
‘குணசேகரன் இன்னிக்கு பென்சன் கொண்டு வருவான்’ தாத்தா காலையில் இருந்து இரண்டு மூன்று தடவை சொல்லிவிட்டார். சொல்லும் பொழுதெல்லாம் பார்வை வாசற்படியில் இருந்தது.தலையில் தேய்த்திருந்த எண்ணெய் நெற்றியில் லேசாக பளபளத்துக் கொண்டிருந்தது. வேர்வையும் எண்ணெயும் சேர்ந்து கோர்த்து ஒரு கோடு இடது பக்க நெற்றியில் இருந்து கன்னத்து பக்கவாட்டிற்கு இறங்கிக் கொண்டிருந்தது.
குணசேகரன், தாத்தாவிற்கு பதினைந்து வருடமாக ஓய்வூதியம் எடுத்து வந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். தாத்தா வேலை பார்த்த கல்லூரியில் அலுவலகப் பணியில் இருந்தவர். தாத்தா ஓய்வு பெறுவதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னால் வேலையில் சேர்ந்தவர். இந்த உதவியை தாத்தா கேட்காமலேயே செய்து கொண்டிருக்கிறார். அவர் வந்துவிட்டால், இரண்டு பேருமாக, வெளி படுப்பறையில் போட்டிருக்கும் கயிற்றுக் கட்டிலில் போய் உட்கார்ந்து கொள்வார்கள். மணிக்கணக்காக பேச்சு நீளும். மாதந்தோறும் வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தவறாமல் வந்துவிடுவார். ஆச்சி இருந்த பொழுது ‘பேசிட்டடே இருக்கிய, நா வரளப் போகுது’ சொல்லிக் கொண்டே இரண்டு பேருக்கும் காப்பி கொண்டு நீட்டுவாள்.
‘தாத்தாக்கு காசு வருதுன்னு ஒரே குஷிதான் போங்க’ சொல்லிவிட்டு, சிரித்துக்கொண்டே தாத்தாவை திரும்பிப் பார்க்காமல் பின்கட்டுக்குப் போனேன்.
‘ஆமா, காசு பெரிய காசு. அதுலாம் வேற’
‘என்ன….’
‘பெரியவங்க கிட்ட பதிலுக்கு பதில் பேசிகிட்டு’ அம்மா முழங்கையில் ஒரு அடி போட்டாள்.
*******
நேரமிருந்தா ஒரு எட்டு வந்திட்டுப் போக முடியுமா என்று தாத்தா முடித்திருந்த கடிதத்தை படித்துவிட்டு நேற்றைக்கு முந்தைய நாள் இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு வந்திருந்தோம்.
தாத்தா பொதுவாக நீளமான கடிதங்களை எழுதுவது கிடையாது. மொத்த கடிதமும் ஐந்தாறு வரிகளுக்குள் முடிந்துவிடும். கடிதத்தை முடிக்க தாத்தா இரண்டு வரிகள் வைத்திருப்பார். அதை மாற்றி மாற்றி பிரயோகப்படுத்துவார்.
‘பிள்ளைகளுக்கு தேக பலத்தையும் மனபலத்தையும் எப்பவும் கொடுக்கணும்னு ஈஸ்வரன வேண்டிக் கொள்கிறேன்’
‘நேரமிருந்த ஒரு எட்டு வந்திட்டு போக முடியுமா’ வேறு எப்படியும் தாத்தாவின் கடிதம் முடிந்ததே கிடையாது. தாத்தா இப்படி முடித்திருந்தால், அவர் அதிகமாக தனிமையை உணர்கிறார் என்பதை அப்பா புரிந்து கொள்வார்.
ஆச்சி இறந்து போன பிறகு தாத்தாவை எங்களோடு வந்துவிடச் சொல்லி அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ கூப்பிட்டும் தாத்தா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
‘என் அப்பன் பாட்டன் கட்டை விழுந்த திண்ணையிலதான் என் கட்டையும் விழனும்’ என்றார்..
அம்மா இரண்டு மூன்று நாள்கள் இடைவெளி விட்டு திரும்பவும் பேசிப் பார்த்தாள். அப்பொழுதும் தாத்தா அடித்துப் பேசி விட்டார். காரியம் பலிக்கவில்லை.
