ஒரு வழிப்பாதை
எதிர்வரும் என்னைப் பார்த்து
முகம் திருப்பிக் கொண்டாய்
கம்பளிப் புழுவைக் காலால்
நசுக்கியது போல
காலடியில் துடித்தடங்கும் மனசு
•
பொறுக்குத் தட்டிய புண்ணில்
கை நகம் பட்டதும்
பொங்கிவரும் குருதியாய்
மேலெழும் நினைவுகள்
•
வாஷ்பேஷினில்
வடியாது வழியடைக்கும்
வாந்தியைப் போல
அழியாது நின்று போனதுன்
உதாசீனங்கள்
•
பின்தொடரும் முகம் பிடிக்காமல்
நீ எறிந்த விஷம் தடவிய
அம்புகளால்
தெரு நாய்களிடம் கடிபடும்
வீட்டுநாயாய்
கடித்துக் குதறப்பட்டு
ஓலமிட்டு அலறியபடி
அங்குமிங்கும் ஓடியதென் மனசு
•
நின்முகம் காணாத நாட்களெல்லாம்
கல்யாண வீட்டில்
எச்சிலைக்குக் காத்திருக்கும்
பிச்சைக்காரன்
வெறும் வயிற்றோடு திரும்பும்
தினங்கள்