சிறுகதைகள்

கனவில் உடைந்த பனிக்குடம் – மானசீகன்

சிறுகதை | வாசகசாலை

அந்த அறையில் அவர்கள் இருவர் மட்டும்தான் இருந்தனர். அந்த இடத்தை அறை என்று சொன்னது ஒரு பெருந்தன்மை கருதியே. அது ஒரு மறைப்பு அவ்வளவுதான். இன்ஜினியர் வரைபடம் இன்றி தனித்தியங்கிய சுத்த சுயம்புவான கொத்தனார் தன் திட்டமிடுதலின் பிழையை மறைக்க, நெஞ்சில் ஈரமே இல்லாத ஒரு லாட்ஜ் ஓனரிடம் அதை அறை என்று நம்ப வைத்த நாள் நிச்சயம் கரி நாளாகவே இருக்க முடியும்.

சுப்ரமணி சேரில் உட்கார்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். சுப்ரமணியை அவன் இன்றுதான் பார்க்கிறான். கிட்டத்தட்ட நடிகர் ராஜேஷ் போலவே இருந்தார். உதடுகள் மட்டும் கூடுதலாகக் கறுத்திருந்தன. சிகரெட் பிடிப்பதனால் வந்திருக்கலாம். சற்றுமுன்னர் கூட அவனிடம் excuse கேட்டு விட்டு வெளியில் நின்று சிகரெட் பிடித்தார். அவர் அறையில் சிகரெட் பிடிக்க அதுவும் வெளியில் நின்றபடி சிகரெட் பிடிக்க தன்னிடம் excuse கேட்டது கொஞ்சம் வியப்பாக இருந்தது. இவரை நேரடியாகப் பழக்கமில்லை. தன்ராஜ் அண்ணனின் நண்பர் இவர்.

பதற்றமாய்தான் இருந்தது. எப்படி ஆரம்பிப்பது? மூன்றாண்டுப் பிரச்சினை இது. அணுஅணுவாய் தன்னைக் கொன்று கொண்டிருக்கும் ஒரு மிருகம் தன்னோடிருப்பது தன்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்பது எவ்வளவு பெரிய துயரம்? அது வேறுதானா? நாம்தான் அதுவா? பிற தருணங்களில் அது எங்கே போய் விடுகிறது? எல்லோருக்குள்ளும் இப்படி ஒரு மிருகம் இருக்குமா? அனைவரும் அவரவர் மிருகங்களை யாருமறியாமல் கட்டிப் போட்டபடிதான் நடமாடிக் கொண்டிருக்கிறார்களா? உண்மையில் இந்த சமூகம் என்பது யாருமறியாமல் மூடி வைக்கப்பட்டிருக்கிற மிருகக் காட்சி சாலைதானா?

இப்போது சுப்ரமணி மனிதனாக இருக்கவில்லை. நாயாகியிருந்தார். பேண்ட் சட்டை போட்டு டக் இன் செய்யாமல் கால் மேல் கால் போட்டிருக்கும் நாய். நாய் சிரிக்கிறது. அதன் கடைவாயில் தங்கப்பல். என்னைப் போல ஒரு ஏமாந்த பேஷண்டிடம் அடித்த காசுதான் இப்படி பல்லாகியிருக்கிறதா? அது இப்போது நாற்காலியை விட்டு இறங்கி தன்னை நோக்கி வருகிறது..என்ன இது ஜிப்பை பிடித்து இழுக்கிறது? ச்சீ ச்சீ… நாயுமா இப்படி? இதை ஹோமோ செக்ஸ் என்பதா?அல்லது வேறு ஏதாவது பெயர் இருக்கிறதா?

“மிஸ்டர்….ப்ளீஸ்… ஒங்க ஜிப்பை போட்டுக்கங்க.”

சுப்ரமணி சிரித்தபடிதான் சொன்னார். ஆனால் முகத்தில் கொஞ்சம் கடுமை ஏறி இருந்தது.

சற்றுமுன் அந்த அறையின் ஓரத்தில் இருந்த சிறு ஓட்டைக்கு முன் சிறுநீர் கழித்தது நினைவுக்கு வந்தது. ஜிப்பை போட மறந்து விட்டோமா? ஒருவேளை சிறுநீர் கழித்ததே பிரேமையோ? இல்லையே தூக்கிப் பிடித்து சிறுநீர் அடித்த ஞாபகம் இருக்கிறதே.‌இல்லையென்றால் நாம் ஆண் என்பதும், நமக்கு ஆண் குறி இருப்பதுமே கூடப் பிரேமையோ? ஆனால் இவர் எப்படி நாயாக மாறினார்?

“மிஸ்டர்…. நான் உங்கள் கண்ணுக்கு நாய் மாரியா தெரியறேன்?”

அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. சரியான ஆளைத்தான் தேடி வந்திருக்கிறோம். ஆனால் நாம் தவறான நபரல்லவா? ஓடி விடலாமா? நாய் துரத்தி வந்தால்? பிஸ்கெட் வாங்கி போட்டு விடலாமா? பாக்கெட்டில் 50ரூ இருப்பது நினைவிற்கு வந்தது.

