப்போனால் நாகரீகமடைந்த சமூகங்களில், தெருவிளக்கு என்பது ஒரு அத்தியாவசியம். திமிங்கிலங்களின் எண்ணெய் இல்லாவிட்டால் இது சாத்தியப்பட்டிருக்காது” என்று எழுதுகிறார்கள் மானுடவியல் அறிஞர்கள்.

திமிங்கிலங்களின் எண்ணெய்க்கென்றே சில தனிச்சிறப்புகள் உண்டு. 90 அடி உள்ள ஒரு நீலத்திமிங்கிலத்தின் உடலிலிருந்து சராசரியாக 120 பீப்பாய் எண்ணெய் கிடைக்கும். திமிங்கில எண்ணெய் எரிக்கப்படும்போது வாடை வராது, புகையும் இருக்காது.ஒரு லிட்டர் திமிங்கில எண்ணெயின் செலவும் குறைவு என்பதால் கஞ்சத்தனம் பார்க்காமல் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

ஸ்பெர்ம் திமிங்கிலங்களின் தலையில் ஸ்பெர்மாசெட்டி என்கிற ஒருவகைப் பொருள் உண்டு. இதை “தலை எண்ணெய்” என்று அழைக்கிறார்கள் திமிங்கில வேட்டைக்காரர்கள். இது வழி அறிவதற்கும் எளிதில் மிதந்து நீந்துவதற்கும் பயன்படும் ஒருவகை மெழுகு. காற்று பட்டவுடன் இது கெட்டிப்பட்டுவிடும். இந்த ஸ்பெர்மாசெட்டி, மெழுகுவர்த்திகள் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. திமிங்கிலங்களின் பொதுவான கொழுப்பு எண்ணெயோடு ஒப்பிடும்போது இந்தத் தலை எண்ணெயின் விலை அதிகம் என்பதால், இந்த மெழுகுவர்த்திகளின் விலை அதிகம். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இவை அந்தஸ்தின் அடையாளமாக மாறின! விருந்தினர்கள் வரும்போது ஸ்பெர்மாசெட்டி மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து அலட்டிக்கொள்வது செல்வந்தர்களின் வழக்கமானது!

எரிபொருளாக மட்டுமில்லாமல் சோப்புக்கட்டிகள் தயாரிக்க, சிலவகை நெய்கள் தயாரிக்கவும் திமிங்கில எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. லிட்டர் லிட்டராகக் குறைவான செலவில் கிடைக்கும் பொருள் என்பதால், அதை அடிப்படையாக வைத்துப் பல தொழில்கள் உருவாயின. இரண்டாம் உலகப்போரின்போது, க்ளிசரினை அடிப்படையாகக் கொண்ட வெடிகுண்டுகள் உருவாக்கப்பட்டன. இந்த க்ளிசரினைத் தயாரிப்பதற்கான மூலப்பொருளாக இருந்தது திமிங்கில எண்ணெய்தான்!

திமிங்கிலங்களில், “பலீன் திமிங்கிலம்” என்ற வகைமை உண்டு. இவற்றுக்குப் பற்கள் கிடையாது. உணவுத் துணுக்குகளை வடிகட்டக்கூடிய பலீன் தகடு மட்டுமே இந்தத் திமிங்கிலங்களின் வாயில் காணப்படும். திமிங்கிலங்களின் உடலில் இருக்கிற எல்லா பொருட்களையும் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்த வேட்டைக்க்காரர்கள், இந்த பலீன் தகடுகளையும் தனியே பிரித்தெடுத்தார்கள். இந்தத் தகடு தொழிலதிபர்கள் கண்ணில் பட்டது. எளிதில் வளைக்கக்கூடிய, ஆனால் உறுதியான பிரம்பு போன்ற இந்தத் தகட்டைப் பார்த்த தொழிலதிபர்கள், அதை உடனே விலைக்கு வாங்கிக்கொண்டார்கள்.

