இணைய இதழ்இணைய இதழ் 89கட்டுரைகள்

இத்ரீஸ் யாக்கூப்பின் ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் வாசிப்பனுபவம் – ஆமினா முஹம்மத்

கட்டுரை | வாசகசாலை

கோரமான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதாகவே நடக்கும் சம்பவங்களும் ஆட்சியதிகாரங்கள் நிகழ்த்தும் ஆதிக்கங்களும் காட்டிக்கொண்டிருக்கின்றன. முன்னொரு காலத்தில் மாமன் மச்சானாய் மதபேதமின்றி பழகிய மக்கள் கூட்டம் சகஜமாய் நம்மில் இருந்தனர். இப்போதெல்லாம் வேறுவேறு மதத்தைச் சார்ந்தவர்களை நண்பனாக கொண்டிருப்பதே பெரும் சாதனையாக, வியப்புக்குரிய விஷயமாக, யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாக அதிசயித்துப் பார்க்கப்படுகிறது. இந்து நண்பன் வீட்டிற்கு உணவருந்தச் சென்றதையும், முஸ்லிம் நண்பன் ரம்ஜானுக்கு விருந்துக்கு அழைப்பதையும் அவ்வளவு அரிய செய்தியாக சமூ கவலைதளங்களிலும் நேரிலும் பகிர்கிறோம். அன்றைய காலத்துக்கும் இன்றைய காலத்துக்குமான இடைவெளியில் இரு மதத்தினரின் உறவுகளிலும் எத்தகைய இடைவெளி இருக்கிறது? 

இந்த சூழலில்தான் முஸ்லிம்கள் வாழ்வியல் கதைகள் அதிகமாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. மிகுந்த ஆரோக்கியமான போக்கு இது எனலாம். செயற்கையாக உருவாக்கப்பட்ட இடைவெளியை நிரப்புவதற்கு இலக்கியம் மகத்தான பங்கு வகிக்க முடியும். ஆய்வு அறிக்கைகளாலும், வரலாற்றுக் கட்டுரைகளாலும் விளங்கிகொள்ள சிரமம் கொள்ளும் தலைமுறைக்குச் திரைவடிவமும் இலக்கிய வடிவமும் எளிதில் மனதில் பதியச் செய்வனவாக இருந்து உதவுகின்றன. 

அந்த வரிசையில் வெளிவந்திருக்கும் படைப்பாக இத்ரீஸ் யாக்கூப் எழுதியிருக்கும் நாவல் ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ அமைந்துள்ளதாக நான் பார்க்கிறேன். தலைப்புக்கு ஏற்றது போலவே, ஒரே சமயத்தில் துபாய் வாழ்வையும் உள்ளூர் வாழ்வையும் காட்சிப்படுத்தும் கதைக்களம். 

எளிமையான ஓர் இஸ்லாமிய குடும்பத்தைச் சுற்றிய எளிமையான நாவல். பிழைப்புத் தேடி வெளிநாடு வரும் கதாநாயகன் காணும் புதிய உலகையும், வெளிநாடு வரும் முன்பு வரை நிகழ்ந்த சம்பவங்களையும் பேசுவதுதான் நாவலின் கரு. 

பொருளாதாரத் தேடலுக்காக அமீரக மண்ணில் முதன்முதலாக காலடி எடுத்து வைப்பதில் தொடங்குகிறது நாவல். அந்நிய மண்ணில் நாயகன் செய்யது காண்கின்ற ஒவ்வொன்றும், ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு தனிமையும், அவனின் பால்யகாலத்தையும், நொடிந்துபோன வாழ்க்கையையும், குடும்ப உறவுகளின் பிரச்சனைகளையும் அசைபோடுவதாக நகர்கின்றன. வெளிநாட்டுப் பயணம் என்னானது? அவன் நிலை மீண்டதா? ஒவ்வொரு பிரச்சனைகளின் முடிச்சுகளையும் எவ்வாறு அவிழ்த்தான் என்பதை நாவல் சொல்லி முடிகிறது. 


இந்நாவல் இஸ்லாமிய குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்ட கதைக்களமென்றாலும் கூட அதில் சொல்லப்பட்டிருக்கும் வலிகளும் மீள்தல்களும் தமிழ்சூழலில் அனைவருக்கும் பொதுவானவை. கிட்டதட்ட எல்லாத் தரப்பினருக்கும் ஏதேனும் ஒரு வகையில் பொருந்திப் போகக் கூடியவை. 

