[1]
பிங்க்கூ உலகில் ஏற்பட்ட அனைத்து கோளாறுகளுக்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது ஆதிரன் கண்ட கனவுதான். தன் கனவு இத்தனை பெரிய குழப்பங்களை உண்டாக்கக்கூடும் என்று ஆதிரன் நினைத்தே பார்க்கவில்லை.
கரிய வானில் தோன்றிய ஒற்றை நட்சத்திரப்புள்ளியைப் போல அந்தக் கனவு அவனுக்கு அமைந்தது. சக ஊழியர்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்திப் பார்ப்பதற்கு அந்தக் கனவே அவனுக்கு உந்துதலாக இருந்தது. ‘நான் தனித்துவமானவன்!’ என்ற உணர்வை அந்தக் கனவு அவனுள் ஏற்படுத்தியது. ‘நான் வேறு, நான் வேறு’ என்ற ஒலி அவன் ஆழுள்ளத்தில் எதிரொலிக்கத் தொடங்கியது.
எப்போதும் போலவே அன்றும் அவன் தன் பணிகளை முடித்துவிட்டு தன் அறைக்குச் சென்று இரவு படுத்துக் கொண்டான். ஏதோ ஒரு மாய கணத்தில் என்னவென்று அறியவியலாத ஒரு விந்தையான உருவம் அவன் கனவில் தோன்றியது.
அவன் சட்டென்று விழித்துக்கொண்டான். ’என்ன, என்ன’ என்று மனம் பயத்தில் அரற்றியது. முகத்தில் இருந்து வியர்வை வழிந்தது. எழுந்து சென்று நீர் அருந்திவிட்டு வந்து மீண்டும் படுத்துக்கொண்டான். எவ்வளவு முயற்சித்தும் அவனால் தூங்க முடியவில்லை. ஜன்னலுக்கு வெளியே கரிய வானத்தை வெறித்துப் பார்த்தான். தன்னைத் தவிர வேறு யாரும் இந்நேரத்தில் விழித்திருக்க வாய்ப்பில்லை என்று உணர்ந்தான்.
கண்களை இறுக மூடிக்கொண்டான். மீண்டும் அந்த தெளிவற்ற உருவம் மனதில் தோன்றியது. நூறில் தொடங்கி ஒன்று வரை மெல்ல எண்களை தலைகீழாக எண்ணத் தொடங்கினான். ஒன்று வந்த பின்னரும் தூக்கம் வரவில்லை. மீண்டும் நூறில் இருந்து தொடங்கினான். இம்முறை ஒன்று வருவதற்குள் தூங்கிவிடுவோமா என்ற ஐயம் அவனுள் எழுந்தது. ஆனால், நல்லவேளையாக ஐம்பது வருவதற்குள்ளாகவே உறங்கிப் போனான்.
காலையில் எழுந்ததுமே முதல் எண்ணமாக கனவில் கண்ட அந்த உருவமே இருந்தது. எங்கோ எப்போதோ பார்த்த உருவம் போன்று அது தோன்றியது. ஆனால், எங்கு என்று சரிவரத் தெரியவில்லை.
அப்படி ஒரு உருவம் இருக்க முடியுமா? இருந்தால் அது எங்கு இருக்கும்? நம்மைத் தேடிக் கொண்டு அது வருமா? வேறு யாரேனும் அதைப் பார்த்திருப்பார்களா? என்று அடுக்கடுக்காக கேள்விகள் அவன் மனதில் எழுந்தன. உறக்கத்தில் பார்த்தபோது இருந்த அந்தத் தெளிவு பகலில் இல்லாமல் போனது. சற்று மங்கலாகவே அந்த உருவம் மனதில் பதிந்திருந்தது.
இதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று ஆதிரன் தனக்குள் தீர்மானமாகச் சொல்லிக் கொண்டான். பகிர்ந்துகொள்ள நினைத்தாலும் எப்படி அதைச் சொல்லி புரிய வைப்பது என்று குழப்பமாக இருந்தது.
தனக்கு மட்டுமே இது நிகழ்ந்திருக்கிறதோ என்கிற எண்ணம் அவனுள் பயத்தை உண்டு பண்ணியது. ‘பிங்க்கூ உலகில்’ தன்னைத் தவிர வேறு யாருக்கும் கனவுகளே வருவதில்லை என்கிற உண்மை அவனுக்குப் புலப்பட்டது. இதை வெளியில் சொன்னால், தனக்கு தண்டனை கிடைக்கக் கூடும் என்ற அச்சம் அவனை பீடித்தது.
’கனவு’ என்ற சொல்லையே தன் மனதிலிருந்து அகற்றிவிட வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்டு அன்று அவன் அலுவலகத்திற்கு கிளம்பினான்.