குடைக்கம்பிகள், பல்லக்குகளின் வளைந்த பகுதிகளுக்கான உள்கட்டமைப்புக் கம்பிகள், பெண்களின் பெரிய தொப்பிகளுக்கான விளிம்பு என்று எல்லாவற்றிலும் பலீன் குச்சிகள் பயன்படுத்தப்பட்டன. பெண்களின் உடல் அமைப்பைத் தக்கவைப்பதற்கான உள் உடையான கார்செட்டுக்குக் (corset) கச்சிதமாகப் பொருந்தியது பலீன் குச்சிகளின் தன்மை. அந்தக் காலத்து மேற்கத்திய உடைகளில், உடலிலிருந்து தனியே நிற்கும் கவுன்களைப் பார்த்திருப்போம். அவை ஒரு குடை போன்ற உள் கட்டமைப்பால் தூக்கி நிறுத்தப்பட்டன, அதற்கும் பலீன் தகடுகள் பயன்படுத்தப்பட்டன. சுருக்கமாக சொல்லப்போனால், இந்த பலீன் தகடு, ப்ளாஸ்டிக் காலத்துக்கு முந்தைய இயற்கை பளாஸ்டிக்!

திமிங்கில இறைச்சியும் பரவலாக உண்ணப்பட்டது. குறிப்பாக, கடலோர மக்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய புரதமாக இது மாறியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானில் விளிம்பு நிலை மக்களுக்கு முக்கிய உணவாதாரமாக விளங்கியது திமிங்கிலங்களின் இறைச்சி.

பல பொருட்கள் கிடைத்தாலும், திமிங்கில வேட்டைக்கான உந்துசக்தியாக இருந்து மாலுமிகளை இயக்கியது திமிங்கில எண்ணெய்தான். எண்ணெயின் பயன்பாட்டுக்கும் நாகரீகத்துக்கும் தொடர்பு இருந்தது என்பதால், நாகரீகம் வளர வளர, எண்ணெய்க்கான தேவையும் அதிகரித்தது. 1850களில் பெட்ரோல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டபின்பு, திமிங்கில எண்ணெய்க்கான தேவை ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

ஆர்டிக் கடலின் இன்யூட்டுகள், அட்லாண்டிக் கடலின் பாஸ்குகள், பசிபிக் கடலின் ஜப்பானியர்கள் போன்ற பல இனக்குழுக்களுக்குத் திமிங்கில வேட்டை ஒரு முக்கிய வாழ்வாதாரம், மரபின் அடையாளம். கி.மு 6000லேயே திமிங்கில வேட்டை நடத்தப்பட்டதற்கான குறிப்புகள் உண்டு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜப்பானிய வரலாற்று நூலான கோஜிகி, ஜப்பானிய அரசருக்குத் திமிங்கில இறைச்சி விருப்பமான உணவு என்று குறிப்பிடுகிறது.

பல ஆண்டுகளாக மரபுசார் தொழிலாக, ஆபத்துகள் நிறைந்ததாக இருந்த திமிங்கில வேட்டையை மாற்றியமைத்தார் ஸ்வெண்ட் ஃபோயின் என்ற நார்வேஜியர். 1860களில், வெடிக்கக்கூடிய எறிஉளியை (Explosive harpoon) உருவாக்கினார். கை வலிமையை நம்பியிருக்காமல், ஒரு துப்பாக்கியைப் போல இதைப் பயன்படுத்தலாம். தவிர, திமிங்கிலத்தின் உடலில் பட்டதும் இதற்குள்ளிருந்து இரு வெடிகள் வெடிக்கும் என்பதால் திமிங்கிலங்கள் அதிக நேரம் துடித்து படகைக் கவிழ்க்காமல் உடனடியாக இறந்துவிடும். இதே காலகட்டத்தில், நீராவியால் இயங்கக்கூடிய வேகமான கப்பல்களும் வடிவமைக்கப்பட்டன. ஆகவே தப்பி ஓடும் திமிங்கிலங்களையும் துரத்திப் பிடிக்க முடிந்தது.