“மேரி பிஸ்கெட் 10 ரூபாய்தான்… ஆனா எனக்கு அது புடிக்காதே”

மீண்டும் திடுக்கிட்டான்..யாரிந்த ஆள்..? வசியக்காரனா? பேயா? பிசாசா? 2000ஆண்டுகளாக யாரோ வாழ்வதாக ரஜினி சொன்னாரே… இது அந்தக் கேசா?

“சொல்லுங்க என்ன பிரச்சினை?”

இப்போது சுப்ரமணி குளிர்ச்சியாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தார். பிரசவ ஆஸ்பத்திரிக்கு லேட்டாக வந்து புள்ளைய வாங்கும் போது தகப்பன் சிரிக்கும் அதே சிரிப்பு.

கொஞ்சம் தன்னம்பிக்கை வந்தது.

“ஒங்களுக்குதே எல்லாம் தெரியுதில்ல. அப்ப என் பிரச்சினையையும் கண்டுபிடிங்க” கால் மேல் கால் போட்டபடி அவரைக் கூர்ந்து பார்த்தான்.

“எனக்கு ஒண்ணுமே தெரியாது. நா என்ன மேஜிக் நிபுணரா? சொல்லுங்க. இல்லாட்டி பேப்பர்ல எழுதிடறீங்களா?”

“இல்ல இப்பத்தான் நாய், பிஸ்கெட் மேட்டரெல்லாம் கரெக்டா சொன்னீங்கல்ல?”

“ஓ..அதுவா? அது மட்டும் தெரியும்.”

“அதான் எப்படி?”

“கொஞ்ச நாள் நா நாய்ப்பண்ணை வச்சிருந்தே. பிஸ்கெட் கடையும். அதனால் இது ரெண்டைப் பத்தி யார் என்ன நெனைச்சாலும் எனக்குத் தெரிஞ்சு போயிடும்”

இப்பவும் சிரித்தார். ஆனால் இது அந்தச் சிரிப்பல்ல. சுடுகாட்டில் தீக்கு பக்கத்தில் நின்றபடி சிரிக்கும் சிரிப்பு.உடல் வேகிற போது சிரிப்பு மட்டும் மேலெழுந்து தீயாகிவிடுகிறதா?
இப்போதுதான் கவனித்தான். அவனும் சிரித்துக் கொண்டிருந்தான். சிரிப்பது நானா? அந்தச் சிரிப்புக்கு பயப்படுவது நானா? அந்தச் சிரிப்பு இப்போது இரண்டாய் இல்லை.ஒன்றாக மாறியிருந்தது. யாருடைய சிரிப்பு இது? தன்னுடையதா? அவருடையதா? அல்லது வேறு யாராவது இங்கு உருவத்தை மறைத்தபடி நின்று சிரித்துக் கொண்டிருக்கிறார்களா?

“சொல்…” அவர் குரல் அந்தச் சிறிய அறையில் எதிரொலித்தது.

“ஆக்சுவலா இது என் ஃபிரெண்டோட பிரச்சினை. அதை அவன் என்கிட்ட சொன்ன நாள்ல இருந்து இது என்னையும் சேத்து பாதிச்சிடுச்சு. சாப்பிட முடில. தூங்க முடியல”

“அப்ப எந்திரிச்சு போடா சு…..தே…..மகனே அந்த கூ…….வரச் சொல்லுடா”

“என்னங்க உங்கள ஞானி மாதிரின்னாங்க..இப்டி கெட்ட வார்த்தை பேசறீங்க”

“எவன் சொன்னான்…ஞானி…நோ…ன்னு…”

“ஒங்க ஃபிரெண்டு”

“அவன் கெடக்கிறான் ஒக்…….நீ உண்மை மட்டும் பேசனும்…புரியுதாடா. பு….மகனே”

அவனால் எழவும் முடியவில்லை.உட்காரவும் முடியவில்லை ‌.

“சொல்லுடா கண்ணா…”

மீண்டும் குளிர்ந்த சிரிப்பு. இந்தாளு என்னா விதவிதமான சிரிப்பை ஹோல்சேல் கடையா வச்சிருக்கானா?

“ஒண்ணுல்ல… வந்து.. வந்து கொஞ்ச நாளாக எனக்கு தப்புத் தப்பா தோணுது.”

“நீ சும்மா மேட்டர சொல்லு. தப்பு சரியை நா முடிவு பண்ணிக்கிறேன்.”

“கெட்ட கெட்ட எண்ணமா வருது”

“எண்ணமே கெட்டது தான் தெரியுமா?”

“இல்ல… இது வேற மாதிரி.”

“என்னா பாக்குற பொண்ணேயெல்லாம் போடத் தோணுதா?”

“அது முந்தி வரும்…”

“முந்தின்னா…”

“மூணு வருஷம் முன்னாடி..”

“ஏன் இப்ப எந்திரிக்க மாட்டேங்குதா? நானு நட்டு போல்ட கழட்டி எந்திரிக்க வைக்கணுமா? சேலம் போக வேண்டியதுதானே. ‘பேரப்புள்ளைகளா’ன்னு ஒங்கள திட்டிக்கிட்டே கொஞ்சுற தாத்தா அங்கதானே இருக்கார்?”

