கவிதைகள்

கவிதை-தமிழ் உதயா

உயிர் தீண்டும் ரகசியங்கள்

 

மண்படை வெடிக்க வெடிக்க

தீண்டும் உள்ளங்கால்களில்

மூச்சுவிடும் ஓசை கேட்கிறது

 

என் பனைமரத்தீவு

இருள் சூழினும் இன்னும் அழகாயிருக்கிறது

கார்த்திகை மொட்டலர்த்தி

விரியத்தொடங்குகிறது

 

நீலக்கடல் தாழ தலையோடுகளில்

மூளைச்சிதைவன்றி செக்கச்சிவந்து

உயிர்க்கனலில் மிதிக்கிறது

 

மார்புக்கூட்டுச்சீசாக்களில் இரத்தப்படிவு

இதயங்கள் குபுகுபு என

தெறிக்கின்றன

 

கிளறக் கிளற சின்னஞ்சிறு சுட்டுவிரல்கள்

ஈரம் காயாத விழிவெண்படலங்கள்

கணகணக்கும் காதுமடல்கள்

தோட்டாக்கள்

ரவைக்கூடுகள்

கந்தகக்குடுவைகள்

இன்னும் இன்னும்

சந்தனக்காடுகள் புகைக்கின்றன

 

சங்கர் துடித்தான்

மில்லர் வெடித்தான்

திலீபன் உயிர்த்தான்

துர்க்கா பொசிந்தாள்

சோதியா நசிந்தாள்

மேனி மிளிரும் படியாக

காந்தள்கள் மஞ்சள் தளிர்க்கின்றன

 

ஆலங்குளம் நடுங்க

ஆட்காட்டிவெளி புலர்கிறது

சாட்டியும்  விஸ்வமடுவும்

நிழலோடு படர்கிறது

கனகபுரமும் கோப்பாயும்

தீருவிலை முத்தமிடுகிறது

 

வாகரையில் பிறந்தவன்

அக்கரையானில் முளைத்தான்

ஈச்சிலம்பற்றில் பூத்தவள்

கோடாலிக்கல்லில் கனிந்தாள்

 

பருத்தித்துறையில் புகுந்து திருக்கோயிலில் மடிந்தோம்

நந்திக்கடலில் புதைந்து

காலிமுகத்திடலில் மிதந்தோம்

 

சங்கர் துடித்தான்

மில்லர் வெடித்தான்

திலீபன் உயிர்த்தான்

துர்க்கா பொசிந்தாள்

சோதியா நசிந்தாள்

மேனி மிளிரும் படியாக

காந்தள்கள் மஞ்சள் தளிர்க்கின்றன

 

பார்வையாளர்கள்

ஆணிகளை அடித்தார்கள்

கத்திகளால் தீட்டப்பட்டோம்

வன்மத்தின் உச்சியில்

உலகக் கண்காட்சிப்பெட்டகத்துள் காட்சிப் பொருள்களானோம்

 

சர்வதேசம் சதுரங்கக் காய்களை நகர்த்தி வெட்டியது

சவப்பெட்டிளும் சிரித்தன

அழுக்கேறி அழுக்கேறி

அகிம்சைகள் தோற்றன

 

மனிதம் இழந்து

உயிர்ப்பலிகள் மகத்துவமானது

தமிழின் கண்களை

அழுகை பீடித்திருக்கிறது

கடல் அனாதையானது

சாவுகளால் மூண்டோம்

சதைத்துண்டங்களாய் தாண்டோம்

 

இவை ரகசியங்கள் இல்லை

புதைக்கப் புதைக்க

விளையும் நீதியின் மூச்சு

சிதையச்சிதைய இழந்த

உரிமையின் கனவு

 

தலைவெட்டி  கிராமத்திற்கு போனோம்

தலையோடு மீள வரமாட்டோம்

என்று தெரிகிறது

 

ஆம்

எங்கள் தலைகள் கொய்யப்பட்டன

எங்கள் தாகம் கொய்யப்பட்டது

எங்கள் உலகம் அச்சமூட்டுகிறது

எங்கள் மரணம் மர்மமாகிறது

 

இரகசியங்களல்லாத

இந்த இரகசியங்களை

என் குழந்தைகளுக்கேனும்

சொல்லி விட வேண்டும்.

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button