அறைவாசலைத் தாண்டியதும் நகரும் சாலையில் எல்லோரும் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தான். தன்னுடைய எண் பொறிக்கப்பட்ட இடம் வரும்வரை காத்திருந்தான். இரண்டு நிமிடங்கள் கழிந்ததும் ‘முந்நூற்று பதினான்கு டி’ என்ற எண் வந்து அவன் முன் நின்றது. அவன் அதில் ஏறி நின்றதும் அது பிறருடன் இணைந்துகொண்டு சென்றது. பணியாளர்கள் அனைவரும் தங்களது கண்களில் பிங்க்கூ உலகத்திற்கே உரித்தான கண்ணாடியை அணிந்திருந்தனர். அதில், அவர்கள் அன்றைக்கு செய்து முடிக்கவேண்டிய பணித் திட்டங்களின் விவரங்களைக் கொண்ட வரைபடம் தெரிந்தது.
ஆதிரனும் தனக்கு அன்றைக்கு அளிக்கப்பட்டிருக்கும் பணித் திட்டங்களை தன் கண்ணாடியின் மூலம் பார்த்துக் கொண்டான். நகரும் சாலை வெவ்வேறு அலுவலக கட்டிடங்களாக கடந்து சென்று கொண்டிருந்தது.
ஒரு கட்டிடம் ஆமை போன்ற வடிவில் இருந்தது. திட்டுத்திட்டான அதன் ஓடுகளைப் போன்றே அந்தக் கட்டிடமும் நீல வண்ணத்தில் அடுக்கடுக்காக குவித்து எழுப்பப்பட்டிருந்தது. அந்த அலுவலக கட்டிடத்தில் பணியாற்ற வேண்டியவர்கள் வந்ததும் அந்த ஓட்டின் உள்ளிருந்து இருப்பக்கமும் நான்கு கால்கள் போன்ற நுழைவாயில் வெளியே தோன்றி நகரும் சாலையில் இணைந்துகொண்டது. பணியாளர்கள் அந்த நுழைவாயில்களின் வழியே உள்ளே சென்றதும் அது ஓட்டுக்குள் சென்று சுருங்கிக் கொண்டது.
அதைத் தொடர்ந்து தாமரை மலரை நினைவூட்டும் விதமாக அமைக்கப்பட்டிருந்த கட்டிடம் வந்தது. தாமரை மலர்ந்து விரிவடைவது போன்று அந்தக் கட்டிடத்தின் அமைப்பு இருந்தது. அதன் நாவுகளைப் போன்ற நுழைவாயில்களின் வழியே பணியாளர்கள் அந்தக் கட்டிடத்தின் உள்நுழைந்தார்கள்.
இதைத் தவிர்த்து முதலையின் திறந்தவாய் போன்ற கட்டிட அமைப்பு, துணி துவைக்கும் இயந்திரம் போன்ற கட்டிடம், இரையை கவ்வ எழுந்த மாபெரும் சுறாமீனின் விரிந்த வாயை பிரதிபலிப்பது போன்று அமைக்கப் பெற்ற கட்டிடம் எனப் பற்பல வினோத வடிவங்களிலாக ‘பிங்க்கூ’ உலகத்தின் கட்டிடங்கள் அமைந்திருந்தன.
அவற்றுள் மாபெரும் கப்பல் ஒன்று நீரில் பாதி மூழ்கியிருப்பதைப் போன்று அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில்தான் ஆதிரன் பணியாற்றினான்.
முதன்முதலில் அவன் இந்த உலகிற்கு வந்தபோது இக்கட்டிடங்களின் அமைப்புகள் யாவும் பார்ப்பதற்கு விந்தையாக இருந்தன. அதன்பின் அதன் பிரம்மாண்டம் அவன் மனதை ஆட்கொண்டது. நாம் இங்கிருக்கிறோம். இவையே அனைத்தும். இதுவே நாம். இதற்கப்பால் வேறில்லை என அவன் உள்மனம் அந்த பிரம்மாண்டத்தின் வசீகரிப்பில் தன்னை மூழ்கடித்துக் கொண்டது.
சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்வது மனித மனங்களின் இயல்பு. அவ்வாறு தன்னுள் ஏற்படும் மாற்றங்களை அவன் பிரக்ஞை உணர்வதற்குள் அவன் அச்சூழலுக்குள் முற்றிலுமாக பொருந்தி விட்டிருந்தான்.
ஆதிரனின் கட்டிடத்தின் மேற்பகுதியில் பணியாற்றுபவர்கள் தங்களுக்கு கீழே சரிந்து கொண்டிருக்கும் ஒரு உலகைப் பற்றியே உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர். வேலையில் சிறு தவறு இழைத்தாலும் மீளமுடியாத சரிவு அடியில் காத்திருக்கின்றது என்று அவர்கள் உள்ளூற உணர்ந்திருந்தனர். ஒவ்வொரு செயல்களையும் அதீத சிரத்தையுடன் செய்துவந்தனர். இரவு உறங்குகையில் இயல்பாக கட்டிலிலிருந்து கீழே நழுவும் கைகள் சரிவில் விழுந்துவிட்ட பிரமையை அவர்களுள் ஏற்படுத்தி திடுக்கிட வைத்தன.