“இல்ல. என் பிரச்சினை வேற. எனக்கு இந்த மூணு வருசமா எங்க அம்மாவயே தப்பா தோணுது. எங்கம்மான்னா எனக்கு உயிர். ஏழு வருஷம் கழிச்சு பொறந்த புள்ள நானு. எங்கம்மாவுக்கும் நானுன்னா உயிர். ஆனா… இப்ப… ச்சீ பாவி.. நானு.. பாவி நானு… பாவி … வெளங்காத பாவி”

மேசையை ஓங்கிக் குத்தினான். பேனா சிதறி கீழே விழுந்தது. கொஞ்சம் சில்லறைகளும். எழுந்து நின்று தலையை மடாரென்று அடித்துக் கொண்டான். ஐம்பது தடவைகளாவது அடித்திருப்பான். சுவரில் கைகளை மடக்கி ஓங்கிக் குத்தினான். பின்னர் தரையில் குத்த வைத்து கைகளால் முகத்தை மறைத்துக் கேவினான்.

சுப்ரமணி தடுக்கவேயில்லை..அவன் அழுகை விசும்பலாய்.. முணங்கலாய்.. கதறலாய்… கத்தலாய் நீடித்தது. சற்று நேரம் உடம்பு மட்டும் குலுங்க அப்படியே தரையில் சரிந்தான். அவர் அவன் படுக்க ஏதுவாக சேரை எடுத்து வெளியில் தூக்கிப் போட்டார்.

வெளியில் இருந்து தம் வாசனை அறைக்குள் அடித்தது. சுப்ரமணி தான் சிகரெட் பிடிக்கிறார் போல.

சில நிமிடங்கள் கழித்து உள்ளே வந்து அவனைத் தொட்டார். அவன் திரும்பி அவரைப் பார்த்து மலங்க மலங்க விழித்தான்.

“எந்திரி…” ஒற்றை விரலால் சைகை செய்தார்.

“இப்டி உக்காரு..” சாய்வு இல்லாத இன்னொரு நாற்காலியை எடுத்துப் போட்டார்.

“நேரா நல்லா நிமிந்து உக்காரு”

கொஞ்சூண்டு உடலை நிமிர்த்தினான்.

“நல்லா…do what I say”

முழுவதுமாக நிமிர்ந்து உட்கார்ந்தான்.

“இப்ப கேக்குறதுக்கு பதில் சொல்லு… நீ சொன்ன இந்த விஷயம் நெனப்பா மட்டும் இருக்கா… இல்ல ஏதாவது செஞ்சிடுறியா?”

“நெனப்பா மட்டும்தான்… செய்யத் தோணும். ஆனா எனக்குள்ள இருக்கிற இன்னொரு ஆளு பயங்கரமா திட்டுவான். அதுல குழப்பம் வந்து தலையெல்லாம் வலிச்சு உசுரே போறது மாதிரி இருக்கும். அந்த மாதிரி நேரத்துல வேணும்னே எங்க அம்மா கூட பயங்கரமா சண்டைக்கு இழுப்பேன். சண்டை முத்தி கடைசியா அவங்க அழுவாங்க. அந்த கண்ணீரைப் பாத்ததுமே வெளில ஓடிருவே. தனிமைல அழுது தீத்த பெறவுதா வீட்டுக்கு வருவே. அப்பத்தான் அந்தத் தலவலி என்ன விட்டுப் போயிருக்கும்.”

“எப்பவெல்லாம் இப்டித் தோணும்? அம்மாவ பாக்குற போதெல்லாமா?”

“இல்ல. அதுதான் ஆச்சர்யமா இருக்கு. அம்மா அப்பா கிட்ட உக்காந்தாலோ, சிரிச்சு சிரிச்சு பேசினாலோ மட்டுந்தேன் இப்டித் தோணுது. அம்மா மேல திடீர்னு அப்டி ஒரு ஆசை வந்திருது. அது மட்டும் இல்ல. அப்பாவ அந்த இடத்திலயே அடிக்கனும் போலவும் வெறி வருது. சித்திரவதையா இருக்கு சார்…”

மீண்டும் அழுகிறான்.

“be cool..” சுப்ரமணி தோளைத் தொடுகிறார்..

“யார்ட்டயாவது இதைச் சொல்லிருக்கியா?”

“ம்ஹூம்…இல்ல. பிரெண்ட்ஸ், ரிலேட்டிவ் கிட்ட எல்லாம் சொன்னதில்ல. ஆனா ஒரு தடவை சைக்கியாரிஸ்ட் டாக்டரையும், இன்னொரு தடவை ஒரு சாமியாரையும் போயிப் பார்த்தேன்.”

“டாக்டர் என்ன சொன்னாரு?”

