காஞ்சியில் பிறந்த புத்தன்
ஆம்! முத்தமிழ் அறிஞரின் வரிகளில் சொன்னால் “காஞ்சியில் பிறந்த புத்தன்” பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினம் இன்று.
அப்படி என்ன செய்து விட்டார் அண்ணா?
இந்த சமூகத்திலிருந்து பாடம் கற்ற பெரியார் எனும் ஏகலைவனின் வில்லில் இருந்து பாய்ந்த அம்பு தான் அண்ணா. அந்த அம்பு தான் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவு சித்தாந்தத்தை அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்தது. அந்த அம்பு தான் டெல்லி ஏகாதிபத்தியத்தை கதி கலங்கச் செய்தது. இன்றும் இந்தி தான் ஆட்சி மொழி என்று கொக்கரிப்பவர்களுக்குச் சாட்டையடி கொடுக்கும் பதில்கள் அனைத்தும் பேரறிஞர் உதிர்த்த சொல்வீச்சுகளின் நீட்சிகள் தான்.
அண்ணா ஏன் இன்றும் தேவைப்படுகிறார்?
அண்ணா அன்று பேசிய நமக்கான தேவைகள் மற்றும் நம் உரிமைகள் இன்று வரை முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும் நிலையில் நாம் பெற்றவை, இழந்தவை, செய்ய வேண்டியவைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய நெருக்கடியான சூழலில் தான் இப்போது இருக்கிறோம்..
மாநில சுயாட்சி:
மாநிலங்களின் அதிகாரங்களை டெல்லி தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில் திராவிட நாடு வேண்டும் எனும் குரலை பாராளுமன்றம் கேட்டபோது அதிர்ச்சி அடைந்து தான் போயிருந்தது. ஒடுக்கியே தீர வேண்டும்! என பிரிவினைவாதத் தடைச் சட்டத்தை முன்னிறுத்தியது காங்கிரஸ்.
ஜெயித்து விட்டோம் என்று நினைத்த காங்கிரஸிற்கு மாநில சுயாட்சி எனும் மற்றுமொரு சாட்டையடியைக் கொடுத்தார் அண்ணா. அந்த மாநில சுயாட்சிக்கான போராட்டம் தான் இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொன்றிற்கும் டெல்லியை நோக்கிக் கைநீட்டி நிற்கும் அவலநிலை தான் இன்றும் நீடிக்கிறது. உங்களுக்கு செய்ய என்னிடம் போதுமான அதிகாரங்கள் இல்லை என்று அண்ணாவே சொல்லுமளவிற்கு தான் மாநிலங்களுக்கான அதிகாரங்கள் வகுக்கப்பட்டு இருந்தன. இன்று அதிலிருந்தும் ஒவ்வொன்றாக மத்திய அரசு நம்மிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு இருக்கிறது.
உணவும் கல்வியும்:
இருபதாண்டு கால பார்ப்பனிய காங்கிரசின் திறமற்ற அரசியல் போக்கு, மக்கள் நலனில் அக்கறையின்மை போன்றவை நாட்டையே வறுமையின் பிடியில் தள்ளின. அந்த நிலையில் தான், அண்ணா ஆட்சிக்கு வருகிறார். தான் அளித்த “மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்” என்ற வாக்குறுதியையும் நிறைவேற்றுகிறார். வயிற்றுக்கு உணவளித்த பின்னர் செவிக்கு உணவளிக்கத் தேவையான நடவடிக்கைகளை செய்கிறார். ஒரு மாணவரைப் பள்ளிக்குக் கொண்டு வர என்னென்ன சமூகநலத்திட்டங்கள் செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்கிறார். அவ்வாறு நாம் பெற்ற கல்வியையும் வளர்ச்சியையும் தடுக்கவும், நம் கட்டமைப்பைச் சுரண்டவும் இன்று இந்துத்துவ அரசால் அனிதாக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். நீட் போன்ற நவீன மனுதர்மங்கள் நம்மை தாக்குகின்றன. சுருக்கமாகச் சொன்னால், எங்களுக்கான கல்வியைக் கொடுங்கள் என்று கேட்ட நிலையில் இருந்து எங்களுடைய கல்வியைப் பறிக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் இருக்கிறோம். இதனை இப்படியே விட்டால் இன்றைய ராஜாஜிக்களின் நவீன குலக்கல்வித் திட்டமான புதியகல்விக் கொள்கைகளுக்கு பலியாவதைத் தவிர வேறு வழியில்லை.