தாத்தாவின் முடிவில் மாற்றமில்லை என்று தெரிந்ததால் ஆச்சியின் பதினாறு அடியந்திரம் முடித்து கிளம்புவதற்கு முன்பாக, தாத்தாவிற்கு காலையில் பால் வாங்கி காப்பி போட்டுக் கொடுப்பதிலிருந்து மூன்று வேளை சாப்பாடும் செய்து கொடுத்து, தேவைப்படும் வேறு உதவிகளையும் செய்து கொடுக்கத் தோதாக இன்னாரை நியமித்து விட்டால் சரியாக இருக்குமென்று அம்மா அப்பாவிடம் யோசனை சொன்னாள்.
‘ஆம்பிளயாள சமையலுக்கு வச்சா சரிபட்டு வருமா…?’ அப்பாவின் குரல் தாழ்ந்து இழுத்தது.
‘அதுலாம் சரியா வருங்க. அவரு வயசுல கல்யாண வீட்டுக்கு சமையல் வேலைக்குப் போய்கிட்டு இருந்த ஆளுதான. கேட்டு பாக்கலாமே’
அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருந்தது திண்ணையில் இருந்த தாத்தாவிற்கு கேட்டிருக்க வேண்டும்.
‘பொம்பள சமையல் ஒரு ருசியும் மணமும்ன்னா, ஆம்பிள சமையல் வேறொரு ருசியும் மணமும்’ தாத்தா தனக்குத்தானே சொல்வது போல் சொல்லிக் கொண்டார்.
******
வாசல் கதவை யாரோ தட்டினார்கள்
‘குணசேகரனா இருக்கும்’ சாய்வு நாற்காலியின் இருபக்க சட்டத்தையும் அழுத்திப் பிடித்து தாத்தா மெல்ல எழுந்தார்.
நான் அவருக்கு முன்னால் குதித்து ஓடினேன். கதவைத் திறந்த பொழுது கவிதா அத்தையும் லெட்சுமண மாமாவும் நின்று கொண்டிருந்தார்கள்.
‘வாங்கத்தை வாங்க’ நான் பின்பக்கமாக இரண்டு எட்டு வைத்தபடி நாடியை உள் இழுத்த வாக்கில் தலையசைத்துக் கூப்பிட்டு விட்டு, திரும்பி அவர்களுக்கு முன்னால் திண்ணைக்கு நடந்தேன்.
பாதி எழுந்திருந்த தாத்தா கைகளை ஊன்றியபடி மறுபடியும் நாற்காலியில் மெல்ல அமர்ந்தார்.
‘வாடே லெட்சுமணா’
மாமா சிரித்தபடி தலையாட்டிக் கொண்டே செருப்பை முற்றத்து சுவர் ஓரமாக கழற்றி விட்டுக் கொண்டிருந்தார்.
அம்மா முழங்கையை முந்தானையில் துடைத்தபடி அடுக்களையில் இருந்து வந்தாள்.அம்மா முந்தானையை இடுப்பில் சொருகிக் கொள்ளவும் அவர்கள் திண்ணைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
‘இரிங்க’ அம்மா பிளாஸ்டிக் நாற்காலியை ஒரு அடி முன்னால் இழுத்துப் போட்டாள்.
‘எப்படி இருக்கீங்க மாமா?’ லெட்சுமண மாமா தாத்தாவை பார்த்து கேட்டபடி நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.
‘சுகமா இருக்கேன்டே. பிள்ளைகள் எல்லாம் சுகமா இருக்கா?’
‘எல்லாரும் சுகந்தான்’
‘நல்லா இருக்கீங்களா மதினி. எப்ப வந்தீங்க?’ கவிதா அத்தை, அம்மாவிடம் கேட்டாள்.
‘நேத்து காலையில வந்தோம்’ மாமா அத்தை இரண்டு பேரையும் பொதுவாக பார்த்து அம்மா சொன்னாள்.
நான் அரங்கு நிலையைப் பிடித்தபடி நிலையோடு ஒட்டி நின்று கொண்டேன். .
‘அத்தானக் காணோம்?’ லெட்சுமணா மாமா கண்களை ஒரு சுற்றாக பரவ விட்டபடி கேட்டார்.
‘வயல ஒரு எட்டு பார்த்திட்டு வரப் போயிருக்காங்க. இப்படி வரும்பொழுது போய் பார்த்தாதான உண்டு’
‘ஆமா, நேரம் கிடைக்கும் பொழுது நம்மளும் ஒரு எட்டு பார்த்தாதான. குத்தகைகாரனை மட்டும் நம்பி விட்டுற முடியாதுல’ லெட்சுமண மாமா யார் முகத்தையும் பார்க்காமல் பொதுவாகச் சொன்னார்.
