![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/04/Poovithal-umesh.jpg)
1.காதலிகளை டம்ளராக மாற்றிக் குடிப்பவன்
திருவாளர் குடிகாரர்
குடிப்பதில் இருக்கும் அழகியல்
தேர்ந்தெடுக்கும் டம்ளரில் தொடங்குகிறது என்பார்,
தினமும் புதிய வகை டம்ளரைத் தேர்ந்தெடுப்பார்
அதிகமாக நேசிக்கும் விஸ்க்கியை
இளநீரில் ஊற்றிக் குடித்தார்
ஆப்பிளைத் தோண்டி ஊற்றிக் குடித்தார்
காதலியின் வாயில் ஊற்றி ஐஸ் க்யூப்கள் போட்டுக் குடித்தார்.
10 வது ரவுண்டில் அவள் தனியாக ஊற்றி குடிக்காமலே
போதையில் சரிந்தாள்
உறிஞ்சிய சூப்பெலும்பில் ஊற்றிக் குடித்தார்
ஒட்டகத்தின் நுரையீரலில் ஊற்றிக் குடித்தார்
வெட்டப்பட்ட மாட்டுக் கொம்பில் ஊற்றிக் குடித்தார்
அவருடைய அழகிய குதிரையின் காதில் ஊற்றிக் குடித்தார்
தினமும் குடிக்கும் டம்ளர்கள் நம் கற்பனைக்கு எட்டாததாக மாறின
8-வது காதலியை டம்ளராக்கி, விஸ்கியை ஊற்ற
குடிக்கும் முன்னே அவள் அலறியடித்து ஓடினாள்
டம்ளர் தேடலில் சலிக்காமல்
வீட்டின் வெளியில் இருந்த பழைய உரலில் ஊற்றி
உரலைத் தூக்கிக் குடித்தார்
பிறகு
எல்லோரும் அவரைத் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டியதாற்று
குடிப்பதில் இருக்கும் அழகியல்
குடிக்கத் தேர்ந்தெடுக்கும் டம்ளரில் தொடங்குகிறது என்பார்
திருவாளர் குடிகாரர்.
2. வளரும் ஏணி கனிகளைத் தரும்
ஏறுவதற்குஏணி தேவைப்படும் இடங்களில் எல்லாம்
நான் மரங்களை நட்டு வைத்தேன்
உயரம் இனிப்பான கனிகளைத் தந்தது.
இறங்குவதற்குக்
கயிறோ படிக்கட்டுகளோ தேவைப்படும் இடங்களில் எல்லாம்
நான் நீரை நிரம்ப வைத்தேன்
ஆழம் தாகத்தைத் தனித்தது .
3. என் இதயத்தின் நிழலில் எத்தனை துளைகள்
என் இதயத்தின் நிழலில் எத்தனை துளைகள் இருக்கின்றன தெரியுமா?
உன் வீட்டில் நுழையும்போது தரைவிரிப்பில் இருந்து எழுந்து நின்ற
ஒரு மஞ்சள் பூவைக் கொண்டு அதை மறைத்துக் கொண்டேன்
நான் நேராக நின்றதற்கு காரணமான
புவி ஈர்ப்பு விசையை கடவுள் போல நினைத்தேன்.
உன் அறையில் இருந்து
மகிழ்ச்சியால் செய்யப்பட்டது போலிருந்த நாய்க்குட்டி ஓடி வந்தது
அதன் நாக்கு தேய்ந்து போன லைஃபாய் சோப்பு மாதிரி இருந்தது
அதைத் தவிர உன் வீட்டின் இயங்கியல் வேறு எப்படியும் மாறவில்லை
வரவேற்பு அறையில் அமர்ந்த உடன்
சுவர் ஓவியத்தில் இருந்து இறங்கிவந்த குழந்தை என் மடியில் அமர்ந்தது
அதன்பிறகு வீடெங்கும் நிரம்பியிருந்த உன் வாசமும் வந்தது
நீ உன் அறையிலேயே இருந்தாய்
கொஞ்ச நேரத்திலேயே
ஐன்ஸ்டினின் பொது சார்பியல் தத்துவத்தின் ஒரு பகுதியை உணர்ந்தேன்
என் உடலுக்கு முன்பாகவே
அங்கிருந்து வெளியேறி நடக்கத் தொடங்கி இருந்தேன்
அத்யாவசிய பொருள் ஏற்றிச் செல்லும் ஒரு லாரியை
மலையிலிருந்து பார்த்தால் தெரிவது போல் இருந்தேன்
வானம் என்கிற சுவரில் பொழுதெல்லாம் நகரும் கதவை பார்த்தேன்
அந்தச் சூரியனைத் திறந்து காதலில் இருந்து வெளியேறினேன்
என் உடம்பில் இருக்கும் கற்பனையான சதை
மெல்ல ஒளிரத் தொடங்கியது மீண்டும் காதலின் நிறத்தில்.