தந்தை உழைக்கும்வரை சொகுசாய் வாழ்ந்துவிடுகிறார்கள் ஆண் பிள்ளைகள். தந்தையின் பொருளாதார உதவியுடன் வாழும்வரையிலும் எதிர்காலத்தின் மீது பயமின்மையின் காரணமாக கல்வியைத் தூக்கி வீசிவிடவும் செய்கிறார்கள். திடீரென தந்தையின் பொறுப்பை வலிய அவர்கள்மீது திணிக்கும் சூழலைக் காலம் சுமத்தும்போது, அவன் எவ்வாறு திணறிப் போகிறான் என்பதைக் காட்டியவிதம் நெருக்கமாய் இருந்தது. கிட்டதட்ட எல்லா வீட்டு ஆண்பிள்ளைகளும் இப்படியான திடீர் சூழலால் தானே குடும்ப பாரத்தைக் கையில் ஏந்திகொண்டவர்களாக இருப்பார்கள்? 

குடும்பம் சார்ந்து எழுதப்படும் நாவல்களில் எத்தனைகாலம்தான் பெண்கள் படும் இன்னல்களைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பீர்கள், இதோ எங்களின் பாடு காணுங்கள் என்பதற்காகவே தேர்ந்தெடுத்த களம் போல் தெரிகிறது. அதற்காக, பெண்களை குறைகூறும் பிரச்சார நெடிகள் இங்கு இல்லை. அதற்காக மனம் நிறைந்த பாராட்டுகளைப் பதிவு செய்தாக வேண்டும். 

தன் கணவனால் தன் தந்தையும், சகோதரனும் எப்படி சுரண்டப்படுகிறார்கள் என்பதை எண்ணி வெதும்பும் நபர்களாக சபீனா, முத்து நாச்சியா ஆகிய இரு கதாபாத்திரங்கள் வழியாக அழகாக எடுத்துக்காட்டப்பட்டது. நாவலில் வரும் பெண்கள் தன் மகன் குறித்தும் தன் சகோதரன் குறித்தும் அக்கறைகொள்பவர்களாக, துக்கங்களில் இருந்து விடுவிப்பவர்களாக இருக்கிறார்கள். 

சுரண்டல்வாதிகளாக இருப்பினும் அவர்களிடம் குடும்பம் நடத்தாகவும் வேண்டியிருக்கிறது. கணவன் குறித்து குறைகொள்ளாத பெண்கள் உண்டா என்ன? அதே சமயம் இத்ரீஸின் நாவலில் உள்ள பெண்களுக்கு கணவனின் அரசியலும் புரிகிறது, அதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் தெரிகிறது, தன் இரத்தபந்தங்களை ஓரளவுக்கு அதிலிருந்து தப்ப வைக்கவும் போராடுபவர்களாக இருக்கிறார்கள். இரு குடும்பத்துக்கிடையில் இணக்கத்தை உருவாக்கவும் அவர்களால் முடிகிறது. குடும்பக் கட்டமைப்பைச் சிதைப்பவர்களாக இல்லாமல் ஏற்ற இறக்கம் கொண்ட வாழ்க்கையை வாழத் தெரிந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். 

ஆண்கள் சந்திக்கும் குடும்பப் பிரச்சனைகளும் இதில் அதிகம் கவனம் கொள்ளப்பட்டிருக்கிறது. தன் கௌரவத்திற்காக மகளின் திருமணத்தைத் தகுதிக்கும் மீறி ஊர் மெச்ச நடத்துவதும், மாப்பிள்ளை வீட்டாரின் சுரண்டல் என்னன்ன வடிவத்தில் நிகழும் என்பதும், பெண்பிள்ளை நலமாக வாழ்வதற்காக அடகுவைக்கப்படும் ஆண்மகவின் நிலையையும் அதிகம் நாவல் பேசுகிறது. பெண்பிள்ளைகளுக்கு மட்டுமே தந்தையின் பெருவாரியான பொருளாதாரம், சேமிப்பு கடத்தப்படும்போது ஆண்பிள்ளைகளின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியும் யோசிக்க வைக்கிறது. 

பெண்பிள்ளைகள், தந்தைகளால் மட்டுமே காக்கப்படுவதில்லை, சகோதரர்களாலும் அவர்களின் வாழ்வு, நலம் ஆகியவற்றில் அக்கறை கொண்டு அணுகப்படுகிறது என்பதையும், தந்தைக்குப் பின் தன் சகோதரிக்கு தானே தந்தையாய் மாறும் நிலையையும் அழகாய் இத்ரீஸ் விவரித்திருக்கிறார். 

நாவலில் விரவிக் கிடக்கும் மற்ற கதாபாத்திரங்களின் குணாதிசயங்களும் வெவ்வேறானவை. சுவாரசியம் கூட்டுபவை. 