‘மூத்தவ சமஞ்சிருக்கா’ அத்தை சொல்லிக் கொண்டே மடியில் வைத்திருந்த கவருக்குள் கைவிட்டாள்.
பத்திரிக்கை மாமா கைக்கு இடம் மாறியது.
‘கண்டிப்பா வந்திரணும் மாமா’ லெட்சுமண மாமா தாத்தாவிடம் குனிந்து நீட்டினார்.
தாத்தா, மாமா முதுகில் தட்டிக் கொடுத்தார். மாமா, தாத்தா கையைப் பிடித்துக் கொண்டார். அறையில் அமைதி படர்ந்திருந்தது. முற்றத்தில் சாய்வாக விழுந்து கொண்டிருந்த கட்டமான வெயிலின் மேல் ஒரு அணில் வேகமாக ஓடி படுப்பறை கூரை ஓட்டிற்கு மேல் தாவி ஏறியது.
‘அத்தானும் நீங்களும் கட்டாயம் வந்திரணும்’ மாமா நிமிர்ந்து அம்மாவை பார்த்துச் சொன்னார்.
‘நீங்க தனியா சொல்லணுமா இதெல்லாம்’
‘நீயும் வந்திரணும்’ அத்தை என்னிடம் சொன்னாள்.
மாமாவும் அத்தையும் கண்களால் எதோ பேசிக் கொண்டார்கள். அத்தை நாற்காலியில் இருந்து மெல்ல எழுந்தாள்.
‘சரி. அப்ப புறப்படுறோம். இன்னும் நிறைய இடம் சொல்ல வேண்டியது கிடக்கு’
‘சரியாப் போச்சு. இவ்வளவு தூரம் வந்திட்டு ஒரு காபித் தண்ணி கூட குடிக்காம ஓடப் பாக்குதிய’ அம்மா அத்தையின் மணிக்கட்டை பிடித்துக் கொண்டாள்.
‘ரெண்டு நிமிஷம் இரு’ அத்தையை அம்மா நாற்தாலியில் அமர்த்தினாள்.
மாமா அத்தையின் முகத்தை பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்.
அம்மா விறுவிறுவென அடுக்களைக்குள் போய்விட்டாள். அத்தை ஜாடை காட்ட, மாமாவும் நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.
‘என்ன படிக்க இப்ப.கடைசியா உன் சடங்குல பார்த்தது.’ கவிதா அத்தை என்னிடம் கேட்டாள்.
‘டுவல்த்’
‘ஆங்….சடங்கோட ஆறாம் கிளாஸ் தான படிச்ச?’
நான் ‘ஆமாம்’ என்பது போல் தலையசைத்தேன்.
‘என்ன குரூப் எடுத்திருக்க?’ இது லெட்சுமண மாமா.
‘மேத்ஸ், பயாலஜி’
‘அவ நல்ல படமெல்லாம் வரைவால்ல. அதுனால பயாலஜி கஷ்டமில்ல’ அத்தை, மாமாவின் பக்கம் திரும்பி பார்த்து சொன்னாள்.
நான் வரைந்ததை அத்தை எப்பொழுது பார்த்திருக்கிறாள் என்று புரியாமல் விழித்தபடி நின்று கொண்டிருந்தேன்.
‘உனக்கு ஓர்ம இல்லையா? நாங்க கல்யாணம் ஆன புதுசில விருத்திக்கு வந்திருந்ததப்போ உன் டிராயிங் நோட்ட பாத்தோம்ல’ அத்தை சொன்னாள்.
எனக்கு அப்பவும் நியாபகம் வரவில்லை. அத்தை தொடர்ந்தாள்.
‘அப்ப ஒன்னோ ரெண்டோ படிச்சிட்டு இருந்திருப்ப. துத்தாதுவும் குளமும்ன்னு தலைப்பு போட்டு தவளை படமெல்லாம் வரஞ்சு வச்சிருந்தேலா’
எனக்கு இப்பொழுது ஞாபகம் வந்தது. சிறுவர்மலரில் வந்திருந்த ‘துத்தாதுவும் குளமும்’ கதையை நான் என் டிராயிங் நோட்டில் படம் வரைந்து கதை எழுதி வைத்திருந்தேன். முழு ஆண்டு பரீட்சை முடிந்து வரும் விடுமுறை நாட்களில், அப்பாவிடம் அடம் பிடித்து, படம் வரைய என்று கெட்டியான காகிதங்களால் ஆன நோட்டுகளை வாங்கி வரச் சொல்லி, பார்ப்பதை எல்லாம் வரைந்து கொண்டிருப்பேன். அது ஒரு காலம். அந்த நோட்டு இப்பொழுது எங்கே இருக்கும் என்று யோசித்தேன். தெரியவில்லை.
