சிறுகதைகள்

கனவுக்குள் ஒரு தொடர்கதை – முத்தழகு கவியரசன்

சிறுகதை | வாசகசாலை

திய வேளைப்பொழுதாக இருந்தது. வெயில் காணாமல்போகக் குளிர் அவ்வானிலைப் பொழுதை வெகுவாகப் பாதித்துக் கொண்டிருந்தது. பாதிப்பு அப்படியே நீளாததுதான். ஒருநாள் முழுவதும் நீண்டு போகலாம். இல்லை குறிப்பிட்ட நாட்கள், நேரங்கள் என்றும் மதிப்பீடு செய்து கொள்ளலாம். மதிப்பீடுகள் மனித வாழ்க்கைக்குத் தேவையானதாகவே இருக்கின்றன. ஒவ்வொரு மதிப்பீடுகளுக்குள் பின்னிருக்கும் ஆழமானக் கருத்துக்களைத் தனிமையில் உட்கார்ந்து மூளைக்குள் போட்டு அலசிக்கொண்டே இருப்பான். அப்படி அலசப்பட்ட பொழுதாக, அன்றைய பொழுது அவனுக்கு இருந்தது எனலாம்.

கிளிப்போர்ட் பச்சை மலைத் தொடரிலிருந்து சுமார் 37 கிலோமீட்டர் தூரத்தில் அவனின் வசிப்பிடம் இருக்கிறது. தன் அப்பாவின் பரம்பரைத் தொழிலாக உணவுக்கடை ஒன்றை நடத்திக்கொண்டு வருகிறான். தொடக்க காலத்தில் அட்லோஸ் கான் மாகாணத்தில்தான் அவர்கள் வசித்து வந்தார்கள். சொந்தமாக நிலம், வீடுகள் இருந்தாலும், சில பிரச்சனைகளால் அங்கிருந்து துரத்தப் பட்டிருந்தார்கள். சட்ட ரீதியிலான ஆவணங்கள், ஆதாரங்கள் அவர்களிடத்தில் இருந்தாலும், அவையெல்லாம் வெற்றுக் காகிதங்களாகத்தான் அன்று பார்க்கப்பட்டன. இப்போதும் மட்டும் என்ன?. அதே பிரச்சனைகள்தான் தொடர்ந்து வருகிறது. அந்தத் தொடர்தலை எல்லாம் எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும். அதற்கு முட்டுக் கட்டையாக நாம் எந்தக் காரியங்களைச் செய்தாக வேண்டும் என்பதைப் பற்றிப் பல நாட்களாகப் பகலிலேயே கனவுக்குள் சென்று விடைகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.

ஒருநாள் ’சார்லஸ் ட்ரான் போல்ட்’ நகரில் இருக்கும் பெரிய சர்ச் ஒன்றின் வெளிவாசல் படிகளிலேயே தவம் கிடந்திருக்கிறான். மற்றொரு நாள் அச்சர்ச்சின் பின்புறம் இருக்கும் குளத்தின் கரையினில், கண் திறந்தபடியே பரந்துவிரிந்த வானத்தைப் பார்த்து ஏதேதோ நினைத்து மனதிற்குள் சங்கடப்பட்டிருந்தான். அவ்விடத்திற்கெல்லாம் தினமும் செல்லக் கூடியவனாக அவனில்லை. என்றாவது ஒருநாள் செல்வான். குறிப்பாக பெர்னட் புஸ் என்ற வெள்ளைக்காரன் இருந்தால் அங்குச் செல்ல மாட்டான். அனுமதி மறுக்கப்படும். ‘யுவார் நாட் அலோட் பர்சன். நீ இங்கு வர அனுமதி இல்லாத மனிதன். இதற்கு மேல் உள்ளே வந்தால் மரணப் படுக்கைக்கு வழியனுப்பி வைப்பேன்’ என்றும் அவர் துரத்திய படியே கூக்குரல் இடுவார்.