அந்தக் கட்டிடத்தின் கீழ் தளத்தில் பணியாற்றுபவர்கள் எட்ட முடியாத உயரத்தை அடைவதைப் பற்றி கனவு காணலாயினர். எதைச் செய்து முடித்தாலும், ‘மேலும், மேலும்’ என்று கேட்டுப் பெறக்கூடிய இயல்பு கொண்டிருந்தனர். அவர்களின் ஆன்மா பறக்கும் விழைவைக் கொண்டிருந்தது.
ஆதிரன் கீழ் தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தான். அன்றைய நாளில் அந்தக் கட்டிடங்கள் யாவும் அவனுக்கு வெவ்வேறாக பொருள் கொள்ளத் தொடங்கின. அன்றாடம் பார்த்துச் சலித்த கட்டிடங்களாக இருந்தாலும் புதுப்பொலிவுடன் அவை எழுந்து நிற்பதைப் போன்று அவனுக்கு இருந்தது. ஒவ்வொரு நாளும் அந்தக் கட்டிடங்கள் இடமாறிக் கொண்டிருப்பதைப் போன்று பிரமை ஏற்பட்டது. உண்மையில் அவை இடமாறிக் கொண்டுதான் இருக்கின்றதோ? தான் மட்டும் தான் அசையாமல் நின்று கொண்டிருக்கிறோமோ என்று ஆதிரன் ஐயம் கொண்டான். அனைத்தும் மாறிக் கொண்டே இருக்கிறது. ஒரு மாபெரும் சுழலுக்கு மத்தியில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம் என்று அவன் உணரத் தொடங்கினான்.
மீண்டும் இரவு கண்ட கனவு அவன் நினைவில் எழுந்தது. ‘வெறும் அசைவற்ற வடிவம். இந்தக் கட்டிடங்களைப் போல. பொருளற்ற எளிய உருவம். நம்மைப் போல!’ என்று அவன் சொல்லிக் கொண்டான்.
அந்த நாளின் முடிவில் அறைக்குத் திரும்பியபோது அறையில் நிறைந்திருக்கும் பொருட்களின் ஒரு பகுதியாக அந்தக் கனவு ஆகிவிட்டிருப்பதை உணர்ந்ததும் அவன் திடுக்கிட்டான். மேலும் அன்றைய நாள் முழுக்கவே கனவில் தோன்றிய அந்த உருவமே அவனை வியாபித்திருந்ததை அப்போதுதான் உணர்ந்தான்.
மரணப்படுக்கையில் விழுந்துகிடப்பதைப் போன்றே அவன் அன்றிரவு தன் மெத்தையில் படுத்திருந்தான். அன்றைய நாள் இரவிலும் அதே கனவு வந்தது. ஆனால், இம்முறை அந்த உருவம் ஒலியெழுப்பியது.
[2]
தான் கண்ட கனவை தன்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்த நண்பனிடம் ஆதிரன் சொன்னான்.
அதற்கு அவன், “உனக்கு உடல் நலமில்லையா? ஏன் உனக்கு கனவெல்லாம் வருகின்றது?” என்று கேட்டான்.
”உனக்கு கனவுகளே வந்ததில்லையா?” என்று ஆதிரன் கேட்டதற்கு அவன் சற்று யோசித்துவிட்டு ‘இல்லை’ என்று தலையசைத்தான்.
பின், “கனவு என்றால் என்ன? அது எப்படி ஒருவருக்கு வருகின்றது? ஏன் அது உன்னை மட்டும் தேர்ந்தெடுத்தது?” என்று அந்த நண்பன் ஆதிரனிடம் கேட்டான்.
ஆனால், அவனால் அதற்கு பதில் சொல்ல இயலவில்லை.
”கனவு காண்பதற்கு ஏதேனும் தனித்தகுதிகள் உண்டா?”
”அது காரண காரியங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது”
”நானும் இன்று இரவு முயற்சி செய்கிறேன். எனக்கு என்ன கனவு வருகின்றது என்று பார்க்கிறேன்”
”நாம் விரும்பி வர வைப்பது எல்லாம் மெய்யான கனவல்ல. அதுவாகவே உருப்பெற்று வர வேண்டும்”
”நீ கவனக்குறைவுடன் பணியாற்றுகிறாய். அதனால்தான் இந்த கனவெல்லாம் வந்து உன்னைத் துன்புறுத்துகின்றது”
“இல்லை. நான் கனவு கண்டதால்தான் என்னால் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. தவிர, கனவு ஏன் என்னை துன்புறுத்த வேண்டும்?”
“கனவு காண்பது இங்குள்ளோரின் இயல்பல்ல. ஆகையால் அது முற்றிலும் தேவையற்றது. உன் எண்ணங்கள் அதில் குவிந்தால் பின் அது உன்னைப் பற்றி இழுத்துக்கொள்ளும். அதன்பின் யாராலும் உன்னை விடுவிக்க இயலாது.”