“அவரு நா சொன்னத காதுல வாங்குனாரேன்னே தெரியல. ஒரே ஒரு தடவை. ‘இன்செஸ்ட் தேர்ட் ஸ்டேஜ்’ அப்டின்னு முணுமுணுத்தாரு. இடையில ஃபோன் வந்துச்சு. அதுல பேசிக்கிட்டே ‘நீ சொல்லு’ ன்னு என்ன சைகை காட்டினாரு. ரெண்டு தடவை நர்ஸ் வந்தாங்க. அவங்க கிட்ட கொஞ்சிக் கொஞ்சி பேசினாரு. ஆனா நர்ஸ் அழகா இருந்தாங்க. திடீர்னு ‘ஸ்டாப்’ ன்னாரு. நா நிறுத்துனேன். ‘ கூட யாரும் வர்லியான்னாரு?’ , ‘இல்ல ‘ ன்னு தலையாட்டவும் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு விறுவிறுன்னு எதையோ எழுதி எங்கிட்ட நீட்டிட்டு ‘நெர்ஸ்…. ‘ ன்னு கத்தினாரு.. அந்தம்மா வந்ததும், ‘இவங்க கிட்ட டீடெயில் கேட்டுக்கங்க’ ன்னு சொல்லிட்டு மேஜையில் இருந்த மணிய அடிச்சு ‘ நெக்ஸ்ட் ‘ ன்னாரு.”

“நர்ஸ் என்ன சொல்லிச்சு?”

“அவங்க ஒண்ணும் சொல்லல. ஃபீஸ வாங்கிட்டு மாத்திரை தந்தாங்க. ஆனா அவங்க ரொம்ப அழகா இருந்தாங்க.”

சுப்ரமணி முதல் முறையாக கேலியாகச் சிரித்தது போல் தோன்றியது

“ம்…மாத்திரை போட்ட உடனே சரியாயிருச்சா?”

“இல்ல. நல்லா தூங்குனேன். அவ்வளவுதான். தூங்கித் தூங்கி தேர்ட் செம்ல ரெண்டு பேப்பர் காலி.”

“அப்றம்?”

“அந்த மாத்திரய கோசேந்திர ஓடைல தூக்கி எறிஞ்சுட்டேன். அப்பவும் அந்த நர்ஸ் ஞாபகம் வந்தது. அழகான நர்ஸ்..”

“நீ ஏன் ஹாஸ்டல் டிரை பண்ணல?”

“காலேஜே மாறி மதுரை போய்ட்டேனே. ஆனா அப்ப பிரச்சினை இன்னும் கூடிருச்சு. வழக்கமா அப்பா, அம்மாவ சேந்து பாத்தா வர்ற ஃபீல் இப்ப எல்லா நேரமும் வந்துருச்சு. ஒங்களுக்கு புரியும்னு நெனைக்கிறேன். நாம லவ் பண்ற பொண்ண நமக்கு சுத்தமா பிடிக்காத வேற ஒரு ஆள்கிட்ட விட்டுட்டு வந்தா ஒரு ஃபீல் வருமே. அது… ஒரு மணி நேரத்துக்கு ஒருக்கா அம்மாவுக்கு ஃபோன் போடுவேன். ‘அப்பா…எங்க?’ன்னு கேப்பேன். ஏதாவது வம்பிழுத்து ஃபோன்லயே சண்டை போடுவேன். அம்மா கேவிக் கேவி ஃபோன்ல அழுவாங்க. உசுரே போற மாதிரி இருக்கும். போன தூக்கி எறிஞ்சிட்டு தலைல அடிச்சு அடிச்சு அழுவேன். ராத்திரியெல்லாம் தூக்கம் வராது. அவங்க ரெண்டு பேரும் எப்டி இருப்பாங்க?ன்னு கற்பனை ஓடும். நூறு ரப்பர் பேண்ட இழுத்து விட்ட மாதிரி தலை விண்ணு விண்ணுன்னு தெறிக்கும். தூங்குறதுக்கு நாலு மணி ஆயிருக்கும். சில நேரம் ஒடம்புல எதையாவது கீறிக்குவேன்.”

“சாகனும்னு தோணிருக்கா?”

“தெனம் தோணும். மொட்டை மாடி உச்சில போயி நின்னிடுவேன். கத்திய கழுத்து கிட்ட கொண்டு போயிக்கேன். சீலிங் பேனுல வேட்டிய கட்டிருக்கேன். தண்டவாளத்துல… ஹைவேஸ்ல எரைக்குப் பாயுற புலி மாதிரி நின்னு பாத்திருக்கேன். ஆனா கடைசி நிமிசத்துல மனசு மாறிடும்.”

“ஏன்?”

“எங்கம்மாவுக்கு நா போயிட்டா யாரு இருக்கா?ன்னு தோணிடும். ஒரு பயங்கரமான மிருகத்து கிட்ட அம்மாவ விட்டுட்டுப் போற மாதிரி நெனப்பு வந்து அழுதுட்டே அம்மாவத் தேடி ஓடி வருவேன். ஊர்ல இருக்கிறப்ப மட்டுமில்ல. மதுரைல இருந்தும் பஸ்ஸூல கூட வராம டாக்ஸி புடிச்சு ஒடியாந்திருக்கேன்.”