பல இடங்களுக்குச் சென்றாலும் இதே நிலைதான் அவனுக்கு கிடைக்கும். சில நேரங்களில் உடலில் காயங்கள் விழும் அளவிற்கும் தண்டனைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறான். அப்போதெல்லாம் அவனின் கண்களைச் சுற்றிப் பல உருவங்கள் தென்பட்டாலும், அவ்வுருவங்கள் எல்லாம் நின்று வேடிக்கை மட்டும்தான் பார்த்துக்கொண்டனவே தவிர மற்றபடி எதுவும் செய்திருக்கவில்லை.

இதைப்பற்றியெல்லாம் தன் மனைவியான ஜெமிமாவிடம் சொல்லிக் கொள்ளாதவனாகவே இருந்தான். வார்த்தைகளைத் தவிர்த்திருந்தாலும் உடல் பட்ட காயங்கள் காட்டிக் கொடுக்கத் தானே செய்யும்

‘ஏன் என்னாச்சி. எங்கையாச்சும் போயி சண்ட போட்டீங்களா?. சண்ட போடுற ஆளும் நீங்க கெடையாதே?’ என்று சொல்லி காயங்களுக்கு மருந்து போடத் தயாராவாள். இம்மாதிரியான நிகழ்வுகள் முன்பெல்லாம் நடந்திருக்கின்றன. அச்சமயத்தில் அவள் படும் பதற்றம், முகம் போகும் போக்கு, பார்த்த உடனே ‘அய்யோ கடவுளே. இது என்ன?’ அவள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளெல்லாம் கடவுளைத் திட்டித்தீர்க்கும் படியாகவே அமைந்திருக்கும். கண்களுக்குள் கண்ணீர் பொங்கி வெந்நிறப் படலத்தைத் தாண்டி, வெளிவந்து கொட்டி ஓடும். அழுகின்ற, பாவப்பட்ட முகமெல்லாம் சில மாதங்களாகக் காணாமல் போய்விட்டன. அவளின் மனம் பக்குவப்பட்டு விட்டதாக அவன் நினைத்திருந்தான்.  அதற்குக் காரணம் தன் மூத்த மகனின் படிப்புத்தான். படிப்பு நடக்கும் அநீதிகளையெல்லாம் புரட்டிப் போட்டுவிடும். பத்து வயதுதான் ஆகிறது. அவ்வயதிலேயே அவனைச் சுற்றிப் புத்தகங்களே ஆக்ரமித்துக் கிடக்கும். சிறிய விதை மரமாக, பெரிய மரமாக வளரப்போகிறதை நினைத்து அளவுகடந்த மகிழ்ச்சியும், குளிர்ச்சியும் அவர்களின் மனதில் நிறைந்து வழியும்.

குளிர்ச்சி வலியையும் தள்ளிப்போட வைக்கும். காயங்களையும் கட்டுக்குள் கொண்டு வரும், எல்லாம் அளவோடு இருந்தால். ஆனால் இக்குளிர் அப்படிப்பட்ட குளிரல்ல என்பதை ஆழமாக உள்வாங்கிக்கொண்டான். அப்பச்சை மலைத்தொடர் எப்போதும் செழிப்பால் பூத்துக் குலுங்கும். சாலையின் இருபுறங்களிலுமே மரங்கள் வரிசையாக க் கிளைகளைப் பரப்பிக் கொண்டு, காற்றில் இலைகள் சத்தமிட்டுச் சிரித்துக்கொண்டே இருக்கும். சிரிப்பு கவலைகளை மறக்கடித்து விடும். அவன் இங்குத் தனிமையில் உட்கார்வதற்கும் ஒருவரின் சிரிப்பு தான் காரணமாக அமைந்திருக்கிறது.

அவரின் பெயர் ரொனால்ட் வில்லியம் ர்ரூம். உணவு தேவை என்று போனில் அழைப்பு விடுத்திருந்தார். அவருக்குப் பிடித்தமான பீப் டபூல் டக்கர் பர்கரையும் ஆர்டர் செய்திருந்தார். பேசும் போதும், அவரின் வீட்டுக் கதவு திறப்பதற்கு முன்பு வரையிலும் எல்லாம் நல்லதாகவே சென்று கொண்டிருந்தது. உணவும் கெட்டுவிடவில்லை. பின் எதற்கு வேண்டாம் என்று சொல்லித் திருப்பிக்கொடுத்தார். திருப்பிக்கொடுத்தார் என்று நாகரீகமாக சொல்லிக் கொள்வதை விடவும், உணவை வாங்கி முகத்தில் வீசியெறிந்தார் என்ற உண்மையைப் போட்டு உடைத்திருக்க வேண்டும்.