ஆதிரன் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தான். பின், திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவனைப் போல், “நாம் ஏன் இங்கிருந்து வெளியே செல்வதே இல்லை?” என்று கேட்டான்.
“எங்கிருந்து வெளியே?”
”பிங்க்கூவில் இருந்து”
”ஏன் பிங்க்கூவில் இருந்து வெளியே செல்ல வேண்டும்? வெளியே என்ன இருக்கிறது? எல்லாமே இங்கேயே இருக்கின்றதே!”
”எல்லாமே என்றால்?”
”உணவு, வேலை, அறை, பணம். நமக்கு என்னவெல்லாம் வேண்டுமோ அதுவெல்லாம்”
“நமக்கு இதுதான் வேண்டும் என்று யார் இங்கு தீர்மானிக்கிறார்கள்? இவையெல்லாம் கொடுக்கப்பட்டதால் நமக்கு இவை வேண்டியவன ஆயிற்றா? இவையெல்லாம் இல்லாமல் நம்மால் இருக்க முடியாதா? வெளியுலகில் இவையெல்லாம் இருக்குமா? அங்கு யாரெல்லாம் இருப்பார்கள்? அங்கு எவையெல்லாம் முக்கியமானதாக கருதப்படும்?”
“வீணாக எதையும் கற்பனை செய்து குழம்பாதே. இதுவே நம் உலகம். இதைத்தாண்டி வேறெதுவும் இல்லை”
சில நிமிடம் கழிந்த பின்னர், “நான் வெளியே செல்ல வேண்டும்.” என்று ஆதிரன் சொன்னான்.
”எப்படிச் செல்வாய்?”
இந்தக் கேள்வியை முதன்முறையாக ஆதிரன் எதிர்கொண்டான். அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது அங்கிருந்து வெளியே செல்ல வழிகளே இல்லை என. எண்ணத்தால் மட்டுமே ‘பிங்க்கூவில்’ இருந்து வெளியே செல்ல முடியும். அதைத் தவிர்த்து வேறேதும் வழிகள் இல்லை என்று அவனுக்கு விளங்கியது. தனக்கு மட்டுமே இந்த எண்ணம் தோன்றியுள்ளது என்று மெல்ல அவன் புரிந்து கொண்டான். அதன்பின்னர் தன் கனவில் தோன்றிய உருவம் வெளியுலகில் இருக்கின்றது என்று அவன் மெல்ல நம்பத் தொடங்கினான். அது எப்படி நகரும், எப்படி அசையும், அது என்னவெல்லாம் செய்யும் என்று ஒவ்வொன்றாக தன் கற்பனையில் விரித்தெடுத்தான். தனக்கு மட்டுமே தெரிந்த உருவம். பெயரில்லாத ஒன்று. அறியமுடியாத ஒன்று. கனவுகளில் மட்டுமே வரக்கூடியது.
நாட்கள் செல்லச் செல்ல அந்த கனவால் அவன் உறக்கம் முழுமையாக தடைபெற்றது. ஆயிரத்தில் தொடங்கி ஒன்று வரை எண்ண முயற்சித்து தோல்வியடைந்தான். இரண்டாயிரம் மூன்றாயிரம் என்று எண்கள் தொடர்ந்து கொண்டே சென்றன. ஆனால், உறக்கம் மட்டும் வரவேயில்லை.
சமயங்களில் அந்த உருவம் கைதொடும் தூரத்தில் இருப்பது போன்று அவனுக்குத் தோன்றும். எம்பி குதித்தால் கைக்கு அகப்பட்டுவிடுவது போலத் தோற்றமளிக்கும்.
மெல்ல மெல்ல அந்த உருவம் தெளிவாகி கொண்டே வந்தது. அது தன்னை தேர்வு செய்திருக்கின்றது. தன்னிடம் அது வந்தே தீரும் என்று ஆதிரன் தீர்க்கமாக நம்பினான்.
ஒருநாள் தான் கனவில் கண்ட அந்த உருவத்தை தன் நண்பனிடம் அவன் வரைந்து காட்டினான். கனவு பற்றிப் பேசுகையில் சலித்து கொண்ட அந்த நண்பன், அவன் வரைந்து காட்டிய உருவத்தைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டு போனான்.
”என்னது இது?”
“இதுதான் என் கனவில் தினம் தினம் வருகின்றது”
”இதை எங்கேயோ பார்த்ததுபோல இருக்கின்றதே”
”அதைத்தான் நானும் நினைக்கிறேன். பிங்க்கூ உலகிற்கு வருவதற்கு முன்னால் இதைப் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கத் தோன்றுகின்றது”
”பிங்க்கூ உலகிற்கு வருவதற்கு முன்னால் நாம் எங்கிருந்தோம்?”
”எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும் என்னால் அதை நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை. ஆனால், இந்த உருவம் நிச்சயம் பிங்க்கூவிற்கு வெளியே இருக்கக்கூடும் என்று ஊகிக்கிறேன்”
”நம் உலகில் இல்லாததா வெளியுலகில் இருக்கப் போகிறது?”
“நாம் வாழும் உலகிற்கு இது தேவைப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதற்காக இப்படியொன்று இல்லவே இல்லை என்ற முடிவுக்கு நாம் வரக்கூடாது” என்றான் ஆதிரன்.
அந்த உருவம் அவன் நண்பனிடத்தில் ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்தியது. நமக்குத் தெரியாத சிலவும் இங்கு இருக்கின்றதுதான் போலும் என்ற எண்ணமே அவனை ஏதோ செய்தது. அவனுக்குள்ளும் கனவுக்கான விதை விதைக்கப்பட்டது.
ஆதிரனைப் போலவே அவனும் அந்த உருவத்தை தன் கனவில் பார்க்கத் தொடங்கினான். உறக்கம் கெட்ட போதும் அந்த உருவம் அவன் விழிகளின் முன் நின்றிருந்தது. தனக்கும் கனவு வருகின்றது என்று உற்சாகம் கொள்ளத் துவங்கினான். கனவில் கண்ட அந்த உருவத்தை தானும் நேரில் பார்க்க விரும்பினான்.
”என் கனவிலும் இந்த உருவம் வந்தது. ஆனால், கூடுதலாக ஒன்று அதில் இருந்தது” என்று அவன் சொல்லிவிட்டு ஆதிரன் வரைந்துகாட்டிய அந்த உருவத்தின் பின்பகுதியில் வளைவான ஒரு கோட்டை இழுத்தான்.
அதைக் கண்டதும் ஆதிரன் வியப்பில் ஆழ்ந்தான். ஏனெனில், அந்த வளைவான கோடே அந்த உருவத்தை முழுமை செய்வதாக இருந்தது. அதன்பின் அந்த உருவம் எவ்வாறு தன் கனவில் ஒலியெழுப்பியது என்று ஆதிரன் ஒழியெழுப்பிக் காட்டினான். அது முற்றிலும் புதியதாக அவன் நண்பனுக்கு இருந்தது. அவனும் அதே போலவே ஒலியெழுப்பினான்.
இருவருமாக இணைந்துகொண்டு அந்த உருவத்தைப் பற்றிய தகவல்களைத் திரட்டத் தொடங்கினர். பிங்க்கூ உலகில் இருந்த நூலகத்தில் தேடிப் பார்த்தனர். ஆனால், அங்கிருந்த எந்தப் புத்தகத்திலும் அதைப்பற்றிய ஒரு குறிப்புகூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
இணையத்தில் பல தளங்கள் பிங்க்கூ நிறுவனத்தால் தடை செய்யப்பட்டிருந்தன. சொல்லப்போனால், அவர்கள் காண்பிக்க விரும்பியதை மட்டுமே தெரிவு செய்து எல்லோருக்கும் அளித்திருந்தனர்.
அனைத்து இடங்களிலும் வேலைக்கு உதவக்கூடிய தகவல் களஞ்சியங்களும் வேலையைச் சிறப்பாக செய்யும் பொருட்டு தன்னை மேம்படுத்திக் கொள்ள உதவும் புத்தகங்களும் மட்டுமே பிங்க்கூ உலகில் இருப்பதை இருவரும் தெரிந்து கொண்டனர்.
அந்த உருவம் அவர்கள் வரைந்திருந்த காகிதத்தில் மட்டுமே எஞ்சியிருந்தது.
[3]
சங்கிலித் தொடர் போல் ஒருவரைத் தொடர்ந்து இன்னொருவருக்காக அந்த உருவமானது கனவுகளில் உலவத் தொடங்கியது. ஒவ்வொருவரும் அதனை வளர்த்தெடுத்துக் கொண்டே இருந்தனர்.
கனவுகளுக்கு பறக்கும் தன்மை உள்ளதை ஆதிரன் அப்போதே உணரத் தொடங்கினான். அது பறக்கையில் தன் மாயக் கரங்களை விரித்து ஒவ்வொருவரையாக தொட்டு எழுப்புகிறது என்றும் புரிந்து கொண்டான்.
ஒருவர் கனவில் கண்ட அந்த உருவத்திற்கு ‘ஃபிலெஃபி’ என்று பெயர் சூட்டினார். இன்னொருவர் அதன் இயல்புகளை வரையறுத்தார். வேறொருவர் அதற்கு நிறம் கொடுத்தார். இப்படியாக அந்த உருவம் அங்கு பணியாற்றுபவர்களின் உள்ளத்துள் விரிவடைந்து கொண்டே சென்றது.
அந்த உருவத்தை நேரில் பார்க்காமல் யாரும் அமைதி கொள்ளப்போவதில்லை என்னும் நிலை உருவாகியது.