‘ஆங்..ஞாபகம் இருக்கு’ நான் தலையாட்டினேன்.
‘இப்ப ஞாபகம் வந்திட்டா…’ அத்தை சிரித்தாள்.
‘அன்னிக்கு பூரா, உங்க அத்தை அந்தப் படத்தை பத்தியேதான் பேசிட்டு இருந்தா. அந்த தவளை, வரஞ்ச தவள மாதிரியே இல்ல, உசுரோட குதிச்சு போறாப்ல இருந்திச்சின்னு சொல்லிட்டே இருந்தா’ மாமா சிரித்தபடியே சொன்னார்.
‘துத்தாதுவும் குளமும்’ வரைந்த பொழுது இருந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் இப்பொழுது வந்து ஒட்டிக் கொண்டது. துத்தாவிற்கு அன்று அடித்த பச்சை சாயம் விரல் துவக்கத்தில் பிசுபிசுத்தது. நாம் அனுபவித்ததை யாரோ பதிந்து வைத்து நம் கண்முன் கொண்டு நீட்டும் பொழுது கடந்து போயிருந்த அந்தப் பொழுது இந்த நொடியில் இன்னும் அழகாக முன் வந்து நிற்கிறது.
அம்மா ஒரு காப்பி டம்ளரை எடுத்து வந்து தாத்தாவிடம் நீட்டினாள்.
‘இப்ப படமெல்லாம் விட்டாச்சு. படிக்கவே நேரம் சரியா இருக்குலா.எல்லாத்தையும் எப்பவும் பிடிச்சிட்டே இருக்க முடியாதுல்லா’ அம்மா சொல்லிக்கொண்டே மீண்டும் அடுக்களைக்குள் போனாள்.
மாமா சுவரில் மாட்டியிருந்த ஒவ்வொரு கறுப்பு வெள்ளை புகைப்படத்திற்கும் கண்ணை நகர்த்திக் கொண்டிருந்தார். அவரின் பார்வை இப்பொழுது அம்மாவின் அரங்கேற்ற புகைபடத்தின் மேல் பதிந்திருந்தது. அம்மாவிற்கு பரதநாட்டியம் தெரியும் என்பதற்கு சான்றாக சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடைசி சாட்சி. அதில் அம்மாவின் பின்னல் அடர்த்தியாக இருக்கும். இப்பொழுது எல்லாம் உதிர்ந்து விட்டது. ஒவ்வொரு பருவமும் முன்செல்ல ஏதோ ஒன்றை உதிர்த்து கொண்டே நகர வேண்டி இருக்கிறது.
அம்மா இரண்டு காப்பி டம்ளரை எடுத்து வந்து அத்தைக்கும் மாமாவிற்கும் கொடுத்தாள்.
நான்கு பேரும் கொஞ்ச நேரம் பழைய கதைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.சில உரையாடல்களின் போது எல்லோர் முகமும் பிரகாசமாக இருந்தது. சில உரையாடல்களில் பிளாட்டாக மாற்றிய பழைய வயல் போல் வரண்டு கிடந்தது.ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை இழுத்து கொண்டுவந்து இன்னொருவருக்கு கைமாற்றி விட்டுக் கொண்டிருந்தார்கள்.
மாமாவையும் அத்தையையும் வழியனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்தபொழுது தூரத்தில் சைக்கிள் மணிச்சத்தம் கேட்டது.
‘இது குணசேகரன் சைக்கிள் மணிதான். எட்டிப் பாரு’ தாத்தா நாற்காலியில் இருந்து எழுந்து கொண்டார்.
நான் திரும்பி நடையில் ஏறி வெளியே எட்டிப் பார்த்தபொழுது தெருவின் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு ஒரு தவளை குதித்து குதித்து போனது.
‘துத்தாது’ எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
‘குணசேகரன் தான? ‘
தாத்தா சாய்வு நாற்காலி கைப்பிடியில் போட்டிருந்த கட்டம் போட்ட துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டார்.
‘ஆமா தாத்தா’ தூரத்தில் வருவது குணசேகரன் என்று தெரிந்தது. கவிதா அத்தை எனக்கு கொடுத்த துத்தாது போல குணசேகரன், தாத்தாவிற்காக எதைக் கொண்டு வருகிறாரோ தெரியவில்லை.
தாத்தா முற்றத்து தூணை பிடித்துக் கொண்டு கீழே இறங்கினார்.
******