1. திசை மாறிய பயணத்தில் இருந்து.
——————————–
பயமறிந்ததில்லை ஆனால் சோர்ந்திருந்தேன்.
வரவிருக்கும் மரணம் பற்றிய ஒருவித அயர்ச்சி
இருபது நாட்களை நெருங்குகின்றன கரையிலிருந்து கடல் வந்து
திருத்த இயலாத படி செயலிழந்த இயந்திரம். தொலைவறியா கடல் பரப்பு,
கீழ்க்காற்று கடக்கும் காலம், தொடற்புகளற்று ஆறு உயிர்கள்,
இது வாழ்வா?
இறந்த ஒருவனின் பிரேதத்துடன் ஒரு வாரம் படகில் தான்
துர்நாற்றமெடுத்ததும் நம்பிக்கையிழந்து ஒருவன் அஞ்சுகிறான்.
எதுவாயினும் சரியென சவத்தை கடலுக்குள் உட்தள்ளினோம்
பசி கொடிது.
உண்ண வேண்டியிராத தருணம் வரை நன்று.
ஒன்றை ஒன்று முந்தி நெருங்கும் ஆமைகளின் கழுத்தை துண்டித்து
ஒழுகும் ரத்தத்தை பருகி ஒடு நீக்கி அவித்து தின்று
அதுவொரு நெடு நேர செருக்கள உயிர் பிழைக்கும் வாதை
சமயங்களில் நெத்திலிகளை முழுமுற்றாக விழுங்கிவிடுவேன்
நமைச்சலில் ஓயாது போகும் சிறுநீரை சேமித்து பருகி கொண்டோம்
கடல் நீருக்கு பின்சுவையற்ற இது மேலானது.
கற்குடல் அச்சமடையும் படியாய் கப்பல்கள் மேல் தளத்தில் எவரும் புலப்படவுலில்லை
வெளிச்சம் காட்டி கோரிய உதவிக்கு மோதாது விலகிப் போ? என புரிகின்றார்கள்.
வயிற்றுக்கும் தொண்டைக்கும் இல்லாத பொழுதில் கடலில் மிதந்தோம்
இருபத்தி ஓராம் நாளில் தேடி வந்து மீட்டார்கள்
கரை திரும்ப மூன்று முழு நாட்களாகிற்று.
கரை திரும்பும் நாளில் வானிலிருந்து மழை நழுவி பொழிந்தது
என்னை அவசர ஊர்திக்குள் தினிக்கிறார்கள். முகத்தில் எதையோ மாட்டுகிறார்கள்
என்னைக் காப்பாற்றுங்கள்,,,,,,,,
2. சொரூபியின் வர்க்கங்கள்
———————-
உயிர் வாழ்வென்பதே கடலோடுதல்
கடற்காளான்கள் ஊர் புகும் அளவுக்கு அலைகள் உயரும்
மழைக்கால அந்தியில் இவ் வெறுவெளியே அதிரும் செய்தியில்
பாய்மர தாங்கியை போன்றிருப்பவள் ஒருக்களித்து விழுகிறாள்
நற்செய்தி வராத கடும்பத்தியம் பொய்த்த நொடியில்
கண்ணிகளில் தோற்கும் பறவைகளின் கடூரம் அவளுக்குள்
கடற்தெய்வம் பெருங்காற்றில் அவனை அள்ளி விழுங்கிய பின்
நாட்டார்கள் கூடி மேற்பூச்சோடு சொன்ன துக்கத்தில்
சீற்றமும் கொதிப்பும் மேல்வெள்ளமென .
ஒளி துளைக்க அவகாசமில்லாத தென்னைகள் சூழ் குடிசையில்
நிகழ்ந்தவை யாவும் சுத்த மாயையென அரற்றி
புரிமணை ஒன்று அதிகாலையில் தீப்பற்றியது சகுனமென புலம்புகிறாள்
புதையிருளில் இருபது கடல் மைலில் காற்றில் கவிழ்ந்த படகோடு போனவனை
தேடி கடலிறங்க மீனவனை தவிர எவனுமில்லை
அவன் புயவலியாள் மீன் தின்று கொழுத்தவனும் அதற்காக வருந்துவதில்லை
படைக்காரன் செம்படவன் கடலில் தான் சாவானென நகைப்பான்
அவன் மரணத்தின் இறுதி மூச்சின் வலியுணர்ந்து பினாத்துகிறாள்
பின்னும் எதையும் நம்பாது
துள்ளுவேட்டி அய்யானார் நிற்கும் திசைபார்த்து தொழுது
நெடுஞ்சாண்கிடையாக ஒரு முறை விழுகிறாள்
ஊரே மறியலுக்கு ஆயத்தமாகையில்
நெடுங்கடை வாயில் காவற் குதிரை காலை கட்டிக்கொண்டு
எவ்விடத்திலேனும் தொழிலுக்கு போனவன் கரையேறி வருவான் என
கிழக்கு நோக்கி சாதக கணிப்பின் வர்க்கங்களை வரைந்து பார்க்கிறாள்
பின் பிரிவாற்றாமையில் வீறிட்டு அழும்
அவள் நெஞ்செலும்புகளுக்குள்ளிருக்கும் பேரன்பை உணரும் அக்கணம்
கடலின் வயிற்றில் உப்பி மிதக்கும் அவன்
கட்டுக்கழுத்தியாய் வாழ ஒரு ஊழிக்கூத்தில் எழுந்து வரபோவதுமில்லை
இங்கு
உயிர் வாழ்வென்பதே கடலோடுதல்……….