அந்தக் கட்டிடம் முழுக்கவே பேசுபொருளாகிவிட்ட அந்த உருவத்தின் வடிவை எடுத்துக்கொண்டு மேலாளர் பிங்க்கூ நிறுவனரைப் பார்க்கச் சென்றார்.
“இந்த உருவமே இன்று எல்லோரையும் ஆட்கொண்டிருக்கின்றது” என்று மேலாளர் சொன்னார்.
பிங்க்கூ நிறுவனர் அந்த வடிவத்தை வாங்கி பார்த்தபோதுதான் அவருக்குத் தெரிந்தது அது நாயின் உருவமென. திகைப்படைந்தவராய், “இதை யார் நேரில் பார்த்தது?” என்று கேட்டார்.
”யாரும் நேரில் பார்க்கவில்லை. ஆதிரன் என்பவன் இதைத் தன் கனவில் கண்டதாய் சொன்னான்.”
”கனவா? கனவு காணும் நிலைக்கு அவனை உந்தியது எது?” என்று நிறுவனர் கேட்க, மேலாளர் ஒன்றும் சொல்லாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார்.
”மூன்று நாளைக்கு அவன் செய்ய வேண்டிய பணிகளை ஒரே நாளில் செய்து முடிக்கும்படி சொல்லுங்கள். பணி சார்ந்து மட்டுமே அவன் இனி சிந்திக்க வேண்டும்.” என்றார்.
”அவனைப் போலவே மற்றவர்களும் இந்த உருவத்தைப் பற்றி மட்டும்தான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் மேலாளர்.
”அனைவருக்கும் மும்மடங்கு பணியைக் கொடுங்கள். வெளியுலகம் பற்றிய எண்ணமே யாருக்கும் வரக்கூடாது” என்றார் நிறுவனர்.
அதன்படியே அந்தக் கட்டிடத்தில் வேலை பார்த்து வந்த அனைத்து பணியாளர்களுக்கும் கடுமையான பணிகள் அளிக்கப்பட்டன. ஆனால், அத்தனை கடுமையான பணிகளும் அந்த உருவத்தை மறக்கடிக்கச் செய்யத்தான் கொடுக்கப்பட்டுள்ளது என்று வெகு சீக்கிரத்திலேயே அனைவரும் உணர்ந்துவிட்டார்கள்.
பணிகள் பெருகப்பெருக அந்த உருவமும் அவர்களது மனங்களில் பெருகிக் கொண்டே சென்றது. அலுவலகத்திற்கு வருவதே அந்த உருவத்தை மென்மேலும் கற்பனையில் வளர்த்தெடுப்பதற்காகத்தான் என்றானது.
ஒருநாள் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் ஒருவர் ‘வொவ்’ என்று ஒலியெழுப்பி மேலாளருக்கு முகமன் உரைத்தார். அதை இன்னொருவர் பார்த்து அதையே தானும் செய்தார். ‘நன்றி’ சொல்லக்கூடிய இடத்தில் எல்லாம் ‘வொவ்’ என்ற ஒலியே பணியாளர்களிடம் இருந்து எழுந்தது.
அது பின்னர் வாழ்த்துரைக்கவும், மன்னிப்பு கேட்பதற்கும் பயன்பட்டு, மெல்ல அதுவே அவர்களது பிரதான மொழியாகி போனது. ‘வொவ்’ என்ற ஒலியைத் தவிர வேறு சொல்லே தெரியாதவர்கள் போல் அவர்கள் ஆகிக் கொண்டே இருந்தனர்.
அதைத் தொடர்ந்து மதிய உணவு வேளையின் போது திடீரென்று ஒருவர் குனிந்து நாக்கால் தன் உணவை நக்கி உண்ணத் தொடங்கினார். உண்டு முடித்ததும் தன் தட்டை வாயால் கவ்வியெடுத்துச் சென்று குப்பைத்தொட்டியில் போட்டார்.
உண்பதற்கு கைகளின் உதவி தேவையில்லை என்று அவர்கள் உணரத் தொடங்கினர்.
”ஏன் இப்படி எல்லோரும் நடந்து கொள்கிறார்கள்?” என்று நிறுவனர் சீறினார்.
”இந்தக் கேள்வியை நான் கேட்காத ஆட்களே இல்லை. எல்லோரும் ஒன்றையே பதிலாகச் சொல்கிறார்கள். ’ஃபிலெஃபி’ இப்படித்தான் நடந்து கொள்ளும் என்கிறார்கள்” என்றார் மேலாளர்.
”இதற்கு தீர்வே இல்லையா?”
”அவர்கள் நம்புவதைப் போல் அந்த ஃபிலெஃபியை நேரில் பார்த்தால்தான் அவர்கள் இயல்புநிலைக்குத் திரும்புவார்கள் என்று தோன்றுகின்றது.”
