![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/08/Nithya-sadhasivam.jpg)
ஆரோகணம்
தாண்டவம்
என்பது
என் மடலின் தீட்சண்யங்களை
நீ வெகு தொலைவிலிருந்து பேரன்பாலும் பெருங்கோபத்தாலும்
புணர்ந்து புணர்ந்து மலரவைப்பது…
நாணம் முகிழ்ந்த ஒப்பனைகளால்
மிக நெருங்கிக் குழையும்
உனது தாபங்களை
தலை கோதி
உச்சி முகர்வது
அன்பின் பூரணத்தால் மட்டுமே…
ஒலியின் ஒளிக்குள்
ஒளியின் ஒலிக்குள்
ஓங்கார வடிவமான
நின்னைப் பற்றி
எனதன்பால்
பூஜித்து
எனது லாவகங்களை
ஒவ்வொன்றாய்க் களைந்து
உன்னைச் சரணடைவது
நின்பால் கொண்ட
பேரன்பின் பித்தாலே…
**********
நீர் ததும்பும்
நீ ததும்பும்
பெருவனத்தின்
மோனப் பிரவாகத்தில்
மெதுவாய் சூல்கொண்ட
மழைக் கரங்களின் கதகதப்பில்
நாணம் உதிர
காதல் உலாவர
நீ உன் மையுணல் பெருக்குவது
என் வயதின் ஏகாந்தம்
களைக்கவா!!!
உனது வாசனையின் ஊற்றுக்குள்
சிறைபட்டுக்கிடக்கும்
எனது நாணத்தை
கொஞ்சம் விடுவி நறுமணா!
எனது மஞ்சளை கொஞ்சம் சரிசெய்து கொள்கிறேன்…
காதலின் அரவத்துள்
குலுங்கிக்கிடக்கும்
அத்தேகத்தின்
புணர்ச்சியுனுள்
காமமென
கூப்பாடிடும்
அவ்வற்புதத்திற்கு
இரவென்பதும் பகலென்பதும்
திமிர் இருக்கைகள்…
**********
உன் அருட்பெருங்கா(மத்தின்)தலின்
பேராற்றலுள்
கைகூப்பி நிற்கிறது
என் கா(தல்)மம்
என்னை ஆட்கொண்டு
முழுமை செய்
உன்னை.
**********
ஓர் மலரின் காந்தளுள் கொண்டாடப்படும்
மலருக்கான செளகர்யங்களை
மகரந்தங்கள் அறிந்துகொள்ளும்
அந்த இரகசிய ஸ்பரிஷங்களை
மலரால் மட்டுமே தீண்டப்படும்
மடல் தேகத்தை
மடலின் பாகங்களுள்
நீண்டு கிடக்கும் நிறைவெளியை
மலரின் சூழ் திமிருள்
பாவனை செய்யும் அவ்வண்ணத்தை
மடல்கள் ஒன்றோடொன்று
களிப்படையும்
அம்மென் ஊடலை
மலருக்காய் மடல் மீட்டும்
மடலுள் ஓர் துளி செய்யும்
அந்த அற்புதத்தை
காதல் என்கிறேன்
காதலின் நிறம் மஞ்சள் என்கிறேன்
நீங்கள்?
**********
கருத்தாழமிக்க வரிகள்…..
கவிஞர் காதலையும், காமத்தையும் இணைத்திருக்கிறார்…..ஒருவகையிலே உண்ைமை
கவிஞருக்கு வாழ்த்துகள்…..