உதாரணங்களுக்கு, கதாநாயகனின் தந்தை ஆரோக்கியம் குன்றி இறந்த பின்னர், அவ்வீட்டின் மருமகன் தன் மாமனார் வீட்டினரை அனுசரித்து உதவி செய்கிறான். பின்னர் அதில் சுயநலமிருந்தது தெரிய வருகிறது.

பால்யகாலத்தில் ஒன்றாய் விளையாடிய பெண் துபாயில் பார்க்கும்போது முதலில் பார்வையால் உதாசீனம் செய்கிறாள். அடுத்த சிலநாள் சந்திப்பில் தம்பதியினர் வீட்டு விருந்துக்கு அழைக்கிறார்கள். அதிலும் சுயநலமிருந்தது. 

செய்யதை வெளிநாட்டுக்கு அழைத்துவந்த முஜீப் அண்ணன் செய்த உதவி அளப்பரியது. ஆனால், பணக்காரர்கள் முன் பேசும்போது அவரின் உடல்மொழியும் மாறிப்போனதாக காட்டப்பட்டது.

நல்ல புரிதல்கொண்ட நண்பர்கள் சம்மந்திகளாக மாறும்போது தலைகீழாய் மாறிப் போகிறார்கள். நட்பும் சிதைகிறது. 

வெளிநாட்டு அறை நண்பர் காதர் பாயிடம் வெள்ளந்தியாய் கதாநாயகன் செய்யது பகிர்ந்த விஷயங்கள் அறை முழுதும் பரவி அவனைக் கேலிக்குரியவனாக காட்சிபடுத்துகிறது. ஆனால், அதே காதர்பாய்தான் அவனின் நலம்விரும்பியாக வழிநடத்துகிறார். 

இப்படியாக இதில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்களின் குணங்கள் மாற்றமடைந்துகொண்டேயிருந்தன. மனித மனங்கள் புரிய முடியாதவையல்லவா? மரியாதைக்குரியவர்கள் துரோகியாகிப் போவார்கள், உதாசீனம் செய்பவர்கள் பெரும் உதவி செய்யக்கூடியவர்களாக மாறிவிடுவார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு படிமங்களையும் நாவலும் பிரதிபலித்திருந்தது. 

நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் குழப்பம் நிகழாதவண்ணம் கதைப்போக்கு அமைந்திருந்தது. கதாபாத்திரங்கள் பெயர்களும் பெரும்பாலும் மனதில் பதிந்துபோயின. அழகியத் தமிழ் பெயர்களை வைக்கும் ட்ரென்ட் தமிழ் முஸ்லிம்களிடம் எப்போதோ வந்துவிட்டிருந்தது. அதனைப் பறைசாற்றும்விதமாக சரிசம கதாபாத்திரங்களுக்குத் தமிழ்பெயர்கள் வைக்கப்பட்டிருந்தது அழகு. 

கதாநாயகனின் பால்யகால நினைவுகளில் காட்டப்படும் ஊர் காட்சிகள் அனைத்தும் நம்மையும் நம் பழைய நினைவுகளுக்கு இழுத்துச் செல்லும். ஊர் நினைவுகளைப் பகிரும்போது அதன் வழியே காட்டப்படும் கலாச்சார நிகழ்வுகளும் கூட முக்கியமானவை. அதன் வழியே பின்னுள்ள வாழ்வியலை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. 

-சிறுவயதில் பேசி வைக்கும் திருமணம் நடக்காமல் போனால் உறவுகளுக்குள் நடக்கும் விரிசல், 

-உடல் தளரும் வரைக்கும் கூட ஆணானவன் தன் மனைவி வீட்டினரிடம் காட்டும் ‘மாப்பிள்ளை மிடுக்கு’, 

-குழந்தையில்லாத தம்பதி, 

-கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கு நிகழும் ஏச்சுப்பேச்சுத் தாக்குதல், 

-அது அவளுக்கு மனச்சீர்குலைவு ஏற்படுத்தி, பெண்பிள்ளையை முதிர்கன்னியாக்கிவிடும் கொடூரம், 

-கைவிடப்பட்ட தங்கைக்கு அடைக்கலம் கொடுக்கும் அக்கா,

-வெளிநாட்டுவாசிகளுக்குள் ஏற்படும் நட்பு, சம்மந்திகளாக மாறுதல் அடைவது,

-புகுந்த வீட்டில் தன் மகள் நலமாக இருக்க தந்தை செய்யும் முயற்சிகள், 

-சகோதரியின் நலவாழ்வுக்காக மெனக்கெடும் சகோதரரின் பரிதவிப்பு,

இப்படியாக இதில் நடமாடும் நிறைய கதாபாத்திரங்கள் முக்கியமானவை. இவை அனைத்தையும் குழப்பிக்கொள்ளாமல் ஒரு புள்ளியில் இணைத்துக் கொண்டுபோனது எழுத்தாளரின் திறமை. 

