கட்டுரைகள்

‘கண்மதம்’ மலையாளத் திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – செந்தில் ஜெகநாதன்

கண்மதம் (1998) –  ஏ.கே. லோகிததாஸ் 

தொடர்ந்து மனிதர்களின் கீழ்மைகளாலான  நெருக்கடிகளுக்கு இடையே பிறக்கும் கருணையையும் அறத்தையும் சொல்வது ஏ.கே. லோகிததாஸின் திரைக்கதைகள். மலையாள சினிமாவில் நிகழ்ந்த அற்புதங்கள் அவையென்றே சொல்லலாம்.

மனிதனின் அடிப்படைப் பண்புகளான காம, குரோத, போகம் ஆகியவற்றின் விளைவுகளினால் உண்டான திரைக்கதைகள் அவருடையவை. அந்தத் திரைக்கதைகள் உச்சம் பெற்று படத்தின் பிரதான  கதாபாத்திரம் மன மாற்றமடைந்து அறத்தை நோக்கியும் கருணையை நோக்கியும் செல்வதாக அவரது எல்லாக் கதைகளும் முடியும்.

 

இப்படியான அவரது திரைக்கதைகளுக்கு அவரே சொல்லும் விளக்கம் : 

“ஏனென்றால் நீதியும் கருணையும் அறமும் மனிதனின் அடிப்படை இயல்புகள் அல்ல. மனிதனுக்குள் இருப்பது காமமும் குரோதமும் போகமும் மட்டும்தான். இடைவிடாமல் ஒவ்வொரு கணமும் வலியுறுத்திக் கொண்டிருந்தால் மட்டுமே மனிதனின் பண்பாட்டின் அடிப்படைகளான நல்லுணர்வுகள் நிற்க முடியும். ஒரு போர் அல்லது பஞ்சம் வந்தால் எத்தனை சீக்கிரம் இந்த உணர்வுகள் அழிந்து, மிருகம் வெளிவருகிறது என்று பாருங்கள். எத்தனை சீக்கிரமாக மனிதனைக் கட்டவிழ்த்துவிட்டுவிட முடிகிறது! ஆகவேதான் கலைஞன் மீண்டும் மீண்டும் அறம், கருணை, அன்பு என்று கூறிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது”

அந்த வகையில் அவரது மிக முக்கியமான படங்களில் ஒன்று கண்மதம்’.இது கதை திரைக்கதை எழுதி அவரே இயக்கிய திரைப்படமாகும்.

கண்மதம் என்பதற்கு வாக்குறுதி என்பது அர்த்தமாகும். 

மும்பை மாநகரத்தில் டாக்ஸி டிரைவர்களான விஸ்வநாதனும் (மோகன்லால்), ஜானியும் (லால்) நண்பர்கள். ஜானி தனக்கு அறிமுகமாகும் அப்பாவிப்  பெண்களை பாலியல் தொழில் செய்யும் விடுதிகளில் விற்கிற குணமுடையவன். 

விஸ்வநாதனுக்கு பம்பாய் வாழ்க்கை ஒருகட்டத்தில் சோர்வடையச் செய்கிறது. சொந்த ஊரான கேரளத்திற்குச் சென்று ஏதேனும் ஒரு வேலை செய்து பிழைத்து தங்களுக்கென ஒரு குடும்பம், மனைவி, குழந்தை என எளிய வாழ்க்கை வாழ வேண்டும் என்ற தனது ஆசையை ஜானியிடம் சொல்கிறான்.  

 அதற்கு மறுப்பு தெரிவிக்கும் ஜானி, சொந்த ஊரில் போய் எதுவும் செய்ய இயலாது.. மும்பை தான் நம்மை வளர்த்தது எனவே மும்பையில் இருப்பதே நமக்கு சரி…” என்று விஸ்வநாதனின் யோசனையை மறுக்கிறான். 