‘ஏதோ என்னோட மனைவி சொன்னதுனால ஒன்னோட கடைக்கு ஆர்டர் பண்ண. ஆனா நீ இப்படி இருப்பன்னு எனக்குத் தெரியாது. என்னோட வாழ்க்கையில உன் மொகத்த பாத்ததுதான் பெரிய தண்டனன்னு நினைக்குறன். திரும்பவும் குளிச்சிட்டு ஜெபம் பண்ணனும். நான் இதுக்கு சாப்டாம பட்டினியாவே கெடப்பன்’ அந்தரங்க வார்த்தைகளையும் பிரயோகித்து ஏளனமாக, அவமானப்படுத்தி, தான் வைத்திருந்த ஏ.டு.வென் பிஸ்டெல் (சைலென்ஸ் பொருத்தப்பட்டிருந்தது) துப்பாக்கியை நெற்றியில் வைத்து மிரட்டித் துரத்தி விட்டிருந்தார்.

இத்துரத்தல் ஒருமுறை அல்ல. பலமுறை பல்வேறு இடங்களில் நடந்தேறியிருக்கிறது. காவல்துறையை நாடலாம். நியாயங்கள் அங்கே கூண்டிற்குள் அடைக்கப்பட்டுச் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுகின்றன. இதுபோன்ற துரத்தல்கள் நடைபெறும் சமயத்திலெல்லாம் எப்போதும் அவனிடத்தில் வைத்திருக்கும் சிறிய அளவிலான கண்ணாடி ஒன்றை எடுத்து வழியும் கண்ணீரையும், முகத்தையும் துடைத்துவிட்டுப் பார்த்துக்கொள்வான். கோபம் அளவுக்கு அதிகமாகவே வரும். பேசாமல் நானும் துப்பாக்கி உரிமம் வாங்கிக்கொண்டு இனி துரத்துபவர்களையும், துரத்தியவர்களையும் கூண்டோடு சுட்டு வீழ்த்த வேண்டும் என்றெல்லாம் நினைத்துப் பாரத்திருக்கிறான். உரிமம் கிடைப்பதும் கேள்விக்குறிதான். வன்முறை எதற்கும் தீர்வாகாது. ஒருவேளை ஏதாவது செய்து கம்பிகளுக்குப் பின்னால் அடைபட்டுப் போனால், தன் உறவுகளை அனாதைகளாகத் தவிக்க விட்டுவிடுவோமோ?. விதை துளிர்விட்டு வளர ஆரம்பித்திருக்கிறது. வேலியாக இந்நேரத்தில் இல்லாவிட்டால் நம் கனவுகள் பொசுங்கிவிடும். என்றும் கண்ணாடியை இறுக்கிப் பிடித்துக்கொள்வான்.

இன்றும் அக்கண்ணாடியை எடுத்துத் துடைத்துக்கொண்டான். ஆனால் பார்க்கவில்லை. பெஞ்சின் ஓரத்தில் வைத்துவிட்டான். மாறாக அவனுக்கு எதிரில் பட்ட அம்மலைத்தொடரில் பல வண்ணப் பறவைகள் கூடி நிற்பதைக் கண்டிருந்தான். மஞ்சள், வெள்ளை, சிகப்பு, வெளிர் நிறத்திலாலான ரோஸ், முக்கியமாக க் கருநிறப் பறவைகளும் விளையாடி மேய்ந்து, அப்பசுமையை மேலும் பசுமையாக்கிக் கொண்டிருந்தன. வானத்தில் சூழ்ந்திருந்த மேகங்களெல்லாம் ஒன்றுகூடி லேசான மலைச்சாரலாக த் தூவத் தொடங்கியிருந்தன. சில்லென்ற குளிர்க் காற்று அடித்தது. மழை அதிகமாகப் பெய்யத் தொடங்கினால் காரிற்குள் போய்தான் இருந்தாக வேண்டும். அவனின் கார் வலுதுபுறம் கொஞ்சம் தள்ளி நிறுத்தப்பட்டிருந்தது. அச்சாலை முக்கோண வடிவிலிருக்கும் மேல்முனையைப் போன்று காணப்படும். வலது, இடது என்ற எந்தப் பக்கத்திலிருந்து வந்தாலும், வாகனங்களின் காட்சி கண்ணில் பட்டுவிடும்.