தன் அம்மாவுக்காக தன் சின்னம்மா குடும்பத்தைப் பராமரித்து, சின்னம்மா மகளை எப்படியேனும் கரைசேர்க்கப் போராடும் தமீம் கதாபாத்திரம் மேல் பெரும் மதிப்பு உண்டாகிறது. அவனைத்தான் பணக்காரனாக முதலில் நமக்குப் பிடிக்காமல் போயிருக்கும். ஆனால், அவன் மூலம்தான் பலர் வாழ்வு நல்லதாய் மாறிப்போயிருக்கும். மனிதர்களை அவ்வளவு சுளுவாய் எடைபோட்டுவிட முடியாதுதானே! எவர் மூலம் எவருக்கு நன்மை வந்தடையும் என்பது படைத்தவன் எழுதிய கணக்கு. 

முதல் சந்திப்பில் தன் சிறுவயது நண்பனான செய்யதை யாரோ போல் நடத்தும் தமீம் மனைவி தங்கப்பொண்ணு, சிறுவயது நண்பனிடம் கணவன் முன் உற்சாகமாய் பேச முடியாத, பால்யகால ஸ்நேகிதனை நெருங்கியனாகக் காட்டிக்கொண்டால் கணவனின் பார்வையில் தான் தவறானவளாக மாறிவிடுவோமோ என தயங்கும் ஒவ்வொரு பெண்களையும் பிரதிபலிக்கிறாள். கணவனுக்கு யாரோவாக இருக்கும்வரை தன் நண்பனை உதாசீனமாகக் கடந்துவிடுகிறாள். பின்னர் கணவனே அவனைக் கொண்டாடும்போது எந்த தயக்கமும் இன்றி வீட்டு விருந்துக்கு அழைக்கிறாள். இதுபோல் பல மெல்லிய உணர்வுகள் பட்டும்படாமலும் பேசிச்சென்றாலும் கூட, அது அதிக கனம்கொண்டதாக இருந்தது. 

கதையின் மொத்தமுமே ஒரு சிக்கலை எப்படி அணுகுவது என்பதைக் காண்பித்து அதற்கான தீர்வு நோக்கி முன்னெடுப்பதுதான். அந்த வகையில் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தன்னைச் சுற்றி நிகழும் மனக்கசப்புகளுக்கான மருந்தைத் தேடத் தொடங்கும் உந்துதலை நாவல் தருகிறது என்றால் அது மிகையாகாது.

பேசிவிட்டால் பிரச்சனை தீரும். பேசாமலேயே மனதில் அடக்கிக் கொள்வதால் பத்து பைசாவிற்குப் பிரோஜனமில்லை. சரியோ தவறோ முகத்திற்கு நேராகக் கேட்டுவிட வேண்டும். நம் மௌனத்தை யாரும் பயன்படுத்திவிட அனுமதிக்கக் கூடாது. தியாகி பட்டம் வாங்குவதற்காக முட்டாளாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. இவற்றையெல்லாம் முளையிலேயே கிள்ளி எறியும்போது வாழும் உலகம் அனைவருக்குமே அமைதியான ஒன்றாகிறது. அதே சமயம் உறவுகளைப் பேணுவதிலும் கவனம் கொள்ள வேண்டும். உறவுகளை இழப்பவன் இவ்வுலகால் கைவிடப்பட்ட அனாதையாகிறான். 

‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ நாவல் இதுபோல் ஏகப்பட்ட விஷயங்களை நம்மோடு நம் மனதையே உரையாடவும் அசைபோடவும் செய்துவிடுகிறது. 

கதையுலகில் இத்ரீஸ் எடுத்திருக்கும் பாய்ச்சல், வெற்றியை நோக்கி அவரைச் செலுத்தும். அதற்கு முழு தகுதிகொண்ட எழுத்துத் திறனைக் கையில் சுமந்திருக்கிறார். 

அலங்கார வார்த்தைகள், நீண்ட விவரிப்புகள் , வளவளப் பேச்சுகள் அற்று சொல்ல வந்த விஷயத்தைத் சுவாரசியமாக நேர்த்தியாக ஓட்டுகிறார். எந்த இடத்திலும் கதையோட்டம் தடைபடவில்லை. எழுத்தாளர் தன்னகத்தே இன்னும் ஏகப்பட்ட பல கதைகளை கைவசம் வைத்திருக்கிறார் என்பதை சவால்விடும்படிச் சொல்கிறது ஒவ்வொரு பக்கமும். இன்னும் பல எழுதி, உயரங்கள் பல தொட மனம் நிறைந்த வாழ்த்துகள்.

**********

mohdamina23@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button