“அது ஃபிலெஃபி இல்ல. நாய். நம் உலகிற்கு அது தேவையில்லை. அப்படியே அதைக் கொண்டுவந்து இங்கே நிறுத்தினாலும் இவர்கள் அடுத்ததாக பூனையைக் கனவு காணத் தொடங்கிவிடுவார்கள். இப்படியாக இவ்வுலகத்திற்கு தேவைப்படாத ஒவ்வொன்றையும் இங்கு கொண்டுவந்தாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும்” என்றார்.
”ஃபிலெஃபியை அடிமையாக்கி ஆள்வது மிக எளிமையான காரியம்தானே? பிறகு ஏன் கோபப்படுகிறீர்கள்?”
”அப்படியென்றால் நீயும் அதை நம்பத் தொடங்கிவிட்டாயா?”
மேலாளர் ஒன்றும் சொல்லாமல் நிற்க, “வெளியே போ” என்று நிறுவனர் கூவினார். மேலாளர் அவரின் ஆணையை ஏற்று திரும்பி தன் புட்டத்தை ஆட்டிவிட்டு வெளியே சென்றார்.
[4]
கனவுகள் வராமல் இருப்பதற்காக நிறுவனர் பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு மாத்திரையை வரவழைத்து கொடுத்தார். கனவுகளைத் தவிர்ப்பதற்கென்றே பிரத்தியேகமாக அந்த மாத்திரை உருவாக்கப்பட்டிருந்தது. அந்த மாத்திரையை போட்டுக் கொள்ளும் ஒருவர் நிம்மதியாக உறங்குவார்.
இரவு தூங்கும் முன் அனைவரும் அதைப் போட்டுக் கொண்டனர். யாருக்கும் அதன்பின் கனவுகளே வரவில்லை. கனவுகள் வராமல் போனதால் விலைமதிப்பற்ற எதையோ இழந்ததைப் போல அவர்கள் வருத்தம் கொள்ளத் தொடங்கினர்.
கனவின் சுவையை அறிந்துவிட்டதனால் கனவு காணாமல் அவர்களால் இருக்க முடியவில்லை. மீண்டும் கனவு காணும் பொருட்டு அந்த மாத்திரையை போட்டுக் கொள்வதைத் தவிர்த்தனர். இதனால் முன்பைவிட ஃபிலெஃபி உற்சாகமாக அவர்களைத் தொற்றிக் கொண்டுவிட்டது.
கிருமி நோய் பரவுவதைப் போல அது அவர்களுள் பரவியது. கீழ் தளத்தில் உள்ளவர்கள் மேல்தளத்தில் உள்ளவர்களை தங்களது எதிரிகளாக பார்க்கத் தொடங்கினர். இருபிரிவினருக்கும் இடையே கருத்து மோதல்கள் எழும்போதெல்லாம் ஒருவரை ஒருவர் கடித்து உடலை காயமாக்கிக் கொண்டனர்.
ஒற்றைக் காலை உயர்த்தியே சிறுநீர் கழித்தனர். நிமிர்ந்து நடப்பதைப் படிப்படியாக குறைத்து கூன் விழுந்தவர்களைப் போல நடக்கத் தொடங்கினர்.
அடுத்தக்கட்டமாக வால் முளைப்பதைப் பற்றி அவர்கள் கனவு காணலாயினர். அடுத்தவரின் உணவை சண்டையிட்டு அடித்துப் பிடுங்கி உண்ணத் தலைப்பட்டனர். ஆடை அணிய மறுத்தனர். ஆண்கள் கூட்டாகச் சேர்ந்து பெண்களைப் புணர்ந்தனர்.
நிலைமை கைமீறியதும் நிறுவனர் துப்பாக்கியை எடுத்து வந்து மிரட்டினார். அவர் பேச்சுக்கு செவி கொடுக்காத இருவரை அவ்விடத்திலேயே சுட்டுக் கொன்றார். தெறித்து சிதறிய இரத்தத் துளிகளை நக்க முண்டியடித்துச் சென்ற மூவரை மீண்டும் தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
’டுமீல்’ என்று வெடிக்கும் துப்பாக்கியின் சத்தம் அவர்களை அடக்கி ஒடுக்கியது.
சில மாதங்களுக்குள்ளாகவே அவர்கள் தங்களது இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கினர். வேலையைத் தவிர்த்து வேறேதும் பேசப்பட்ட போதெல்லாம் கப்பல் கட்டிடத்தில் ‘டுமீல்’ என்ற சத்தமும் அதைத் தொடர்ந்த ஓலமும் கேட்கத் தொடங்கின.
முழுநேரமும் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர். பணி சார்ந்த விஷயங்கள் மட்டுமே அங்கு பேசப்பட்டன. வேறு எண்ணங்கள் மனதில் உதிக்கும் போதெல்லாம் அவர்களது மண்டைகளுக்குள் ‘டுமீல்’ என்ற சத்தமே ஒலித்தது.
ஆதிரனும் தன் இயல்புநிலைக்கு திரும்பியிருந்தான்.