அவன் சாலையோர நீளமான சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து இருபது நிமிடங்கள் ஆகியிருந்தன. இதுவரை மூன்று பெரிய ட்ரக் வண்டிகள் கடந்திருந்தன. அதில் கடைசியான வண்டி கருப்பு ஆடுகளை ஏற்றிக்கொணடு சென்றது. அவ்வாடுகள் எல்லாம் அமைதியாக இல்லை. பயங்கரமாகச் சத்தம் போட்டுக்கொண்டே சென்றன. அச்சத்தமெல்லாம் அவன் காதிற்குள் ‘அய்யோ எங்களை விட்டுவிடு. நாங்கள் கருப்பு. பேசாமல் மனிதர்களாகப் பிறந்திருந்தால் ஒதுங்கியாவது உயிரோடு இருந்திருப்போமே’ என்பதுபோல் விழுந்திருந்தது.

இது ஒருவிதமான கிண்டல் தொணிக்கும் கேலியாக மனிதர்களை ஆடுகள் நினைத்து விட்டனவோ?. என்கிற கேள்வியும் மனதிற்குள் பிறந்திருந்தது. இப்பிறத்தல்களெல்லாம் அவனின் வாழ்க்கையில் தொடர்கின்ற ஒன்றுதான்.

போனவருடம் ஸ்டெல்லா இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தாள். மனதின் வலிகளைக் கரைப்பது அவ்வளவு சுலபமல்ல. கிட்டத்தட்ட பதின்மூன்று ஆண்டுகள் அவனோடு நட்புறவில் இருந்தவள். இந்நட்பின் கிறுக்குப்பிடிக்கு மேலும் பல விடயங்கள் அப்பயணத்தில் அவளுக்குக் கிடைத்தது உண்மைதான். மூன்று மாதங்கள் பல இடங்களுக்குச் சுற்றித்திரிந்து அங்கு நடந்த நிகழ்வுகளின் முக்கியமானதை அவனிடம் சொல்லிப் புலம்பியிருந்தாள்.

புகைப்படம் எடுப்பதற்காகவும், கிராமங்களின் அழகு, பசுமை, மக்களின் பழக்க வழக்கங்கள், மரபு ரீதியிலான வாழ்வின் வழிபாட்டு, மருத்துவத் தொடர்புமுறைகள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்காகவும் மூன்று குழுக்களாக அவர்கள் சென்றிருந்தார்கள். கிஸ்தான் கிரிகார்பூர் என்ற அடையாளப்பெயர் பலகையுடன் அம்மலைக்கிராமம் காணப்பட்டது. காய்கறிகளை மட்டுமே மூலாதாரமாக க் கொண்ட விவசாய நிலம். வெளியிலிருந்து பார்ப்பதற்கும், கிராமத்திற்குள் சென்று பார்ப்பதற்கும் ஏகப்பட்ட மாறுதல்கள் அங்கே நிலவி இருந்தன. கட்டுப்பாட்டு எல்லைக்கோடுகள் தெருவிற்குத் தெரு நீண்டிருந்தன. அங்கு வாழும் சில மனிதர்கள் கோவிலுக்குள் அனுபதிக்கப்படுவதில்லை. வெளியில் நின்றவாறேதான் சாமி தரிசனம் செய்துகொண்டு செல்கிறார்கள். அதையும் மீறி உள்ளே சென்றால் நாட்டுத் துப்பாக்கிகளுடன் கோவில் வாசலின் உட்புறத்தில் சிலர் காவல் காக்கின்றனர். நாங்கள் செல்லும்போது எங்களை அவர்கள் அனுமதித்தனர். வெளிநாட்டு மனிதர்கள் வந்து பார்த்தால், தங்களுடைய புகழ் வெளிநாடு வரை செல்லும் என்பதற்காக மட்டும்தான் அவ்வனுமதி. என்னுடன் வந்தவர்கள் புகைப்படம் எடுப்பதற்கும், சுற்றிப் பார்ப்பதற்கும் உள்ளே சென்றாலும், நான் உள்ளே செல்லவில்லை. ஒரே மொழியில் அம்மக்கள் பேசிக்கொண்டாலும், கீழ் – மேல் எனும் பாகுபாட்டுப் பிரிவினைகள் கடவுளின் முன்னே அரங்கேறி வருகின்றன. அப்பாகுபாடுகளெல்லாம் அக்கோவிலின் கடவுளுக்குத் தெரியவில்லையா?. துப்பாக்கிக்காரர்களின் கனவுகளுக்குள் சென்று புரிய வைக்கவில்லையா? இப்படியான அடிப்படைக் கேள்விகளையும் அவள் மனதிற்குள் கேட்டிருந்தாள். வலிதான் பதிலாக இருந்தது என்று சொன்னாள்.

