கட்டுக் கதையை நம்பாதீர்
புலியின் வாலைத் தூரிகையாக்கி
பட்டாம் பூச்சி வண்ணம் தொட்டு
ஒட்டகச் சிவிங்கி முதுகில் ஏறி
வானவில்லை வரைந்திடுவேன்.
யானை வயிறுதான் கரும்பலகை
எழுதி எழுதிப் பழகிடுவேன்.
எழுதிய எழுத்தைக் கலைப்பதற்குத்
துளைக்கை கொண்டு நீர்தெளிப்பேன்.
குதிரை மீது வரியைப் போட்டு
வரிக்குதிரை யாக மாற்றிடுவேன்.
மானின் மீது புள்ளிகள் வைத்துப்
புள்ளி மானாய் ஆக்கிடுவேன்.
கொக்கு வண்ணம் தொட்டெடுத்துக்
கரடி உடலில் பூசிடுவேன்.
கரடி இப்போது பனிக்கரடி
கண்டு நானும் மகிழ்ந்திடுவேன்.
சாரைப் பாம்பின் உடலின் மீது
கட்டம் போட்டு விட்டிடுவேன்
கட்டு விரியன் என்றிடுவேன்
கட்டுக் கதையை நம்பாதீர்.
—
விரும்பு கரும்பு
கால் முளைத்த இருட்டாகக்
கதவிடுக்கில் எலிகள் – அவை
நாள் முழுதும் திருடுவதில்
நள்ளிரவில் புலிகள்.
இரவுவந்தால் விழித்துக் கொண்டு
இங்குமங்கும் தாவும் – தம்
உறவுகொண்ட எலிகளோடு
“கீச்கீச்” என்று கூவும்.
மறைத்து வைத்தப் பொருளை எல்லாம்
வேவு பார்த்துத் திருடும் – நாம்
உறங்குகின்ற போதில் வந்து
கால்களையும் வருடும்.
விளக்கைப் போட்டால் விரைந்தோடிச்
சந்துபொந்தில் பதுங்கும் – அறிவு
விளக்கை ஏற்றி வைத்தாலிங்கே
அறியாமை ஒதுங்கும்.
திருடி வாழும் வாழ்க்கை எதற்கு?
திருந்தி வாழ விரும்பு – மனம்
திருந்தி விட்டால் வாழ்வில் சுவைக்க
நிறைய உண்டு கரும்பு.