“வந்து?”

“அம்மா மடில படுத்து கே’ன்னு அழுவேன். அம்மா அழுதுட்டே தலைய கோதி விடுவாங்க. அவங்க பெரும்பாலும் முதநா போட்ட சண்டைக்காக புள்ள மன்னிப்பு கேட்டு அழுவுதுன்னு நெனச்சுப்பாங்க.”

“அம்மா, அப்பாவுக்கு ஒன் நடவடிக்கை வித்தியாசமா தோணுனதே இல்லையா?”

“சிலநேரம் தோணிருக்கும்னு நெனக்கறேன். என்ன பத்தி சேந்து ஒக்காந்து கவலப்படுவாங்க. எனக்கு அப்பத்தான் குண்டில மொளகாய வச்ச மாரி இன்னும் எரியும்.”

“அம்மா கூட நீ தனியா இருக்கப்ப தப்பா எதும் தோணுமா?”

“இல்லல்ல… அந்த மாதிரி தோணவே தோணாது. அந்த மாரி நேத்துல நா அவுங்க வயித்துக்குள்ள இருக்குற மாதிரி ஃபீல் வரும். சந்தோஷமா இருக்கும். அழுக அழுகையா வரும். செக்ஸ் ஃபீலே தோணாது.”

“கிரேட்..”

“என்ன சொன்னீங்க?”

“ஒண்ணும் இல்ல…நீ சாமியார் மேட்டரைச் சொல்லு..”

“மதுரைலதான். அந்தச் சாமியார் முதல்லயே ஆயிரம் ரூபா வாங்கிட்டாங்க. நா பேசறப்ப சிரிச்சிட்டே இருந்தார். திடீர்னு கடுமையாகி எங்குட்டோ வெறிச்சுப் பாத்து ‘ அவுட்’ , ‘ அவுட்’ ன்னு கத்துனார். இடையில ஒரு கேசட்டை போட்டு விட்டார். பாட்டு ஓடுச்சு. இந்த ‘என்னுள்ளே என்னுள்ளே……’ன்னு வள்ளில எளையராஜா போட்ருப்பாப்லைல அந்த மாதிரி ஒரு பாட்டு. செமயா இருந்துச்சு. மூலிகைத் தண்ணி வேற கொடுத்தாங்க. அப்டியே மயங்கிட்டேன். அந்த நர்ஸ் வந்து ஆடற மாதிரி இருந்தது. முழிச்சுப் பார்த்தப்ப நா மயங்கி கீழே கெடந்தேன். சாமியார் என்னப் பார்த்து சிரிச்சுட்டே இருந்தார்.”

“அப்றம் என்ன சொன்னார்?”

“அம்மாவோட ஃபோட்டோ கேட்டார். ‘ அடுத்த வாட்டி வர்றப்பா கொண்டு வாரேன் ‘ ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ‘ கண்டிப்பா கொண்டு வா ன்னாரு’ அத சொல்றப்ப மட்டும் அவ்ரு சிரிக்கல. ஏன்னு தெர்ல. நா ஓடி வந்துட்டேன். ஆனா என் கிட்ட ஃபோட்டோ இருந்துச்சு. கொடுக்கல. கொடுக்கத் தோணல.”

“இப்ப இருக்கா?”

ஒரு நொடி சுப்ரமணியைக் கூர்ந்து பார்த்து விட்டு உடனே எழுந்து பின் பாக்கெட் பர்ஸைத் திறந்து படத்தை உருவிக் கையில் கொடுத்தான்.

“என் கிட்ட மட்டும் கொடுத்துட்ட ஏன்?”

“தெர்ல. ஒங்களப் பாத்தா தர்னும் போல இருக்கு. ப்ரியமா வருது. பக்கத்துல ஒக்காந்துக்கனும் போல இருக்கு. எங்கம்மா கூட தனியா இருந்தா தோணுமே கருவறைக்குள்ள இருக்கிற மாதிரி.‌‌ அதே மாதிரி தோணுது… அழுகை அழு…”

அவனை சுப்ரமணி மெல்லத் தன் மார்போடு சாய்த்துக் கொண்டார். எந்தச் சத்தமும் இல்லாமல் மௌனமாய் அழுதான். கண்ணீர் கரகரவென வழிந்து சுப்ரமணியின் ஜிப்பாவில் இறங்கியது.

“நா யாரு சார் ‘ரிஷிமூலம்’ சாமியாரா? ஆதவன் நாவல்ல வர்ற ராமசேஷனா? சைக்கோவா? மெண்டலா? இடிப்பஸ் காம்ளெக்ஸ்ல சிக்கிச் சீரழியற பேஷண்டா? இல்ல சுட்டுத் தள்ள வேண்டிய கொடூர மிருகமா? யார் சார்? யார் சார் நானு?”

“கொழந்த…அம்மா வயித்த விட்டே இன்னும் வெளில வராத கொழந்த”

அவன் சுப்ரமணியை இன்னும் இறுக்கிக் கொண்டான்.