பல வண்ண நிறங்கள் வானத்தில் வானவில் வளையமாக தோன்றினாலும், கருமையெனும் மேகம் முளைத்தால், அச்சூழல் பிறந்தால் மட்டுமே வண்ணங்கள் பிறக்கும். நமக்கு வண்ணங்கள் பிரச்சனை. அவர்களுக்கு எல்லாமே பிரச்சனைதான் என்றும் கடிந்திருந்தாள்.

“நாடுவிட்டு நாடு தாவினாலும் அடக்குமுறை இருக்கத்தான் செய்யுது”

“ஆமா. என்ன செய்ய. கனவுக்குள்ள நெனச்சு வெச்சதெல்லாம் நடைமுறை வாழ்க்கையில நடத்திக் காட்டனும்”

“கண்டிப்பா. கருப்பு காந்திய மாதிரி நம்மளும், நமக்கும் நெறைய கனவிருக்கு”

“அது நெறையவே இருக்கு. உங்க பையனும் இந்தச் சின்ன வயசுலையே நெறைய கவிதை எழுதுறான் போல”

“இம்… என்னையவே தோக்கடிச்சிருவான்”

பெற்ற மகனிடம் தோற்பது அப்பாக்களுக்குப் பிடிக்காமலா போகும். எது பிடிக்கிறதோ இல்லையோ அப்பகுதியில் மழை வேகமெடுக்க ஆரம்பித்துவிட்டது. நேர் எதிராக மலை அடிவாரத்தில் இறைகளைப் பிறக்கிக் கொண்டிருக்கும் பறவைகளெல்லாம் சண்டையிடாமல் ஒற்றுமையாகத்தான் மேய்ந்து, தன் இருப்பை அவ்வவ்போது சத்தம் எழுப்பிக் காட்டிக்கொள்ளும். ஒருசில பறவைகள் மேய்த்தலை நிறுத்திவிட்டுப் பறத்தலை முன்னிலைப் படுத்தின. வெவ்வேறு வண்ணங்கள் பல திசைகளில் மேலெழுந்து பறக்கும் போது, அக்காட்சிகளெல்லாம் அற்புதமான மகிழ்ச்சியை அவனுக்குக் கொடுத்தன.

இந்தக் காட்சியை அக்குளக்கரைக் காவலாளி பார்த்திருக்க வேண்டும். போன மாதம் தேவையில்லாமல் வம்பிழுத்துக் காலால் எட்டி உதைத்து விரட்டிய அந்தக் காவல்துறை அதிகாரியும் பார்த்திருக்க வேண்டும். பார்த்திருந்தால் மட்டும் அவர்களின் மனம் மாறிவிடுமா?. தன் மேல் சட்டையில் படிந்திருந்த உணவினைச் சுத்தம் செய்யத் துடைத்திருந்தான். போகவில்லை. மழைத்துளிகள் பட்டவுடன் ஈரம் பொதிந்து கறையாக மாறிக்கொண்டன. அவன் அங்கு வந்தமர்ந்து இப்போது ஒருமணிநேரம் ஆகிவிட்டது. வீட்டிற்குச் செல்ல வேண்டும். போனவர் இன்னும் வரவில்லை என்று பதறிவிடுவார்கள். மேற்படி சட்டையின் கறையைக் கண்டுவிட்டாள் ‘நான் முன்னாடியே சொன்னன். டோர் டெலிவிரிலாம் இனி வேண்டாம். பல சட்டைங்க தூக்கி தூரப்போட்டதெல்லாத்தையும் மறந்துட்டீங்களா?’ அவளின் மனப்பாட்டைப் பாடத் தொடங்கி விடுவாள்.

