![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/06/Na-periyasamay-780x405.jpg)
1. என் பெயர் சுர்ஜித்
*
கழிந்த தீபாவளியை
செய்தி சேனல்கள்
தன்வசம் வைத்துக்கொண்டன.
பட்டாசை வைப்பதும்
என்னாச்சியென எட்டிப் பார்ப்பதுமாய்
பிள்ளைகள்.
தலைவர்கள் செக்குமாடாக.
அதிகாரிகள் அறிவியல் தந்தையாகி இருந்தனர்.
பேதமற்று
தெய்வங்களையும் எழுப்பிக் கொண்டிருந்தனர்
கூட்டுப் பிரார்த்தனையில்.
தாய்பால் துர்நாற்றம்கொள்ள
காத்துக்கிடந்தாற் போலானது.
டிஜிட்டல் வடிவமைப்பில் சவப்பெட்டி வந்திறங்கியது.
தப்பிய சுர்ஜித்
உலகத்தாரின் மனங்களில் குடிகொண்டான்.
இனியென்ன
விளையாட தோண்டிய பல்லாங்குழிகளை
காண்கிரட்டில் மூட
காண்ராக்ட் பேரம்
திபாவளியாக ஜொலிக்கும்.
*
2. நினைவில் விழும் நட்சத்திரங்கள்
*
முகத்தில்
வாய் இருக்கவேண்டிய இடத்தில்
பூக்களை வைத்துக்கொண்டிருப்பவனிடம்
எப்படி கோபிப்பது?
அவனொரு
விற்பனை பிரதிநிதியாக இருக்க
மறுக்கத்தான் மனம் வருமா?
வாகனங்களை
பழுது நீக்குபவனாக இருக்க
காலதாமதத்திற்கு கடிந்துகொள்ள முடியுமா?
தாகத்தோடு வந்தடைவோருக்கு
மது ஆற்றை
கொண்டுவந்து சேர்ப்பிப்பவன் கொடுக்கும்
மீதியை வாங்கிக்கொள்ள முடியுமா?
நீளும் ஆறுவழிச் சாலையில்
அங்கொன்றும் இங்கொன்றுமாக
நிற்கும் மரங்களென நினைவில்
மனிதர்கள் பூத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.