எங்கோ தூரத்தில் மஹ்ரிப் தொழுகைக்காக ‘அல்லாஹூ அக்பர் அல்லாஹு அக்பர்’ சன்னமாய் ஒலித்தது.

*****

அவர்கள் இருவரும் அவனுக்கு முதுகு காட்டி உட்கார்ந்திருந்தனர். அவன் வந்ததை அவர்கள் இன்னும் பார்ந்திருக்கவில்லை. அவர்கள் வீட்டு மொட்டை மாடி ஒரு பகுதியில் உயரமாகவும் இன்னொரு பகுதியில் தாழ்வாகவும் இருக்கக் கூடிய அமைப்பைக் கொண்டது. உயர்ந்த பகுதியின் விளிம்பில் காலை தொங்க விட்டபடி அமர முடியும். இருவரும் அப்படித்தான் உட்கார்ந்திருந்தார்கள். அந்த மொட்டை மாடிச் சுவரை உரசியபடி ஒரு வேப்ப மரம் நின்றிருக்கும். அதன் கிளையில் குஞ்சு பொறித்திருந்த காகம் இவன் பக்கம் லேசாகத் திரும்பி விட்டு மீண்டும் அந்தப் பக்கமே திரும்பி பராக்கு பார்த்தது.

அப்பாவின் கை அம்மாவின் தோளில் இருந்தது. அம்மா எதற்காகவோ வெட்கப்பட்டார். அந்த முதுகிலிருந்தே இவனால் வெட்கத்தை உணர முடிந்தது. அவர்கள் நிகழ்காலத்தை கீழேயே விட்டு விட்டு கை வீசி வந்திருந்தனர் போல அவன் பிறந்த புதிதிலோ, அதற்கும் முன்போ ஏன் அவர்களின் முதலிரவு அறைக்கோ அல்லது பெண் பார்த்த தருணத்திற்கோ அவர்கள் போயிருக்கக் கூடும். அம்மாவுக்கு சன்னமான குரல். இப்போது மேலும் சன்னமாகியிருந்தது. அவனுக்கு அந்தக் குரலின் மீது அவ்வளவு கோபம் வந்தது. அந்தக் குரலை வேறொரு உருவமாகக் கற்பனை செய்து அந்த உருவத்தை வல்லுறவு கொள்ள வேண்டும் என்கிற வெறி கிளர்ந்தது. குரலைக் கற்பழிப்பதா? இதென்ன அபத்தம்? அவன் தன்னையே திட்டிக் கொண்டான். சுயவதையில் பீறிடும் ரத்தத்தை நிரப்புவதற்கான கோப்பைகள் காற்றில் மிதந்து கொண்டிருந்தன. பேசாமல் பரசுராமன் அவன் அம்மாவக் கொன்ன மாதிரி நாம அப்பாவ கொன்னுட்டு அந்த ரத்தத்தோடு அம்மாவின் கருப்பைக்குள் ஓடி ஒளிஞ்சுக்கலாமா? அப்பாவே கூடப் புள்ளையாய் பொறக்கட்டும்.

‘லொள் லொள்’

ஏதோ ஒரு ஆண் நாயின் குரல்… ‘ம்ம்உம் ‘ என்று ஒரு பெட்டையின் சிணுங்கல். இதென்ன மார்கழி மாசமா? நாய் குரலைக் கேட்டதும் சுப்ரமணி நினைவுக்கு வந்தார்.

“யூ ஆர் ஆல்ரைட். ஒனக்கு எந்த மன பாதிப்புமில்ல. நீ கெட்டவனுமில்ல. ஒன் பிரச்சின என்ன தெரியுமா? ஸாரி அது கூடத் தப்பு. இது ஒன் பிரச்சினை இல்லை. இது மனித குலத்தின் பிரச்சினை. ஆராயுறது. ஆராயலாம். அது கூட தப்பில்லை. விடை தேடி ஆராஞ்சா கூட அடி கம்மியா விழும். எல்லாவனும் கைல ஒரு விடைய வச்சுக்கிட்டு அதுதான் சரின்னு நிரூபிக்க இல்ல ஆராயுறான். பூமி தட்டைன்னு சொன்னவன், உருண்டைன்னு சொன்னவன், பூமி சுத்தலன்னு சொன்னவன், சுத்துதுன்னு சொன்னவன் எல்லவனும் செத்துப் போயிட்டான். ஆனா பூமி இருக்கு. அத விட பியூட்டி இது எதுவுமே பூமிக்கு தெரியாது. அவனவன் கற்பனைக்காக ஒலகத்த ரெண்டாக்கிட்டு கடைசில மண்ணாப் போயிடறோம். நீயும் அப்டித்தான். அம்மாவ பத்தி இப்டி நெனப்பு வருதா? நெனப்ப கவனி. அத விட்டுப்புட்டு இது சரியா? தப்பா? பிராய்டா? ஜெயகாந்தனான்னு உக்காந்து நொட்டிட்டு இருக்க. ஒன்னச் சொல்லியும் தப்பில்லைல. அம்மான்னா சாமி, தேவதைன்னு பல பய ஏத்தி வச்சிருக்கான் ஒன் மண்டைல. அதுல பாதிப்பேரு சாப்ட்ட எச்சித் தட்டக் கூட கழுவ மாட்டானுவ. அம்மா, அப்பா, பொண்டாட்டி, புள்ள அந்த நர்ஸூ கேட்டுச்சா நர்ஸூ எல்லாம் வெறும் உயிர். ஒனக்குத் தோணறது வெறும் மாயை. இது மட்டுமில்ல தோணறத தப்புன்னு உனக்குள்ள இருந்துட்டு ஊர் தூமைய குடிச்சு வளர்ந்த இன்னொரு தாயழி கத்துறானே அதுவும் மாயை. ரெண்டு மாயையும் கத்திச் சண்டை போட காயம் பாவம் ஒன் மனசுக்கு..”