பல தொடர்கதைகளில் இதுவும் ஒரு விதமான தொடர்கதைதான். கறைகளைக் கூண்டோடு ஒழிப்பதற்கு விதை எனும் தொடர்கதையும் வீட்டில் வளர்ந்து கொண்டிருக்கிறது. மழைத்துளிகள் உச்ச நிலைக்கு வந்திருந்தன. காரிற்குள் சென்றுவிடலாம். அப்படி செய்யவில்லை. இடதுபுறத்தில் பெரிய கிளைகளை நீட்டியவாறு வளர்ந்திருந்த மரத்தின் அடியில் போய் நின்றிருந்தான். மழைத்துளிகள் மேல் விழாமல் இலைகள் பாதுகாத்துக் கொண்டன.

அவனின் பார்வையெல்லாம் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஆழமாக நோட்டமிட்டன.. நின்றிருந்த மரங்களெல்லாம் தலைகுனிந்து நனைந்து கொண்டிருந்தன. மேய்ந்திருந்த பறவைகள் பலபறந்து காணாமல் போயிருந்தன. ஓரிரண்டு பறவைகள் மட்டுமே மரக்கிளைகளில் சோடியாக அருகருகே நெருங்கி உட்கார்ந்து குரல் எழுப்பிக் கொண்டன. தானும் குரல் எழுப்ப வேண்டுமென்று ஆசைப்பட்டான். கணத்த குரலோடு ‘நீங்களெல்லாம் செத்துப் போங்கடா’ என்றும் கத்த எண்ணியிருந்தான். அப்படிச் செய்யவில்லை. மாறாகத் தன் மகன் மார்ட்டின் கிங்குக்காக ஒரு கவிதையை எழுதத் தொடங்கியிருந்தான். பேண்ட் பாக்கெட்டில் ஒரு கருப்புநிறப் போனாவும், மடித்து வைக்கப்பட்ட சிறிய வெள்ளைக் காகிதமும் எப்போதும் உடனிருக்கும்.

முன்பு எழுதியவை விடவும் இம்முறை வித்யாசமாக அமைத்தல் அவசியமானதாகும். இக்கவிதை நல்ல உரமாக மகனின் மனதிற்குள் போய்ச் சேர வேண்டும். அப்பொழுதுதான் கருப்பு காந்தியின் கனவு நினைவிற்குள் துளிர்விட த் தொடங்கியது. மகனும் அவர் வழியிலேயே பயணிக்க வேண்டும். எனக்கு ஒரு கனவு இருக்கிறதென்று தலைப்பிட்டுத் தொடங்கியிருந்தான்.

’இது
ஒரு சரித்திரம்
என்றுதான் சொல்ல வேண்டும்

இந்த வெறி
அவர்களின் மூச்சில் இருக்கிறது
நாம் காற்றைச்
சுத்தப்படுத்த வேண்டும்

இந்த வெறி
அவர்களின் பார்வையில் இருக்கிறது
நாம் காட்சிகளைச்
சுத்தப்படுத்த வேண்டும்

இந்த வெறி
அவர்களின் உணர்வில் இருக்கிறது
நாம் உள்ளத்தைச்
சுத்தப்படுத்த வேண்டும்

இந்த வெறி
அவர்களின் இரத்ததில் இருக்கிறது
நாம் உணவுகளைச்
சுத்தப்படுத்த வேண்டும்

இந்த வெறி
அவர்களின் பேச்சில் இருக்கிறது
நாம் சொற்களைச்
சுத்தப்படுத்த வேண்டும்

இந்த வெறி
அவர்களின் உயிரில் இருக்கிறது
நாம்
என்ன செய்ய வேண்டும்
எண்ணங்களுக்குள் செல்ல வேண்டும்’

