எதிரொலி
கனவுலக கடவுளுக்கு நன்றி
பூமியில் நான்
இளைப்பாற முடிவதில்லை
நினைவுச் சங்கிலி
இல்லையென்றால் புவிவாழ்க்கையும்
கனவு போலத்தான்
விழித்ததும் கனவென்று
தெரிந்தவுடன் இன்னும்
கொஞ்ச நேரம்
வாழ்ந்திருக்கலாமே என்று
தோன்றுகிறது
கனவுக்கடலிருந்து அன்றாடம்
ரதிகள் எழுந்து வருகிறார்கள்
கனவுக்கும் நனவுக்கும்
இடையே ஞாபகநதி
ஓடிக்கொண்டிக்கிறது
கனவுகள் சிறகுகள்
கொடுக்கவில்லையென்றால்
வாழ்க்கை நரகமாகத்தான்
இருக்கும்
மாயை உங்களை
சிறைப்படுத்துகிறது
கனவோ உங்களுக்கு
தீப்பந்தம் தருகிறது
அனுமனைப் போல்
லங்கையை எரித்துவிட்டு
தப்பித்துக் கொள்வதற்கு!
*********
நீங்கள் கண்டதுண்டா?
ஓவியத்தில் காடு பற்றி
எரிந்து கொண்டிருந்தது
வனத்தின் இதயப்பகுதி
என்பதால் யாராலும்
அதைக் கண்டுகொள்ள முடியாது
கோடை காலம்
மழை பெய்வதற்கான
வாய்ப்பில்லை
காய்ந்த சருகுகளும், சுள்ளிகளும்
எளிதில் தீப்பற்றிக் கொண்டன
அரசமரத்தில் குருவிக்கூடு
தீஜூவாலைகள் அதை
கொஞ்சம் கொஞ்சமாக
நெருங்கிக் கொண்டிருந்தன
கண்முன்னே நடப்பதைப் பார்த்து
செயலற்று நின்றிருந்தேன் நான்
பக்கத்து ஓவியத்தில்
வலைவிரித்து கொண்டிருந்த
செம்படவன் வெளியே குதித்து
ஓடிவந்து காடு பற்றி எரியும்
ஓவியத்துக்குள் புகுந்தான்
அவனை சாம்பலாக்கிய தீக்காடு
குருவிகளை தப்பிக்கவிட்டது
அந்த ஓவியத்தை நான்தான்
கடைசியாகப் பார்த்தேன்
இனி வருபவர்கள்
ஒவ்வொருவரிடமும்
அந்த செம்படவன்
செத்துட்டானென
நான் எப்படிச் சொல்வது!
*********
சாயை
உங்கள் நிழலை
நீங்கள் பார்த்ததுண்டா
பகல் முழுவதும்
உங்களை கண்காணித்துவிட்டு
இரவில் எங்கே
செல்கிறது அது
மிதித்துவிட்டதற்காக நிழலிடம்
நாம் மன்னிப்பு
கேட்டிருக்கின்றோமா
உங்களது ரகசியம்
அனைத்தையும் நிழல்
அறிந்து இருக்கிறது
என்பதை நீங்கள்
அறிவீர்களா?
சிகப்பானவர்களுக்கு கூட
நிழல் கருப்பாகத்தானே விழுகிறது
இறந்த பிறகும் கூட
உன் நினைவுகளைச்
சுமந்தலைவது உன்
நிழலாகத்தான் இருக்கும்
நிழல்களை தொலைத்தவர்களைப்
பார்க்க நேர்ந்தால்
நீங்கள் ஆறுதல் கூறுங்கள்
மரணம் நிகழப்போவதற்கு
முதல்அறிகுறி
நிழல்கள் தொலைவதுதான்!
*********
மதியழகன் எழுதிய ‘எதிரொலி’ , ‘நீங்கள் கண்டதுண்டா’ மற்றும் ‘சாயை’ மூன்று கவிதைகளும் வடிவம், உள்ளடக்கம், படிவம், கற்பனைத்திறன் ஆகிய நான்கிலும் சிறந்து விளங்குகின்றன. மூன்றிலும் கண்டதுண்டா கவிதை உலகப்புகழ் பெறவேண்டிய தாகும். கவிஞருக்கு வாழ்த்துக்கள்! – இராய செல்லப்பா சென்னை