மூன்றாம் பாலினரின் சுயமரியாதையை முன்மொழியும் “கைரதி-377” – ஜனநேசன்
கட்டுரை | வாசகசாலை
நூற்றாண்டைக் கடக்கும் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் வித விதமான பேசுபொருள்களை உள்ளடக்கமாகக் கொண்டு, அவற்றிற்கேற்ப உருவத்தையும், உத்திகளையும் பூண்டு நாளும் தன்னை புதிப்பித்து நகர்ந்து கொண்டிருக்கிறது. உடல் ஊனம் மற்றும் நோய்களான ஆட்டிசம், மறதி, தூக்கமின்மை, ஏமநோய், தீ நுண் கிருமி, பெருந்தொற்று போன்றவற்றை கருவாகக் கொண்டு பலர், பல சிறுகதைகளை எழுதியுள்ளனர்.
பாலின மாறுபாடு குறித்து கி.ராஜநாராயணன் முதற்கொண்டு பலரும் சிறுகதைகளை எழுதியுள்ளோம். ஆனால், முழுக்க முழுக்க மூன்றாம் பாலினர் குறித்து பதினோரு சிறுகதைகள் கொண்ட தொகுப்பை மு.ஆனந்தன் முயன்று வென்றிருக்கிறார். இப்படி ஒரே கருப்பொருள் குறித்து பத்துக்கு மேற்பட்டகதைகளை ஒரே தொகுப்பில் கொணருவது வில்லில் பிணைக்கப்பட்ட முறுக்கேறிய கயிறின் மேல் நடப்பதற்கு ஒப்பாகும். வழக்கறிஞரும், முற்போக்கு படைப்பாளியும், மக்கள் நல களச் செயல்பாட்டாளருமாக கோவை. மு.ஆனந்தன் இருப்பதால் எழுத்தாளராக இவ்வரிய காரியத்தை சாதித்துள்ளார் .
மாற்றுப்பாலினத்தவர்கள் , திருநங்கை, திருநம்பி, இருனர் என மரபணு திரிபால் உடல்ரீதியாக பல மாற்றங்களுக்கு உட்படுகிறார்கள். இவர்கள் பெண்ணாகவும், ஆணாகவும் ஏற்றுக் கொள்ளப்படாமல் இரண்டுங்கெட்டாராக அல்லலுறுகிறார்கள். இவர்களின் துயரங்களை, வாழ்வியல் பாடுகளை, வரலாற்று அடுக்கிலிருந்து தேடி ‘கைரதி-377’ எனும் பெயரோடு பதினோரு கதைகளில் ரத்தமும் சதையுமான மனிதர்களை புனைவில் மறுவார்ப்பு செய்திருக்கிறார் ஆசிரியர் .
திருநம்பியாக மாறும் நஸ்ரியா, விடலைப்பருவ துடிப்புடன் படிப்பை முடித்து வேலையில் அமரும்போது ஆண் உடையில் முகமது நஸ்ருதீன் என்ற பெயரில் புல்லட் பைக்கில் பறக்கிறான்; வாசக மனமும் அவனோடு பறக்கிறது ‘நஸ்ரியா எனும் வேஷக்காரி’ கதையில். இதுபோலவே கணேசன் , கைரதியாக மாறி அழகன் எனும் குதிரையில் ஏறி காதலன் மாரிமுத்தோடு சவ்வாரி செய்யும் போது நம் மனமும் குதிரை ஏறுகிறது. இக்கதையில் குதிரை அழகன் , கைரதி கணேசனின் உணர்வைப் புரிந்து பேசுவது நல்ல உத்தி. ! திருநங்கையாக மாறியவள், மருத்துவ சிகிச்சை, ரேசன் கார்டு முதலான அவளது வாழ்கைப் பாட்டுக்கு, திருநங்கை சான்றிதழ் பெறுவதற்காகப் படும் இன்னல்களை, எதிர்கொள்ளும் இழிவுகளை ‘ஜாட்ளா ‘ கதையில் எடுத்துரைக்கும்போது மனமுருகச் செய்கிறார். திருநங்கையின் அடையாள அவஸ்தைகளை கூவாகத்தை பின்னணியாகக் கொண்டு எடுத்துரைத்து அந்த வாதைகளை நம் மனசுக்கு கடத்துகிறார். ‘கூடுதலாய் ஒரு நாப்கின் ‘ கதை கி.ராஜநாரயணனின் . கோமதி கதையை நினைவுறுத்தினாலும் , இக்கதையை ஆனந்தன், கி.ரா. வின் தோள் மீதமர்ந்து நவீனமாக நவில்கிறார். தனக்கு மாதவிடாய் ஏற்படுவதாக அவள் கற்பனையில் அடையும் மகிழ்ச்சி நம்மையும் நெகிழ்விக்கிறது.
