![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/08/ra.sivakumar.jpg)
கேள்வி அடையும் ஞானம்
ஒரு கேள்வியோடு
அது தேடும் பதில் ஊருக்குப்
பயணப்படுகிறேன்.
அப்பதில் ஊரின் பாதை
அவ்வளவு எளிதாய்க் கிடைக்கவில்லை.
எதிர்ப்படும் யாவர் தரும்
வழிகளின் வரைபடத்திலும்
சமாதானம் அடையவில்லை.
அனுமானத்தோடு ஆறேழு
ஊர்களின் வழியே கடந்தாயிற்று
பின்னொரு நாளில்
தான் தேடிய பதில் ஊருக்கு வந்ததும்
புத்தனாகிப் புன்னகைக்கிறது அக்கேள்வி.
மீண்டும் முளைக்கும்
சில கேள்விகள்
முகவரிகள் ஏதுமின்றி இன்னும்
பதில் ஊரைத் தேடிக் கொண்டேயிருக்கின்றன
உங்களுள் உறைந்துகிடக்கும்
ஆயிரம் கேள்விகளைப் போல்.
இப்போது புத்தன்
எங்கோ புன்னகைக்கக் கூடும்.
*********
சுழலும் வாழ்வில்
சுருங்கிய இரைப்பையை நிரப்பிட
தூரதேசத்துப் பயணத்தில்
ஒரு ரயில் பெட்டிக்குள் அடைபட்டுச்
சுழலாத மின் விசிறியை வெறித்தபடி
நிலைகுத்திப் பார்க்கின்றன கண்கள்.
பாக்கெட்டில் நிரப்பிய
தேயிலைத்தூள்
பாலில் இறங்கித் தேநீராதல் போல்
பிரியங்களின் எதிர்பார்ப்புகளை
நிரப்பிக் கொள்கிறது மனது.
பசிவேளையில்
உணவுப்பொட்டலத்தைச் சுற்றிய
நூலின் சிக்குகளை அவிழ்க்கத்
திணறுவதுபோல்
காலம் கட்டிய சிக்குகளை
அவிழ்க்க முற்படுகின்றன கைகள்.
இருந்தும் ஆதிப்புள்ளியின்
முடிச்சுக்களைப் பற்றிச் சொல்லாது
காலம் நகர்த்திக் கொண்டேயிருக்கிறது
வாழ்வென்னும் ரயிலை
பிழைப்பை நோக்கித்
“தடக்தடக்” என.
*********
காத்திருப்பின் கண்களில் அகப்படும்
எனது கணங்களை அதனிடம்
ஒப்படைத்தலின் பொருட்டு
மணித்துளிகளைச்
சிறுகச் சிறுக நகர்த்துகிறேன்
சிற்றெரும்பொன்று
இறந்த கரப்பான்பூச்சியொன்றின்
உடலை நகர்த்துதல்போல்.
சுவரில் மாட்டிக்கிடக்கும்
கடிகார முட்கள்
கால ஓட்டத்திலின்றி இடறி
ஊர்ந்துகொண்டிருக்கின்றன.
யாரோவின் கட்டளை வளையங்களுக்குள்
சிலந்தியென ஊர்ந்துபோகையில்
விரல்களை இறுகப்பற்றும் குழந்தையென
கவிதையொன்றைப்
பற்றிக்கொண்டன கரங்கள்.
*********
அருமை அன்றிலன் எளிய படிமங்கள் வலிய கருத்துக்கள் ஆழமான உணர்வுகள் ????????