இருவரும் டாக்ஸியில் போய்க்கொண்டே பேசிக்கொண்டே இருக்கும்போது, காரின் மீது வந்து விழும் மனிதன் ஒருவன் தன்னை போலீஸ் துரத்துவதாகச் சொல்லி விஸ்வநாதனிடம் கத்தியைக் காட்டி வேகமாக போகச் சொல்ல, அவனது கத்தியைப் பிடுங்கிய ஜானி அவனைத் தாக்க, அதே இடத்தில் அந்த மனிதன் இறந்து போகிறான். 

இறந்த மனிதனின் பை எதேச்சையாக விஸ்வநாதனின் காரில் இருந்துவிட,  அதைக்கண்டு விஸ்வநாதன் பதற்றம் அடைந்தவனாக வீட்டிற்குச் செல்கிறான். 

அந்தப் பையில் இறந்த மனிதனின் பெயர் தமோதரன்  என்றும் அவனது குடும்பத்திற்கு ஏகப்பட்ட கடன், கஷ்டங்கள் இருப்பதும் அவனை நம்பி அவனது பாட்டி தாத்தா மற்றும் மூன்று தங்கைகள் காத்திருப்பதும் அந்தப் பையிலிருக்கும் கடிதத்தின் மூலம் விஸ்வநாதன் அறிந்து கொள்கிறான். 

ஏதோ ஒரு வகையில் தாமோதரனின் மரணம் தன் கண்முன்னே நிகழ்ந்ததாலேயும், குடும்பமே இல்லாத தான் ஒரு குடும்பத்திற்கு ஏதோ ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டும் என்ற உந்துதல் காரணமாகவும் கேரளத்துக்குப் புறப்படுகிறான் விஸ்வநாதன். 

தாமோதரனின் முதல் தங்கை சுமி கணவனுடன் வாழாமல் புகுந்த வீட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டு கைக்குழந்தையோடு வீட்டில் இருக்கிறாள்.. தாமோதரன் எப்போது வருவான் என்று வழியையே பார்த்துக் கொண்டிருக்கும் அவனது பாட்டி தாமோதரனின் நினைவாகவே அவன் பெயரை முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாள்.. தாத்தாவுடன் சேர்ந்து தான் நடத்தி வரும் கொல்லப் பட்டறையில் இரும்பு அடித்து பிழைப்பு நடத்தும் இரண்டாவது தங்கை பானுமதி (மஞ்சு வாரியர்)  அந்தக் குடும்பத்தின் ஆதாரமாக இருக்கிறாள். பள்ளி மாணவியான சிறிய தங்கை ராஜி அக்காவின் கட்டுப்பாட்டில் படித்துக் கொண்டிருக்கிறாள்.

ஏற்கனவே அண்ணன் தங்களது குடும்பத்தை இந்த நிலைக்கு ஆளாக்கிப் போனதால் ஒற்றை ஆளாக குடும்பத்தைத் தாங்கிவரும் பானுமதி அண்ணன் மீது கோபத்துடன் இருக்க.. அண்ணனின் நண்பன் என்று சொல்லிக்கொண்டு உதவி செய்ய வரும் விஸ்வநாதனை மறுக்கிறாள் பானுமதி.  குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் விஸ்வநாதனை ஏற்றுக்கொண்டாலும் பானுமதி ஏற்க மறுக்கிறாள். இந்த உதவிகள் அனைத்தையும் தாமோதரன் சொல்லியே தான் செய்ய வந்திருப்பதாக விஸ்வநாதன் எடுத்துரைக்கிறான்.  இருவருக்குமான குணாதிசய முரண் அடுத்தடுத்த காட்சிகளை சுவாரசியம் ஆக்குகிறது. 

இந்நிலையில் விஸ்வநாதனைத் தேடி பம்பாய் நண்பன் ஜானி அந்த ஊருக்குள் நுழைகிறான்.  ஒரு பெண் இருந்தாலே அப்பெண்ணை எப்படியாவது விடுதியில் விற்றுவிடத் துடிக்கும் ஜானிக்கு இப்போது மூன்று பெண்கள் ஒரு குடும்பத்தில் இருப்பதும் அவர்களுக்கு ஆண் துணையற்று இருப்பதும் வசதியாகப்போய்விட ஜானி தாமோதரன் வீட்டுப் பெண்கள் மீது கண்ணாக இருக்கிறான்.  விஸ்வநாதனுக்கும் ஜானிக்கும் இடையே பகை முரண் ஏற்படுகிறது.