இன்னும் அதிகமாகவே எழுத முற்பட்டிருந்தான். அதற்கு மழைத்துளிகள் விட்டபாடில்லை. இலைகள் எல்லாம் தலைகுனிந்து விட்டதால் கணமான துளிகள் வேகமெடுத்துத் தலையினிலும், உடலிலும் பட்டுத் தெரித்தன. காற்றும் பலமாக இடதுபுறம் நோக்கி வீசிக்கொண்டது . இத்தோடு நிறுத்திவிடலாம். மீதத்தைக் காரிற்குள் சென்று எழுதலாம்.

எழுதும்போது ஒவ்வொரு வார்த்தைகளிலும் அர்த்தங்கள் இறுக்கி அமைத்தல் உண்மைகளை வெளிப்படுத்தும். இவ்வெறி நோய்தான். தடுப்பூசி போடப்பட்டால் அதன் வீரியம் காணாமல் போய்விடும். எல்லா வெள்ளை நிற மனிதர்களையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அதில் ஒருசில நண்பர்களும் அவனுக்கு இருக்கத்தான் செய்கிறார்கள். இவ்வெறியை அவர்கள் தனித்து நின்றுகொண்டெல்லாம் வளர்க்கவில்லை. அதற்கென்று குழுக்கள் இருப்பதாகவும் நம்பியிருந்தான். ஒரு வெள்ளை மனிதன் நிறவெறியோடு இருக்கும்போது, அவன் குடும்ப அமைப்பில் இருப்பானானால், அவனின் எண்ணங்கள் உடனிருக்கும் குழந்தைகளுக்கும் தாக்கக்கூடிய ஆபத்து இயல்பாகவே தொற்றிக்கொள்ளும் அபாயம் இருப்பதாக வெள்ளைநிற நண்பன் ஒருவன் சொல்லியிருந்தான். அதனால்தான் வாழும் காட்சியமைப்பையும், மனிதநேயத்தையும் அவர்களின் மனதில் விதைத்து விட்டால் இவ்வெறி வாதங்களெல்லாம் குறையும் என்கிற நம்பிக்கை அவனுக்குக் கதையாகவே இருக்கிறது. இது கதையல்ல. நிஜம், உண்மை. மனதிற்குள்ளேயே கேள்வியும், பதிலுமாகப் போட்டிப்போட்டுக் கொள்வான்.

ஜான்சன் என்ற நபரையும் அவனால் மறக்க முடியாது. தன் உறவுக்காரன் என்றாலும், உயர் அதிகாரி பதவியில் இருக்கக்கூடியவன். இனித் தங்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். வீண் பலிகள், கொலைகள் காணாமல் போகும் என்றெல்லாம் முழுமையாக நம்பியிருந்தான். அது பேச்சாக மட்டுமே நின்றுவிட்டது. முன்பிருந்ததை விடவும் அநீதிகளும், அக்ரமங்களும் கூடிக்கொண்டே வருகின்றன. நம்புவதெல்லாம் இன்று பகடை விளையாட்டாக மாறிக்கொள்கிறது. அதன்பின் அவரைப் பார்க்க செல்வதில்லை.

சமூகம் இம்மாதிரியான கட்டுக்களை உருவாக்கி வைத்திருக்கிறது. தங்களுக்குக் கீழானவர்களைச் சற்றுக் குசிப்படுத்த வேண்டும். நாங்கள் உங்களுக்கானவர்கள்தான் என்று, எங்களிடமிருந்து ஒருவனைத் தேர்வுசெய்து, பொய்யான பிம்பத்தை வாரித் தெளிக்கிறது. நம்புதல்கள் திசை திருப்பப் பட்டிருக்கின்றன. ஏமாற்றுதலையும், ஏமாறுதலையும் தவிர்க்க  முடிவு கட்டியிருந்தான்.