“சண்டை எப்ப நிக்கும்?”

“எனக்கும் இதே சந்தேகந்தேன். ஆனா எஞ்சண்டை வேற. நல்லபடியா போயிட்டு வா. நைட்டு நல்லா தூங்கு. கனவுல நர்ஸ் வரட்டும்.”

தலை இப்போதும் வலிக்கிறதுதான். ஆனால் கூடவே சிரிப்பும் வருதே. மெல்லப் படியிறங்கும் போது அம்மாவின் அதே சன்னக் குரல்..

இன்று காலை பைக்கை எடுத்ததும் அப்பா மேலிருந்து கை காட்டினார். கால் ஊண்டி நின்றிருந்தான். அவர் பைக்க சர்வீஸ்க்கு விட்ருக்காராம். ஸ்கூல்ல இறக்கி விடச் சொன்னார்.

அப்பா எப்போதும் பின்னால் உட்கார்ந்தால் பின்புறக் கம்பியை இறுக்கமாகப் பிடித்துக் கொள்வார். அவ்வளவு பயம்…’பாத்து…பாத்து’ என்று பத்து தடவையாவது சொல்லி விடுவார். அவரைப் பொறுத்தவரை எல்லா வாகனங்களும் எமரூபங்கள்தான். இறங்குன ஒடனே நந்தகோபால் சாமி இருக்குற தெக்கு நோக்கி ஒரு கும்பிடு போடுவார். அவர் பைக்கில் எப்போதும் எலுமிச்சம்பழம், மஞ்சத்துணி, குங்குமம் எல்லாம் தொங்கிக் கொண்டிருக்கும். வாவேர் பள்ளியாசல் மோதி மந்திரிச்சுத் தந்த தாயத்தையும் கூட வண்டிக்குள் போட்டு வைத்திருந்தார்.மண்டையோடு மட்டும்தான் பாக்கி.

கேர்ள்ஸ் ஹை ஸ்கூல் சந்திலிருந்து வண்டியை மெயின்ரோட்டுக்குள் விடும் போதுதான் அது நிகழ்ந்தது. அது குமுளி போற ஜீப்பாதான் இருக்கும். சடாரென்று உரசி விட்டு நிற்காமல் போய் விட்டது. பேலன்ஸ் தவற வண்டி சரிந்தது. அப்பா அப்படியே நிலைதடுமாறி ரோட்டில் விழ… இவன் வண்டியோடு எதிர்ப்புறம் சரிந்தான். நகக்கண்ணில் எதுவோ மோதி ரத்தம் கசிந்தது. ஒரே ஒரு நொடி தான். பின்னால் வந்த லாரி சடாரென்று பிரேக் போட அப்பா மயிரிழையில் உயிர் தப்பினார். ஆனால் மல்லாக்கக் கிடக்கும் போது சீறி வந்த லாரி உருவாக்கிய அதிர்ச்சி அவரை நினைவிழக்க வைத்தது. யாரோ சிலர் அப்பாவைத் தூக்கிக் கொண்டு காந்தி சிலைக்குக் கீழிருக்கும் மருத்துவமனையை நோக்கி ஓட இவனும் பின்னாலேயே ஓடினான். வளத்தியா ஒருத்தன் வண்டியை எடுத்து கூடவே உருட்டிக்கிட்டு வந்து சாவியை இவனிடம் தந்த பிறகு பரிவோடு தோளைத் தட்டிப் போக அவனுக்கு “தேங்க்ஸ்” கூடச் சொல்லாமல் அப்படியே ஆஸ்பத்திரி வாசலில் நின்றிருந்தான்.. மனம் ‘அப்பா’ , ‘அப்பா’ என்று அரற்றிக் கொண்டேயிருந்தது.

ஒரு மணி நேரம் அப்படியே நின்றிருப்பான். இடையில் மாமாவோ, ஒண்ணு விட்ட சித்தப்பாவோ வந்த ஞாபகம். ஒன்றிரண்டு தடவை அவனிடம் ஃபோன் வாங்கினார்கள்‌ . பணம் வாங்கினார்கள். ஒரு தடவை கையெழுத்து போட்டான்.யாரோ இவனுக்கு டீயும், வடையும் வாங்கித் தந்தார்கள். எல்லாம் எவருக்கோ நிகழ்ந்தது போலவே இருந்தது. இவன் ஜீப் வண்டியைத் தட்டி வேட்டி விலக அப்பா உயிர் பயத்தோடு மல்லாந்து கிடந்த அந்த நிமிடத்திலேயே இருந்தான். அப்பாவின் முகத்தில் தெரிந்த அந்த உயிர் பயம்தான் இவனை இந்த நொடி வரை ஆட்கொண்டிருக்கிறது.