[5]
கனவானது எல்லைகளைத் தாண்டி பயணிக்கும் வல்லமை கொண்டது. அதுவே ஒருவரைத் தெரிவு செய்கின்றது. கனவை ஒருவர் பொருட்படுத்தாது போனால், கனவானது அவரை விட்டு விலகி வேறொருவரிடம் சென்றுவிடுகின்றது.
கனவின் வசீகரமானது அது நம்மை அதன் பின்தொடர வைப்பதில்தான் இருக்கிறது. கால இயந்திரத்தின் கரத்தை பற்றிக் கொள்வது போல. அல்லது இருந்தும் இல்லாமல் இருக்கும் ஏதோவொரு இருப்பின் மீது நாம் வைத்திருக்கும் ஆழமான பற்று போல.
கப்பல் கட்டிடத்தில் வேலைசெய்தவர்கள் கனவு காணும் தன்மையை இழந்துவிட்டபடியால் அந்தக் கனவு ஆமை கட்டிடத்தில் வேலை செய்யும் ஒருவனுக்குள் கயவனைப் போல ஊடுருவியது.
ஒப்புதல் இல்லாமல் நுழையும் தன்மை கொண்ட கனவை அவனால் தடுத்து நிறுத்த இயலவில்லை. ஃபிலெஃபி வேறொரு ரூபத்தில் அவன் கனவில் எழுந்தது. அவன் அதை முற்றிலும் வேறுவிதமாக பொருள் கொண்டான்.
அவனிடமிருந்து ஆமை கட்டிடத்தில் பணியாற்றுபவர்கள் அனைவருக்குள்ளும் அந்த உருவம் புதிய பரிமாணத்துடன் வளரத் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டிடங்களில் வேலை செய்பவர்களும் விதவிதமான வகைகளில் கனவு காணத் தொடங்கினார்கள்.
பிங்க்கூ உலகில் கனவு காண்பது என்பது ஒருவரின் அடிப்படை இயல்புகளில் ஒன்றாக மாறத் தொடங்கியது. இப்படியே சென்றால், கனவைத் தொடர்ந்து இவர்கள் கற்பனை செய்யவும் பழகிக் கொள்வார்கள் என்று அந்த நிறுவனர் பயந்தார்.
கனவு காண்பதற்கும் விதவிதமாக கற்பனை செய்வதற்கும் இவர்களை எது தூண்டுகின்றது என்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் முடிவில் பிங்க்கூ உலகில் அமைக்கப்பெற்ற கட்டிடங்கள்தான் இவர்களுக்கு கனவு காண்பதற்கான விழைவை ஏற்படுத்துகின்றது என்பதை அவர் கண்டுகொண்டார்.
அக்கட்டிடங்கள் யாவும் முழுமை அல்ல. அது ஒருவரின் பெருங்கனவில் எழுந்த பேருருவங்களின் எளிய நிகர் வடிவங்களே என்கிற உண்மை அவருக்குத் தெரிய வந்தது. தன் வீட்டு முற்றத்தில் விழுந்த பெருமழையின் சிறுதுளிகளைப் போல என்று அவர் எண்ணினார். மேலும் அது கடலில் எழும் பேரலையானது கரைக்கு வருகையில் சிறியதாகி விடுவது போன்றது என்று அவர் உணர்ந்து கொண்டார்.
அதன்பின் அந்தக் கட்டிடங்கள் யாவுமே மாபெரும் கட்டிடங்கள் எழுவதற்கான அஸ்திவாரங்களாகவே அவருக்குத் தோன்றத் துவங்கியது. தன் கனவின் புறவடிவங்களாக எழுந்து நின்றிருக்கும் அக்கட்டிடங்களே பிறரையும் கனவுகள் காண்பதற்கு தூண்டச் செய்திருக்கிறது என்பது அவருக்கு விளங்கியது.
எனவே கனவுகள் என்பது முற்றிலும் ரகசியங்களாக வைக்கத்தக்கது என்பதை உணர்ந்து கொண்டதும், அவர் அனைத்து கட்டிடங்களையும் இடித்து தகர்த்துவிட ஆணையிட்டார்.
அதன்பின் தீப்பெட்டிகளை அடுக்கிவைத்தாற் போல் ஒரே அமைப்பைக் கொண்ட கட்டுமானத்தை மட்டுமே பிங்க்கூ உலகில் அவர் நிறுவினார். மிக எளிமையான தோற்றத்தைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடங்களே பிங்க்கூ உலகில் நிலைக்கப்பெற்றன.
கனவுகள் நுழைவதற்கான வழிகள் பிங்க்கூ உலகில் முற்றிலுமாக அடைக்கப்பட்டுவிட்டன.
அதன்பின், அங்கு இயங்குபவர்கள் யாவரும் கனவுகள் ஏதுமின்றி நிம்மதியாக உறக்கம் கொள்ளத் துவங்கினர்.