ஆண்,பெண் உறுப்புகளோடு பிறப்பவர்கள் ‘இருநர்’ என அழைக்கப்படுகின்றனர். அவ்வாறு பிறந்து, படித்து பல்கலைக் கழகத்தில் சேரும்போது கிருஷ்ணன் படும் வாதைகளை, ஜவகர்லால் நேரு பல்கலைகழக வளாகத்தை மையமாக வைத்து இயங்கும் அரசியல் சூழலோடு சேர்த்து, மாணவர் எழுச்சியையும் ‘இதரர்’ கதையில் பதிவு செய்கிறார் ஆனந்தன் . இருநரின் இரட்டை வாழ்வுமுறையை ‘இலா’ எனும் கதையில் புராண தொன்மத்தின் பின்னணியில் சொல்லியிருக்கிறார்.
‘பாவசங்கீர்த்தனம்’கதையில் எந்த மதமும் மாற்றுப்பாலினத்தவருக்கு வழிப்பாட்டுரிமையை வழங்க மனமில்லா நிலையில் இருப்பதை தோலுரிக்கிறார். காவல்துறை அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் திருநங்கைகளின் இன்னலை இரு கதைகளில் பதிவுசெய்கிறார். ‘ஒலையக்கா லாக்கப் ‘ கதையில் பழங்குடியின திருநங்கை குற்றப்பரம்பரை சட்டத்தில் தண்டிக்கப்படும் அவலத்தையும், ‘377 ஆம் பிரிவின் கீழ் கைரதி ‘ எனும் கதையில் உணவகத்தில் பாத்திரம் கழுவும் தொழிலில் வயிற்றைக் கழுவும் திருநங்கையான கைரதி காவலரிடம் மாட்டி சின்னாபின்னப் படுத்தப் பட்டு நீதிமன்றத்தில் தண்டிக்கப்படும் வேதனையையும் வாசக நெஞ்சுக்கு கடத்துகிறார். அத்துடன் மூன்றாவதாக, திருநங்கையான மருத்துவர், சக திருநங்கைகள் இருவரோடு காவல்துறையினரிடம் மாட்டி மிரள்வதும் , நல்ல மனதுள்ள காவல் ஆய்வாளர், திருநங்கைகள் மூவருக்கும் சுயமரியாதையோடு வாழ அரசு உதவியோடு மருத்துவமனை வைத்து தருவதாக முடியும் ‘மார்த்தாராணி கிளினிக் ‘ திருநங்கையருக்கு அரசு ரீதியாக கண்ணியமான வாழ்வமைத்து தரவேண்டியதன் அவசியத்தை முன்மொழியும் கதை .
சமூகத்தில் இதுநாள்வரை ஏளனமாக பார்க்கப்பட்ட சக உயிரியான மாற்றுப்பாலினத்தவரின் மீது பரிவையும், அவர்களை சமமாக நடத்த வேண்டி வாசக மனத்தை ஆற்றுப்படுத்தும் முயற்சியில் வென்றுள்ளார் ஆனந்தன் என்பதை இந்தக்கதைகளை வாசிப்பவர் எவரும் உணருவர். கதையில் எங்கும் மிகையுர்ணச்சி எழாமல், தான் தேடிய தரவுகளை பொருத்தமான சேர்மானத்தில் குழைத்து, ஒவ்வொரு பாத்திரத்தையும் ரத்தமும் சதையுமாய் வார்த்து உலவச் செய்திருக்கிறார் ஆசியர். ‘கைரதி ‘ என்னும் இத்தொகுப்பு மாற்றுப் பாலினத்தவர்களின் வாழ்வில் புத்தொளி பாய்ச்சும் முயற்சியாகும். வாழ்த்துகள் தோழர் ஆனந்தன். எழுத்தாளர் அழகிய பெரியவன், எழுத்தாளரும், மாற்றுப்பாலினத்தவர் மேம்பாட்டுக்கான களச்செயல்பாட்டாருமான பிரியா பாபு ஆகியோரின் நூலிற்கான அணிந்துரைகளும் மேற்கண்ட எனது கருத்துகளுக்கு அருகில் நிற்கின்றன.
*
நூல்: கைரதி 377 – மாறிய பாலினரின் மாறாத வலிகள்
ஆசிரியர்- மு.ஆனந்தன் .
பக்கங்கள்: 120
விலை: ரூ.110
வெளியீடு: பாரதி புத்தகாலயம் ,சென்னை-18. .
தொடர்பு எண்: 87780 73949./9443049987
******
I would like to read kairathy 377 book.
How to read in online.
Kindly advise.
Thankyou
Ravi geeta