இதுபோன்ற மாற்றங்களால் திமிங்கில வேட்டை அசுர வளர்ச்சி கண்டது. வெறும் அறுபது ஆண்டுகளில் 20 லட்சம் திமிங்கிலங்கள் கொன்று அழிக்கப்பட்டன. அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள நியூ பெட்ஃபோர்ட், திமிங்கில வேட்டையின் தலைநகரமாக மாறியது. “உலகத்துக்கே ஒளி கொடுத்த நகரம்” என்று பெட்ஃபோர்ட்டைப் புகழ்ந்தனர் பெருநகரவாசிகள். திமிங்கிலங்களின் எண்ணெய் உலகின் எல்லா விளக்குகளையும் ஏற்றி வைத்தது.

திமிங்கில எண்ணெய்க்கான தேவை குறைந்த பின்னும் தொடர்ந்து திமிங்கிலங்கள் அழிக்கப்பட்டன. இது அவற்றின் எண்ணிக்கையை பாதித்தது. ஆகவே 1948ல் சர்வதேச திமிங்கில வேட்டைக் கூட்டமைப்பு (International Whaling commission) உருவாக்கப்பட்டது. 1986ல் திமிங்கில வேட்டைக்கு சர்வதேசத் தடை விதிக்கப்பட்டது.

இங்குதான் சர்வதேச அரசியலின் கோரமுகம் குறுக்கிடுகிறது. உலகளாவிய சட்டங்கள், பேச்சுவார்த்தைகள் நடக்கும்போது ஏற்படும் எல்லாக் குழப்பங்களும் இந்தத் தடையை அமல்படுத்தும்போதும் தலைநீட்டின. சூழலியல் ஆர்வலர்கள், மரபுசார் பழக்கங்களை ஆதரிப்பவர்கள், தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசக் குறுக்கீடுகளை விரும்பாதவர்கள், சர்வதேச அரசியலில் தொடர்ந்து பெரியண்ணனைப் போல நடந்துகொள்பவர்கள், பிடிவாதக்கார தலைவர்கள் என்று எல்லாருமாக குட்டையைக் குழப்பினார்கள். கூட்டமைப்பின் தெளிவில்லாத விதிமுறைகள் அவர்களுக்கு சாதகமாக அமைந்தன.

சூழல்சார் சமூகநீதியின் பேசுபொருளாக இருக்கிற மரபுசார் ஏகாதிபத்தியம் (Cultural imperialism) இந்த விவாதங்களிலும் முன்வைக்கப்பட்டது. “திமிங்கில வேட்டை என்பது எங்கள் மரபு. மேலைநாடுகள் கீழைநாடுகளை மரபுரீதியாக ஒடுக்குகின்றன. இவர்கள் இப்படித்தான் திமிங்கிலங்களை சாப்பிடுவார்கள், இவர்கள் காட்டுமிராண்டிகள் என்கிறரீதியில் எங்களை நடத்துகின்றன.அவர்கள் இனவாதத்தைக் கைவிட்டால் நாங்களும் ஒரு ஒப்பந்தத்துக்கு வரத் தயார்” என்று அறிவித்தன ஜப்பான் உள்ளிட்ட மரபுசார் திமிங்கில வேட்டை நாடுகள். பல பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. வீம்புக்காகவே சில நாடுகள், “தடைக்குக் கட்டுப்படமாட்டோம்” என்று அறிவித்தன. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் வெறுமனே குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர் மேலைநாட்டுத் தலைவர்கள்.