“அப்பா முழிச்சுட்டார்..உள்ள போ” யாரோ கிட்டத்தட்ட இழுத்துப் போனார்கள். அப்பா தலையணையில் கை வைத்து சாய்ந்திருந்தார். அவர் முகத்தில் அப்படி ஒரு புன்னகை.. கண்டிப்பாக அது சுப்ரமணியின் புன்னகைதான். இவன் அழுது கொண்டே பக்கத்தில் போக மெல்ல அவன் கரங்களைப் பற்றிக் கொண்டார். அவரைத் தொட்டு நெடுநாட்களாகி விட்டதை அப்போதுதான் உணர்ந்தான். அப்பாவுக்கு கறுப்பான கரங்கள். ஆளும்தான். தன் வீட்டு மொட்டை மாடியில் குஞ்சுகளை ஈன்ற காகத்தை தடவிக் கொடுக்கிற பாவனையில் அப்பாவின் கைகளைத் தடவிப் பார்த்தான். அப்பா சட்டென்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டார். பிடி இறுகியது. சின்ன வயசில் அவன் உணர்ந்த அதே இறுக்கம். இரண்டு தடவை உள்ளே வந்த நர்ஸ் பொதுவாக புன்னகைத்து விட்டுப் போனார். நர்ஸ் வரும் போது கைகளை எடுக்க முயற்சித்தான். அப்பா விடாமல் இன்னும் இறுக்கிக் கொண்டார். நர்ஸ் நடந்த போது அப்பா நர்ஸை உற்றுப் பார்த்தது போல் இருந்தது. “அப்படியா?” என்று விரல்களால் கேட்டான். “ஆமாடா?” அப்பா தன் கை அழுத்தத்தால் பதில் சொன்னார்.

“ஏன்? ”

“ஏன்னா நா ஒங்கப்பா”

இவ்வளவும் வெறும் விரல்களாலேயே பேசிக் கொண்டார்கள்..

அப்பா இவனைப் பார்த்து மெல்லச் சிரித்தார். இவன் தலையை கீழே போட்டுக் கொண்டான். ஏனோ அவனுக்கு ஒடனேயே வீட்டுக்குப் போயி அம்மாவை பாக்கனும் போல் இருந்தது.

‘அதிசய ராகம் ஆனந்த ராகம்’ அவனது அலைபேசி தான். அம்மாதான் அழைக்கிறார். யாரோ சொல்லியிருப்பார்கள் போல. வேறொரு தருணமாக இருந்திருந்தால் அப்பாவிடம் தராமல் அவனே பேசி விட்டு குரூரமாக கட் செய்திருப்பான். இன்று அப்படிச் செய்யத் தோன்றவில்லை. ஃபோனை ஆன் செய்து ‘அம்மா’ என்று அவரிடமே கொடுத்து விட்டான்.

“ம்…நல்லா இருக்கேன்… ஒண்ணுல்ல… ச்சீ லூசு… அழுகாத…. சொல்றேன்ல… அழுகாத… ம்… ம்… இது ஆஸ்பத்திரி… வந்துடறேன்… பெருசா அடியெல்லாம் இல்லை… நீ இருக்கப்ப….. அவனா? காலேஜ் படிக்கிறான்னுதான் பேரு… பச்சப் புள்ள‌… வெளில வந்த குழந்தை கூட இல்ல… ஒன் வயித்துக்குள்ள இருந்தப்ப எப்டி இருந்தானோ அப்டி இருக்கான்…”

அவன் இப்போது ஒரு மரமாக மாறியிருந்தான். ஒரே நொடியில் இடைவெளியே இல்லாமல் அவன் மீது பூக்கள் பூத்துக் கொண்டேயிருந்தன..

“அவன்தேன்டி ரொம்ப பயந்துட்டான்… ஒன்ன பாக்கனும்னு துடிச்சிட்டிருக்கான் போல…”

“………………”

“மூஞ்சில எழுதி ஒட்டிருக்கே பெத்தவன் எனக்குத் தெரியாதா?”

அவன் கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென கொட்டியது. அம்மாவின் அழுகை உண்டாக்கும் மனபாரம் தீர யாருமறியாமல் வெளியில் போய் கொட்டி விட்டு வருவானே… அதே கண்ணீர்.

“எதுக்கா? ஒன் புள்ள ஓ மடியில படுத்து தூங்கனுமாம்…”

“பகலாருந்தா என்னா? அவன் கனவுலதான் நர்ஸ் வருவாளே”

அப்பா அவன் பக்கம் திரும்பி மெல்லச் சிரித்தார்‌.

அந்த குட்டி அறைக்குள் கண்களை மூடிப் படுத்திருந்த சுப்ரமணியும் சிரித்துக் கொண்டார்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button