அததுஅததுவாக
இதிது இதிதுவாக
இருந்தன
பின்
அதிதுவாகவும்
இததுவாகவும்
இருக்கலாயின
மீண்டும் மாறின
இப்போது
அததுஅததுவாகவும்
இதிது இதிதுவாகவும்
இருக்கின்றன.
என் இனமானாலும்
எனக்கு எவரும்
எதிரிகள் தான் .
ஆடென்ன மாடென்ன
கோழியென்ன குயிலென்ன
மானென்ன மனிதனென்ன
யார் என் கண்ணில்
பட்டாலும்
குறைப்பேன்
கடிப்பேன்
நல்லவரா கெட்டவரா
பாரபட்சம் இல்லை
என்னிடம்
என்னை
நாளெல்லாம் கட்டி வைத்து
எச்சில் இலை
பரிசளிக்கும்
எஜமான் ஒருவனே
எனக்கு வாய்த்த
நண்பன்.
காகத்தின் மரணம்
அழைப்பு வந்தது காற்றில் .
வானைச் சொந்தமாக்கிய
உறவுகளில் குரல்
மரங்களின் கிளைகளிலிலெல்லாம்
கருப்பு இலைகள்
வான்வெளியை நிரப்பின
கருப்பு இறகுகள்
கரைந்திடும் கருங்குரல்களால்
கல்லும் கரைவது போலிருந்தது
அப்போது
பட்டாசை கொழுத்தி வீசினான்
திறந்த வாசலின் இருளில் நிற்கும்
ஒற்றை மனிதன் .
*******
இப்போது நீ பார்க்கும் இது
இது மட்டுமே தான் நான்.
ஆம் !
இவ்வளவே நான் .
இது போதாது தான்
எனக்குத் தெரியும்.
குறைந்தது நீ
பார்க்கும் வகையில்
உயிருடனாவது இருக்கிறேன்
இது போதாதா ?
முன்பு ஒரு காலத்தில் தன் வீடு
எவ்வளவு அழகாக இருத்ததெனக் காட்ட
ஒரு செங்கல்லை பொறுக்கியெடுத்துக் காட்டும்
ஒரு மனிதனைப் போல நான் .