ஒரு பக்கம் தன் நண்பன் ஜானி, இன்னொரு பக்கம் உள்ளூர் ரவுடிகள், தன் உதவி மனப்பான்மையைப்  புரிந்துகொள்ளாத பானுமதி என எல்லோர் மத்தியிலும் இருந்து விஸ்வநாதன் அந்தக் குடும்பத்தை எப்படி காக்கிறான், பானுமதி அவனை எந்த வகையில் புரிந்து கொள்கிறாள் என்பதே படத்தின் மீதிக்கதை.

 

சுவாரசியமான காட்சிகளுக்குப் பின்னணியில் இருக்கும் கதாபாத்திரங்களின் பிரத்தியேக குணாதிசயங்களும்,  அவர்களுக்கிடையேயான அழுத்தமான மனத் தடைகளும், தர்க்கங்களும் கதாபாத்திரங்களை வலுவாக்குவதோடு காட்சிகளையும் மிக அழுத்தமானதாக ஆக்குகிறது.  அதனாலேயே இந்தப் படத்தின் திரைக்கதையில் ஒவ்வொரு காட்சியிலும் கதை தொய்வின்றி நகர்ந்துகொண்டே இருக்கிறது. குணாதிசய அடிப்படையிலான காட்சி நகர்வு மற்றும் நிகழ்வு மாற்றங்களினால் ஆகும் நகர்வு என இருவகை நகர்வுகள் திரைக்கதையை சலிப்பின்றி நகர்த்திக்கொண்டே இருக்கின்றன.

பிரதான கதாபாத்திரம் ஒரு முடிவெடுத்து அந்த முடிவு சரிதான் என்பதை உணர்த்துவதற்காக மற்ற கதாபாத்திரங்களிடம் எதிர்கொள்ளும் மனத்தத்தளிப்பு, அதை நோக்கிய மனவோட்டம், பின் இந்த முடிவின் மூலம் பிரதான கதாபாத்திரத்துக்குள்  ஏற்படும் மனமாற்றம் என பிரதான கதாபாத்திரத்தின் பயணம் மிகத்தெளிவாக எழுதப் பட்டிருப்பதால் இந்தக் கதையில்  மோகன்லால் போன்ற ஒரு தேர்ந்த நடிகரும் இணைய   விஸ்வநாதன் கதாபாத்திரம் நம்மால் மறக்க முடியாத கதாபாத்திரமாக அமைகிறது.  அத்துடன் கொல்லன் பட்டறையில் இருக்கும் பானுமதி ஆண்கள் அற்ற தன் வீட்டிற்கு தானே ஒரு காவல் நாயாக இருப்பதாக விஸ்வநாதனிடம் ஒரிடத்தில் சொல்கிறாள், அவளது மனம் இரும்பாலானது என்பதற்கு அவளது அறிமுகக் காட்சியில் தங்கையிடம் வாலாட்டும் ஒரு வாலிபனை மிரட்டும் விதத்திலேயே வெளிப்படுத்தி விடுவார் லோகி. இந்தப்படத்தில் பானுமதி கதாபாத்திரமாக வாழ்ந்த மஞ்சுவாரியாருக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது  கிடைத்தது. 

அழுத்தமான கதைக்களம்,வலுவான கதாபாத்திரங்கள்..அவர்தம்  மனங்களின் நுண் உணர்வுகளில் ஏற்படும் சலனம், அதைக் காட்சி வழியாக நம்பகத்தன்மையோடு நகர்த்துவதற்கான அழுத்தமான திரைக்கதை  இவையே மலையாளப் படங்கள் அட்டகாசமான  தரத்தோடு வருவதற்குக் காரணமாக இருக்கிறது.  கண்மதம்’ சினிமா ரசிகர்கள் தவறவிடக் கூடாத திரைப்படம்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button