ஊருக்கொரு அண்ணா:
அண்ணாவைப் பற்றி பேசுகையில் தன் தம்பிகளை அரசியல்படுத்தியதைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. அந்தக் கால டீக்கடைகளும் சலூன் கடைகளும் அரசியல் வகுப்புகளுக்கான கல்விச் சாலைகளாயின. அண்ணா தன் தம்பிகளுக்கு 1955 முதல் கடிதங்களை எழுதத் தொடங்கினார். கிட்டத்தட்ட தமிழில் 290 கடிதங்களையும் ஆங்கிலத்தில் 26 கடிதங்களையும் எழுதினார். இவை ஒரு தலைவன் தன் படைவீரர்களுக்கு வழங்கும் அறிவுரைகளாக மட்டுமில்லாமல் தலைவனுக்கும் தொண்டர் படைக்கும் இடையே இடைவெளி இல்லாமலும் பார்த்துக் கொண்டன. இதுதான் அண்ணாவின் சித்தாந்தத்தை அவருக்குப் பின் அவரது தம்பிகள் எடுத்துச் செல்ல வழிவகுத்தது. இன்று இளைஞர்கள் வாட்சப், முகநூலில் அரசியல் கற்கும் ஆபத்துப்போக்கை வலதுசாரிகள் நன்றாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால், இதனை அண்ணாவின் வழிவந்த கட்சிகள் உணராதது தான் நமக்கான மிகப்பெரிய பின்னைடைவு.
இந்தித் திணிப்பு:
எந்த ஒரு மொழிக்கும் தான் எதிரியல்ல! என்பதை சமயம் கிடைக்கும் போதெல்லாம் உணர்த்திக் கொண்டே இருந்தார் அண்ணா. அவர் இந்தித் திணிப்பை எதிர்த்தாரே தவிர இந்தி என்ற மொழியை எங்குமே கொச்சைப்படுத்தியது இல்லை.
இந்தியைத் தாய்மொழியாக்க மத்திய அரசு அன்றிலிருந்து இன்று வரை சொல்லும் ஒரே காரணம், இந்தி பெரும்பான்மையான மக்களால் பேசப்படுகிறது என்பது தான். இதற்கு அண்ணா அன்றே இவ்வாறு பதிலளித்தார், “நாட்டில் பெரும்பான்மையினரால் பேசப்படும் மொழி என்பதற்காக இந்தி பொதுமொழியாக இருக்க வேண்டுமென்றால், நாட்டில் எண்ணற்ற எலிகள் இருக்கும் போது புலியை ஏன் தேசிய விலங்காக கருதுகிறோம்?”. இதுதான் அண்ணாவின் நிலைப்பாடு. ஒன்றியத்தில் பல்வேறு இனங்கள், மொழிகள் கொண்ட மக்கள் வாழும்போது “ஒரே தேசம் ஒரே மொழி ஒரே மதம்” என்ற குறிக்கோளைக் கொண்டு செயல்படும் “இந்திய” அரசுக்கு “தமிழ்நாட்டில்” இருந்து மட்டும் தான் அன்றிலிருந்து இன்றுவரை சாட்டையடி கொடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஆனால், தற்போது நாம் தடுப்பாட்டம் ஆடும் நிலையில் தான் இருக்கிறோம். ஒன்றிணைந்து போராடாவிட்டால் நம் உரிமைகள் பறி போவதைத் தடுக்க முடியாது. அண்ணா அமைத்த கட்டமைப்பே நம்மை இன்றுவரை காத்துக் கொண்டு இருக்கிறது. பெரியாரின் கைத்தடியை அண்ணாவின் அரசியல் பார்வை கொண்டு பயன்படுத்த வேண்டிய நேரமிது. அண்ணாவை வெற்றுப் பெருமைக்காகவும் மேற்கோள் காட்டவும் பயன்படுத்துவதை விட அவரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதே அண்ணாவிற்கு நாம் செய்யும் நன்றியாக இருக்க முடியும்.