முழுவதுமாக நனைந்திருக்கவில்லை. சாலையெல்லாம் மழைத்துளிகள் வேகமாகப் பட்டுச் சிதறி, கெண்டைக்கால் முக்கும் அளவிற்குத் தண்ணீர் ஓடியிருந்தன. வலதுபுறம் இருக்கும் தன் காரினைப் பார்த்து நடைபோடத் தயாராகும் போது, தூரத்திலிருந்து சைலன்ஸ் சத்தத்தோடு வோகமாக பார்க் போலீஸ் என்று எழுதியிருந்த வெள்ளை மற்றும் கருப்புநிற கார் அவன் முன் பாய்ச்சலில் வந்து நின்றது. அதிலிருந்து அளவில் பெரியதான அமேரிக்கன் செப்பர்ட் நாயும், இரண்டு வெள்ளை நிற உருவங்கள் கதவினைத் திறந்துவந்து துப்பாக்கியை நீட்டியிருந்தன.

“ஒலுங்கா கையெ பின்பக்கமாகத் தலையில வெச்சி தரையிலெ படு. இல்லன்னா சுட்ருவோம்”

என்ன செய்வது, ஏது செய்வதென்று தெரியாமல் பதறி நிற்கும் போது, இடதுபுற பேண்ட் பாக்கெட்டிலிருந்த போன் பாடலொன்றைப் பாடி அதிர்ந்திருந்தது. இந்த அழைப்பு ஜெமியினுடையாதாகத்தான் இருக்கும். கையைக் கீழிறக்கினால் சுட்டு விடுவார்கள். அருகில் மரங்களும், மழைத்துகளிலும், கீழே என்ன நடக்கிறது என்று கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் பறவைகளும்  தவிர யாருமில்லை. ஒரு அதிகாரி கோபத்தோடு அருகில் வந்து போனை எடுத்து ஆன் செய்திருந்தான். அவள் பேசத்தொடங்கினாள்.

“எங்க இருக்கீங்க. சீக்கிரமா வீட்டுக்கு வாங்க. யாரையோ கொன்னுட்டாங்களாம். சுத்தியும் போலீஸ் வண்டியாப் போகுது. எதாவது ஒன்னுன்னா நம்ம ஆளுங்களத்தான் சந்தேகப்பட்டுத் தூக்கிட்டுப் போவாங்க”

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த ஆபிசருக்கு மேலும் கோபம் கொப்பளித்துக் கொண்டது. ‘எங்களுக்கு எதிரான பாட்டை ரிங்டோனாக வைத்திருக்கிறாய். உன் மனைவி எங்களைக் குறை கூறுகிறாள்’. எரிச்சல் அவருக்கு உச்சத்திற்கு செல்ல, அப்போனை ஓங்கி தரையில் போட்டு உடைத்திருந்தார். உடனிருந்த வீல்சை ஏவி அவனின் பின்புறத்தைக் கடிக்க உத்தரவிட்டார். எஜமானன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, சொல்லியதை நிறைவேற்றும் வகையில் அவனைக் கடித்து கீழே குப்புறத் தள்ளியது.

தான் எழுதி வைத்திருந்த அக்காகிதத்தைக் கைக்குள் பொத்தி வைக்காமல் வானத்தை நோக்கி வீசியெறிந்தான். அது காற்றின் வேகத்திற்கேற்ப, மழைத்துளிகளைப் பற்றிக் கவலை கொள்ளாது, சுதந்திரமாக பல கனவுகளைச் சுமந்து இடதுபுறமாகப் பறந்துகொண்டே சென்றது. இதைப்பார்த்த அக்காவலர் வெறும் காகிதம்தானே என்று பொருட்படுத்தவில்லை. கீழ் நடக்கும் காட்சிகளைப் பார்த்துப் பறவைகள் கத்தத் தொடங்கியிருந்தன. அவனும் வலியால் கத்தத் தொடங்கியிருந்தான்….

 

(பின் குறிப்பு: இச்சிறுகதை அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் படுகொலை செய்யப்பட்ட பின்பு, சில வாரங்கள் கழித்து எழுதப்பட்டது.)

*****

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button