சர்வதேச திமிங்கில வேட்டைக் கூட்டமைப்பின் முயற்சிகள் வெற்றி பெற்றனவா என்றால், ஒரளவு தன் பணியை அது செய்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், சூழலியல் விவாதங்களில் பாரபட்சமும் ஏகாதிபத்தியமும் தொடர்ந்தால், இந்தக் கூட்டமைப்பின் முன்னெடுப்புகள் தொடர்ந்து வெற்றிபெறுமா என்பது சந்தேகம்தான். திமிங்கில வேட்டை நடத்த விரும்புகிற நாடுகளின் உண்மையான நோக்கம் என்ன என்பதே தெரிவதில்லை. இதுதான் நிதர்சனம். சர்வதேச அரசியலின் குளறுபடிகளால், அந்த நாடுகளும் தங்களது நோக்கங்களைத் தெரிவிக்கத் தயாரில்லை. வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டுமானால், பேச்சுவார்த்தையை நடத்தும் நெறியாள்கை அமைப்புகள், பாரபட்சம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் அப்படிச் செய்வது முக்கிய நாடுகளுக்கு அதிருப்தி ஏற்படுத்தும் என்பதால் தயக்கம் காட்டப்படுகிறது. திமிங்கிலங்கள் எல்லைகளற்று எல்லா நாடுகளுக்கும் பயணிப்பவை என்பதால் சர்வதேச ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே அவற்றைப் பாதுகாக்க முடியும்.

எந்த நாடாக இருந்தாலும், எந்தக் காரணமாக இருந்தாலும் திமிங்கில வேட்டை தேவையற்றதுதான். திமிங்கிலங்களின் இறைச்சியை இப்போது யாரும் விரும்பி, தேடித்தேடி உண்பதில்லை. திமிங்கில இறைச்சியை மரபாகக் கொண்ட நாடுகளில் கூட, சூழலியல் காரணங்களைக் காட்டி மக்கள்அதை உண்பதற்குத் தயக்கம் காட்டுகின்றனர். தலைபோகிற ஆராய்ச்சியாக இருந்தால் கூட அதற்காக திமிங்கிலத்தைக் கொல்வதற்குக் கடல்சார் ஆய்வாளர்களும் தயாராக இல்லை. திமிங்கில எண்ணெய்க்கும் இப்போது தேவை இல்லை. ஏற்கனவே திமிங்கிலங்கள் அழிந்துவரும் நிலையில், ஒவ்வொரு திமிங்கிலத்தின் இறப்பும் கடுமையான சூழலியல் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தும் இருக்கிறது.

ஆகவே, “இது எங்கள் மரபு” என்ற ஒற்றைக் காரணத்தைச் சொல்லித் திமிங்கிலங்களை வேட்டையாடுவது அபத்தமாகத் தெரிகிறது. ஆனால், இதை எழுதும்போதே, கீழை நாடுகளின் மரபை எதாவது ஒரு காரணம் காட்டி மேலை நாடுகள் மறுதலிக்கும் போக்கு பரவலாக இருக்கிறது என்கிற உண்மையும் பல்லிடுக்கில் கடல் மணலைப் போல நறநறத்து எரிச்சலூட்டுகிறது. உண்மையில் கீழை நாடுகள் பேச்சுவார்த்தைக்கும் தடையை மதிப்பதற்கும் தயாராகத்தான் இருக்கின்றன. அவர்களுக்குப் பிரச்சனையாக இருப்பது இனவாதம் மட்டுமே.  பாரபட்சமற்ற சர்வதேசப் பேச்சுவார்த்தை என்பது ஒரு லட்சியக் கனவு. அது நனவாகும்வரை திமிங்கிலங்கள் காத்திருக்குமா என்பதுதான் தெரியவில்லை.

திமிங்கிலங்களைப் போன்ற பிரம்மாண்ட விலங்குகளையே வேட்டையாடிய மனிதன், சின்னஞ்சிறு கடல் உயிரிகளிடம் போராடிய கதை தெரியுமா?

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. “கடலும் மனிதனும்” நாராயணி சுப்ரமணியன் பதிவுகள் பாராட்ட, மெச்சத்தக்கவை. நேஷனல் ஜியோகிராஃபிக் சானலில் ஒரு தொகுப்பினை காண நேர்ந்தது போன்ற உணர்வு.. பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button